Published:Updated:

திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் விவாகரத்து! - அற்ப காரணத்துக்காகப் பிரிந்த மணமக்கள்

திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் விவாகரத்து! - அற்ப காரணத்துக்காகப் பிரிந்த மணமக்கள்
திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் விவாகரத்து! - அற்ப காரணத்துக்காகப் பிரிந்த மணமக்கள்

தற்போதுள்ள காலகட்டத்தில், திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண் பெண் இருவரும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு ஒருவருக்கொருவர் பேசி புரிந்துகொள்கின்றனர். ஆனால், இரு வீட்டாரும் பல ஆராய்ச்சிகளைச் செய்துவிட்டுதான் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.

PC : oyorooms

காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, இரு உறவுகளின் புதிய வாழ்க்கை என்பது திருமண தினத்தில் இருந்துதான் தொடங்குகிறது. அப்படி மிகவும் சிரமப்பட்டு தொடங்கும் வாழ்க்கை, சில அற்ப விஷயங்களுக்காக முடிந்துபோவது பெரும் வேதனையான விஷயம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கொண்டல் பகுதியில், இரு தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது.  அந்தத் திருமணம் நடந்து முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே விவாகரத்தும் நடைபெற்றுள்ளது. மணமகனின் வீட்டார் கேதாவில் இருந்து திருமணத்துக்காக கொண்டலுக்கு வந்துள்ளனர். திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பாக இரு வீட்டினருக்கும் சிறு கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்தக் கருத்து வேறுபாடு பெரும் மோதலாக மாற, மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் உணவைக்கொண்டே மாறி மாறித் தாக்கிக்கொண்டுள்ளனர். இது பெரும் சண்டையாக மாற, உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்பட்டு, மண்டபத்திலேயே விவாகரத்தும் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்து, பெண் இல்லாமல் மணமகன் மட்டும் தனியாகத் தன் வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், திருமணத்துக்காக இருவருக்கும் வந்த பரிசுப் பொருள்களையும் தனித் தனியாகப் பிரித்து எடுத்துச்சென்றுள்ளனர்.  சாதாரண உணவில் தொடங்கிய பிரச்னை இரண்டு பேரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.