Published:Updated:

எதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை

எதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை

ஷா பானு ஓவியம் : கார்த்திகேயன் மேடி

திருமணம் போலன்றி மிக எளிமையாக நடந்து முடிந்தது அந்த விவாகரத்து. 40 ஆண்டு களுக்கும் மேலான தனது திருமண உறவை, முத்தலாக் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தார் முகமது அகமது கான். இது நடந்தது, 1978-ம் ஆண்டு. அகமது கான், இந்தூரில் நன்கு அறியப்பட்ட ஒரு வழக்குரைஞர். அவரிடம் செல்வமும் செல்வாக்கும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தன் மனைவி ஷா பானு-வைப் பிரிந்த தற்குக் காரணம், வாரிசுமை தொடர்பான சிக்கல் என்று சொல்லப்படுகிறது. அகமது கான் இன்னொரு திருமணமும் செய்துகொண்டார். இரு மனைவிகளுக்கும் குழந்தைகள் இருந்தன. தன்னுடைய வாரிசாக யாரை நியமிப்பது என்னும் கேள்வி எழுந்தபோது, அகமது கான் தன் இரண்டாவது மனைவியின் வாரிசைத் தேர்வுசெய்திருந்தார். இந்த ஏற்பாட்டை முதல் மனைவியான ஷா பானு ஏற்காததைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கலே, விவாகரத்துக்குக் காரணம் என்கிறார்கள்.

எதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை

அதைத் தொடர்ந்து, ஷா பானு வீட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். அப்போது அவர் வயது 62. ஐந்து குழந்தைகளின் தாய். போக்கிடம் இல்லை. வருமானம் இல்லை. சேமிப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை. இந்த நிலையில், `என் கணவரிடமிருந்து எனக்கு ஜீவனாம்சம் பெற்றுத் தாருங்கள்' என்கிற கோரிக்கையோடு 1978-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தூர் நீதிமன்றத்தை அணுகினார் ஷா பானு.

இவருடைய மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், `அகமது கான், தன்னுடைய முன்னாள் மனைவிக்கு மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. ஆண்டு வருமானமாக 60,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவரிடமிருந்து இவ்வளவு சிறிய தொகையையா பெற்றுத் தருவார்கள் என்று வருந்திய ஷா பானு, அடுத்த ஆண்டு மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர்களோ, `25 ரூபாய் மிகவும் குறைவான தொகை. அகமது கான் 179.20 ரூபாய் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்கள். இந்த விநோதமான தொகையை, நீதிமன்றம் எதன் அடிப்படையில் வகுத்தது எனத் தெரியவில்லை.

இது ஒருபக்கமிருக்க, அதுவரை அமைதியாக இருந்த அகமது கான், தன்னுடைய முன்னாள் மனைவியின் வழக்கை எதிர்கொள்ள முடிவு செய்தார். உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு மனுவை அனுப்பிவைத்தார். `நான் ஓர் இஸ்லாமியர். முத்தலாக் என்பது, எங்களுடைய விவாகரத்து முறை. முஸ்லிம்களை ஷரியத் சட்டங்களே ஆள்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. எங்கள் சட்டத்தின்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒரு கணவன் தன் முன்னாள் மனைவிக்கு மூன்று மாத உதவித்தொகை அளித்தால் போதுமானது. அதன்படி நான் ஷா பானுவுக்கு மூன்று மாத உதவித்தொகை அளித்துவிட்டேன். அத்துடன் என் கடமை முடிந்துவிட்டது. இந்த நிலையில், நான் தொடர்ந்து ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு வந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’

அகமது கான் இஸ்லாமிய சட்டவிதிகளைச் சுட்டிக்காட்டி தன்னை நியாயப்படுத்திக் கொண்டபோது, ஷா பானு இந்திய குற்றவியல் சட்டத்தின் 125-ம் பிரிவைச் சுட்டிக்காட்டினார். `ஒருவன், எப்போது தன் மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்... `விவாகரத்துக்குப் பிறகு அவன் மட்டும் மறுமணம் செய்துகொண்டு, அவள் மணம் செய்துகொள்ளாமல் தனித்திருந்தால், தன் முன்னாள் மனைவிக்கு அவன் ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்' என்று வரையறுத்திருந்தது இந்தச் சட்ட விதி. இது மிகச் சரியாக எனக்குப் பொருந்தும்' என்று வாதிட்டார் ஷா பானு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை

அகமது கான் மேல்முறையீடு செய்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 1985-ம் ஆண்டு, ஏப்ரல் 23 அன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்தது. அது ஷா பானுவுக்கு ஆதரவான தீர்ப்பாக இருந்ததைக் கண்டு நாடு முழுவதையும் ஒரு புயல் தாக்கியது. எங்கோ ஒரு மூலையில் இருந்த ஷா பானு, சர்ச்சைக்குரிய ஒரு விவாதப்பொருளாக மாறிப்போனார். இஸ்லாமிய சமூகம், திடுக்கிட்டு விழித்துக்கொண்டது. `இந்த முதிய பெண்மணிக்கு என்ன ஆகிவிட்டது? உன்னை நோக்கி முத்தலாக் உச்சரிக்கப்பட்டால், நீ விலகிச் சென்றுவிட வேண்டும் என்பதுதானே காலம் காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் மரபு? இந்த மரபை நீ எப்படி மீறத் துணிந்தாய்? ஓர் இஸ்லாமியப் பெண்ணாக இருந்தும் நம் சமூகத்தின் சட்ட திட்டங்களை மீறி, நமக்கான வழிகாட்டு நெறிகளை உடைத்தெறிந்து விட்டு, நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் மீது எப்படி உன்னால் ஏறி நிற்க முடிகிறது? படிக்கட்டுகள் இல்லை; ஒட்டுமொத்த நம் சமூகத்தின் தொண்டைக் குழியின் மீதல்லவா நீ ஏறி நின்று கொண்டிருக்கிறாய்? உன்னுடைய அவச்செயல் நம் குடும்பங்களை எப்படி யெல்லாம் உலுக்கியெடுக்கப் போகிறது என்பதை நீ அறிந்திருக்கிறாயா, ஷா பானு?'

ஓர் எளிய பெண்ணின் வழக்கு, மாறுபட்ட இரு வேறு உலகங்களுக்கு இடையிலான மோதலாக வெடித்தது, நவீன இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை. ஷா பானுவுக்கும் அவர் கணவனுக்கும் இடையிலான மோதல், இஸ்லாமியத் தனிச்சட்டத்துக்கும் பொதுச்சட்டத்துக்கும் இடையிலான மோதலாகவே பார்க்கப்பட்டது. இந்த மோதலை உச்ச நீதிமன்றம் தயக்கமின்றி நேரடியாகவே எடுத்துக்கொண்டது. தனிச்சட்டமும் குற்றவியல் சட்டமும் இந்த வழக்கில் எதிரெதிராக நிறுத்தப்பட்டுள்ளன. `தனிச்சட்டத்தின்படி பார்த்தால், அகமது கான் செய்தது சரி. பொதுச்சட்டத்தின்படி பார்த்தால், ஷா பானு பாதிக்கப்பட்டவர். அவருக்கு அகமது கான் ஜீவனாம்சம் கொடுப்பதே சரியானது. இந்த இரண்டையும் அருகருகில் நிறுத்தி ஆராயும்போது, தனிச்சட்டத்தைவிட பொதுச்சட்டமே இங்கே தீர்வாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்’ என்றது உச்ச நீதிமன்றம். ஷா பானு எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது மட்டுமே முக்கியம். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட 179.20 தொகையை மாதா மாதம் அகமது கான் ஷா பானுவுக்குச் செலுத்தியாக வேண்டும்.

முல்லாக்களும் மௌல்விகளும் கொந்தளிக்க ஆரம்பித்தனர். தொகையல்ல இங்கே பிரச்னை... ஒரு ஷா பானு, ஓர் அகமது கானைத் தோற்கடித்துவிட்டார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி ஷா பானுக்கள் வெல்லத் தொடங்கிவிட்டால், நம் உலகம் என்னாகும்? நம் அதிகாரத்தின் ஆன்மாமீது தொடுக்கப்பட்ட போரல்லவா இது? நம் செல்வாக்கைச் சிதறியடித் திருக்கும் தீர்ப்பையல்லவா உச்ச நீதிமன்றம் அளித்திருக் கிறது? நமக்கே நமக்கான தனிச்சட்டங்களின் வேர்களை யல்லவா இந்தப் பொல்லாத ஷா பானு வெட்டிச் சாய்த் திருக்கிறார்? இதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கப்போகிறோமா? ஒரு பெண்ணிடம் நம் உரிமைகளையெல் லாம் ஒப்புக்கொடுத்துவிட்டு நிர்கதியாக நிற்கப் போகிறோமா?

எதிர்க்குரல்: திருத்தப்பட்ட தீர்ப்பின் கதை

சிவில் சமூகம், ஷா பானு வழக்கை பரபரப்பாக விவாதிக்க ஆரம்பித்தது. ஒரு பக்கம் ஷரியத் ஆதரவாளர்கள் (இவர்களில் பெண்களும் அடங்குவர்), நீதிமன்றத்தையும் ஷா பானுவையும் எதிர்த்துப் போராட முன்வந்தார்கள். இன்னொரு பக்கம் இஸ்லாமியப் பெண்கள் ஷா பானுவுக்கு ஆதரவான முழக்கங்களோடு வீதிகளில் திரண்டனர். பெண்ணியவாதிகளின் ஆதரவும் லிபரல் சமூகத்தின் ஆதரவும் ஷா பானுவுக்குக் கிடைத்தன. பழைமைவாத முஸ்லிம்கள் எதிர்ப்பதாலேயே இந்து அமைப்புகள் ஷா பானுவை ஆதரிக்க முன்வந்தன. இருந்தும் பழைமைவாதிகளின் எதிர்ப்புக்கே அதிக ஊடக வெளிச்சம் கிடைத்தது.

பெண்களின் உரிமைகள்மீது அக்கறை கொண்டிருந்த லிபரல் முஸ்லிம்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டு, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் ஷா பானு தீர்ப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் முன்வைக்கப்பட்டது. `பாவம், இப்படியொரு தீர்ப்பையா சிறுபான்மையினருக்கு எதிராக நீதிமன்றம் வழங்க வேண்டும்' என்னும் போலி அனுசரணையை பலர் வெளிப்படுத்தினர். இந்தத் தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகளும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பது, நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

1984-ம் ஆண்டு, பொதுத்தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்திருந்த ராஜீவ் காந்தி, புதிய யுகத்தின் பிரதிநிதியாக பலரால் பார்க்கப்பட்டுவந்த நேரம் அது. ஷா பானு தீர்ப்பை, ராஜீவ் முதலில் வரவேற்றிருந்தார். பிறகு நடைபெற்ற மாநில இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தது. தோல்வியடைந்தவை முஸ்லிம் பெரும்பான்மை இடங்கள் என்பதை அறிந்துகொண்ட ராஜீவ், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். தேர்தல் வெற்றிக்கு முஸ்லிம் சமூகத்தின் ஓட்டுகள் அவசியம். ஷா பானு தீர்ப்பை, பெருவாரியான இஸ்லாமிய சமூகம் ஏற்கவில்லை என்னும் நிலையில் நாம் மட்டும் எதற்காக அந்தத் தீர்ப்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும்? இழந்துவிட்ட இஸ்லாமியர்களின் ஆதரவைத் திரும்பப் பெறவேண்டுமானால், ஷா பானுவுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அவர்களைக் கோபப்படுத்திய அந்தத் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும்.

1986-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முஸ்லிம் மகளிர் மசோதா, நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக இயற்றப்பட்டது. குற்றவியல் சட்ட அதிகார வரம்பிலிருந்து முஸ்லிம் தனிநபர் சட்டம் விலக்கிவைக்கப்பட்டது. ஷா பானுக்களை எப்படிக் கையாளவேண்டும் என்பதை அகமது கான்கள் பார்த்துக் கொள்வார்கள். ஷா பானுக்கள் அகமது கான்களை எதிர்த்துக் குரல்கொடுத்தால் மௌல்விகளும் முல்லாக்களும் தீர்ப்பளிப்பார்கள். நீதிமன்றங்கள் அந்தப் பக்கம் திரும்பவேண்டியதில்லை. நீங்கள் வேறு வேலைகள் பார்க்கலாம்.

நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் கால் பதித்த நாள் தொடங்கி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருந்த ஷா பானு, இன்னொரு முறை தனித்துவிடப்பட்டார். தன்னைப் பராமரிக்கவேண்டிய பொறுப்பு தனது பிறந்த வீட்டினரிடமே அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுவிட்டதை அவர் அறிந்து கொண்டார். அழுத்தங்களும் எதிர்ப்புகளும் தாளமாட்டாமல் பெருகிக்கொண்டேபோயின. ஷா பானு ஒருகட்டத்துக்குப் பிறகு நொறுங்கிப் போனார். `நான் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டேன். உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்' என விண்ணப்பித்தார் ஷா பானு.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார். `இந்தத் தீர்ப்பு, ஷரியத்துக்கு எதிரானது எனச் சான்றோர்கள் எனக்கு சுட்டிக்காட்டினார்கள். ஜீவனாம்சம் கேட்பது ஹராம் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் வயதானவள். எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது. இவ்வளவு விஷயங்களை நான் எப்படி அறிந்து வைத்துக்கொள்ள முடியும்? நான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே இவ்வளவு காலமும் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது தவறான பாதை என்பதை அவர்கள் இப்போது எனக்குப் புரியவைத்துவிட்டார்கள்.’

மூளை அடைப்பு காரணமாக 1992-ம் ஆண்டு ஷா பானு இறந்துபோனார். தான் ஏற்படுத்திய அதிர்வுகளை, அவர் இறுதி வரை உணர்ந்திருக்கவில்லை.

 - மருதன்