
எஸ்.ராமகிருஷ்ணன்

கவிஞனாக வாழ்வது என்பது உலகைத் தனித்துவமாக எதிர்கொள்வதும் அனுபவிப்பதுமாகும். கவிஞர்கள் தனக்கென ஓர் அகப்பார்வை கொண்டிருக்கிறார்கள். அதன் வழியாகவே உலகைக் காண்கிறார்கள். அதனால்தான் புறத்தோற்றங்கள் அவர்களுக்குப் புதிய வடிவில், புதிய தளத்தில் அர்த்தம் கொள்கின்றன.
கவிஞன் மொழியைக் கையாளுவது என்பது காற்றை மரம் எதிர்கொள்வதைப் போன்றது. சேர்ந்தும் இணைந்தும் பிரிந்தும் காற்று மரத்தை எதிர்கொள்கிறது; விளையாடுகிறது. கவிதையில் வாழ்க்கை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆனால் எந்த மனிதருக்கு அவை நடைபெறுகின்றன. எங்கே நடைபெறுகின்றன என்பதைத் துல்லியப்படுத்துவதில்லை. மாறாகப் பெயர்களை நீக்கி நிகழ்வுகளை முதன்மைப்படுத்துகிறது கவிதை.

பந்து தரையிறங்குவதற்கு முன்பாகக் காற்றிலே அதை எதிர்கொண்டு காலால் உதைக்கும் பந்தாட்டக் காரனைப்போலவே கவிஞன், நிகழ்வுகள் தரையிறங்குவதற்கு முன்பாகவே அதை எதிர்கொண்டு விடுகிறான். கவிதை காலத்தின் எல்லைகளை, வரம்புகளைத் தாண்டுகின்றது. ஒருவகையில் கவிதைகள், காலத்தோடு இடையுறாமல் விளையாடிக் கொண்டேயிருக்கின்றன.
தான் பிறப்பதற்கு முன்பாகத் தன் தாயின் கர்ப்பப்பையைத் தனக்காக மாளிகையெனத் தன் அண்ணன்

மாற்றிவைத்தான் என்று அல் பர்தியின் கவிதை ஒன்று தொடங்குகிறது. அதில், கர்ப்பப்பையின் சுவர்களில் எழுதப்பட்டதை வாசித்ததே தனது முதல் வாசிப்பு என்கிறான் கவிஞன்.
வாசிப்பைக் கற்று அறிதலின் செயலாகக் கருதாமல், கற்றலுக்கு முந்தைய நிகழ்வாகக் கவிதை அடையாளம் காட்டுகிறது. கர்ப்பப்பையின் சுவரில் நினைவுகள் எழுதப்பட்டுள்ளன என்ற வரிகளை வாசிக்கையில், பிறப்பு குறித்துப் புதிய வெளிச்சம் உருவாகிறது.
கனடியக் கவிஞர் அல் பர்தி (Al Purdy) தன் வாழ்நாள் எல்லாம் வாசித்துக் கொண்டும் கவிதைகளைக் கொண்டாடிக் கொண்டுமிருந்தார். நோயுற்று மரணப்படுக்கையில் கிடந்த நாள்களில்கூட, தனது முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும் இளம் கவிஞர்களின் கவிதைகளை ஆசையாக வாசித்ததோடு அவற்றைக் கொண்டாடவும் செய்தார்.
‘நான்
மஞ்சள் மலர்களைக் குடிக்கிறேன்’
என்று இன்னொரு கவிதை வரி தொடங்குகிறது. மலர்களை நாம் காண்கிறோம். கவிஞன் அதைக் குடிக்கிறான்.
புகழ்பெற்ற ஓவியர் வான்கா, மலர்களை வரைந்துகொண்டிருந்தபோது ஒருவர் அதைக் கண்ணுற்று, “உங்கள் ஓவியங்களை விடவும் நிஜத்தில் மலர்கள் மிக அழகாக இருக்கின்றன. நீங்கள் ஏன் மலர்களை இப்படி வரைகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு வான்கா, “எவ்வளவு அழகான மலராக இருந்தாலும் நாளின் முடிவில் அது வாடிப்போய்விடும். ஆனால், என் ஓவியத்தில் வரையப்பட்ட மலர்கள் நூறு ஆண்டுகள் ஆனாலும் வாடிவிடாது. நான் மலர்களைக் காலத்தின் கரங்களிலிருந்து பறித்து நித்யமாக்குகிறேன். இவை என் யதார்த்தங்கள். உலகின் யதார்த்தம் வேறாக இருப்பதைப் பற்றி நான் கவலைப்
படுவதில்லை. கலைஞனாக ஒரு மலர் எந்தத் திசையில் சூரியனை எதிர்கொள்கிறது. எவ்வளவு வெளிச்சத்தை ஏந்திக்கொள்கிறது. எப்படித் தன்னை முழுமையாக விரித்துக்கொள்கிறது என்பதே என் கவனம். மரத்தை வரைவதற்கு நூறு ஓவியர்கள் இருக்கிறார்கள். நான் வேர்களை வரைபவன். வேரின் அழகு, மரத்தின் அழகைவிடவும் மேலானது என நினைப்பவன்” என்றார் வான்கா. அல் பர்தியின் நிலைப்பாடும் இது போன்றதே.
கனடாவின் புகழ்பெற்ற கவிஞரான அல் பர்தி, 1918-ம் ஆண்டில் ஓன்டாரியோவில் உள்ள வூலரில் பிறந்தார். தனது 13-வது வயதில் முதல் கவிதையை எழுதினார்.
1944-ம் ஆண்டில் அவர் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பான ‘தி என்சான்டட் எக்கோ’வை வெளியிட்டார்.
50 ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதைகள் எழுதிவந்த அவர், 30 கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார், அத்துடன் ஒரு நாவல். இரண்டு நினைவுக் குறிப்புகள் அடக்கம். ‘தி கலெக்டெடு போயம்ஸ் ஆப் அல் பர்டி’, 2000-ம் ஆண்டில் அவரது இறப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அவர் RCAF இல் பணியாற்றினார். போருக்குப் பின்,
1960-களின் முற்பகுதி வரை பல்வேறு வகையான வேலைகளில் ஈடுபட்டார். அதன் பின்பே, அவர் தன்னை ஒரு முழுநேர கவிஞராக உருவாக்கிக்கொண்டார். தனது 81 வயதில் நுரையீரல் புற்றுநோயின் காரணமாக மரணமடைந்தார் அல் பர்தி.

அல் பர்தியின் கவிதைகள் எளிய மனிதர்களைப் பாடின. மரங்களையும் மலர்களையும் பாடின. அவரைப்போல அன்றாட வாழ்க்கையை வியந்து பாடியவர்கள் இல்லை. அவரை மக்கள் கவிஞர் என்றே கொண்டாடுகிறார்கள் கனடியக் கவிஞர்கள். கவிதையால் ஒரு பியரையோ அல்லது ஒரு மலரையோ வாங்க முடியாது. ஆனால், பாட முடியும். கவிஞன் நிறைவேற்றிக்கொள்ள முடியாத உலகியல் விஷயங்களைக் கவிதையின் வழியாகவே அடைந்துவிடுகிறான். ஒருவகையில் கவிதையே அவனது மீட்சி. உலகின் தனிமைக்கும் தனது தனிமைக்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்குகிறான் கவிஞன்.
‘உடல் வழியாக அல்ல
குரல் வழியாகவே
காமம் தூண்டப்படுகிறது’
என்ற அல் பர்தியின் இன்னொரு கவிதை, உடலைவிடவும் குரல்கள் இச்சையைத் தூண்டுகின்றன. குரலுக்குள் ரகசிய விம்மல்கள் ஒளிந்திருக்கின்றன. குரல் ஒரு பனிக்கத்தியைப்போலத் தீண்டுகிறது.
‘இன்னொரு கவிதையில்
சப்தமில்லாமல் பறக்கும்
விமானத்தைப்போல உன்னுடலில்
பிரவேசித்துப் பறக்கிறேன்’
என்கிறார் அல் பர்தி. கவிதை வரலாற்றுடன் தொடர்புகொள்கிறது. நினைவுகளை மீளுருவாக்கம் செய்கிறது. மறைந்த உண்மைகளை அறிய முற்படுகிறது. கவிதை, பசித்த விலங்கைப்போலவே நடந்துகொள்கிறது என்று ஒரு குறிப்பில் கூறுகிறார்.
ஒரு தேசம், நினைவில் என்னவாக இருக்கிறது என்றொரு கேள்வியை எழுப்புகிறார் அல் பர்தி. கனடா, பூர்வ குடிகளான ‘இனியூட்’ எனப்படும் மக்களைக்கொண்டது. இவர்களைத்தான் முன்பு எஸ்கிமோ என அழைத்தார்கள். எஸ்கிமோ என்பது பச்சை மாமிசம் உண்பவர்கள் என்று தவறான பொருளைக் கொண்டது. ஆகவே, அவர்களைத் தற்போது முதற் குடிமக்கள் என்றே கனடவாசிகள் அழைக்கிறார்கள். நிலத்தை மட்டும் அவர்கள் தேசமாகக் கருதுவதில்லை.கனடாவில் பிரிட்டிஷார், பிரெஞ்சுக்காரர்கள், இந்தியர்கள் என்று பல்வேறு தேசத்தவர்கள் இணைந்து வாழ்கிறார்கள். இந்தப் பன்முகத் தன்மையைத் தனது கவிதைகளில் எதிரொலிக்கிறார் அல் பர்தி. நவீனத் தொழிற்நுட்பங்களைப் பயன் படுத்தினாலும் அதிநவீன வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்ந்தாலும், மனதளவில் தான் இன்னமும் குகைமனிதனைப்போலவே இருப்பதாகக் கூறுகிறார் அல் பர்தி. மணற்சாலையில் செல்லும் கார்கள் தனது தடயத்தை விட்டுச் செல்வதைப் போல, காலம் தனது நெற்றியில் தடயங்களை விட்டுப்போகிறது என்று இன்னொரு கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

தன் கவிதைகளுடன் எப்போதுமே உரையாடக்கூடியவர் அல் பர்தி. மோசமான கவிதைகளை எழுதுவதாகத் தான் உணர்வதைப் பற்றி ஒரு நீண்ட கவிதை எழுதியிருக்கிறார். அக்கவிதையில் கவிதையுடன் தனது உரையாடலை நிகழ்த்துகிறார்.
‘கவிதையே,
நீ இப்போதெல்லாம்
சரியாக நடந்துகொள்வதில்லை.
உன் பொறுப்பை
உணர்வதேயில்லை
என் கவிதையே,
உன்னைச் சந்திப்பவர்கள்
உன்னிலிருந்து
எவற்றைப் பெற்றார்கள்,
எவற்றை நீ வெளிப்படுத்தினாய்
என்று யோசிப்பதேயில்லை’
என்று கவிதை தன் முழு வீச்சை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் உணர்வதாக அக்கவிதையில் குறிப்பிடுகிறார்.
பறவைகளிலும் மலர்களிலும், மரங்களிலிலும், விதைகளிலும் அல் பர்திக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு, அவரது இதயத்தின் ஆழங்களிலிருந்து உருவாகிறது, அதன் சங்கிலித் தொடரான பிணைப்புகள் இயற்கையில் புதைந்திருக்கின்றன.
அல் பர்தியின் நண்பரும் சிறந்த கவிஞருமான சார்லஸ் புக்கோவ்ஸ்கி நெருங்கிய நட்புகொண்டிருந்தார். நிறையக் கடிதங்களைப் பரஸ்பரம் இருவரும் எழுதியிருக்கிறார்கள். புக்கோவ்ஸ்கியின் ஒரு கவிதையில், ‘ஆப்பிள் என்பது வெறும் ஆப்பிள் மட்டுமில்லை. அது ஓர் அனுபவம்’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. அதை அடிக்கோடிட்டு தனது நாள்குறிப்பில் பதிவுசெய்துள்ளார் அல் பர்தி.

ஆப்பிளை உண்ணும் ஒருவன், அதற்குள் ஒரு கதவு திறப்பதையும் ஆப்பிளின் மையத்தை நோக்கித் தான் பயணிப்பதையும் உணர்வதாக அந்தக் கவிதை கூறுகிறது. அந்த அனுபவமே கவிதை உருவாக்கித் தரும் தனிப்பட்ட அனுபவம். இதன் வழியே உலகை முற்றிலும் புதிய விதத்தில் நாம் அனுபவிக்கிறோம் என்கிறார் அல் பர்தி.
எது ஒரு கவிஞனை கவிதை எழுதத் தூண்டுகிறது. புறவயக் காட்சிகள் அல்லது நிகழ்வுகள் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால், அந்தப் புறவயக் காட்சியோ அல்லது நிகழ்வோ அகத்தில் பட்டு எதிரொளிக்கும்போது, வேறு ஒன்றை அடையாளப்படுத்துகிறது அல்லது கண்டுபிடிக்கிறது. அதுவே கவிதையென வெளிப்படுகிறது எனலாம். இதற்கு உணர்ச்சிகள் தூண்டுதலாக இருக்கின்றன. நனவிலி மனதில் இந்தச் செயல் நடைபெறுகிறது.
எவ்வளவு கவனமாகவும் தீர்க்கமாகவும் அடிமனம் இயங்குகிறது என்பதற்கு, கவிதை எழுதுவதே சாட்சியமாக உள்ளது. கவிதை எழுதும் செயலானது வாழ்வின் நெருக்கடிகளையும் மன அவசங்களையும் கடந்து செல்வதற்கு உதவுகிறது. கவிதை எந்தவிதச் சிக்கலான காலகட்டத்திலும் வியக்கத் தகுந்த அளவுக்குத் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்கிறது. அதன் காரணமாகவே கவிதைகள் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகின்றன; எழுதப்படுகின்றன.
எங்கிருந்தோ பறந்துவரும் நாரைகளையும் கொக்குகளையும் ஒருநாள் அதிகாலையில் பனிப்பிரதேசத்தில் காண்கிறார் அல் பர்தி. ‘பனிமூட்டத்தில் அதன் உருவம் தெளிவாகத் தெரியவில்லை. அவை உறைந்த சிற்பங்களைப் போலிருக்கின்றன. பனிமூட்டம் அந்தப் பறவைகளுக்குப் புது அழகை உருவாக்குகிறது. பனிமூட்டம் விலகும்போது பறவைகள் பறந்து போய்விடுகின்றன. அந்தப் பறவைகள் கண்முன்னே மறைந்துவிட்டன. ஆனால், மனதில் பறந்துகொண்டிருக்கின்றன’ என்கிறார் அல் பர்தி. புறத்திலிருந்து அகத்திற்குள் பறவைகள் இடம்மாறுவதே கவிதையின் செயல்பாடு.
Hiroshima Poems (1972) என்ற அவரது கவிதைத் தொகுப்பு, ஜப்பானிய பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் நிகழ்வுகளையும் விவரிக்கிறது. ‘நான் காலம், வெளி இரண்டிலும் பயணிப்பவன். இரண்டையும் பற்றி எழுதியிருக்கிறேன்’ என்கிறார் அல் பர்தி. ராப்லின் ஏரியின் கரையை ஒட்டி பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த வீடு, கவிஞர்களின் புகலிடமாக மாறியது. கனடா முழுவதுமிருந்து கவிஞர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்; கவிதை பாடினார்கள். ராப்லின் ஏரியை வியந்து பாடியிருக்கிறார் அல் பர்தி. அவரது மறைவிற்குப் பிறகு, இந்த வீடு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கனடாவின் புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான மார்கரெட் அட்வுட், அல் பர்தியோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இந்த நட்பு தொடங்கியது. அட்வுட்டின் கவிதைகளை வாசித்து அவற்றைப் பாராட்டிய அல் பர்தி, அட்வுட் கல்விபுலம் சார்ந்த எழுத்தாளர் என்ற விமர்சனத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார். மோதலும் சண்டையும் தொடர்ந்தபோதும் இருவரும் நெருக்கமான நட்பு கொண்டேயிருந்தார்கள்.
ஓட்டாவா நகரில் பிறந்த அட்வுட், டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ராட்கிளிஃப் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே அவரது கவிதைப் பதிப்புகள் வெளியாகின. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், மொண்ட்ரியாலில் உள்ள சர் ஜார்ஜ் வில்லியம்சன் பல்கலைக்கழகம், ஆல்பெர்டா பல்கலைக்கழகம், டொரோண்டோ பல்கலைக்கழகம், அலபாமா பல்கலைக்கழகம், நியூயார்க் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
1987-ல் இவரது ‘தி ஹாண்ட்மெய்ட்ஸ் டேல்’ அறிபுனைப் படைப்புகளுக்கான ‘ஆர்தர் சி.கிளார்க்’ விருதை வென்றது. அட்வுட்டின் புனைகதைகளை மனம் திறந்து பாராட்டிய அல் பெர்தி, ‘அவை புனைவின் புதிய உச்சத்தைத் தொடுவதாக’க் கூறினார். புற்றுநோய் பாதித்து மரணப் படுக்கையில் இருந்த நாள்களில் அட்வுட்டிற்கு அவர் எழுதிய கடைசிக் கடிதம் மிகுந்த உணர்ச்சிபூர்வமாக அமைந்திருக்கிறது; அவர்களின் நட்பை வெளிப்படுத்துகிறது.
அல் பர்தியின் கவிதைகள், 23 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நோபல் பரிசுக்கும் அவரது பெயர் பரிந்துரை செய்யப் பட்டிருக்கிறது. இந்தத் தலைமுறை கனடியக் கவிஞர்களுக்கு அவரே ஆசானாக விளங்குகிறார். மரணத்திற்குப் பிறகு, அவரது கல்லறை புத்தக வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் புத்தகங்களை நேசித்த ஒரு கவிஞன், மறைவிற்குப் பிறகு புத்தகமாக உருமாறியிருப்பது சரியான அடையாளமே!

இறந்த கவி
நான் கருவறை நஞ்சுக்கொடியில் மாற்றியமைக்கப்பட்டேன்
எனக்கு முன்னால் இறந்துபோன எனது அண்ணனால்
நான் வந்துகொண்டிருந்ததை அறிந்து
வயிற்றில் ஓர் இடத்தை அமைத்தவன் அவன்:
தசைச் சுவர்கள் மேல் அவன் சொற்களை எழுதினான்
ஒரு பெண்ணுக்குள் இன்னொரு பெண்ணை ஓவியம் வரைந்து
ஒரு மயக்கும் தாலாட்டைக் குசுகுசுத்தான்
எனது குருட்டு இதயத்தில் இன்னும் அது பாடுகிறது
மற்றவர்கள் விறகுவெட்டிகள்
தொலைதூரக் காடுகளின் மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாயிகள்
அவர்களில் யாரும் உயிருடன் இல்லை
ஆனால், ஒரு சமையல் அடுப்பு மற்றும் கொதிக்கும் தேநீர்க்கலம்
ஒரு படிமத்துக்குள் இன்னொரு படிமம்
--அத்துடன் எனக்கு என்னை எப்படி விவரிப்பேன்
எங்கிருந்து வருகிறது பாடல்?
இப்பொழுது எனது அலைதல்களில்:
அல்ஹாம்ப்ராவின் பாடலில் குழப்பம்
அங்கு மூர்கள் கல் கவிதைகளைக் கட்டினார்கள்
ஒரு வெளிறிய வெள்ளை முகம் எட்டிப் பார்க்கிறது
---மேலும் பிளேட்டோவின் குகையில் உள்ள நிழல்
ஒரு இறந்த சிறியதை நினைக்கிறது
---சமர்காண்டில் வெளுத்த நீல ஒளி
அவனிடமிருந்து சொற்கள் மெல்ல வருகின்றன
---நான் ரத்தத்தின் இசையை நினைவுகூர்கிறேன்
வெள்ளிக் கொல்லர்களின் தெருவில்
பூமியின் ஆவியே மென்மையாகத் தூங்கு
பகல்களும் இரவுகளும் கைகோர்க்கும்போது
எல்லாமும் ஒரு விஷயமாக மாறும்போது
சகோதரா மென்மையாகக் காத்திரு
ஆனால், நிகழ்வதை எதிர்பார்க்க வேண்டாம்
புத்துயிர்ப்பை அறிவிக்கும் அந்த மாபெரும் கூவல்
பறவைகள் கூடு கட்டுவதின், பசும்பயிர்கள் வளர்வதின்
ஒரு சிறிய குசுகுசுப்பை மட்டும் எதிர்பார்
அவற்றின் ஒரு சுருக்கமான பழமொழி
மேலும் சொற்கள் எங்கிருந்து வருகின்றன என அறிந்துகொள்.
எப்போதும் பசுமையோடிருக்கும் கல்லறையில்
அசையாத சாம்பல் முகம், வற்றிப்போன உடல்;
குளிர்காலம் எதிர்ப்பின்றி உள்ளே நுழைகிறது,
ஒரு கல் அல்லது வீழ்ந்த மரமேபோல் அவள்,
நிலக்காட்சியின் அதே அளவில் அவளது வெப்பநிலை---
அதைப்பற்றி அவள் எவ்வாறு புகார் கொடுப்பாள்,
இறுதியாக வெப்பமில்லாமல் இருப்பதின் அவமரியாதை.
அவள் நம்பிக்கை வைத்திருக்கும் குறிப்பிட்ட கடவுளிடமிருந்து ஒரு அவமதிப்பு
மேலும் அவளைக் கொன்ற அந்த வீழ்ந்ததைவிடவும் மோசம்---
இப்பொழுது ஓர் எண்ணம் கல்லறைக்குள் பறக்கிறது
வான்கூவரிடமிருந்து, எட்மாண்டனிடமிருந்து இன்னொன்று,
-மேலும் விட்டில்பூச்சிகளைப்போல ஜனவரி நாளில் மறைகிறார்கள்,
நான் நினைக்கிறேன் அதன் காரணமாக விருந்தினர்கள்
கொஞ்சம் தாமதமாகத் தங்கள் மாலை உணவைப் பெறுகிறார்கள்---
ஒருவேளை நாளைய சந்திப்புகள் தாமதமாகலாம்,
வினாடிகளின் இறுக்கமான அட்டவணை குலைந்துபோகலாம்,
எல்லாமும் கொஞ்சம் முந்தியோ பிந்தியோ போகலாம்,
காலத்தின் தருணங்கள் நகர்கின்றன மேலும் அசையாமல்;
இறுதியாக ஒரு புதிய முறையில் நிலைகொள்கிறது,
அதனால் காதலர்கள், தெருமுனைகளில் ஒருவரை ஒருவர் நோக்கி
விரைந்துகொண்டிருப்பவர்கள், சந்திக்கத் தவறுவதில்லை---
நானோ, எனக்குத் தெரியாமலே ஏதோ நடக்கிறது
என்று நினைத்துக்கொண்டிருந்தவன்; மாற்றங்கள் நடக்கின்றன

அதில் நான் தலையிட வேண்டும்,
சொர்க்க ரதத்தின் பின்னால் கறுப்புக் காரில்
அசைவின்றி உட்கார்ந்திருக்கிறேன்,
ஒரு வேற்று உலகில் மீண்டும் நுழையக் காத்திருக்கிறேன்.
எனக்கு நான் செவிமடுத்தல்
ஆழ்ந்த உறைபனி வழியாகத் தள்ளாடிச் செல்லும் என்னைப் பார்
மரக்கூட்டங்களின் மேல் மோதியவாறு நேற்று
ஒரு முதியவர்
உடல் பலவீனம் காரணமாக அனேகமாக விழுந்துகொண்டிருப்பவர்
--மேலிருந்து என்னை வெறுப்புடன் பார்க்கிறேன்
பிறகு முன்புறமும் இரு புறமும்
வெள்ளை முடி --- சுருங்கிய முகமும் கைகளும்
உண்மையில் மிகுந்த ஆச்சர்யமளித்தது அது இல்லை
நான் செவிமடுத்தபோது எனது குரலில்
பேசப்பட்ட அந்தக் காதலாய் இருக்க வேண்டும்
கேலிக்குரியது
எனினும் அது அங்கு இருக்கிறது
எரிந்துகொண்டிருக்கும் மூளையுடன் ஒரு முட்டாள் கிழ மனிதன்
உறைபனி ஊடாகத் தள்ளாடுகிறான்
--- காதலின் இழப்பு
காதலைக் காட்டிலும்
அது கூடுதல் அர்த்தம் தர வருகிறது
எவ்வாறு அதை விவரிப்பேன்?
---காட்டில் ஓர் அசைவற்ற குளம்
எதையும் பிரதிபலிப்பதை அது நிறுத்திவிட்டது
கடந்த காலத்தைத் தவிர
---ஒரு வகையான அரைக்காதலாக எஞ்சியிருக்கிறது
அது இரக்கத்தை ஒத்தது
மேலும், நான் கோபமாக ஞாபகம்கொள்கிறேன்
தசைக்குத் தசை எலும்புக்கு எலும்பு
பாடலை ஞாபகம்கொள்கிறேன்
இழப்பு மேலானது.
கல்யாணமானவனின் பாடல்
இளம் பெண்ணிடம் காதல் செய்யும்போது அவன்
நடுவயதுக்காரனும் நெடுங்காலம் மணமாகியவனுமான அவன்
அவனுக்குள்ளேயும் அந்தப் பெண்ணிடமும் என்ன கூறுவான்?
--அந்தக் காதலர்கள் வாழ்கிறார்கள், வரவேற்பாளர்கள் அழிகிறார்கள் என்றா?
நியான் விளக்குகள் பெண்ணை ஒளிக்குள்ளும் நிழலுக்குள்ளும் மின்னச் செய்கையில்
அறை மறைகிறது மேலும், வெகுகாலம் முன்பிருந்து தங்கியிருக்கும்
அந்தப் பிற எல்லா விருந்தினர்களும்
புன்னகைக்கிறார்கள்
மேலும், அவளது இருள் மட்டுமே தொடப்படலாம்
வெண்மை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது
கண்ணீரையும் தேனையும் அழுதுகொண்டு
அவனுக்கும் மேலே அவள் ஒரு கல் தேவதைபோல நிற்கிறாள்
அவனது வயதில் பாதிதான் இருக்கும் அவளுக்கு
மேலும், மிக வயதான ஒரு மனிதன் எவ்வாறு இதை
அவனது மனைவியிடம் சொல்வான்?
பின்னால் அவர்கள் எல்லா நற்பண்புகளுடனும் சந்திப்பார்கள்
முற்றிலும் மிக அந்நியர்கள் அல்ல ஆனால், ஒருபோதும் நண்பர்கள் இல்லை
எங்கெல்லாமோ தொட்ட கைகள் இணைந்து குலுக்கிக்கொள்ளும்
விரல்களின் உரசலுடன் மற்றும் தற்செயல் கண்கள்
மேலும், துடைப்பான்கள் துடைக்கிறது மாய வெண்மை வரை
மேலும், மோசமான நறுமண நீரில் பிழைத்திருக்கிறது காதல்
(ஆனால் அந்தக் கறுப்புத் தோலாக மாறுவது பெண்களின் உடல்கள் அல்ல)
விளம்பரக்காரர்களின் பொய்களை எல்லோரும் நம்புவதற்காக
அரிதாக திருமணமான ஆண்களின் படையணி மத்தியில்
ஒளிரும் அத்தகைய தருணங்கள் ஒருபோதும் நிகழவில்லை
அத்தகைய ஆண்களை அவர்களது திடமான கற்புக்காகப் புகழ்வதா
அல்லது அவர்கள் மாயமந்திரம் இன்றி வாழ்வதற்காக முட்டாள்கள்
எனக் கண்டனம் செய்வதா
பதில் அரிதாகவே தர முடியும்
வெளி கிரகங்களில் அறைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன
மேலும் ஃப்ளோரல் சாஸ்க்கில் நியான்கள் எரிகின்றன
நாம் மரணத்துடன் வாழ்கிறோம் ஆனால், வாழ்க்கையால் நாம் சாகிறோம்
மலர்ச்சிகொண்ட பூமியில் கொட்டுகிறது ரோஜா
வீட்டிலும் நெடுஞ்சாலையிலும் நகரில் நாட்டுப்புறத்தில்
ரத்தத்துக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அது தரப்பட்டது பரிசுகள் விற்கப்பட்டன
அந்த விண்மீன்களின் வெள்ளை விரல்கள் ஒளி விளக்குகளைக் கழற்றுகின்றன
ரசீதுக்குப் பணம் கட்ட வேண்டும் மேலும் வரவேற்பாளர் விழித்துக்கொள்கிறார்
எங்கள் கதவுக்கு வெளியே படிகள் அமைதிகாக்கின்றன
ஒரு பேய்த்தனமான சூரியனிடமிருந்து ஒளி வந்து வந்து போகிறது
அங்கு இருள் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்
மேலும், மீதமுள்ளவை சென்றுவிட்டன.

தூய உட்புற இசை
நாரைகள்
அவற்றின் பெயர்கள்
நிலத்தின் மேல் அவை இருக்கும்
அசிங்கமான வடிவம் கொள்கின்றன
ஆழமில்லாத ஆகாயத்தில் ரோந்து
பிறகு ஒரு கதா நடனம் மாறுதல்
---மீண்டும் மாறுதல்
இறகுக் குண்டுகளாக
தண்ணீருக்குள் பாய்தல்
---மேலும் இந்த மூன்று
உயிர்களும் ஒன்றாக இணைந்து
எனது கபாலத்துள் நுழைகிறது
மூளையில் மென் ஒளியும்
நானும் வசிக்கலானோம்
நீலக்கொக்கு
துணி சுற்றிய கால்களுடன்
மேலும், மனிதத்தன்மையற்ற பொறுமை
நமது பசும் நீலக் கோளின்
நடுங்கும் கரையோரங்களில்
---எனது இனமும் அவற்றின் இனமும்
ஒன்றையொன்று கற்கின்றன
அவற்றால் நம்ப முடியவில்லை
நமது இருகூறாய்ப் பிரிந்த விந்தை
ஏதோ தவறாகிவிட்டது
அதன் படைப்பில்
நாரைகளின் கடவுளால்
குட்டைக் கழுத்துள்ளவை நிராகரிக்கப்பட்டன
கூட்டைவிட்டு வெளியே எறியப்பட்டது
ஆதாமுக்கு முந்தைய தொன்மத்தில்
இன்று காலை மூடுபனி
உலகம் ஒரு கனவு மேலும்
நான் நினைக்கிறேன் உலகம்
எப்போதும் கனவுதானே?
கவலை வேண்டாம்
நமது நண்பர்கள் எங்கிருக்கிறார்கள்
நாரையும் நீலக்கொக்கும்
மேலும், நான் அறிவேன்
அவற்றை உணர முடியும்
அவை கூடு கட்டியிருக்கின்றன
எனது மனசுக்குள்.