“பெரும்பான்மையான மக்கள் இன்னும் இருளிலும் அறியாமையிலும் அழுத்தப்படுகிறார்கள் என்றால், தொழில் முறையில் சிந்தனையாளராக இருப்பவரது பணி, இந்த அறியாமை எனும் பேயைத் துணிவோடு எதிர்கொண்டு அழித்தொழிப் பதுதான். இதை எளிதாக நிறைவேற்ற முடியாது என்பது உண்மைதான். ஏனெனில், இந்தப் பேய் ஒரு முகமூடியால் தனது முகத்தை மறைத்துக்கொண்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். மக்களை நம்பவைப்பதற்காக அது அணிந்திருக்கும் ‘புனித முகமூடி’ நம் ஞானிகளின் அறிவால் -சாஸ்திரங்களாலோ அல்லது வேத நூல்களாலோ- ஆக்கப்பட்டிருக்கிறது.

சிந்தனைச் செயல்பாட்டிற்காகச் சமூகத்தால் ஊதியம் வழங்கப்படுப வர்கள்தாம் அந்த முகமூடியை முதலில் அகற்ற வேண்டும். வேத நூல்களைப் பற்றிக் கவலைப்படாமல், இச்சிந்தனையாளர்தான் சமூக நலனைப் பயிற்றி வளர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இது ஆபத்தான பணி என்பது வெளிப்படை. இச்சிந்தனையாளர், ‘கலகக்காரர்’ என்றும், தேசியப் பண்பாட்டின் பொதுநீரோட்டத்திற்கு எதிராகச் செயல்படுபவர் என்றும் எளிதில் முத்திரை குத்தப்பட்டு, சமுதாயத்திலிருந்தே விரட்டப்படக்கூடும். எனினும், (ரூப் கன்வருக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் நேர்ந்த) இந்த அவமானம், இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமாக உள்ளன என்று எனக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். எனக்கு மட்டுமல்ல, பதவி மோகத்தாலும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வேட்டையினாலும் களங்கமடைந்துவிடாத என் சக பணியாளர் களுக்கும்தான். தத்துவவாதிகள் செய்வதற்கு ஏதுமில்லை என்று இதற்குப் பொருளல்ல. ஆனால், அது நாளைக்கு உரியது. போராட்டமோ இன்றே மேற்கொள்ளப்பட வேண்டும். ‘நாளை என்று ஒரு நாள் வரும்’ என்பதை உறுதிப்படுத்துவது நம் அனைவரின் முன்னாலும் உள்ள பணி.”

தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா இவ்வாறு எழுதி, 30 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன. இருப்பினும், நாட்டு நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருவனவற்றைப் பாருங்கள். பழைமை என்ற பெயரால், பாரம்பர்யம் என்ற பெயரால், பண்பாடு என்ற பெயரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற பிற்போக்குத் தனமான நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தேர்தல் காலங்களில் இப்போக்கு திட்டமிட்டுத் தீவிரப்படுத்தப்படுகிறது.

நமது நாட்டை இருண்ட காலத்திற்கு அழைத்துச் செல்ல முயல்கின்ற இந்துத்துவ சக்திகளின் ஆட்சியில், நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கை மாபெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில்தான், மாபெரும் மனிதநேயச் சிந்தனையாளரும் மார்க்சியத் தத்துவ அறிஞரும் தீவிரமான பகுத்தறிவுவாதியும் கூர்மையான அறிவியல் உணர்வாளரும் மதச்சார்பின்மைக் கொள்கையின் மகத்தான ஆதரவாளருமாகிய தேவிபிரசாத் சட்டோபாத்யாயா மிகவும் தேவைப் படுகிறார் என்று தோன்றுகிறது. அறிவியல் மனப்பான்மையையும் மதச்சார்பின்மையையும் தமது இரு கண்களாகக் கருதுவோர் அனைவரும் ஒருபுறமும், இந்துத்துவர்கள், அவர்களின் புரவலர்கள் மற்றும் பரிவாரங்கள் மறுபுறமும், நின்று நடத்துகின்ற ‘வாழ்வா, சாவா?’ எனும் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற இவ்வேளையில்தான், தேவிபிரசாத்தின் பிறந்தநாள் நூற்றாண்டும் வந்திருக்கிறது. அவரது போர்க்குணம் வாய்ந்த பொருள்முதல்வாதச் சிந்தனைகளைப் பயின்றும், மக்களிடம் எடுத்துச் சென்றும் சிந்தனைத்தளத்தில் போராடுவதன் மூலமாகத்தான் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாடப்பட வேண்டும்.

20-ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மார்க்சியத் தத்துவ அறிஞர்களான ஜார்ஜ் தாம்சன், ஜோசப் நீதம்

ஆகியோருக்கு நிகரானவராகக் கருதப்படும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, 1918-ஆம் ஆண்டில் நவம்பர் 19 ஆம் நாளன்று கொல்கத்தாவில் பிறந்தார். அவரின் தந்தையார் தேசிய விடுதலை இயக்கத்தின் ஆதரவாளராக இருந்த காரணத்தால், தேவிபிரசாத் தனது இளம்பருவத்திலேயே தேசிய விடுதலை இயக்கத்தின் இடதுசாரித் தலைவர்களோடு பழகும் வாய்ப்பு பெற்றார். “பிற்போக்குச் சிந்தனையின் அனைத்துவிதமான வெளிப்பாடுகளுக்கு எதிராகவும், யதார்த்தத்திலிருந்து தப்பியோடும் போக்கிற்கு எதிராகவும், இந்தியப் பழைமைவாதக் கருத்தியலுக்குப் புத்துயிரூட்டும் போக்கிற்கு எதிராகவும், ஆரியர்கள் - ஆரியரல்லாதவர்கள்மீது காலங்காலமாகக் கடைப்பிடித்துவந்த இனவாதத்திற்கு எதிராகவும், சுரண்டலுக்கும் காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராகவும்” போராடுவதாக 1936-ஆம் ஆண்டில் பிரகடனம் செய்த, ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் (Association of progressive writers)’ இணைந்து பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

கொல்கத்தாவில் அவர், புகழ்பெற்ற இந்தியக் கருத்துமுதல்வாதச் சிந்தனையாளர்களான பேராசிரியர்கள் எஸ்.என்.தாஸ் குப்தா, எஸ்.இராதா கிருஷ்ணன் ஆகியோரின் மாணவராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்றார்.

பேராசிரியர் டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன், தனது ‘இந்தியத் தத்துவம்’ (Indian Philosophy) எனும் நூலின் முதல் தொகுதியில், ‘இந்தியத் தத்துவத்தின் தனிச்சிறப்பே அதன் ஆன்மிக உள்ளடக்கம்தான் என்று வலியுறுத்தியதுடன், இந்தியத் தத்துவத்தின் பெயருக்கும் புகழுக்கும் காரணமே அதன் ஆன்மிக அம்சம்தான்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதத்தின் சுவடுகள், காவியக்காலம் என்று கருதத்தக்க காலகட்டத்தில்தான் தொடங்குகின்றன’ என்றும் கூறினார். பௌத்தம் உருவான கி.மு.5-ஆம் நூற்றாண்டையே அவர் ‘காவியக்காலம்’ என்று கருதினார். உண்மையில், கி.மு.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய உபநிடதங்களின் காலத்திலேயே பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம் என்ற முறையில் செல்வாக்கு பெற்றிருந்திருக்கிறது. லோகாயதர்கள்/ சாருவாகர்கள் என்று அழைக்கப்பட்ட அக்காலத்துப் பொருள்முதல்வாதிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் புலனின்ப நாட்டம் உடையவர்கள், சிற்றின்பப் பிரியர்கள் என்றெல்லாம் இழித்துரைத்த டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன், பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவச் சிந்தனையாகிய லோகாயதத்தை, தனது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் நின்று, ஒரேயடியாக நிராகரித்தார். அதற்குத் தத்துவமுறை என்ற அந்தஸ்தைக்கூடத் தருவதற்கு அவர் விரும்பவில்லை. பருப்பொருளுக்கு உயிர் உண்டு என்று கருதுகின்ற, ஆகவே பருப்பொருளின் இருத்தலை உயிரின் தோற்றத்திற்கு முற்பட்டதாகவும் காரணமாகவும் கருதுகின்ற ஒருவகைப் பொருள்முதல்வாத தத்துவத்தைத் தோற்றுவித்த ‘உத்தாலக ஆருணி’ என்பவர் புத்தருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். அவரைப் பொருள்முதல்வாதத் தத்துவவாதி யாகவே டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணன் ஏற்றுக்கொள்ளவில்லை.

பேராசிரியர் எஸ்.என்.தாஸ் குப்தாவோ, பொருள்முதல் வாதத்தைப் பற்றி பௌத்தக் கருத்துமுதல்வாதத்தின் இறையியல் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில் விளக்கமளித்தார். பண்டைய பொருள்முதல்வாதிகள் புத்தரை எதிர்த்து நின்றார்கள் என்று பண்டைப் பௌத்த நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை நினைவிற் கொண்டால், பௌத்தக் கருத்துமுதல்வாத அடிப்படையில் பொருள்முதல்வாதத்திற்கு தாஸ் குப்தா விளக்கமளித்தது திருப்தி கரமானதாக இருந்திருக்க முடியாது என்பது புரியும். அதேநேரத்தில், பண்டைப் பொருள்முதல்வாதம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய காரணத்தால், அதற்கு லோகாயதம் (Lokayata) என்று பெயர்சூட்ட முடியும் என்ற சரியான முடிவுக்கு வந்தவரும் அவர்தான். ஆனால், லோகாயதம் குறித்த ஆழமான ஆய்வுகளில் அவர் ஈடுபடவில்லை. யதார்த்தத்திற்குப் புறம்பாக அறிவுவாதிகளாக இருந்தவர்கள் என்றும், லோகாயதர்களின் நடையுடை பாவனைகளில் பலவும் சுமேரியர்களுடையவை என்றும் பிற்காலத்தில் அவர் மிகவும் தவறான மதிப்பீடுகளைக்கூட முன்வைத்தார்.

இதே நேரத்தில், பல்வேறு கருத்துமுதல்வாத தத்துவச் சிந்தனைப் போக்குகள், பொருள்முதல்வாத (லோகாயத) முற்கோள்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொண்டு, தத்தமது நோக்கங்களுக்கு ஏற்ப விளக்கமளித்து வந்ததையும், தமது சொந்தக் கருத்துமுதல்வாதத்திற்கு ஆதரவாக அப்பொருள்முதல்வாத விவாத முறைகளையும் அடிப்படைக் கருத்துகளையும் அவை நாடியதையும், மற்ற கருத்துமுதல்வாதப் போக்குகளைத் தோற்கடிப்பதற்குத் தமக்கான ஆயுதமாகப் பயன்படுத்தியதையும் பற்றியெல்லாம் தேவிபிரசாத் அறிந்துகொண்டார்.

தன் இரு ஆசிரியர்களின் நிலைப்பாட்டையும் அணுகுமுறையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மேற்கண்டவற்றின் அடிப்படையில் தேவிபிரசாத் முடிவெடுக்க வேண்டிய தாயிற்று. அதன்பின், இலண்டனில் இருந்த பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனின் அறிமுகமும் நட்பும் அவருக்குக் கிடைத்தது. இரு மிகச்சிறந்த மனிதர்களின் சந்திப்பு, இரு வேதிப்பொருள்களின் இடையே நிகழும் வேதிவினைக்கு ஒப்பானது என்று சொல்வார்கள். அந்த ‘வேதிவினைக்குப்’ பிறகு, இருவருமே பழைய மாதிரி இருப்பதில்லை; இருக்கவும் முடியாது. ஜார்ஜ் தாம்சனின் வழிகாட்டுதலைப் பயன்படுத்திக்கொண்ட தேவிபிரசாத், பண்டைய இந்தியாவில் தத்துவத்தின் தொடக்கப்புள்ளியை அதாவது, பொருள்முதல்வாதத்தின் தோற்றுவாயை சரியாக அனுமானிக்க வேண்டுமென்றால், ஆரியர்களின் வருகைக்கு முந்தைய, இந்தியப் புராதனச் சமுதாயத்தின் நீண்ட நெடிய வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

பண்டைய இந்தியாவின், ஆரியர் வருகைக்கு முந்தைய பழங்குடிச் சமூகத்தின் வளர்ச்சி, எவ்வாறு இங்கே ஒரு வர்க்கச் சமுதாயத்தைத் தோற்றுவித்தது என்று விவரிக்கின்ற, பண்டைய இந்தியாவைப் பற்றிய தனது மிகச்சிறந்த நூலாகிய ‘இந்திய வரலாற்று ஆய்வுக்கு ஓர் அறிமுகம்’ (An Inroduction to the Study of Indian History) என்ற நூலை புகழ்பெற்ற மார்க்சிய வரலாற்றுப் பேரறிஞர் டி.டி.கோசாம்பி அப்போதுதான் வெளியிட்டிருந்தார். அந்நூலில், இந்தியாவின் சமூக வரலாற்று வளர்ச்சி குறித்து முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான முடிவுகளை தேவிபிரசாத் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள முடிந்தது.

தன் இரு பேராசியர்களின் முடிவுகளுக்கு எதிராகவும், இந்தியத் தத்துவத்துறையில் அப்போது மிகுந்த

செல்வாக்கைப் பெற்றிருந்த ஆன்மிகவாதத்திற்கு எதிராகவும், பண்டைக்கால இந்தியத் தத்துவ வரலாற்றாளர்கள் என்ற முறையில் தனக்கு முன்பிருந்தவர்கள் அனைவரின் பார்வைகளுக்கு எதிராகவும், ஒரு மார்க்சியரால் எழுதப்பட்ட, பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆக்கப்பூர்வமான, முழுமையான முதல் ஆய்வுநூல் என்ற பெருமைக்குரிய தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ‘லோகாயதா’ (தமிழில், ‘உலகாயதம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தோதாத்ரி இந்நூலை மொழிபெயர்த்துள்ளார்) இவ்வாறுதான் வெளிவந்தது.

கி.மு.1000-ஆம் ஆண்டுவாக்கில் பண்டைப் புராதனச் சமுதாயம் சிதையத் தொடங்கியபோது, அன்றைய லோகாயதத் தத்துவச் சிந்தனையாளர்கள் பாடிய பாடல்கள் வாழ்க்கையைப் போற்றுபவையாக இருந்தன. இத்தகைய பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன. அந்தக் காலகட்டத்தில்தான் வர்க்கப் போராட்டம் எனும் புதிய சமூக நிகழ்வு/புலப்பாடு கருத்துக்களத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. உலக மறுப்புக் கொள்கையைப் போதித்துவந்த மதச் சிந்தனையாளர்களுக்கும், மக்களின் வாழ்வின் மீதான நேசத்தையும் அறிவியற் சிந்தனையின் தொடக்கக்கட்டக் கூறுகளையும் கொண்டிருந்த உலகைப் போற்றும் கொள்கையாளர்களுக்கும் இடையில் முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக, உலக ஏற்பாளர்கள் முன்வைத்த தத்துவத்தின் அடிப்படைகள் வானியல், மருத்துவம் மற்றும் உடலியங்கியல் போன்ற துறைகளில் கூர்மையாக வெளிப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் புதிதாக உருவாகிவந்த அரசுச் சமூகத்தைப் பொறுத்தவரையில், அறிவியலும் மதமும் போலவே தத்துவமும் முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. அதாவது, பணிவான முறையில் பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள் வர்க்கச் சமுதாயத்தில் மதமாகவோ மருத்துவமாகவோ வளர்ச்சியடைந்தன; பணிவும் நுட்பமும் நிறைந்த மந்திரவாதி கடவுளர்களிடம் முறையிடுபவனாக இருந்த அதேநேரத்தில், நோய்களைக் குணப்படுத்தக் கூடியவனாகவும் இருந்தான். பொருள்முதல் வாதம், கருத்துமுதல்வாதம் எனும் அடிப்படையான நிலைப்பாடுகளாக அமைந்த தத்துவச் சிந்தனையின் தொடக்கக்கட்டக் கூறுகளும்கூட இந்த மந்திரங்களாலும் தொன்மங்களாலும் நிறைந்த கற்பனையுலகத்தையே அடித்தளமாகக்கொண்டிருந்தன. இக்கருத்துகளைப் புரிந்துகொள்வதற்கான ஏராளமான ஆதாரங்களை நாம் ‘லோகாயதா’ நூலில் காணமுடியும்.

‘லோகாயதா’ நூலை மதிப்பிட்ட புகழ்பெற்ற ஜெர்மானிய இந்தியவியலாளரும் தத்துவ அறிஞரும், தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவால் ஆசானாகக் கருதப்பட்டவருமான வால்ட்டர் ரூபன் கூறுகிறார்: “இந்நூலை எழுதுவதற்கு ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் பாலி மொழியிலும் உள்ள பெரும் எண்ணிக்கை யிலான நூல்களையும் இந்தியிலும் வங்காள மொழியிலும் உள்ள பல ஆய்வுகளையும் பயன்படுத்தியுள்ள தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, அவற்றை அடித்தளமாகக்கொண்டு இந்தியப் பொருள்முதல்வாதத்தைப் பற்றியும், எப்படிப்பட்ட சமூக நிலைமைகளில் அது தோன்றி வளர்ந்தது என்பதைப் பற்றியும் ஒரு தெளிவான சித்திரத்தை உருவாக்கி யுள்ளார். இந்தப் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்”.

ஆனால், உண்மையில் உலகாயதம் பற்றிய ஆய்வினைச் சிக்கலாக்கும் காரணங்கள் பலவற்றுள் நமது கவனத்திற்குரியது இது: “பிற தத்துவ தரிசனங்களுக்குரிய முக்கியமான நூல்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், உலகாயதம் பற்றிய மூல நூல்கள் அனைத்துமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மறைந்துபோய்விட்டன. நமக்குக் கிடைத்ததெல்லாம் உலகாயதம் பற்றிய சில சிதைந்த குறிப்புகளே ஆகும். ஆனால், இவையெல்லாம் அதை எதிர்ப்பவர்களின் எழுத்துகளில்தான் பாதுகாக்கப்பட்டன. அதாவது, அதை மறுத்து கேலி செய்பவர்களின் எழுத்துகளில் அவை உள்ளன. அவற்றை எதிர்ப்பவர்களது குறிப்புகளிலிருந்துதான் உலகாயதத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியுள்ளது” (நூலின் முன்னுரையில் தேவிபிரசாத்).

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, பண்டைய இந்தியப் பொருள்முதல் வாதத்தினை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்கிறார். “இது அப்பொருள்முதல் வாதத்தைத் தொகுத்து, முறைப்படுத்தி, மீட்டுருவாக்கம் செய்வதைவிடவும் பெரும் பணியாகும். ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள பொருளாயத வேர்களை மார்க்சியம் தேடுகிறது. அவற்றுக்குரிய வரலாற்றுத் தொடர்பு, இயக்கம் ஆகியவற்றின் அடித்தளத்தில் அவற்றைக் காண்கிறது. அத்தகைய இயக்கத்தின் விதிகளை அது தீர்மானிக்கிறது. அவற்றின் வளர்ச்சியை வேரிலிருந்து பூ வரை நிரூபிக்கிறது. இவ்வாறு செய்யும்போது, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் உணர்ச்சி, அதர்க்கம், மர்மமான சூழல் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கிறது. அவற்றை நன்கு புரிந்துகொள்ள வழி செய்கிறது. எனவே, உலகாயதம் பற்றிய ஒரு மார்க்சிய ஆய்வாளன் என்ற முறையில், பண்டைக்கால இந்தியாவின் பொருளாயத நிலைமைகளை நான் ஆய்வுசெய்ய வேண்டியிருந்தது. உலகாயதம், அதன் விளைவு ஆகியவற்றை அறிய, மையக் கருத்திலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லவும் வேண்டியிருந்தது” என்று ‘லோகாயதா’ நூல் உருவானதில் செயல்படுகின்ற மார்க்சிய முறையியலை தேவிபிரசாத் எடுத்துரைக்கிறார்.

‘லோகாயதா’ நூலில் தேவிபிரசாத் முன்வைத்துள்ள பல்வேறு விளக்கங்களைப் பொறுத்தவரையில், அவற்றுக்குள்ள மதிப்பு என்ன? உலகாயதத் தத்துவம், வேதப் பாரம்பர்யம் ஆகிய இரண்டுக்குமே புராதனகாலப் பொருள்முதல்வாதம்தான் அடித்தளம். இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதா? தொல் பழங்காலப் பொருள்முதல்வாதத்தைப் பற்றிய விவாதம் எதற்காக? அதைப் போற்றிப் புகழ்வதற்காகவா? இக்கேள்விகளுக்கு தேவிபிரசாத் பின்வருமாறு பதிலளிக்கிறார்: “(தொல்பழங்குடித் தாய்வழிச் சமூக அமைப்பு முறை இந்தியாவில் நிலவியதானது) மார்க்சியம் கூறுகின்ற புராதனக் கம்யூனிசத்துடன் ஒப்பிடத்தக்கது. அக்காலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக மார்க்சியவாதிகள் புராதனக் கம்யூனிசம் பற்றிப் பேசவில்லை. அவர்களது நோக்கமெல்லாம் தனிச்சொத்து, அரசு ஆகியவை நிரந்தரமானவையல்ல என்பதைக் காட்டுவதுதான். ‘அவை எப்படித் தோன்றினவோ அதேபோல வீழ்ந்துவிடும்’ (ஏங்கெல்ஸ்). இதேபோன்று, தொல்பழங்காலப் பொருள்முதல்வாதம் பற்றிய விவாதம் அதனைப் புகழ்வதற்காக அல்ல. அதை நோக்கித் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. ஆன்மிகக் கண்ணோட்டம் என்பது மனிதனுக்கு இயல்பாக இருப்பதல்ல என்று காட்டுவதே அதன் நோக்கம். அது எவ்வாறு ஆரம்பக்கட்டத்தில் தோன்றியதோ அதேபோன்று இறுதியில் அழிக்கப்படும். உடல் உழைப்பு, மூளை உழைப்பு ஆகியன பிரிக்கப்பட்டதால் தோன்றிய கருத்துமுதல் வாதம், இவை மறையும்போது மறையும். இந்தியத் தத்துவப் பாரம்பர்யத்தைப் புரிந்துகொள்ள இதற்குச் சிறப்பான தொடர்பு உள்ளது. ஆன்மிகம் என்பது இந்தியத் தத்துவச் சிந்தனையின் இயல்பான ஒன்று என்று கூறுவதைக் கேட்டு நமக்கு அலுத்துவிட்டது…”

முன்னுதாரணங்கள் ஏதுமற்ற முதல் நூல் என்ற முறையிலும், புதுப்பாதை சமைக்க வந்த புதிய சிந்தனை என்ற முறையிலும், ‘லோகாயதா’ நூலில் இருந்த சில குறைபாடுகளும் வால்ட்டர் ரூபன் போன்ற மார்க்சியத் தத்துவ அறிஞர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ரூபன் இரு முக்கியமான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

1:ஆரியர்களின் வருகைக்கு முந்தைய இந்தியப் பழங்குடிச் சமூகம், தாய்வழிச் சமூகமாக அமைந்திருந்தது என்று அனுமானிக்கின்ற டி.டி.கோசாம்பியின் கருத்துகளை அப்படியே தத்துவ வரலாற்றுக்குப் பொருத்த முயல்கின்ற சட்டோபாத்யாயா, அது பொதுமைப் படுத்தப்படுவதில் உள்ள அபாயங்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், தனது ‘லோகாயதா’ நூலில் பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதத்தைத் தாய்வழிச் சமூகத்தின் தத்துவம் என்று கருதுகிறார். இவ்வாறாக, பண்டைய ஆரியரின் வருகைக்கு முந்தைய தாய்வழிச் சமூகத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற தாந்திரீகச் சமயத்துடன் பண்டைய இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவத்தைச் சமப்படுத்துகிறார். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஏனெனில், தாந்திரீகம் என்பது ஒருபுறம் தத்துவம் என்றால், மறுபுறம் அது

மதமும் ஆகும்.

2: ஒரு மார்க்சியத் தத்துவ அறிஞர் மற்றும் வரலாற்று அறிஞர் என்ற முறையில், பொருள்முதல் வாதத்தையும் கருத்துமுதல் வாதத்தையும் இரு அடிப்படையான தத்துவப் பிரிவுகளாக அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால், சாங்கியத் தத்துவம் பருப்பொருளின் இருத்தலை ஏற்றுக்கொள்கின்ற காரணத்தால், அதைப் பொருள்முதல் வாதத்தோடு அடையாளப் படுத்துகின்ற அவர், சாங்கியத் தத்துவத்தின் இருமைவாதத்தைக் கவனிக்கவில்லை. இன்னும் சொல்வதென்றால், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா தனது நூலில்/ஆய்வுகளில் பருப்பொருள் மற்றும் உணர்வு ஆகிய இரண்டில் எது முதன்மையானது என்ற வாதத்தைக்கொண்ட கோட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கவில்லை. எனவே, பருப்பொருளுக்கும் உணர்வுக்கும் இடையிலான பரஸ்பர உறவினைப் பற்றி தர்க்கரீதியாகவும் விவரங்களின் அடிப்படையிலும் திருப்தியளிக்கக்கூடிய ஒரு விளக்கத்தை அளிக்கின்ற வல்லமை இருமைவாதத்திற்குக் கிடையாது என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை.

இக்குறைபாடுகள், தேவிபிரசாத் பின்னர் எழுதிய நூல்களில் சரிசெய்யப்பட்டன. அவற்றை எழுதுவதற்கு அவசியமான காரணங்கள் வேறாக இருந்தனவாயினும், மார்க்சிய ஆய்வு முறையியலிலும் பொருள்முதல்வாத இயக்கவியல் அணுகுமுறையிலும் போர்க்குணத்தை வெளிப்படுத்துவதிலும் அந்நூல்கள் பல மடங்கு முன்னேற்றகரமாகப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன என்றால், அதற்குக் காரணம் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா வின் இயல்பில் ஒன்றியிருந்த புத்தார்வமும், ஒரு மாணவனின் மனநிலையில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனப்பாங்கும், பணிவுணர்வோடும் ஜனநாயக உணர்வோடும் தவறுகளைத் திருத்திக்கொள்வதில் அவர் காட்டிய ஈடுபாடுமேயாகும். இவ்வாறுதான் ‘இந்தியத் தத்துவம்: ஓர் அறிமுகம் (Indian Philosophy: A Popular Introduction)’, ‘இந்திய நாத்திகம் (Indian Atheism: A Marxist Approach)’, ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் (What is Living and What is Dead in Indian Philosophy)’, ‘பண்டை இந்தியாவில் அறிவியலும் சமூகமும் (Science and Society in Ancient India)’, ‘பண்டைய இந்தியாவில் பொருள்முதல் வாதத்திற்கு ஆதரவாக (In Defence of Materialism in Ancient India)’, ‘மதமும் சமூகமும் (Religion and Society)’ ஆகிய மிகச்சிறந்த தத்துவ நூல்களை அவர் தொடர்ந்து எழுதினார்.

‘இந்திய நாத்திகம்: ஒரு மார்க்சிய அணுகுமுறை’ எனும் நூலில் தேவிபிரசாத், நாத்திகமே மரபுசார் இந்தியத் தத்துவ ஞானிகளிடையே பரந்து விரிந்த கருத்தொற்றுமைக் களமாக விளங்கியது என்று வலியுறுத்துகிறார். அதேநேரத்தில், நாத்திகத்தில் அவர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையோராக இருந்தபோதிலும், உலகக் கண்ணோட்டத்தில் பெருமளவுக்கு வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருந்தனர். சமூகத்தில் போன்றே தத்துவத்திலும் முரண்பாடானவர்கள் ஒன்றுசேர்ந்திருப்பது ஆபத்தானதே. இந்திய நாத்திகத்தின் உண்மையான பலவீனத்திற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று இது என்றும் குறிப்பிடுகிறார்.

டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன், இந்திய ஆன்மிகம் குறித்தும் தத்துவம் என்றால் என்ன என்பது குறித்தும் மாயாவாதத்தின் முக்கியத்துவம் குறித்தும் அளிக்கின்ற விளக்கங்களை அப்படியே விரிவாகத் தனது நூலில் கொடுத்துள்ளார் தேவிபிரசாத். “உபநிடதங்கள் ஒரு தத்துவ முறைமையின் கூறுகளைக் கொண்டிருப்பதால், அவை மனித வாழ்வின் நிரந்தரத் தேவையொன்றை நிறைவுசெய்கின்றன; அவை இவ்வுலக வாழ்வின் ஒரு பேருண்மையாம் கடவுளை நாம் உருவகப்படுத்துவதற்குரிய சூத்திரங்களை நமக்கு அளித்திருக்கின்றன; அவை ஒருவேளை அனைத்தையும் விளக்காமல் இருக்கலாம். ஆனால், பிற்காலத் தத்துவம் என்பது அவற்றின் உள்ளடக்கத்தை முழுமையாக வெளிக் கொணரும் தொடர் முயற்சியே என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வாறு கூறுவதால், உபநிடதங்களில் தொடங்கி அவற்றின் அடியொற்றியே பிற்காலத் தத்துவம் பயணித்தது; வளர்ந்தது என்று நாம் கருதுவதாக இதற்குப் பொருள்கொள்ளக் கூடாது. இங்கே நாம் வலியுறுத்த விழைவது யாதெனில், இவ்வுலகில் உபநிடதங்களே ஊகக் கருத்துமுதல் வாதத்தின் அல்லது உய்த்துணர்வுக் கருத்துமுதல்வாதத்தின் தொடக்கக்கால வடிவங்களாக விளங்குவதால், பிற்காலத் தத்துவத்தின் சிறந்த, சீரிய அம்சங்கள் அனைத்தும் உபநிடதக் கருத்தின் விளக்கவுரைகளாகவே தோன்றுகின்றன என்பதைத்தான்.” இதைத் தொடர்ந்து தேவிபிரசாத் முன்வைக்கும் விமர்சனம் இது.

“….இந்திய ஆன்மிகத்திற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டமான வாதங்களுக்கு, முன்னோர்களிடமிருந்து நமக்குக் கொடையாகக் கிடைத்திருக்கிற தத்துவ நூல்களில் ஏதேனும் ஆதாரம் உண்டா? …இராதாகிருஷ்ணன் அவை அனைத்துமே இந்திய ஆன்மிகத்தின் பதவுரையாகவும் பொழிப்புரையாகவும் விளங்குகின்றன என நாம் நம்ப வேண்டும் என்கிறார்!

ஆனால், இத்தேசத்தின் மெய்யான தத்துவார்த்த இலக்கியம், இக்கூற்றுக்கு ஆதரவாக இல்லை என்பது சற்று ‘வருத்தமளிக்கும்’ செய்தியே! பெரும்பாலான இந்தியத் தத்துவ ஞானிகள், ‘கடவுள் எனும் கருத்தே வாழ்வின் உன்னதமான உண்மை’ என்பதை அவ்வளவு ஆர்வத்துடன் ஆமோதிக்கவில்லை என்பது மட்டுமன்று; ‘கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை’ என்பதில் உறுதியாகவும் நிற்கிறார்கள். அவர்கள் அதை நிறுவுவதையே தமது தத்துவ ஆராய்ச்சியின் மிக முக்கியமான அம்சமாகக் கருதினர். அதாவது, அவர்களின் நாத்திகக் கோட்பாட்டுக்கு ‘விமர்சனப் பாங்கிலான மதிநுட்பத்தை’ நம்பினரேஅன்றி ‘படைப்பூக்க உள்ளுணர்வையன்று’ ”

மேற்கண்ட விமர்சனத்தோடு தேவிபிரசாத் நின்றுவிடவில்லை. உண்மையில் இது நாத்திகத்தின் செல்வாக்கை நிறுவுவதற்கான முயற்சியின் ஒரு தொடக்கம்தான். நூலில், இதன் பின்வரும் பக்கங்களில் இந்தியத் தத்துவ மரபில் கடவுள் பெற்றுள்ள முக்கியத் துவத்தையும், இந்திய நாத்திகத்தின் வேர்களையும், அறிவியற் சிந்தனைக்கு எதிராக மதம் நிறுத்தப்பட்டதன் பின்னணியையும் சாங்கியம், சமணம், பெளத்தம், மீமாம்சம், நியாய வைசேடிகம் போன்ற பண்டைய இந்தியத் தத்துவப் போக்குகளில் உள்ளுறையாக விளங்கிய நாத்திகக் கூறுகளையும் குறித்தெல்லாம் தேவிபிரசாத் விரிவாக ஆராய்கிறார். புகழ்மிக்க இந்தியத் தத்துவ ஞானிகளில் மிகப் பெரும்பாலானோர் நாத்திகர்களே என்பதை நூலின் முற்பகுதியில் நிறுவிய பின் நூலாசிரியர், அந்த ஞானிகளின் அடியொற்றி நடக்க விரும்புகின்ற எவரும் மார்க்சியத்தைத் தவிர வேறெங்கும் அவர்களின் மரபுத் தொடர்ச்சியைக் காணமுடியாது என்றும் ஆணித்தரமாக நிறுவுகிறார். இதற்குக் காரணம், நம் ஆதிக்கால மற்றும் மத்திய காலத் தத்துவ ஞானிகளின் நாத்திக முன்னெடுப்புகளின் அறிவியல் பாங்கிலான இறுதிவடிவத்தை, மார்க்சியத்தில் மட்டுமே காணமுடியும் என்றும் குறிப்பிடுகிறார். அன்றைய கால நாத்திகத்தில் பல குறைபாடுகள் இருப்பினும், நம் காலத்துக்குப் பொருத்தமான நாத்திகமாக அதை வளர்த்தெடுக்க முடியுமெனில், அது நமது கருத்தியல் போராட்டத்தில் ஒரு படைக்கலனாக மாறும், மாறவேண்டும் என்றும் நமக்கு அறைகூவல் விடுக்கிறார்.

தேவிபிரசாத் 1979-ஆம் ஆண்டில், ‘லெனின் எனும் தத்துவ அறிஞர்’ (Lenin the Philosopher) என்றொரு நூலை எழுதினார். இந்நூல், லெனினின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூலன்று. லெனினது தத்துவக் கோட்பாடுகளையும் அவற்றையொட்டிய பிரச்னைகளையும் ஆய்வுசெய்வதை முதன்மை நோக்கமாகக்கொண்ட நூலுமன்று. மாறாக, லெனினது தத்துவார்த்தப் படைப்புகள் குறித்து ஓர் எளிய அறிமுகத்தை வழங்குவதும், அதன்மூலம் லெனினது தத்துவக் கருத்துகளின் சற்றும் குறையாத முக்கியத்துவத்தை நிரூபிப்பதுமே அதன் நோக்கமாகும். இந்நூலில் அவர், இந்தியாவில் மூன்று முக்கியமான காரணங்களுக்காக லெனின் தவிர்க்கவியலாதவர் என்று குறிப்பிடுகிறார்:

1. உண்மை சோஷலிசத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு.

2.சமூக விழிப்புணர்வை முன்னெடுப்பதற்கும் ஆழப்படுத்துவதற்கும்.

3.கோட்பாட்டுப் பிரச்னைகளில் தெளிவை அடைவதற்கு.

லெனின் எழுதிய ‘பொருள்முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும் (Materialism and Empirio Criticism)’ என்ற நூலை அவரது தலைசிறந்த நூலாகக் கருதிய தேவிபிரசாத், அந்நூல் எழுதப்பட்ட பின்னணி குறித்தும், நோக்கங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்குகிறார்.

மார்க்சியத் தத்துவார்த்த சிந்தனைக்கு அடிப்படைத் தேவை என்ற முறையிலும், நவீன இயற்கை –அறிவியல் கண்டுபிடிப்புகளால் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தத்துவத்தின் அடிப்படைகளின்மீது நின்றுதான் சரியான பதிலைத் தர முடியும் என்பதாலும் தத்துவத்தின் அடிப்படைக் கேள்விக்குப் பொருள்முதல்வாத ரீதியான பதிலைத் தருவதே லெனினின் நோக்கமாக இருந்தது. ஆகவே, புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் நோக்கு நிலையிலிருந்து, பிற்போக்குத் தத்துவத்தை முறியடிப்பதே லெனினது அக்கறைக்கு உரியதாக இருந்தது. இதனை விரிவாக எடுத்துரைக்கும் தேவிபிரசாத்தைப் பொறுத்தவரையில், ஹெகல் எழுதிய மிகச்சிறந்த நூல்களையும் உள்ளடக்கிய இயக்கவியலைப் போன்றே, தத்துவஞானத்தின் அடிப்படைக் கேள்விக்கு அளிக்கப்படும் பொருள்முதல்வாத ரீதியான விடையும் மார்க்சியத் தத்துவத்திற்கு இன்றியமையாத தாகும்.

பண்டைக்கால மற்றும் மத்தியகால இந்தியாவில், அறிவியலின் வளர்ச்சிக்கும் பொருள்முதல்வாத மரபின் வளர்ச்சிக்கும் தடையாக விளங்கிய மதப் பழைமை வாதத்தை, தேவிபிரசாத் தனது அனைத்து நூல்களிலும் கடுமையாக விமர்சிக்கிறார். இவ்விமர்சனங்களை முன்வைப்பதற்கு அவருக்குப் பெரிதும் உத்வேகமளித்தவர் பிரஃபுல்லா சந்திர ராய் (1861– 1944) எனும் தலைசிறந்த வேதியியல் அறிஞர் ஆவார். மனிதனின் பிணத்தை அசுத்தமானது/ தீட்டானது என்றும், உடலுழைப்பு வெறுக்கத்தக்கது என்றும் எழுதிவைத்து, நடைமுறைப்படுத்திய மனுவை ராய் கண்டனம் செய்கிறார். கட்புலனாகக் கூடிய உண்மையான யதார்த்த உலகத்தை, வெறும் மாயை என்று அறிவித்த அத்வைத வேதாந்தத் தத்துவவாதியான சங்கரரையும் ராய் கடுமையாக விமர்சிக்கிறார். இந்த விமர்சனத்தை, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்ற தேவிபிரசாத், பிணத்தைத் தொட்டால் தீட்டு என்ற இந்தக் கொள்கைதான் மருத்துவ அறுவைசிகிச்சை முறை இந்தியாவில் அழிந்துபோனதற்குக் காரணம் என்று விமர்சிக்கிறார். நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்களாகக் கருதப்பட்ட வேதகாலக் கடவுளர்களாகிய இரு அசுவின்கள், மற்ற கடவுள்களால் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டது பற்றிய கதையை தேவிபிரசாத் எடுத்துக் கூறுகிறார். அவ்விரு சகோதர அசுவின்களும் பிற கடவுளால் சமூகவிலக்குச் செய்யப்பட்டதற்கான காரணம், அவ்விருவரும் மனிதர்களோடு நட்பாகப் பழகியதுதான் என்றும் சுட்டிக்காட்டுகிறார். மக்களுக்குக் கடமையாற்றுவதைக் கடமையாகக்கொண்ட மருத்துவர்களுக்கு தேங்கிப்போன, பிற்போக்குத்தனமான, வர்க்கச் சமுதாயத்தில் நேரக்கூடிய முடிவை எடுத்துக்காட்டுகின்ற அதேநேரத்தில், மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவதற்காக மருத்துவர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டதையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய அர்ப்பணிப்பை ‘சாரக சம்ஹிதை’யிலும் ‘சுஸ்ருத சம்ஹிதை’யிலும்கூட நம்மால் காணமுடியும் என்று தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எடுத்துக்காட்டுகிறார்.

தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், தத்துவத்தை மக்களுக்கு எளிய முறையில் அறிமுகப்படுத்தும் நோக்கில் சில நூல்களை தேவிபிரசாத் எழுதினார். அவரது கருத்தின்படி, “மக்களின் தத்துவ ரீதியான தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதுவது, வெறுமனே எளிய அறிமுக நூல்களை எழுதுவதைவிட மிகவும் கடினமானதாகும். நமது பண்டைக்காலத் தத்துவ அறிஞர்கள் உண்மையில் என்ன சிந்தித்தார்கள், போதித்தார்கள் என்று விளக்கமளிப்பது மட்டும் போதுமானதல்ல; இவையனைத்திலும் நிலைத்திருப்பவை எவை, மடிந்துபோனவை எவை என்பதை வேறுபடுத்திக் காட்டுவதும் அவசியமாகும். ஏனெனில், நமது தத்துவ மரபில் மதிப்பில்லாதவற்றை ஒதுக்கித் தள்ளுவதைப் போலவே, மதிப்பு வாய்ந்தவற்றைத் தக்கவைத்துக்கொள்வதும் மிகமிக அவசியமாகும்”.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் வாழ்வையும் பணிகளையும் நினைவுகூர்கிற இத்தருணத்தில், அவரையும் நம்மையும் இணைப்பது எது என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது. இக்கேள்வி எழும்போதெல்லாம், தென்கிழக்கு மெக்ஸிக மலைகளிலிருந்து ஜபடிஸ்டா தேசிய விடுதலைப் படையின் துணைத் தளபதி மார்க்கோஸ் கூறிய சொற்களும் மனதில் மின்னலாகத் தோன்றுகின்றன: “சிலர் வரலாற்றில் கீறலை ஏற்படுத்தினார்கள். தங்களால் கீறல் ஏற்படுத்தப்பட்டதை அறிந்துகொண்ட அவர்கள், கிறுக்குவதன் மூலமாகவும் கீறுவதன் மூலமாகவும் இறுதியில் ஒளியைக் காணமுடியும் என்ற நம்பிக்கையுடன், மற்ற பலருக்கும் அழைப்பு விடுக்கத் தொடங்கினார்கள். நாங்கள் மேற்கொண்டிருக்கிற போராட்டமும் இதுவே தவிர வேறல்ல. நாங்கள் விரும்புவது என்ன என்று நீங்கள் கேட்பீர்களேயானால், நாங்கள் வெட்கமின்றி பதில் சொல்வோம்–‘வரலாற்றில் ஒரு கீறலை ஏற்படுத்த வேண்டும்’ ”.

இக்கட்டுரையை எழுதப் பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

1. உலகாயதம்: பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில்:எஸ்.தோதாத்ரி, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2010.

2. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில்:கரிச்சான் குஞ்சு, சென்னை புக்ஸ், சென்னை. (ஆண்டு குறிப்பிடப்படவில்லை)

3. இந்தியத் தத்துவம் : ஓர் அறிமுகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில்: வெ.கிருஷ்ணமூர்த்தி, படைப்பாளிகள் பதிப்பகம், சென்னை, 2008.

4. இந்திய நாத்திகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில்: சாமி, பாரதி புத்தகாலயம், சென்னை, 2013.

5. மதமும் சமூகமும், டாக்டர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில்: இரா.சிசுபாலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009.

6. In Defence of Materialism in Ancient India, Debiprasad Chattopadhyaya, People’s publishing house (p) limited, New Delhi, 2008.

7. Lenin, The Philosopher, Debiprasad Chattopadhyaya, Sterling Publisher pvt ltd, New Delhi, 1979

8. Philosophy, Science and Social Progress, Essays in Honour of Debiprasad Chattopadhyaya, Editors: Suman Gupta and Hiltrud Rustau, People’s Publishing House , New Delhi, 1992.

9. History of Science and Technology in Ancient India: The Beginnings, with a foreword by Joseph needham, Firma KLM private Limited, Calcutta, 1996.
10. எதிர்ப்பும் எழுத்தும், துணைத் தளபதி மார்க்கோஸ், தொகுப்பு, மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன், விடியல் பதிப்பகம், கோயம்புத்துர், 2005.

11.Newsclick இணைய இதழில் வெளியான எஸ்.கே.பாண்டே என்பவர் எழுதிய ‘Debiprasad Chattopadhyaya: A Centenary Salute to Multifaceted Philosopher’ என்னும் கட்டுரை, 5 நவம்பர், 2018.

12. Debiprasad Chattopadhyaya as Historian of Science and Technology in Ancient India, Ramakrishna Bhattacharya, Conference Paper, 1986, Pavlov Institute, Kolkata.