Published:Updated:

விவசாய மறுமலர்ச்சி எப்போது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விவசாய மறுமலர்ச்சி எப்போது?
விவசாய மறுமலர்ச்சி எப்போது?

பசுமை நூலகம்சித்தார்த்தன் சுந்தரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

`பசுமைப் புரட்சி’ கண்ட இந்தியாவில் விவசாயத் துன்பம் என்பது சில பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வது, விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுப்பது, விவசாயத்துக்குத் தேவையான இடுபொருள்களுக்குச் சலுகை விலை என அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் திட்டங்களை அறிவித்தாலும், இந்திய நாட்டின் முதுகெலும்பு எனக் காலந்தோறும் அழைக்கப்பட்டு வருகிற விவசாயமும், விவசாயிகளும் இன்னும் சிரமத்தில் இருந்துவருவது கவலைப்பட வேண்டிய விஷயமாகும்.

விவசாயத் துறை குறித்தும், விவசாயிகள் குறித்தும் அவர்களின் பிரச்னைக்கான தீர்வு என்ன என்பது குறித்தும் `கள ஆய்வு’ செய்து ரூரல் மேனிஃபெஸ்ட்டோ – ரியலைசிங் இண்டியா’ஸ் ஃப்யூச்சர் த்ரூ ஹெர் வில்லேஜஸ் (Rural Manifesto – Realizing India’s Future Through Her Villages) என்ற பிரமாண்டமான நூலை எழுதியிருப்பவர் மக்களவைக்கு 2009-ஆம் ஆண்டில் பிலிஃபிட்டிலிருந்தும், 2014-ஆம் ஆண்டுச் சுல்தான்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர் ஃபெரோஸ் வருண் காந்தி (சஞ்சய் காந்தி – மேனகா காந்தியின் புதல்வர்).

கிராம வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் – விவசாய உள்ளீடு, தண்ணீர் பிரச்னை, ஆற்றல்/மின்சார அணுகல், விவசாயப் பொருள்களைச் சந்தைப்படுத்துதல், விவசாயம் சாராத வருமானம், கைவினைப் பொருள்கள், விவசாயக்கூலிகள், கிராமப்புறக் கல்வி, சுகாதாரம், கிராமப்புறக் கடன் மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வு எனச் சுமார் எண்ணூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் 11 தலைப்புகளில் இந்தியாவின் கிராமப்புற நிலவரத்தையும், விவசாயத் துறை சார்ந்தவர்கள் படும் சிரமங்களையும் புள்ளிவிவரங்களுடன் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல்.

விவசாய மறுமலர்ச்சி எப்போது?

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த அத்தியாயம் எழுத உதவிய மேற்கோள் நூல்கள், கட்டுரைகளின் பெயர்களைக் கொடுத்திருப்பது அது குறித்தும் மேலதிகத் தகவல்களைத் தேடுவோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் படித்திருக்கும் ஆசிரியர், கிராமப்புற விவசாயத்தைக் குறித்துத் தான் பெற்ற அனுபவத்தை அருமையாகவும், பெருவலியுடனும் விளக்கியிருக்கிறார்.

தேசிய பிரச்னை குறித்து இவ்வளவு தீர்க்கமாக எழுதியிருக்கும் இவரது சமூக அக்கறையைப் பாராட்ட வேண்டும். 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான பத்திரிகைச் செய்தியின்படி மக்களவை உறுப்பினருக்கென்று ஒதுக்கப் பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை முற்றிலுமாகத் தனது தொகுதிக்கென்று செலவிட்ட ஒரே எம்.பி. இவர்தான். இவர் மக்களவை உறுப்பினராக இருப்பதற்குப் பெறக்கூடிய சம்பளத்தைக்கூட அவரது தொகுதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார்.

2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு, விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை சொல்லும் `தேசிய குற்றப் பதிவு பணியக’த்தின் (National Crime Records Bureau – NCRB) தரவுகளை அரசு வெளியிடவில்லை. இதை வெளியிடச் சொல்லி இவர் மத்திய அரசை வலியுறுத்தியதுடன், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் அழுத்தம் கொடுத்தார்.

இந்தியாவெங்கும் வசித்துவரும் சுமார் ஒன்பது கோடி விவசாயக் குடும்பங்களில் 70% கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.

50% விவசாயிகளின் தற்கொலைக்கு இதுவே பிரதானமான காரணமாக இருந்திருக்கிறது. கிராமப் புறங்களில் வசித்து வரும் ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரிக் கடன்தொகை சுமார் ரூ.1,03,457 ஆகும். அது அவர்களது சொத்தில் (நிலம், கட்டடம், கால்நடை, உபகரணங்கள், பணம் மற்றும் வங்கியிருப்பு) சுமார் 8.5 சதவிகிதமாகும்.

சொட்டுநீர்ப் பாசனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் இவர், அதற்கு ஆரம்பத்தில் ஆகக்கூடிய அதிகச் செலவையும் (ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 முதல் ரூ.1,05,000 வரை) சுட்டிக்காட்டத் தவறவில்லை. நமது நாட்டில் ஒரு ஏக்கருக்கும் மேலாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் பெரும்பாலும் சொட்டுநீர்ப் பாசனத்தை உபயோகிப்பவர்களாக இருக்கிறார்கள்.

சிறு விவசாயிகளால் செலவு அதிகமாக இருக்கும் இந்த நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்த முடிவதில்லை. இரண்டாவதாக, பெரும்பாலான பண்ணை/வயல்களுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. நீர்பாசனத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதற்குத் தொடர்ந்து, அதாவது நாளொன்றுக்கு மூன்றிலிருந்து நான்கு மணிநேரம் மின்சாரம் தேவைப்படும்.

ஆனால், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நெட்டஃபிம் (Netafim) என்கிற நிறுவனம் சொட்டுநீர்ப் பாசன வசதியை ரூ.30,000-க்கு வழங்குகிறது. இதில் மாநில அரசு 50 சதவிகிதத் தொகையை நல்கையாகக் (Grant) கொடுக்கிறது. இந்த வசதி விவசாயிகளுக்குக் கிடைக்கும்படி செய்வது ஒவ்வொரு மக்களவை உறுப்பினரின் கடமையாகும்.காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை நூலாசிரியர் உணர்ந்திருப்பதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட காலநிலை ஆலோசனையை மாவட்ட அளவில் மட்டுமல்லாது, ப்ளாக் மற்றும் கிராம அளவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறார். ஆனால், வானிலை ஆய்வு மையத்திடம் நுண்ணிய அளவில் வானிலை அறிவிப்பு வழங்குவதற்குத் தேவையான எண்ணிக்கையில் ரேடார்கள் இல்லை. எனவே, இதில் அரசு தனது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

விவசாய மறுமலர்ச்சி எப்போது?

இன்றைய நிலையில் 61% பாசனம் நிலத்தடி நீரை நம்பியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். எனவே `உலர்நில பாசன’த்துக்கு (Dryland Farming) மாறவேண்டுமெனத் தனது கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். தேசிய அளவில் குறைவாக மழையைப் பெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு ஆகியவை துணை விவசாயத் தொழில்களாக இருந்து வருகின்றன. அதுபோல, குறைவாக மழை பெறும் ஹரியானா மாநிலத்தில் எண்ணெய் வித்துக்கள், தானியச் சாகுபடி ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு அதிக மழை பெறும் மாநிலங்களான அஸ்ஸாம், ஒடிசாவில் அரிசி விளைச்சலை அதிகப்படுத்த வேண்டுமென்றும் கூறுகிறார்.

கடன் தள்ளுபடி குறித்து இவர் என்ன சொல்கிறார்? இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு கடன் தள்ளுபடி என்பது வழக்கமாக உபயோகப்படுத்தக்கூடிய ஒரு கொள்கையாகவே மாறிவிட்டது. 1989-ஆம் ஆண்டு ஜனதா அரசு ரூ.10,000 வரையிலான விவசாயக் கடன்களையெல்லாம் தள்ளுபடி செய்தது. 1992-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தினால் சுமார் நான்கு கோடி விவசாயிகள் பலனடைந்தனர். இதற்கு ஆன செலவு சுமார் ரூ.6,000 கோடி.

இதுபோல, 2008-லும், மாநில அளவில் 2017-ஆம் ஆண்டுத் தமிழகத்திலும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் கார்ப்பரேட் கடன் தள்ளுபடி குறித்து ஏன் குரல் எழுப்புவதில்லை என்கிற கேள்வியை எழுப்பினாலும் கடன் தள்ளுபடியை ஆதரிக்கவில்லை. மாறாக, விவசாய உள்ளீட்டுச் செலவு அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகள் வருமானத்தை அதிகமாக்குவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டுமென்கிறார். ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, 2000-மாவது ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அளவுக்குக் கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 95% அதிகத் தொகை கொண்ட கடன்கள். இதோடு ஒப்பிடுகையில், சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விவசாய உபகரணங்கள் வாங்கக் கொடுத்த கடன்களில் தள்ளுபடி செய்தது ரூ.6,000 கோடி மட்டுமே. இந்தியாவின் கடன் கலாசாரம் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம், விவசாயிகள் இல்லை. என்.பி.ஏ-யில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பது மத்திய மற்றும் பெரிய நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்கள்தான்.

விவசாயத்துக்கென்று பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டுமென்கிற ஆலோசனையை முன்வைப்பதுடன் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குப் புதுமையான வழிகளைக் கையாள வேண்டுமென்றும் சொல்கிறார். இந்தியாவில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் நீர்ப்பாசன முறை போதுமானதாக இல்லையென்று கூறும் இவர், அதிக முதலீடு தேவைப்படும் காரணத்தால் அனைவராலும் சொட்டுநீர்ப் பாசன முறையையோ, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்குத் தேவையான சிறந்த பம்புகளையோ உபயோகப்படுத்த முடிவதில்லை என்கிறார்.

சுமார் 30 சதவிகித மக்களவை உறுப்பினர்களுக்கும், சட்டசபை உறுப்பினர்களுக்கும் எதிராக கிரிமினல் குற்றங்கள் இருக்கும் தருணத்தில், ஒரு மக்களவை உறுப்பினர் தேசிய பிரச்னை மேல் அக்கறை கொண்டு இந்த நூலை எழுதியிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

மிகவும் நல்ல யோசனைகளைமுன் வைத்திருக்கும் நூலாசிரியர், அவற்றை மக்களவையில் எடுத்துக் கூறி, அமல்படுத்த அழுத்தம் கொடுப்பதின் மூலம் இந்திய விவசாயிகளையும், விவசாயத் துறையையும் (ஜி.டி.பி-யில் இந்தத் துறையின் பங்களிப்பு சுமார் 16 சதவிகிதமாகும், மக்கள் தொகையில் சுமார் 50 சதவிகிதமானோர் இத்துறை சம்பந்தப்பட்ட வேலையில் இருக்கின்றனர்) துன்பத்திலிருந்து மீட்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு