தொடர்கள்
Published:Updated:

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்
பிரீமியம் ஸ்டோரி
News
பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

டெரி என்ற அந்த அல்சேஷன் நாயின் குளிர்ந்த, ஈரமான மூக்குநுனி தன் உள்ளங்காலை வருடியபோது, ஜானிகுட்டி விழித்தான். மெர்சி நிலைக்கண்ணாடியின் முன்னால் நின்று தன் ஒப்பனையின் கடைசிக்கட்ட வேலைகளை முடித்துக் கொண்டு, கைப்பையை எடுத்து அறையிலிருந்து இறங்கிப்போனாள். டெரியும் அவள் பின்னால் சென்றது. ஜானி கோட்டுவாய் விட்டுக்கொண்டே, டீப்பாய் மீதிருந்த சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து, தலையணையை உயர்த்திவைத்து, அதில் சாய்ந்து உட்கார்ந்தான். மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. மின்விசிறி சுழன்றுகொண்டிருந்ததே தவிர அதனால் உபயோகமில்லை.

மே மாதத்து வெயில், உஷ்ணத்தை அதிகப்படுத்தியது.

ஜானி அசௌகரியமாக உணர்ந்தான். முன்னிரவு நடந்த பார்ட்டியின் பாரம் மதியத்திற்குப் பிறகும் குறையவில்லை. அதிகமாகக் குடித்திருந்தான். விடிகாலையில் வீட்டிற்கு வந்துசேர்ந்தவன், மதிய உணவின்போதுதான் விழித்தான்.

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, முதல்நாள் விருந்தின்போதான உரையாடல் குறித்து மெர்சி எப்போதும்போலத் தன் எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்தாள். ஜானிகுட்டி அவற்றை நினைவில் கொண்டுவர முயன்றும் முடியாமல் தவித்தான்.

ஜானியும் அவன் மாமன் மகன் தோமாச்சனுமாக எஸ்டேட் விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது அவனுக்கு நினைவுவந்தது. பிறகு மெர்சியின் குடும்ப மகத்துவத்தைப் புகழ்ந்தும் ஜானியைப் புதுப் பணக்காரர் பட்டியலில் சேர்த்தும் பேசியபோது, இவன் அவனைத் திட்டியதும் வரிசையாக ஞாபகம் வந்தது.  வேறு எதுவும் நினைவில்லை.

சாப்பிட்ட பிறகு சிறு ஓய்விற்காகப் படுத்திருந்தபோதும் மனதில் ஏதோ இனம் புரியாத உணர்வு. சிதிலமடைந்த ஏதேதோ துர்க்கனவுகள் கண்டான். சிகரெட் புகைத்தபடி கட்டிலில் சாய்ந்துகொண்டு

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

கனவுகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தபோது, மெர்சி காபி கொண்டுவந்தாள். நாயும் அவள் பின்னால் வந்தது. ஜானி காபியை வாங்கிக் குடித்தான்.

“இன்னிக்கு விமன்ஸ் கிளப்பில் சிகை அலங்கார வகுப்பு இருக்கு. நான் காரை எடுத்துட்டுப்போறேன். ஆறு மணிக்கு வந்துடுவேன். நீங்க இன்னைக்குக் கிளப்புக்குப் போகலியே?”

“இல்லை” என்று சொன்னபடியே கப்பைத் திரும்பக் கொடுத்தான். அவள் அதை எடுத்துச் சென்றாள். நாயும் அவள் பின்னாலேயே சென்றது. ஜானி எழுந்து வரவேற்பறைக்கு வந்து, மெர்சியின் பின்னால் நடக்கும் நாயைக் கவனித்துக்கொண்டே இருந்தான்.

டெரி, மெர்சியின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட நாய். இரண்டே வயதெனினும் நல்ல உயரம் இருந்தது. பெடிகிரி அல்சேஷன் வகை. டெரியின் அப்பா நாய், ஊட்டியில் நாய்க் கண்காட்சியில் பரிசு பெற்றதாக எப்போதும் சொல்லிக்கொள்வார்கள். மெர்சியை மட்டுமே அது மதிக்கும். எப்போதும் அவளுக்குப் பின்னாலேயே நடந்துபோகும்.

ஜானி வரவேற்பறையில் சென்று அமர்ந்தவுடன், உள்ளே நுழைந்த டிரைவர்  மேஜையின் மீதிருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு போனான்.

கார் வாசலுக்கு வந்து நின்றது.

மெர்சியின் வீட்டுப் பழைய டிரைவரின் மகன் இவன். அப்பாவைப்போலவே மரியாதையுடன் பழகுபவன். மெர்சியிடம் மட்டும்தான் அன்பாகவும் மரியாதையாகவும் இருப்பான் என்ற நிஜம் ஜானியின் நினைவில் மின்னியது. மெர்சி காரில் ஏறிப் புறப்பட்டுப் போனாள். மெயின்கேட்வரை டெரியும் காரின் பின்னாலேயே ஓடியது. சற்று நேரம் அங்கே நின்ற பிறகு மெதுவாக வீட்டினுள் நுழைந்து, வரவேற்பறையில் இரண்டு கால்களையும் முன்னால் நீட்டி, அதன்மீது தலைவைத்துப் படுத்துக் கொண்டது.

ஜானி அலட்சியமாக டெரியைப் பார்த்தான். அவன் மனதில் ஓர் இயலாமை  இழைந்துகொண்டிருந்தது. ஏன் இப்படி என்று யோசிக்க யோசிக்க அது அதிகரித்தபடியே இருந்தது. எழுந்து படுக்கையறைக்குச் சென்று சிகரெட்டை எடுத்துக்கொண்டு  வரவேற்பறைக்கு வந்து பற்றவைத்தான். நாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தது.

‘இவன் எதுக்கு என்னையே இப்படிப் பாத்துக்கிட்டிருக்கான்? என்னைப் பாக்கும்போது இவன் வாலைக்கூட ஆட்டுறதில்ல. என்ன சொன்னாலும் இவன்தான் இந்த வீட்டுக்கு ஒரு அழகையும் தைரியத்தையும் குடுக்கறான்’

‘சிட்டிசன்’ கிளப்பின் இன்னொரு பிரிவான ‘கென்னல்’ கிளப்பின் உறுப்பினர் என்ற அந்தஸ்து ஜானிக்கு டெரியாலேயே கிடைத்தது. நாய்களின் கிளப்பான கென்னல் கிளப்பில், மனிதர்கள் மட்டுமே உறுப்பினர்கள். அதற்கான தகுதியும் அவர்களுக்கே தவிர, நாய்களுக்கு அல்ல. இப்போதெல்லாம் நாய்கள் இல்லாத வர்களும்கூட இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

சில நேரங்களில் கிளப் உறுப்பினர்கள் நீண்டநேரம் நாய்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஜானியும் அவர்களோடு உரையாடலில் கலந்துகொள்வான். டாபர்மேன், லேப்ரடார் - கிரேட்டெயில், அல்சேஷன், ஸ்பானியன் இவையெல்லாமே அவர்களின் உரையாடல் விஷயங்களாக இருக்கும். நாய் கண்காட்சியில் விருது வாங்கிய நாயைப் பற்றியும் அதன் குட்டியைப் பற்றியுமெல்லாம் கௌரவமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஜானியின் நாயைப் பற்றிப் பொதுவாக கிளப்பில் நல்ல மதிப்பு இருந்தது.

மெர்சி, பெரியவீட்டுப் பெண் என்பதனாலேயே ஜானி உல்லாசமாகத் திரிந்துகொண்டிருக்கிறான் என்று அவன் இல்லாதபோது கிளப்பில் சிலர் பேசிக் கொள்வது அவன் காதில் விழாமலுமில்லை.

ஜானியும் டெரியைப் பற்றியும்,  அதன் மேன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தாலும் அதன்மீது எப்போதுமே அவனுக்குப் பாசம் இருந்ததில்லை. இது மெர்சியின் நாய்தானே?

அவன் சிகரெட் புகைத்தபடி நாயையே பார்த்துக்கொண்டிருந்தான். நாயும் ஜானியையே பார்த்தது.

தங்களுக்குள் ஒருபோதும் பிரியம் இல்லாதவர்கள் பரஸ்பரம் பார்த்துக்கொண்டிருப்பதாக அவன் நினைத்துக்கொண்டான். சோபாவில் சாய்ந்தவாறு மேலும் ஒரு சிகரெட் புகைத்தான். ‘சிகரெட் பிடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று அவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.  ஜானி மீண்டும் நாயைப் பார்த்தான். அதன் கண்கள் அன்பின் கரிசனம் சிறிதுமற்றிருந்தது. ‘எதற்காக அது என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது?’

அவனுக்குப் படபடப்பு கூடிக்கொண்டே இருந்தது.

வியர்க்கிறது. சற்றுத் தலைவலிப்பதாகத் தோன்றியது. கொஞ்சம் விஸ்கி குடிக்கலாம் என்று நினைத்து, சாப்பாட்டு அறையிலுள்ள அலமாரியைத் திறந்து ஒரு பாட்டிலை எடுத்தான். சற்றேறக்குறைய ஒன்றரை லார்ஜ் இருந்தது.  உள்ளே இருந்த திறக்காத ஒரு பாட்டிலை எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே வைத்தான். விஸ்கியோடு திரும்பியதும், டெரி ஜானியின் மிகச் சமீபமாக நிற்பதைக் கண்டு தன்னையறியாமல் லேசான நடுக்கம் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். இப்படி தனக்குப் பின்னால் நடந்து வருவது டெரிக்கு எப்போதும் வழக்கமில்லையே!

விஸ்கியை டம்ளரில் ஊற்றி, ஃபிரிட்ஜிலிருந்து இரண்டு ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டுக்கொண்டு ஏதோ தெளிவற்ற  உள்ளத்தோடு  வரவேற்பறைக்குத் திரும்பினான். அப்போதும் டெரி தன்னைப் பின்தொடர்வதை வராந்தாவின் மெல்லிய வெளிச்சத்தில் காண முடிந்தது.

சோபாவில் வந்து அமர்ந்து, ஒரே மடக்கில் பாதி தம்ளரைக் காலிசெய்தான். சாய்ந்தமர்ந்து மனதில் அரித்துக் கொண்டிருக்கும் அசௌகரியத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். டெரி பழையபடி வந்து, தலையை உயர்த்தி அவனைப் பார்த்தவாறு படுத்துக்கொண்டது. தம்ளரில் மிச்சமிருந்ததையும் அடுத்த மடக்கில் காலிசெய்து மேசைமீது வைத்தான். டெரி, அவ்வப்போது பின்காலால் தலையைச் சொறிந்தபடி, ஏதோ சத்தம் கேட்டதுபோல் வெளியே பார்த்து, மறுபடியும் ஜானியை நோக்கிப் படுத்தது.

ஜானிக்கு எரிச்சலாக இருந்தது.

‘இவன் ஏன் என்னை இப்படிப் பார்க்கிறான்? மோப்பம் பிடிக்கிறானோ..? மூக்கு அசையுதே...’

தேவையற்ற எண்ணங்களிலிருந்து மனதைத் திருப்ப, மேஜையின்மீது கிடந்த ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினான்.  பி.ஏ., தேர்ச்சி பெற்றிருந்தாலும் ஆங்கிலம் சரியாகப் புரியாமலிருந்ததில் சற்று வேதனை தோன்றியதால் பத்திரிகையை மடித்துவைத்தான். சாகர் பல்கலைக்கழகத்தில் லஞ்சம் கொடுத்து பி.ஏ., தேர்ச்சி பெற்ற கதையையும் அங்கே அழித்த தன் வாழ்நாள்களைப் பற்றியும் யோசித்தவாறு நீண்ட நேரம் வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

டெரி இப்போதும் தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறானா என்ற ஆவல் தோன்ற, அதை நோக்கித் திரும்பினான். டெரி, கண்ணை அசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது.

‘இது என் குற்றங்களையும் பாவங்களையும் மோப்பம் பிடித்துப் பார்க்கிறதோ? அதுதானே இவன் வேலை’ என்றெல்லாம் யோசிக்கும்போது மனஉளைச்சல் அதிகரித்தது. வேலைக்காரனை அழைத்து, விஸ்கியும் ஐஸும் கொண்டுவரச் சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தான். மெர்சியை மட்டுமே எல்லோரும் மதிக்கிறார்கள் என்ற எண்ணம் ஏனோ மீண்டும் மனதில் தலைதூக்கியது.

மனம் வேதனையால் விம்மும்போது பைபிள் வாசிப்பது நல்லதென்று யாரோ சொன்னது நினைவுக்குவந்தது. படுக்கையறைக்குச் சென்று பைபிள் எடுத்து வெளியே வரும்போதும் வராந்தாவில் தனக்காக மீண்டும் டெரி காத்து நிற்பதைக் கண்டு பதறினான்.

ஜானி சோபாவில் அமர்ந்து கைகளை மேஜைமீது ஊன்றி அரை டம்ளர் விஸ்கியை ஒரே மடக்கில் குடித்த பிறகு, பைபிளில்  எந்தப் பகுதியை வாசிக்கலாம் என்று யோசித்தான். ஜானியின் பெரியப்பா, முதன்முதலில் வெள்ளைக்காரனிடமிருந்து எஸ்டேட்டை வாங்கியதைப் பற்றி  ஊரெல்லாம் பலரும் இப்போதும் கிண்டலாகச் சொல்லும் கதைகள் தன்னையறியாமல் நினைவுக்கு வந்தன. ஆபிரகாம், சாராவை ஞாபகப்படுத்தும் குறிப்பு அது. மறந்துபோயிருந்த அந்தக் கதை இப்போது நினைவில் வந்தது. பெரு முயற்சியோடு அந்தப் பக்கத்தைக் கண்டுபிடித்தான்.

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

ஆதியாகமம் 12-ம் அதிகாரம், 12-ம் வசனம்:

 “எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். ஆகையால், உன் நிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல்” என்றான்.  ஆபிரகாம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.  பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரண்மனைக்குக் கொண்டுபோகப் பட்டாள். அவள் நிமித்தம் அவன் ஆபிராகாமுக்குத் தயைப் பாராட்டினான். அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், கோளிக்கை கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தன. ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.  அப்பொழுது பார்வோன் ஆபிரகாமை அழைத்து: ‘நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவிக்காமல் போனதென்ன? இவளை உன் சகோதரி என்று நீ சொல்ல வேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக் கொண்டிருப்பேனே. இதோ உன் மனைவி. இவளை அழைத்துக்கொண்டு போ’ என்று சொன்னான்.”

இதை வாசி்த்து முடிக்கவும் ஜானிக்கு வியர்த்துக்கொட்டியிருந்தது. பைபிளைக் கீழே வைத்துவிட்டு, டம்ளரில் இருந்த விஸ்கி முழுவதையும் ஒரே இழுப்பில் குடித்து, மீண்டும் அரை டம்ளர் ஊற்றினான். ஒரு சிகரெட் எடுத்துப் புகைத்துக்கொண்டே எழுந்து, ஜன்னல் கம்பியைப் பிடித்தபடி வெளியே பார்த்து நின்றான். இந்தக் குறிப்பைச் சொன்னது யார் என்று நீண்ட நேரம் யோசித்தான்.
ஞாபகம் வரவில்லை.

ஜானி எதையோ இழந்தவனைப்போல் திரும்பி வந்து, சோபாவிலிருந்த விஸ்கி டம்ளரையே பார்த்தபடி இருந்தான். டம்ளருக்குள் ஜன்னலின் நிழல். மனது மீண்டும் மீண்டும் நாயின் பக்கமே இழுக்கப்படுகிறது. அதுவும் அவனை நோக்கியே படுத்திருக்கிறது. அதன் பார்வை, தனக்குள்ளேயும் தன் அபூர்வ பாவங்களுக்குள்ளேயும் கடந்து வருவதாகத் தோன்றியதன் கூடவே, தன்னைச் சுற்றி வளைக்கும் பயமும் திரண்டு மேலெழும்பி வருவதாகத் தோன்றியது.

அதன் மூக்கு அசைகிறது. என்னுடைய குற்றங்களை மோப்பம் பிடிக்கிறது. அது என்னை எட்டிப் பிடித்துவிடுமோ? மனதை நாயிடமிருந்து நகர்த்த ஜானி மீண்டும் விஸ்கி குடித்தான். சோபாவில் மல்லாந்து மேலே பார்த்துக்கொண்டிருந்தான்.

மின்விசிறி சுழல்கிறது. ‘அது அங்கிருந்து கீழே விழுந்துவிடுமா? விழுந்தால், என்மீதுதானே விழும்?’ அவன் எழுந்து உட்கார்ந்து அனிச்சையாக நாயின் முகத்தைப் பார்த்தான்.

நாய், படுக்கும் முறையை மாற்றியிருந்தது. முன்னங்கால்கள் இரண்டையும் நீட்டி, தலையை அதன்மீது வைத்துக் காதுகளைக் கூர்மையாக்கி, கண்களை விழித்து, இரையின்மீது பாய ஆயத்தமாகும் புலியைப்போலப் படுத்திருக்கிறது. ஜானியின் அசௌகரியமும் பயமும் பெருகியபடி இருந்தன.

இதை விரட்டிவிடுவோமா?

விரட்டினால் என்மீதே பாயுமோ?

அல்சேஷன் பாய்ந்தால் முதலில் பிடிப்பது குரல்வளையைத்தான் என்ற உண்மை மனதில் பீதியை அதிகப்படுத்தியது. வேலைக்காரனை அழைத்து டெரியை வெளியேற்றச் சொல்லலாம்.

வேலைக்காரனை அழைத்தான். அவனிடம்  இதைச் சொல்வது சரியில்லை என்று தோன்றியதால், ஐஸ்கட்டி எடுத்து வரச்சொல்லி அனுப்பினான். அவன் பின்னால் டெரியும் போனது.

ஜானி கொஞ்சம் நிம்மதியடைந்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். விஸ்கி பாட்டிலை எடுத்து சூரியனுக்கு நேராகப் பிடித்து அதன் நிறத்தைப் பார்த்தான். வேலைக்காரன் ஐஸ் கட்டியோடு வந்தபோது, பின்னால் டெரியும் வந்தது. டம்ளரில் ஐஸைப் போட்டு, விஸ்கி ஊற்றி சூரியனைப் பார்த்தபடி உட்கார்ந்து குடித்தான்.

அசௌகரியத்தையும் பயத்தையும் மறக்க மீண்டும் பைபிளை வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. டம்ளரைக் கீழே வைத்து, பைபிளை எடுத்துப் பல பகுதிகளையும் திருப்பிப் பார்த்தான். ஏற்கெனவே வாசித்த அதிகாரம் நினைவுக்கு வர, எதையும் படிக்கப் பிடிக்காமல் பைபிளை மேஜையில் வைத்தான்.

மனது மீண்டும் மீண்டும் பயமெனும் வலைக்குள் சிக்கிச் சுழன்றது. அஸ்தமிக்கப் போகும் சூரியனின் வெளிச்சம் அறைக்குள் சாய்ந்து கிடக்கிறது. ஜன்னல் கம்பிகளின் சரிந்த நிழல் மீண்டும் தெளிவற்ற  அவஸ்தைக்கு மனதை இட்டுச் சென்றது.

இனம்புரியாத பயமும் காரணமற்ற எண்ணங்களும் டெரி அங்கேதான் இருக்கிறதோ என்று பார்க்கும்படி ஜானின் மனதைச் சங்கிலியால் இழுத்தது.

மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.

பிளாஸ்டிக் கண்களுடைய அல்சேஷன் நாய்

நாய் இன்னும் சமீபமாகப் பழையதுபோலவே வெறித்துப் பார்த்துக் கொண்டு கிடக்கிறது.

அஸ்தமிக்கப்போகும் சூரியக்கதிர்கள் நாயின் கண்களில் விழுந்தன. ஈரமான அந்தக் கண்கள் பளிங்குபோல மின்னின.

ஒளிரும் அந்தக் கண்களைப் பார்த்தபோது படபடப்பு அதிகரித்தது. அதிலிருந்து தப்பிக்க, அறைக்குள் பார்த்துச் சலித்த பல பொருள்களின்மீதும் அவன் தன் கண்களை ஓட்டினான். வரவேற்பறையின் அனைத்துப் பொருள்களும், முக்கியமாகத் தூசிபடிந்த பழைய ரேடியோகிராம், கலைமானின் கொம்பு, பதப்படுத்தப்பட்ட புலியென எல்லாம் தன்னையே வெறித்துப் பார்ப்பதாகத் தோன்றியது. நாயை மீண்டும் பார்ப்பதற்கான பீதியோடு கூடிய பெருவிருப்பம், கனவின் கொடிபோல் மனதை எட்டிப்பிடித்து, பயத்தின் ஆழத்திற்கு இட்டுச் சென்றது.

ஜானி நாயைப் பார்த்தான். அதன் கண்களை உற்று நோக்கினான். பல  நிறங்களாக ஒளிரும் கண்களின் ஆழத்திற்குள் நடுக்கத்துடன் ஏறிட்டுப் பார்த்தான். வறண்ட உதடுகளை நாவினால் துடைக்கக்கூட பயமாக இருந்தது. இது உயிருள்ள கண்கள்தானா என்ற சந்தேகம் மேலெழுந்தது. மீண்டும் சலனமற்ற அந்தக் கண்களை உற்று நோக்கியபோது, தன் கண்களும் சலனமற்றவைதானோ என்ற நடுக்கம் பெருவேதனையோடு வெளியேறியது.

‘இவை ஜீவனற்ற, பயமற்ற பிளாஸ்டிக் கண்கள். பல நிறங்களில் ஒளிரும் பிளாஸ்டிக் கண்கள். இது நாய்தானா அல்லது நாய்  வடிவத்தில் என் முடிவைக் குறிக்க வந்திருக்கும் உருவமற்ற விதியா?’
உயிரைக் கவ்வும் பயம் மனதிலிருந்து வெளியேறி ஜானின் உடலைச் சூழ்ந்துகொண்டது. அது அவனை இழுத்து முறுக்கியது. ஜானிக்கு மூச்சு முட்டுவதாகவும் குளிர்வதாகவும் தோன்றியது. தைரியத்தை மீட்டெடுக்க முயன்றான். டெரியைப் பார்க்க வேண்டுமென்ற பேரார்வம் அவனை விழுங்கியது.

அது தலையை உயர்த்தி நாக்கை நீட்டி, ஜானின் அவஸ்தைகளை ரசித்துப் பார்ப்பதாகத் தோன்றியது.

‘அது என் அனைத்துத் தவறுகளையும் பாவங்களையும் பார்த்தும் நுகர்ந்தும் அறிந்திருக்கிறது. என் மனதிற்குள்ளும் ஆன்மாவிற்குள்ளும் நுழைந்து பார்க்கிறது. என்னால் என்னை மறைக்க முடியவில்லை. டெரி என் கடைசி நியாயாதிபதியாக முன்னால் அமர்ந்திருக்கிறது. இனி எனக்குப் போக்கிடம் எதுவுமில்லை. எந்த நிமிடமும் இவன் என்மேல் விழுந்து பிறாண்டுவான். குரல் வளையைப் பிடித்துக் கடித்துக் குதறுவான். நிச்சயமாக’

ஜானிக்கு வியர்த்து வழிந்தது.

‘இறங்கி ஓடிவிடலாமா?

அது பின்தொடர்ந்து பிடித்துவிடும்.

‘ஓடி அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொள்ளலாமா?

அப்போதும் அது காத்திருந்து பிடித்துவிடும்.’

ஜானி வேலைக்காரனை அழைக்க முயன்றான். குரல் எழும்பவில்லை. பயம் அவனை முழுவதுமாகச் சூழ்ந்திருந்தது. தொண்டை இறுகி, நாக்கு வறண்டது. உதடுகள் வெடிக்கின்றன. நாயைப்போலவே ஜானியும் மூச்சிரைக்கத் தொடங்கினான்.

தன்னுடைய நாக்கும் வெளியே தொங்குகிறதோ என்ற சந்தேகத்தில் தன் நடுங்கும் கைகளால் முகத்தைத் தடவிப் பார்த்தான். அவன் சர்வ சக்தியையும் திரட்டி வேலைக்காரனை அழைத்ததாகவும் தோன்றியது.
ஆனால், அவன் வரவில்லை.

அவன் மனதால் கடவுளை உரக்க அழைத்தான்.

மெர்சி வந்திருக்கலாமோ?அவளே வந்தாலும்கூட என்னைக் காப்பாற்ற முடியாது. இது இங்கே இருக்கும்வரை என்னைப் பிடிக்காமல் விடாது.

ஜானி, டெரியின் பிளாஸ்டிக் கண்களின் உள்ளே பார்த்தான். அதில் தன் மரணம் பளபளத்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தான்.

அவன் தன்னைத் தற்காத்துக்கொள்ளச் சுற்றிலும் பார்த்தான். யாருமில்லை. இலையின் அசைவுகூட இல்லை. சூரியன் அஸ்தமிக்கப்போகிறது. மரணத்தின் நிமிடங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.  ‘சூரியன் மறைந்தவுடன் இது என்மேல் பாய்ந்துவிடக்கூடும்.’

‘சூரியன் மறையக் கூடாது’ என்று மனவேதனையோடு பிரார்த்தனை செய்தான்.

அவன் உடல் முழுக்க வியர்த்திருந்தது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சுற்றுமுற்றும் பார்த்தான். ‘கடவுளே’ என்று மீண்டும்  பரிதாபமாக அரற்றினான்.

திடீரென அறையின் மூலையில் பாலீஷ் செய்து சாய்த்துவைத்திருந்த துப்பாக்கி கண்ணில்பட்டது.

‘எப்படி எடுப்பது?

அதையெடுக்க நகரும்போது டெரி என்மேல் விழுந்து பிறாண்டினால் என்ன செய்வேன்?’

நடுங்கும் கைகளால் சோபாவை இறுக்கிப் பிடித்தான். நாயைப் பார்த்தபடியே மெதுவாக எழுந்து நிற்க, காலுக்கடியில் பூமி பிளப்பதாகத் தோன்றியது. சோபாவைப் பலமாகப் பிடித்துக்கொண்டு, நாயின் மீதான பார்வையை விலக்காமல் எழுந்து, காலைத் தேய்த்து தேய்த்து நடந்து, கைகளால் துழாவி, துப்பாக்கியை எடுத்தான். விறைத்து நடுங்கிப் பெட்டியைத் திறந்து, தோட்டாவை எடுத்து துப்பாக்கியில் நிறைத்தான்.
டெரி எழுந்து, வாயைப் பிளந்து கோட்டுவாய் விட்டு, மீண்டும்  நாக்கை நீட்டி ஜானியைப் பார்த்துக்கொண்டு அங்கேயே கிடந்தது. ஜானியின் கைகள் இன்னும் அதிகமாக நடுங்கத் தொடங்கின.

துப்பாக்கியைத் தூக்க முடியவில்லை. தன் முழு பலத்தையும் திரட்டி துப்பாக்கியை உயர்த்தி மூச்சை இழுத்துவிட்டான்.

அப்போதும்கூடத் துப்பாக்கியைப் பார்த்து வாலாட்டிக்கொண்டு நின்றது டெரி. துப்பாக்கி வெடித்தது. டெரி தரையில் விழுந்து துடித்தது. ஜானியும் மயங்கிச் சாய்ந்தான்.  

வெடிச்சத்தம் கேட்டு வேலைக்காரன் ஓடி வந்து மூச்சடைத்து நிற்க, கார் வரும் ஓசை கேட்டு இறங்கி ஓடினான். கார் நிற்பதற்கு முன்பாகவே மெர்சியிடம் அரைகுறையாகச் சொன்னான். அவள் வீட்டுக்குள் ஓடிவந்து சில கணங்கள் அதிர்ந்து நின்றாள்.

ஜானியின் அருகே சென்று, அவனை உலுக்கி அழைத்தாள்.

நினைவில்லை.

மேஜைமீது இருந்த குளிர்ந்த நீரை அவன் முகத்தில் தெளித்துத் துடைத்துவிட்டாள். அவன் உடைகள் வியர்வையில் ஊறியிருந்தன. மெதுவாகக் கண்விழித்து, மெர்சியைப் பார்த்த நொடியில் மீண்டும் ஓர் அலறலுடன் அவன் நினைவிழந்தான்.

மெர்சி நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள். நெருப்பாய் கொதிக்கிறது.

வேலையாள்களின் உதவியோடு அவனைத் தூக்கினாள்.

ரத்தச் சகதியில் கிடக்கும் டெரியை ஒருமுறை பார்த்தாள்.

ஜானியை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு வேகமாகச் சென்றனர்.

காரின் பின்சீட்டில் நாக்கை  நீட்டியபடி,  நாயைப்போலவே மூச்சிரைத்துக்கொண்டு படுத்திருந்தான்.

மருத்துவர் பரிசோதித்துப் பார்த்தார்.  ‘ஹைட்ரோஃபோபியா’ என்றுதான் முதலில் தோன்றியது. பிறகு, ‘மனப்பிறழ்வாக இருக்கலாம்’ என்றார். ‘எதற்கும் மனோதத்துவ நிபுணரை வரவழைத் திருக்கிறோம். இப்போது வந்துவிடுவார்’ என்றபடியே டார்ச்சடித்து ஜானின் கண்களை ஆராய்ந்தார்.

மெர்சியும் அக்கண்களைப் பார்த்தாள்.

சலனமற்ற அந்தக் கண்கள் அவளுக்கு பிளாஸ்டிக் கண்களாகத் தெரிந்தன.

- மலையாள மூலம்: ஜான் ஆபிரகாம்

தமிழில்: கே.வி.ஜெயஸ்ரீ

ஓவியம்: வேல்