Published:Updated:

நிஷாகந்தி - சிறுகதை

நிஷாகந்தி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
நிஷாகந்தி - சிறுகதை

சிறுகதை: சிவராமன் கணேசன், ஓவியங்கள்: செந்தில்

நிஷாகந்தி - சிறுகதை

சிறுகதை: சிவராமன் கணேசன், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
நிஷாகந்தி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
நிஷாகந்தி - சிறுகதை

``அவ கண்ணு, அடர் நீல நிறத்துல இருந்தது சிவதாஸு. கத்திரிப்பூ கலர் புடவை கட்டியிருந்தா. அதுல வெள்ள கலர்ல பெரிய பெரிய பூப்போட்டிருந்தது. வளையல், நகையெல்லாம் காணோம். காதுல மட்டும் சின்னதா ஒரு முத்துத்தோடு இருந்துச்சு. செளந்தர்யலஹரியில `த்ரிவல்யம்’னு சொல்வாங்க. நீ கேள்விப்பட்டிருக்கியான்னு தெரியலை. பொண்ணுங்களுக்கு, கழுத்து ஓரத்துல மூணு கோடு சில பேருக்குத்தான் பாந்தமா இருக்கும். இவளுக்கு இருந்துச்சு. `செறியெயிற்றரிவை’ன்னு ஸ்கூல் செய்யுள்ள படிச்சிருப்போம்ல, நெருக்கமான பல்லு உடையவள்னு, அப்படியே மின்னல் வெட்டின மாதிரி சிரிச்சா. அப்படி ஒரு அழகை இதுவரைக்கும் பார்த்ததேயில்ல சிவதாஸு” - என் பேச்சை மெல்லிய சிரிப்புடன் கேட்டுக்கொண்டி ருந்த சிவதாஸ், நீண்ட மெளனத்துக்குப் பிறகு பேசத் தொடங்கினான்.

``நீ சொல்ற சாயல்ல இந்த ஊர்ல பெண்ணேதும் இல்லை சீனி. இன்னும் சொல்லப்போனா, இளம்பெண்களே இல்லாம சபிக்கப்பட்ட ஊர் இது. ஸ்கூல், காலேஜுக்கெல்லாம் ஊட்டிக்குத்தான் போகணும். இங்கே இருந்து மழையிலயும் குளிர்லயும் அவ்ளோ தூரம் போயிட்டு வர்றது சிரமம்கிறதால, இங்கே இருக்கிறவங் கெல்லாம் அவங்க வங்க புள்ளை ங்களை சொந்த ஊர்லயோ இல்லை, ஹாஸ்டல்ல யோதான் படிக்கவைப்பாங்க. டிசம்பர் மாசமும், மே மாசமும்தான் இங்க இளம்பெண்களைப் பார்க்க முடியும்’’ என்றான்.

நிஷாகந்தி - சிறுகதை

அவன் சொல்வதை நம்பத்தான் வேண்டும். இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவன். இங்கு உள்ள எல்லோரையும், என்னைவிட அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், என் கண்களின் கேள்விக்கு விடை என்னவென்றுதான் தெரியவில்லை. அவளைப் பார்த்த நினைவை, இந்த மனதைவிட்டு அகற்றவே முடியவில்லை.

மூன்று மாதத்துக்கு முன்பு கனவுகூடக் கண்டிருக்க மாட்டேன், இப்படி ஒரு மலைக்காட்டில் தனிமையில் என் பொழுது கழியப்போகிறது என்று. அப்பா இறந்த பிறகு மின்சார வாரிய வாரிசு வேலைக்காகக் காத்திருந்த பொழுதில் எல்லாம், `திண்டுக்கல்லுக்கோ தூத்துக்குடிக்கோ சென்று சேரப்போகிறோம்’ என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், விதி என்னை இந்த மலைக்காட்டில் கொண்டுவிட்டது.

நீலகிரி மாவட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் இந்த நீர்மின் திட்ட அலுவலகத்தில்தான் வேலை என எனக்கு எழுதியிருந்தது. 30 குடும்பங்கள் வசிக்கும் சிறிய ஒரு காலனி என்றுதான் சொல்ல வேண்டும். ஹோட்டல்கள் கிடையாது. பொழுதுபோக்குக்கான தியேட்டர், மால் எல்லாம் கிடையவே கிடையாது. எப்போதாவது குரங்குகள் கேபிள்களை அறுத்துப்போடாமலிருந்தால் சாட்டிலைட் டிவி-க்கள் தெரியும். டெலிபோன் சிக்னல் கிடைத்தாலே பெரிது. இதில் இணையத்துக்கும் வழியேயில்லை. குறைந்தபட்சப் பொழுதுபோக்குக்கே 25 கிலோமீட்டராவது பயணம் செய்ய வேண்டும்.

``கள்ளோ கன்னியோ இல்லைன்னா பேச்சிலர்க்கெல்லாம் இந்த ஊர் ஒரு நரகம் சீனி” என்றான் சிவதாஸ். இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த என் ஒரே சக பிரம்மச்சாரி ஊழியன். குடி, சிகரெட், சிலசமயம் கஞ்சா என சகல கல்யாண குணங்களும்கொண்டவன், சில நாள்களாய் என்னையும் இழுக்க முயல்கிறான்.

``மலைக்கஞ்சா கிடைக்கும் சீனி, இத்துனூண்டு இழுத்துட்டுப் படுத்தீன்னா, இகபரம் மறந்திருக்கலாம். வேணுங்கில் கொண்டுவரச் சொல்றேன்” என்றான். ஏனோ கெட்டபழக்கங்கள் இல்லாத ஒரு பரிபூரணத்துடன் தொடரத்தான் எனக்கு ஆசையாக இருந்தது.

``ஒரு கெட்டபழக்கமும் இல்லைன்னா வாழ்க்கை பெருசா ஏதாவதுல மாட்டி விட்டுடும் சீனி, ஜாக்கிரதை” என்றான்.

சிரித்துக்கொண்டேன்.

டுங்குளிரில் கம்பளி போர்த்தித் தூங்கி எழுந்து, வெந்நீரில் குளித்து, பச்சைப்பசேலெனப் புல்வெளிகளின் மீது பனித்துளிகள் வாசற்தெளித்தி ருக்க, இளஞ்சூட்டில் தேநீர் குடித்து,  இளங்குளிரில் மெள்ள நடந்து, காலை உணவை முடித்து அலுவலகம் சென்று, மெல்லிய தூறல்மழையை ரசித்து, மலை நோக்கி மாலை நடை, சுடச்சுட இரவு உணவு என இங்கு வந்த முதல் சில நாள்கள் நல்ல சுவாரஸ்யமாகத்தான் இருந்தன. ஆனால், அதுவே முற்றுமுதல் வாழ்க்கைமுறை என்றானபோது பேரலுப்பு வந்தது. சினிமா, நண்பர்கள் வீடு, மால், தொலைக்காட்சி என்றிருந்த வாழ்வில், இது எதுவுமே இல்லாத பேரமைதியான இந்த மலை சொல்ல வந்த செய்தி என்னவென்றே புரியவில்லை. பணி நிரந்தரமாகாமல் உடனே பணிமாற்றலுக்கும் வழி யில்லை என்றுவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நாள்களைத் தள்ளிக்கொண்டிருந்தேன்.

இந்தச் சூழலை ஆற்றுப்படுத்தவே, வெள்ளிக்கிழமைதோறும் அம்மன் கோயில் வார வழிபாடு நிகழ்வில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

அங்குதான் அந்தப் பேரழகியை கடந்த மூன்று வாரமாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் கணப்பொழுதில் பார்வையிலிருந்து விலகிவிடுகிறாள். இன்றும் அதே நிகழ்ந்தது. சிவதாஸிடம் அவளின் சாயலைச் சொல்லிக் கேட்டபோது, நான் சொல்லும் சாயலில் ஓர் அழகி இருந்துவிட்டால், அவள் நிச்சயம் பூமியில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்கிறான். அவளைக் காணவேண்டும் என்ற வேட்கை கனிந்து, அவள் உண்மையா பொய்யா என்ற அளவுக்கு மனப்பதற்றம் அதிகமாகியிருந்தது.

``கானுறு மலரெனக் கதிரொளி காட்டி காட்சியே தந்திடுவாள்” என்று துக்க நிவாரண அஷ்டகத்தைக் குழு மனமுருகப் பாடிக்கொண்டிருந்த இந்த மாலையில், மீண்டும் கோயில் வாசலில் அவதரித்தாள்.
அலங்காரத்துக்காகத் திரை போடப்பட்டிருந்த பொழுதில், மெல்லிய தீபம் என அவள் வருகை எனக்குள் ஒளியேற்றியது.

அதே கத்திரிப்பூ நிறத்தில் வெண்மலர்கள் மலர்ந்திருக்கும் புடவை, முத்துத்தோடு, வளையில்லா வழுவழு கைகள், த்ரிவாலி, சந்தனக்கீற்று, மலர்ந்த புன்னகை, செறியெயிற்றரிவை… ஒரே ஒரு தலைதிருப்பல், ஒரு சிறிய புன்னகை. நான் யுகம் தாண்டிப் பறந்துகொண்டிருந்தேன். என் வாய் உச்சரித்துக்கொண்டிருந்த பஜனைப் பாடலின் பொருள் மறந்தேன். நான் எங்கு இருக்கிறேன் என்பதை மறந்தேன். எங்கோ அண்டப்பெருவெளியில் ஓவெனக் காற்றுச் சுழலும் ஒலி மட்டும் கேட்க, தனியே நடந்துகொண்டிருக்கிறேன், எங்கே, எங்கே, நான் யார்… என்ன இது?

சரியாக மிகச் சரியாக சில விநாடி அல்லது ஒரே ஒரு நிமிடம். மீண்டும் உணர்வு வந்தபோது அவளைக் காணவில்லை. அவளைக் காணவிடாது செய்த மாயையை இன்னவென்று உணர முடியவில்லை. விடுவிடுவென வெளியே வந்து பார்த்தேன், கோயிலுக்கு ஒரு புறம் முகாமுக்குச் செல்வது. மறுபுறம், ஒரு சிறு மைதானம். அதற்குப் பிறகு தேயிலைக்காடுகள் - மலையிறக்கம். ஆகவே, மைதானத்துக்குப் போக வாய்ப்பில்லை என முடிவுசெய்து முகாமுக்குள் செல்லும் சாலையில் வேக வேகமாக ஓடினேன்.

கும்மிருட்டும் குளிரும் போட்டி போட்டுக்கொண்டு என்னைத் தழுவின. என் பார்வையின் அவ்வளவு உச்சத்திறனையும் உபயோகித்து, என் கண்கள் தீண்டும் எல்லை வரை தேடிக்கொண்டேயிருந்தேன்.
முகாமின் முனை வரை வந்துவிட்டேன், அவளைக் காணவில்லை. ஆனால், அவளைப் பார்த்தது நிச்சயம் பொய்யில்லை. முந்தைய நாள்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்தக் கணத்தில் நான் அவளைப் பார்த்தது பொய்யில்லை. நெகுநெகுவென யக்ஞ நெருப்புபோல கண்களையும் மனதையும் அவள் பற்றவைத்த சூடு, இன்னும் அகத்திலும் புறத்திலும் அப்பியிருக்கிறது.

 பிறகு எங்கே போனாள்? அவளைப் பார்க்கும் அந்த முதல் நொடிக்கும், அவள் கடந்து போகும் நொடிக்கும் இடையே எனக்குள் நடப்பதெல்லாம் என்ன? கேள்விகள், கேள்விகள். எதற்கும் விடையில்லை. மிகுந்த களைப்போடு கோயிலுக்குத் திரும்பி வந்தேன்.

அவளைத் தேடிக் கண்டடைவதைவிட என் வாழ்வுக்கு வேறு நோக்கம் இந்த நொடியில் இல்லை என்பதுபோல மனம் நெருக்கித்தள்ளியது. இந்த மலை எனக்குத் தரும் செய்தி அவள்தானோ என எண்ண ஆரம்பித்தேன்.

மைதானத்தின் மூலையில் இருக்கும் சிறிய திண்டில் அமர்ந்துகொண்டேன். பெளர்ணமி நிலவு ஒளியில் வரிசையாய் வீற்றிருக்கும் கரிய யானைகள் என தூரத்து மலைகள் காட்சிதந்தன. அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கும் வண்டு களின் ரீங்காரம், மனதை என்னவோ செய்துகொண்டி ருந்தது. எதைத் தேடிப் பயணிக்கிறேன் என்றே புரியாமல், நிலை தடுமாறியிருந்தேன். `யாரோ ஒரு பெண், இரண்டே முறை பார்த்த அவள் யார்? ஏன் அவள்பொருட்டு இவ்வளவு தடுமாற்றம் எனக்குள்?’ எனப் பீறிட்டு மேல்வரும் பகுத்தறிவை மெள்ள தடவிக்கொடுத்து அடிமனதில் உறங்க வைக்கிறேன்.

அவளைத் தேடிக் கண்டடைய வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அறிவைத் தாண்டி கனலாய் மனதைப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மெள்ள ஏறிக்கொண்டிருக்கும் குளிரை முன்னிட்டு, என்னை வீட்டை நோக்கி விரட்டுவதற்குப் பதிலாக நீண்ட கருங்கடலென எதிரே படர்ந்திருக்கும் தேயிலைக் காட்டுக்குள் போய்த் தேடுமாறு பணிக்கும் மனதை என்ன சொல்லித் தேற்றுவது என்றறியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். மனமும் உடலும் பெரும்களைப்பில் உச்சத்திலிருந்தன. மெள்ள திண்டின் மேல் சாய்ந்து, கண்களை மூடிக்கொண்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஷாகந்தி - சிறுகதை

மிக அருகில் புதிதாய் மலர்ந்து குலுங்கும் முல்லைப்பூ நறுமணம்போல, ஏதோ ஒன்று நாசியைத் தாக்கியது. அல்ல முல்லைப்பூ அல்ல. அதன் மணத்தை நாசி நன்கு அறியும். இது மனத்தைக் கிளர்ந்தெழுப்பும் ஏதோ மற்றொரு பூவின் பெருமணம். ஏற்கெனவே மோனத்தில் ஆழ்ந்திருந்த மனம், இன்னும் உச்சத்துக்குப் போனது. எங்கோ தூரத்தில் ஒரு பறவையின் பேரிரைச்சல் கேட்பதுபோல் இருந்தது. ஒரு மெல்லிய தொடுகை போன்ற ஏதோ ஓர் உணர்வு, என்னை நெட்டித் தள்ளுவதை உணர ஆரம்பித்தேன். காற்றின் வேகம் கூட ஆரம்பித்திருந்தது. தேயிலைத் தோட்டத்துக்குள் இலக்கு ஏதுமின்றி வெகு வேகமாக நடக்க  ஆரம்பித்தேன்.

காற்றின் ஒலியும், அந்த இனம்புரியாத மணமும் எனக்குத் துணையெனக் கடந்து வந்ததை உணர்ந்தேன். சரசரவென இறங்கும் தேயிலைச் சரிவில் இதுவரை அறியாத வேகத்தில் இறங்கினேன்.

நான் பேலன்ஸ் செய்து நின்றபோது காற்றின் ஓசையும் நின்றிருந்தது. இருள் குறைந்து ஒளி பெருகியிருந்ததை உணர்ந்தேன். வெகு தாமதமாக அந்த இரவுக்குள் அடியெடுத்து வந்த பெளர்ணமி, வானில் சிரித்துக்கொண்டிருந்தது. தேயிலைக் காடுகளின் முடிவில் யூக்கலிப்டஸ் மரங்கள் ஊடே சிறிய ஓர் ஓடை மெல்லிய ஒலியோடு ஓடிக்கொண்டிருந்தது. ஓடைக்கு அருகே ஒரு பாதை உள்ளடங்கிச் சென்றுகொண்டிருந்தது.

இரவுப்பூச்சிகளின் ஒலிகளும், ஓடைநீரின் சலசலப்பும் எழுப்பும் அந்த மெல்லிய பின்னணி இசையோடு ஒற்றையடிப்பாதையில் நடக்க ஆரம்பித்தேன். மெல்லிய மேகத்தீற்றல் இறங்கி வந்திருந்த தூரத்து இருட்டுக்கிடையே மேகத்துக்குள் மேகமாக மறைந்திருந்த ஒரு பெரிய மஞ்சள் மேகம்போல அந்தப் பெரிய சுவர் தோன்றத் தொடங்கியது. பழைய வீடுபோலத்தான் அது துலங்க ஆரம்பித்தது. நெருங்க நெருங்க அதன் பிரமாண்டம் என்னைத் தாக்கியது.

அது வீடு அல்ல... இன்னும் பெரிய அளவிலான ஒரு கட்டடம். ஒரு பெரிய டீ பேக்டரிபோல, பவர்ஹவுஸ்போல, சினிமா தியேட்டர்போல பெரிய கட்டமைப்பு. நடுக்காட்டில் அவ்வளவு பெரிய கட்டடத்துக்கு வேலையே இல்லை. `எங்கிருந்து வந்து அது முளைத்தது?’ என யோசித்தேன்.

இனம் புரியாத அந்த நறுமணமும் குளிரும் இருபுறமும் நெட்டித்தள்ள, குறுகுறுப்புடன் நடையைத் துரிதப்படுத்தினேன்.

நெருங்க, நெருங்க மனத்தின் ஓசை துரிதப்பட்டது. ஏதோ பேரனுபவத்துக்குத் தயாராகும் சிறுவன் என, துவண்ட கால்களுடன் அந்தப் பெரிய கட்டடத்தை நெருங்கினேன்.

மெல்லிய குரலுடன் யாரோ பாடும் குரல் கேட்டது. பிடரியில் லேசாகச் சிலிர்த்தது. செவிகளைத் தீட்டி கவனத்தைக் குவித்தேன்.

`இந்து புஷ்பம் சூடி நில்க்கும் ராத்ரி...
ச்சந்தனப் பூம்புடவ சார்த்திய ராத்ரி...’


ஏதோ மலையாளப் பாடல். ஆனால், பொருள் புரிந்தது. இந்த இரவுக்கேற்ற பாடல்தான் எனத் தோன்றியது.

மனதை ஆழத் தாக்கும் குரல். அந்தக் குரலை நிச்சயம் எனக்குத் தெரியும் எனத் தோன்றியது. ஆனால், காற்றில் தேய்ந்து தேய்ந்து ஒலிப்பதால் குழப்பமாகவே இருந்தது.

இன்னும் நெருங்கிச் சென்று பார்க்க முயன்றேன். அந்தக் கட்டடத்துக்கு ஒரு காலத்தில் மஞ்சள் நிற பெயின்ட் அடித்திருக்க வேண்டும். இப்போது பாதிக்கும் மேலாகப் பாசி படர்ந்திருந்தது. பெரிய மரம் ஒன்று, அதன் வாயிலுக்கு நேராகவே முளைத்துக் கட்டடத்தைத் துளைத்திருந்தது. அதன் வாய், பெரும்இருளைக் கவ்வியிருந்தது. இதனுள் நுழைந்து போக முடியும் என்றே தோன்றவில்லை. பாடல் எங்கோ நின்றுபோனது.

குரல் கரைந்து, `ம்ம்’ என்ற ஆலாபனைகளுடன் லேசான கொலுசு ஒலிகள் கேட்க ஆரம்பித்தன.

``சீனு சார் வந்தாச்சுல்ல!”

மொத்த உடலும் அதிர, திரும்பினேன். ஒரு பெரிய வெண்ணிற மின்னல் தரையில் இறங்கியதைப்போல நின்றிருந்தாள். அதே கத்திரிப்பூ நிறப் புடவையில், வெண்ணிற மலர்கள், முத்துத்தோடு, வெற்றுக் கைகள், த்ரிவாலி, செரியெயிற்றரிவை. வியர்த்து வழிந்து முதுகில் நீர்க்கோடு இறங்குவது தெரிந்தது.

``எங்க... எங்க இருந்த இத்தனை நாளா?’’

என் மனத்தின் தவிப்பை வார்த்தைகளாய் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமாயில்லை.

கன்னங்களில் குழி விழச் சிரித்தாள்.

``நீங்க வரணும்னுதான் காத்துட்டு இருந்தேன், இங்கேயே!” என்றாள் பின்னால் இருந்த கட்டடத்தைக் காட்டியபடியே!

சற்றே திரும்பிப்பார்த்து  ``இதுலயா! பழைய கட்டடமா இருக்கே.”

நீளச் சிரிப்பு ஒன்றை, பதிலாக வழங்கினாள்.

குழி விழும் அந்தக் கன்னங்கள் அப்பட்டமான தற்கொலைக்கிணறுகள்.

``ஞான் விஜி” என்றாள்.

`உயர் தனிச் செம்மொழி’ என்றவன், அவளின் ஓர் ஓரமாக மலையாளம் கலந்த இந்தத் தீந்தமிழைக் கேட்டிருந்தால் மனம் மாறியிருப்பேன் என நினைத்தேன் ஒரு கணம்.

``விஜிக்கு இந்த ஊருதானா?”

``26 வருஷமா இதே ஊர்தன்னே.”

``கோயில்ல ஏன் என்னைப் பார்த்துட்டு உடனே மறைஞ்சுட்ட?”

``நான் மறைஞ்சிட்டெல்லாம் இல்ல. சார், என்ன தப்பான எடத்துல எல்லாம் தேடினீங்க அதான்...”

அவளைப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. நீண்ட மையெழுதிய கண்களின் அடியில் ஏதோ ஒரு சோகம் இருந்தது.

``சார் வேண்டாம், சீனு போதும்” என்றேன்.

அடிக்குரலிலிருந்து ``சரி... ச்சீனு” என்றாள்.

ஒரே நொடியில் சித்தம் கலங்கித்தான்போனது. அம்மாவின் நினைவு அடிவயிற்றிலிருந்து மேலேறி எழுந்து வந்து இருமலாய் வெளிப்பட்டது. புரைக்கேறியது. மிகச் சன்னமாய் தலைக்கே வலிக்காதவாறு தலையைத் தட்டினாள். மிக அருகில் அவளிடமிருந்து வெளிப்பட்டது என்னை நெட்டித்தள்ளிய அந்த மலரின் மணம்.

``நல்ல மணம்.”

``ஏ, என்னுதில்லா. நிஷாகந்தி மலர்ந்திருக்குல்ல அதான்.”

``அப்படின்னா?”

``சீனு அறிஞ்சி ட்டில்லே?”

`இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினேன். யாராவது வந்து `இது கனவு, எழுந்திரு’ என்பார்களோ என்ற மனநிலையிலேயே இருந்தேன்.

``வரு, ஞான் காட்டித்தருவேன்.”

அவள் பேச்சில் மலையாளமிருந்தாலும், தமிழில் குறையொன்றும் இருந்திருக்கவில்லை. வெண்ணிறச் சங்குப்பூவில் ஓரமாய் வரையப்பட்ட நீலம்போல அந்த மலையாளம் அவ்வப்போது மேலெழுந்து அவள் மொழிக்கு அழகூட்டிக்கொண்டிருந்தது.

நிலவு, அந்த இரவைப் பகலென மாற்றியிருந்தது; ஒளிவெள்ளம் பாய்ந்து காடெங்கும் பச்சையைச் சாம்பல் நிறத்துக்கு மாற்றியிருந்தது. இந்த மணமும் அந்த நிலவும் இரவை இன்னொரு தளத்துக்குத் தள்ளியிருந்தன.

இடை தாண்டி விரியவிட்டிருந்த கூந்தலும் அவளின் நகர்வுகளும், இன்னதென்று அறியாத மனநிலைக்கு என்னைக் கடத்திக்கொண்டி ருந்தன.

அந்தப் பெரிய கட்டடத்தின் கதவு போன்ற அமைப்பின் உள்ளே இடதுபுறமாக வளர்ந்திருந்த செடியைச் சுட்டினாள். கையளவுக்கு நிலவின் வெள்ளை நிழல்போல அந்தப் பூ மலர்ந்திருந்தது.

``இதான் நிஷாகந்தியா?”

``ம்... ஸ்வர்ணகமலம்னும் பேர் உண்டு. பெளர்ணமி அன்னிக்குப் பூக்கும்.”

``எவ்ளோ மணம்?”

``மூணு காடு தாண்டியும் மணக்குமாக்கும். மனுஷனைத் தூங்கவிடாத மணம். பெளர்ணமி அன்னிக்கு, பாதி ஜீவன் மூளையில புகுந்து கலக்கிடும்.”

அவள் விழிகள் விரிய விரிய நிஷாகந்தியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். நான், அவளை மட்டுமே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு செழித்த சிவப்பு மலர் பூத்தது போன்ற அவள் இதழ்களும் அந்தப் புன்னகையும் என் மனத்தைப் பற்றிக்கொண்டிருந்தன.

``ச்சீனு சார் பாட்டு எனக்கு வளர இஷ்டமானு. சார் எப்போதும் பாடுற ஒரு தேவிப் பாட்டு உண்டில்லே...”

``என்ன பாட்டு?”

``அதெங்கனே பரயும். தானன, தனனன, தனனன நானா, இங்கன வரும்ல” - அதை மெட்டாகப் பாடிக்காட்டினாள்.

``ம்ம்... துக்க நிவாரணி அஷ்டகம்.”

``எந்தொரு அழகான பேரில்ல. பாட்டு பாடினா துக்கம் போகுமா ச்சீனு?”

திரும்பி விழி விரியப் பார்த்தாள். அந்தக் கண்கள் பேசும் மொழிகள், இவ்வுலகம் அறிந்திராதவை. ஏக்கமும் சோகமும் தாபமும் இன்னும் ஏதேதோ கலந்த பெரும் மோனவடிவம் அது.

``எதுவும், எந்தத் துக்கத்தையும் குறைக்காது; குறைக்கவும் முடியாது. ஆனா, பாடுறது ஒரு மடை மாற்றம். மனசுல உள்ள பாரத்தை இறக்கிவைக்கிறது மாதிரி.”

அவள் விழிகள், என் விழிகளைத் துளைத்து விடுவதுபோல பார்த்துக்கொண்டிருந்தன. நீலம், நீலம், நீலம் என்று அவள் விழிகளின் நிறத்தை மனது தொடர்ந்துகொண்டிருந்தது.

``எனிக்குப் பாட வய்யா, பக்‌ஷே... ச்சீனு பாடுறதக் கேக்க ரொம்பப் புடிக்கும். அதுகொண்டே ஞான் தேவி கோயில் வாசலுக்கு வரும்.”

``இப்ப பாடினியே ஒரு மலையாளப் பாட்டு.”

``அனு ஞானில்லா” என்றபடி, என் கண்களின் ஆழத்தைத் தடவி நகர்ந்தது அவள் பார்வை.

திடுக்கிட்டு எச்சில் விழுங்கினேன்.

``அப்புறம் ஏன் கோயிலுக்குள்ள வரல ஒரு தடவையும்?”

``அது ஷரியா வராது ச்சீனு” என்றாள் தலைகுனிந்தபடி.

``ம்ம்” என்றேன்.
மெள்ள நீரோசையும் வண்டோசையும் மட்டும் கேட்க, ஒரு சிறிய மெளனம் நிலவியது எங்கள் இருவரிடையேயும்.

சட்டெனத் திரும்பி ``இப்போ ச்சீனு எனிக்கு ஒரு பாட்டு பாடுமோ?”

``எனக்கு மலையாளப் பாட்டு தெரியாதே! தேவிப்பாட்டு பரவால்லயா?”

``அல்லா! எனக்கு கொஞ்ச நாளா ரொம்ப ரொம்ப ஆக்ரஹமாயிட்டுண்டு. அது பாடுமோ!”

``என்ன பாட்டு?”

அவள் மீண்டும் அமைதி யானாள். அதுவரை அந்த முகம்கொண்ட சாந்தத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்ததுபோலிருந்தது. நிஷாகந்திக்கு அருகே ஒரு கல்மேடை இருந்தது. அதை நோக்கி நடந்தாள்.

அவள் மகுடி, நான் நாகம். அவள் செய்வதற்கெல்லாம் பணிந்துகொண்டிருந்தேன். இந்த ஒரு நாளுக்காகத்தான் என் வாழ்வு காத்திருந்ததுபோல நடந்துகொண்டிருந்தேன்.

ஒரு சித்திரக்காரனாய் இருந்திருந்தால் அவள் பின்னழகை இந்தப் பொழுதில் கலையாக வடித்திருப்பேன் என நினைத்தேன். பெரும்பித்தின் மனத்தைக் கனக்கச் செய்கிற வடிவைக்கொண்டிருந்தன அவை.

``இரிக்கி...” என்றாள்

இருள் செறிந்திருந்தது. நிஷாகந்தி, நிலவின் ஒளியை வாங்கி மெல்லிய தன்மையை அந்தப் பகுதிக்குச் செலுத்திக்கொண்டிருந்தது. அவள் சொல்லப்போகும் வார்த்தைக்காகக் காத்திருந்தபடி அந்தத் திண்டில் அவள் அருகில் அமர்ந்தேன். லேசாக ஒரு சூடு பரவியதை உணர்ந்தேன்.

இரவுப்பூச்சிகளின் ஒலி, இரவின் மீது ஒரு படுகையெனப் படிந்திருந்தது. அந்த இடத்தில் அமர்ந்த பிறகு அவள் முகம் அவ்வளவாகத் தெரியவில்லை.

`` `கண்ணே கலைமானே...’ ஈ பாட்டு, சார்க்கு அறியாமோ... ச்சீனு எனிக்குப் பாடுமோ?”

சற்று திடுக்கிட்டுத்தான்போனேன். நான் அந்தப் பாடலை மட்டும் பாடுவதில்லை, பத்து வருடங்களுக்கும்மேலாக. அம்மா கடைசியாக என்னைப் பாடித் தூங்கவைத்தது, இந்தப் பாடலைப் பாடித்தான். அவள் தூக்கு போட்டுக்கொள்வதற்குச் சற்று முன்புகூட எனக்கு இந்தப் பாடலைப் பாடித்தான் தூங்கவைத்தாள். அதற்குப் பிறகு அவளைப் பிணமாக மஞ்சள் பூசி, முழுப்பொட்டு வைத்த முகத்தைத்தான் பார்த்தேன். அன்றிரவு அவள் அழுதுகொண்டே பாடியதற்கான பொருளை மட்டுமாவது அறிந்துகொள்ளும் சக்தியை எனக்கு இயற்கை வழங்கியிருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்

``குழப்பமுண்டோ!” என்றாள்.

பெருங்குழப்பம்தான். ஆனால், ஒரு கனவுபோல நீண்டிருக்கும் இந்த இரவுக்கு அதன் ரகசியத்தை உடைக்க, வலுவான ஒரு சாவி தேவைதான். அது இந்தப் பாடலாகக்கூட இருக்கலாம் எனத் தோன்றியது.
சம்பந்தமில்லாத ஏதோ ஒரு ஸ்வரத்தில் ஆரம்பித்தேன். நிச்சயம் என்னால் இழுத்துக்கட்டி இந்தப் பாடலுக்குள் கொண்டுவர முடியும் என நம்பினேன். எங்கெங்கோ சுற்றி, இறுதியில் என்னால் அதன் சரணத்தை அடைய முடிந்தது.

``ஊமை என்றால் ஒருவகை அமைதி...
ஏழை என்றால் அதிலொரு அமைதி...
நீயோ கிளிப்பேடு
பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதிசெய்தது
பேதை போல விதிசெய்தது’’


அதற்குமேல் நிச்சயம் முடியாது என்று உணர்ந்து உடைந்தேன். அழுகை மதகு என் கண்களை உடைத்துக்கொண்டு பாய்ந்தது.

விசும்பல்களோடு உடைந்துகொண்டிருந்தேன். இதயம் இன்னும் இறுக்கமாகி என்னைப் பிழிந்துகொண்டிருந்தது. என்னை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பவைக்க அன்னை பராசக்தியால் மட்டுமே முடியும் என்றெண்ணி, கண்களை இறுக்க மூடி அவளை எண்ணினேன்.

நிஷாகந்தி - சிறுகதை

மனப்படலெங்கும் நீலம் வியாபித்திருந்தது. படர்ந்து படர்ந்து அது செல்லும் வழியெங்கும் ஊர்ந்து செளந்தர்ய லஹரியின் வழி அன்னையை அடைய எண்ணினேன்.

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா


சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணம் அணிந்தவள், யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள், சரத்காலத்து பூர்ணசந்திரன் போன்று திருமுகம் உள்ளவள் என மனமெங்கும் செளந்தயர்ய லஹரி ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

நீல வழி முடியும் தருவாயில் தூரப் பெருநிழல்போல அன்னை வீற்றிருந்தாள். இருள் கழிந்து வெளிச்சம் பரவ அன்னையைக் காண விழைந்தேன். வீற்றிருந்தது விஜி.

திடுக்கிட்டுச் சட்டென விழிகள் திறந்து பெரிய மத்தகமென விரிந்திருந்த அவளது ஸ்தனங்களில் கண்விழித்தேன்.

``வரு...” என்றாள் இரு கைகள் நீட்டி. மிகுந்த தாபத்தோடு அவள் அருகில் சென்றேன். ஒரு பெரிய ஆசுவாசமென அவளது அணைப்பு என்னில் நிறைந்தது. மார்பகங்கள் மூச்சை நிறைக்க, அவள் மடிமீது கவிழ்த்தாள். உள்ளில் அழுகை பெருக அவளில் அமிழ்ந்துகொண்டிருக்கையில் தூரத்தில் மீண்டும் அந்தப் பாடல் கேட்டது.

‘இந்து புஷ்பம் சூடி நில்க்கும் ராத்ரி...’ இவ்வளவு பரிச்சயமான குரலா! முன் ஜென்மத்து வாசனைபோல அது மெள்ள என் செவிகளை நிறைத்துக்கொண்டிருந்தது.

``அது என்ன பாட்டு, யாரு பாடுறா?’’ என்றேன்.

``அது வய்யா, ச்சீனு இங்க நோக்கணும்” என்றாள்.

மீண்டும் திடுக்கிட்டேன். ஏன் அவளைப் பணிகிறேன் என்ற கேள்விக்கு, எனக்கு விடையில்லை.

``என்ன அர்த்தம் சீனு?” என்றாள். எங்கோ ஆழத்திலிருந்து கேட்கும் குரல்போல இருந்தது. குரலின் ஆழத்தில் மீண்டும் ஒரு சோகம் தொனித்திருந்தது.

``எதுக்கு?”

``ச்சீனு பாடின அந்தப் பாட்டுக்கு.”

``அது மனம் பிறழ்ந்த பொண்ணு ஒருத்திமேல இருக்கிற காதலை, காதலன் ஒருத்தன் சொல்ற பாட்டு.”

``மனம் பிறழ்ந்தெங்கில் ப்ராந்தா / பைத்தியமா?”

``ம்ம்ம்” என்று நிமிர்ந்து பார்த்தேன். அவள் விழிகள், இருளில் ஒளிரும் இரண்டு மல்லிகை மொட்டுகள்போல் இருந்தன. அவற்றில் நிறைந்திருந்த கண்ணீர்த் துளிகள், மல்லிகை மேல் படர்ந்து இருந்த பனித்துளிகள்.

விரக்தியாகச் சிரித்தாள். ``அத்ரே உள்ளோ...” உதட்டைப் பிதுக்கி தோள்களைக் குலுக்கினேன். தலையைக் குலுக்கினாள்.

``இல்ல சீனு. அது வேற... அது முழுக்க முழுக்க வேற. ஏனோ தெய்வம் சதி செய்தது, ஏழைபோல விதி செய்தது எல்லாம் ப்ராந்துக்கா? இல்ல எல்லாம் விஜிக்கு. என்னைப் போலே ஈ ராத்திரியில் எதை எதையோ தேடி அலையுற ஜீவன்களுக்கு, வாழ்வு கீழ இருக்கணும்; இல்ல மேல இருக்கணும். நடுவுல முடிஞ்சுடுற என்ன மாதிரி ஜீவன்களுக்கானு ஈ பாட்டு’’ என்றாள்.

ஏதோ புரிந்ததுபோலத்தான் இருந்தது. சட்டென எழ முயன்றேன். என் உடல், என் வசத்திலிருந்து விடுபட்டுப்போனதுபோல இருந்தது. மிக இறுக்கமாக ஓர் இரும்புக்கம்பி போட்டுக் கட்டியதுபோன்று அவள் உடல் என்னில் பின்னியிருந்தது.

``ச்சீனு அவிட நோக்கணும்” என்றாள்.

என்னால் எழ முடியவில்லை. ஆனால், அந்தப் பழைய கட்டடம் மெள்ள ஒளிகொண்டு நிறம் மாறுவதை மனம் பதறப் பதறக் காண முடிந்தது. ஒரு மஞ்சள் ஒளிகொண்டு புத்தம் புதிய தோற்றத்தில் அது மாறியிருந்தது.

கட்டடத்தின் வாசலில் இப்போது இரண்டு சினிமா போஸ்டர்கள் இருந்தன. விஜி இன்னும் இளமையாகப் பாவாடை தாவணியில் போஸ்டர்களைப் பார்த்துச் சிரித்தாள்.

``வரு...” என்றாள்.

இப்போது என்னால் எழ முடிந்தது; நடக்க முடிந்தது. சிரித்தபடி விஜி அந்தக் கட்டடத்துக்குள் சென்றாள். ஆனால், அது வேறு விஜி. பாவாடை தாவணியில் இன்னும் சற்று இளமையோடு இருந்தாள். வாசலில் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி இணையோடு `மூன்றாம் பிறை’ என்று போஸ்டர் சிரித்தது. ஆனால், மழை வலுத்துப் பெய்துகொண்டி ருக்கிறது. போஸ்டர்கள் நனைந்து சொதசொதவென இருக்கின்றன. அந்த மஞ்சள் ஒளியில் பெரும் மஞ்சள் நதியென மழை பொழிந்துகொண்டே யிருக்கிறது.

உள்ளே செல்லச் செல்ல அது ஒரு பெரிய தியேட்டர் எனப் புரிகிறது. 16 எம்.எம் திரையில் `மூன்றாம் பிறை’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இரும்பு சேர்கள் போடப்பட்ட இரண்டு வரிசைகள் முழுக்க மக்கள். நடுவில் தரையில் பெரிய கம்பளம் விரித்து அதை நிறைத்து மக்கள். முழுத் திரையரங்கமும் நிறைந்திருக்கிறது.

திரையரங்கின் ஒலியும், மழையின் ஒலியும் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்த காட்சி.

நிஷாகந்தி - சிறுகதை

``கண்டில்லே ச்சீனு, இதுதான் நான் பார்த்த கடைசிக் காழ்ச்ச...”

``இந்த மழை வலுத்து வலுத்து, மேல இருந்த மலையை உருட்டி இந்த தியேட்டர்மேல போட்டுது. பாதிப் படம் முடியும்போதே மண்ணும் சேறும் மழையும் எங்க வாழ்க்கையை அப்படியே புரட்டிப்போட்டுடுச்சு. ஒட்டுமொத்த ஜனமும் இங்கயே கதறிக் கதறிச் செத்துப்போனதை நான் பார்த்துட்டே இருந்தேன். இந்த மலைக்காட்டுக்குள்ள, அந்தக் கடும் மழைக்குள்ள என்னன்னு கேட்கக்கூட ஆள் இல்லை. இன்னியவரைக்கும் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன்.”

``அன்னைக்கு எழுந்து வந்தது. இன்னும் சுத்துறேன் இந்தக் காட்டுல” என்றாள். சட்டென்று அந்தத் திரையரங்கத்தின் ஒளி குறைந்து மீண்டும் பாழடைந்த வடிவுக்கு மாறியது.

எச்சில் விழுங்கினேன்.

``ஆனா ஒண்ணு தெரியுமா ச்சீனு, எனக்கு வேற எந்தக் கவலையும் இல்லை. அந்தப் படத்துல சீனு விஜியை விட்டுடுவானோன்னு ஒரே பயம். அந்த எஸ்டேட் முதலாளி இல்ல, அவளோடு போயிடுவானோன்னு பயம். அந்த ஒரே பயத்தோடுதான் இன்னிக்கு வரைக்கும் இருக்கேன்.”

``ச்சீனு, விஜிக்கு மட்டும்தானே!” என்றாள். அவள் பார்வையின் தீவிரம் என்மீது வலுவாகப் படிந்திருந்தது. பூசியிருந்ததாக நான் கருதிய மை, இன்னும் படர்ந்து அவள் கண்களின் கீழே கரு வட்டமாக மாறியிருந்தது.

மீண்டும்,

‘இந்து புஷ்பம் சூடி நில்க்கும் ராத்ரி’  கேட்டது.

இப்போது அந்தக் குரல் புரிந்தது. என்னைத் தாலாட்டித் தாலாட்டி வளர்த்த குரல். தற்கொலைக்குச் சற்று நேரம் முன்பாக என் காதில் விழுந்த குரல். அதை ஏன் இவ்வளவு தாமதமாகக் கண்டுகொண்டேன் எனப் புரியவில்லை.

``அம்மா” என்று அடிவயிற்றிலிருந்து கதறி, குரல் வந்த பாதையில் ஓட முயன்றேன்.

தூரத்தில் எங்கிருந்தோ அம்மாவின் குரல் காற்றில் பறந்து வந்து என் செவிகளில் விழுந்தது.

``ஓடிப்போ சீனு, அந்த யக்‌ஷி உன்ன விட மாட்டா... எந்தச் சீனுவையும் விட மாட்டா, ஓடு.”

அட்ரீனலின் பெருக ஓட யத்தனித்தேன். விஜியின் வலுவான கரங்கள் என் தோள்களைத் தீண்டின.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism