Published:Updated:

``என்னை அநாதைப் பொணமா ஆக்கிடாதீங்க!" - உறவினர்களிடம் கெஞ்சும் கரூர் முதியவர்!

"இளமை முறுக்குல நான்,  ஒருநாளைக்கு நூறு பனைமரம்கூட ஏறுவேன். அப்படி என்னோட 20 வயசுல பனை மரம் ஏறுனப்பதான், கால் சறுக்கிக் கீழே விழுந்துட்டேன். அதுல, இடது கால் முறிஞ்சுப் போச்சு."

``என்னை அநாதைப் பொணமா ஆக்கிடாதீங்க!" - உறவினர்களிடம் கெஞ்சும் கரூர் முதியவர்!
``என்னை அநாதைப் பொணமா ஆக்கிடாதீங்க!" - உறவினர்களிடம் கெஞ்சும் கரூர் முதியவர்!

முதுமை என்பது கொடிது. அதுவும், முதுமையில் உறவுகளின் அரவணைப்புகள் அற்ற தனிமை என்பது கொடிதிலும் கொடிது. ஒருவருக்கு வயோதிகம் ஏராளமான வியாதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும். அதைவிட, யாரேனும் அவரது வார்த்தைகளை அனுசரணையாகக் கேட்க வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கும். இந்நிலையில், உறவுகள் என்று யாரும் இல்லாமல், வயோதிகத்தில் தனிமையாக வாழ்வது என்பது நரகத்தின் ரணம். கருப்பண்ணன் அதை நித்தம் நித்தம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட, நோயாளியாக இருந்த மகனும் பத்து மாதங்களுக்கு முன்பு தவறிவிட, அரவணைக்க யாரும் இல்லாமல் அத்துவான முள்காட்டில் தனிமையாக வசிக்கிறார். ஏதாவது உடம்புக்கு முடியவில்லை என்றால், ஏன் என்று கேட்கக்கூட நாதியில்லாமல், 50 வருடங்களுக்கு முன்பு பனை மரத்திலிருந்து விழுந்ததால் முறிந்த கால் தரும் வலியோடு வாழ்ந்து வருகிறார்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குப்பம்தான் கருப்பண்ணனுக்குச் சொந்த ஊர். ஊருக்கு வெளியே இருக்கும் முள்காட்டில் சிறிய கீற்றுக்கொட்டகையில் வசித்துவருகிறார். வீட்டுக்கு முன்பிருக்கும் அடுப்பில் நெருப்பை எரியவைக்க, இருமியபடி அடுப்போடு படாதபாடுபட்டபடி ஊதிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசினோம்.

``என் நிலைமை எதிரிக்கும் வரக் கூடாது. தென்னை மற்றும் பனை மரம் ஏறுவதுதான் எங்களது குலத்தொழில். நானும் இருபது வயசுவரை அந்த வேலையைத்தான் பார்த்தேன். 18 வயசிலேயே எனக்கு பெரியம்மாளைக் கட்டி வச்சுட்டாங்க. இளமை முறுக்குல நான்,  ஒருநாளைக்கு நூறு பனைமரம்கூட ஏறுவேன். அப்படி என்னோட 20 வயசுல பனை மரம் ஏறுனப்பதான், கால் சறுக்கிக் கீழே விழுந்துட்டேன். அதுல, இடது கால் முறிஞ்சுப் போச்சு. வைத்தியம் பார்த்தும் சரியாகலை. காலைத் தாங்கித் தாங்கி நடக்கும்படியே ஆயிட்டு. அதன்பிறகு, என்னால வீட்டுப் படிக்கட்டுலகூட ஏற முடியலை. சிரமம் இல்லாத வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். என் மனைவி, இப்ப நான் குடியிருக்கிற இந்த இடத்தோட சொந்தக்காரரான பெரிய பண்ணை வீட்டுக்கு வேலைக்குப் போனா. அந்த வருமானத்தை வச்சு குடும்பம் ஓடுச்சு. மத்தபடி, கா காணிகூட எங்களுக்குச் சொந்தமா இடமில்லை. எங்களுக்கு பிச்சைமுத்துனு ஒரு மகன் பொறந்தான். ஆனா, அவனுக்கு அடிக்கடி வலிப்பு வர்ற நோய் இருந்துச்சி. அவனைப் பாத்துக்கிறதுக்கே ஓர் ஆள் தேவைப்பட்டது. அதனால, நான் அவனைப் பாத்துக்குறதுக்காகவே வீட்டுல இருந்தேன். அவனுக்கு இப்படி ஒரு நோய் இருந்ததால, கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்கலை.

விதி விட்டது வழினு அவனுக்குக் கல்யாணம் பண்ற ஆசையை மனசுல புதைச்சுக்கிட்டோம். இப்படியே காலம் ஓடுச்சு. ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னாடி, என் மனைவி திடுதிப்புனு எங்களை நிராதரவா விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டா. அவ பொசுக்குனு போய்ச் சேர்ந்ததும், எங்க பொழப்பு சீரழிய ஆரம்பிச்சுச்சு. வருமானத்துக்கு வழியில்லை. ஊருக்குள்ள பொது இடத்துல குடியிருந்த இடத்தை விட்டுப் போகச் சொல்லி சிலர் அடிச்சுத் துரத்திட்டாங்க. கால் முடியாத நான், 40 வயசுல நோயோட இருக்கிற மவனை வச்சுக்கிட்டு, எங்கே போறது? திசை தெரியாம திகைச்சுப் போய் நின்னேன். ஊருக்குள்ள வசதிவாய்ப்பா இருக்குற உறவினர்கள்கிட்ட சொல்லிக் கெஞ்சினேன்; கால்ல விழுந்து கதறினேன். ஆனா, வழி கிடைக்கல. அப்பதான், என் மனைவி வேலை பார்த்த பெரிய பண்ணை வீட்டுக்காரங்க, பெரிய மனசு பண்ணி இந்த இடத்துல தங்கிக்க அனுமதி கொடுத்தாங்க. ஊரைவிட்டு வெளியே இருக்கிற இந்த இடத்துல குடிசை போட்டுத் தங்கினோம். வருமானத்துக்கு வழி இல்லாததால, அரசாங்கத்தோட முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணினேன். அதை வச்சுதான் ரெண்டு பேரும் ஒருவேளையாச்சும் சாப்புட்டு வந்தோம். ஆனா, பத்து மாசத்துக்கு முன்னாடி என் மவனும் என்னை அநாதையா விட்டுட்டு என் மனைவி போனதுபோலப் போய்ச் சேர்ந்துட்டான்.

அதன்பிறகு, நான் உடல்ல மட்டுமல்ல, மனசாலும் நடைபிணமாயிட்டேன். உடம்புல வேற ஏகப்பட்ட வியாதிகள். என் மனைவி இருந்தவரைக்கும் ராசா மாதிரி வாழ்ந்தேன். அவ போட்டோவைச் சாமி போட்டோக்களோட சேர்த்து மாட்டி வச்சுக்கிட்டு தினமும் கையெடுத்துக் கும்பிடுறேன். `ஏன் தாயி, என்னை தனியாத் தவிக்கவிட்டுட்டு இப்படிப் போய்ட்ட'னு தினமும் அவ போட்டோவ எடுத்துப் பார்த்து உள்ளம் குமுறிப் போறேன். காய்ச்சல், உடம்பு வலினு படுத்தா அன்னைக்கு முழுவதும் நான் பட்டினிதான். இங்க ஆடு, மாடு மேய்க்க வர்றவங்க, என்மேல பரிதாபப்பட்டுத் தங்களுக்கு எடுத்து வந்திருக்கும் பழைய கஞ்சியைக் கொடுத்து என்னைச் சாப்பிட வைப்பாங்க. அப்படி யாரும் வரலைன்னா, `என் உசிரு இத்தோட போயிருமோ?'னு நினைக்குற அளவுக்கு நிலைமை மாறிடும். தினமும் 5 கிலோ மீட்டர் தாண்டித்தான் தண்ணீர் கொண்டு வரணும். என்னால முடியாதுங்கிறதால, இந்த வழியாப் போறவங்க என் பரிதாபத்தைப் பார்த்து ரெண்டு குடம் தண்ணி கொண்டுவந்து கொடுப்பாங்க. ஓ.ஏ.பி பணத்தை எடுக்கப்போக மாசாமாசம் துணைக்கு ஆள் பிடிக்கவே, நான் பெரும்பாடுபட வேண்டி இருக்கு. எனக்கு 70 வயசாயிட்டு. `என்னைச் சீக்கிரம் காட்டுக்குக் கொண்டு போகமாட்டியா?'னு எல்லாச் சாமிகளையும் வேண்டிக்கிறேன். என்னோட உறவுகள் எனக்குச் சோறு போட வேணாம்; சீக்கு வந்து படுத்த படுக்கையா கிடந்தால், எனக்கு அலைஞ்சு திரிஞ்சு வைத்தியம் பார்க்க வேணாம். நான் செத்தால், காசு செலவாயிடுமேனு நினைச்சு ஓரமா நின்னுடாம, முன்னவந்து எனக்குக் கொள்ளி போடணும். என்னைய அநாதைப் பொணமா மட்டும் விட்டுடாதீங்க மக்கா..." என்று குரலுடைந்து, உடல் குலுங்கி அழுகிறார். 

ஏற்கெனவே, வெக்கையாக இருக்கும் அந்தப் பிரதேசமெங்கும் கருப்பண்ணனின் விசும்பல் மேலும் வெம்மையைச் சேர்க்கிறது. கருப்பண்ணனின் மனமெங்கும் வியாபித்திருக்கும் அந்த வெம்மையைக் குளிரவைப்பது யார்?!