Published:Updated:

`அந்தப் பாவத்தை மட்டும் செய்யக்கூடாதுன்னு என் தாய் சொன்னார்’- பழைய நினைவுகளைப் பகிரும் மோடி

`அந்தப் பாவத்தை மட்டும் செய்யக்கூடாதுன்னு என் தாய் சொன்னார்’- பழைய நினைவுகளைப் பகிரும் மோடி
`அந்தப் பாவத்தை மட்டும் செய்யக்கூடாதுன்னு என் தாய் சொன்னார்’- பழைய நினைவுகளைப் பகிரும் மோடி

ஹூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற புகழ்பெற்ற பேஸ்ஃபுக் பக்கம், பாம்பே போன்ற நகரங்களில் உள்ள சிறந்த மற்றும் புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்வைப் பற்றி தன் பக்கத்தில் பதிவிடும். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியின் வாழ்க்கையை அவரே கூற ஐந்து பகுதிகளாக வாரம் ஒரு முறை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்னதாக வெளியான பதிவில் தன் இளமைக்கால அனுபவங்கள், நண்பர்கள் போன்ற பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார் மோடி. 

தற்போது வெளியாகியுள்ள பதிவில் தன் தாயை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அதில், `` நிறைய பேர் என்னிடம் கேட்டுள்ளனர். நீங்கள் பிரதமரானபோது உங்கள் தாய் அதை எப்படிப் பார்த்தார் என்று. நான் பிரதமரான பிறகு இந்தியாவில் அனைத்து இடங்களிலும் என் பெயர் கேட்டது. அனைத்து இடங்களிலும் என் புகைப்படங்கள் ஒட்டப்பட்டன. தொண்டர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் குஜராத் முதல்வராகத் தேர்வானபோதுதான் என் தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

நான் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்பதற்கு முன்னால் டெல்லியில் தங்கியிருந்தேன். தாய் அகமதாபாத்தில் என் சகோதரருடன் வாழ்ந்து வந்தார். அப்போது, டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும்போது மக்கள் அதை விழாவாக கொண்டாடினர்.   ஆனால் என் தாய், என்னைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு  கட்டியணைத்துக்கொண்டார். நான் இப்போது குஜராத் சென்றாலும் அவர் இதையேதான் செய்வார். அதுதான் அவரின் குணம். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவர் யோசித்ததே இல்லை. ஆனால், தன் பிள்ளைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஒரே எண்ணமாக இருந்தது. 

நான் முதல்வரான பிறகு என் தாய் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்து அதை தினமும் என்னைக் கூறச் சொன்னார். அவர் என்னிடம், ‘ நீ என்ன வேலை செய்கிறாய் என எனக்குத் தெரியாது. ஆனால், லஞ்சம் மட்டும் வாங்க மாட்டேன் என எனக்கு சத்தியம் செய்துகொடு. அந்த பாவத்தை எப்போதும் செய்யக்கூடாது’ எனக் கூறினார். அவரின் அந்த வார்த்தைகள் என் வாழ்வில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தையும் கூறுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு, உடுத்த நல்ல உடைகூட இல்லாமல் அவர் இருந்தார். அதனால் ஒரு நல்ல நாளில் என்னிடம் அந்த சத்தியத்தைப் பெற்றுக்கொண்டார்.

நான் சாதாரண வேலையில் இருக்கிறேன் என யாரேனும் என் தாயிடம் கூறினாலும் அவர் ஊருக்கே மிட்டாய் அளித்துக் கொண்டாடுவார். அவரைப் பொறுத்தவரை முதல்வர், பிரதமர் பதவிகள் எல்லாம் எதுவுமே கிடையாது. தன் மகன் சிறந்த மனிதராக நேர்மையானவராக இருந்து நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவரின் விருப்பம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.