Published:Updated:

எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?

எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?

எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?

வாழ்க்கையில் சில விஷயங்களும் விதிகளும் (இயற்கை விதிகள்) விநோதமானவை. அதிலும் சில விதிகள் தலைகீழான பலனைத் தருபவையாக இருக்கும்போது அவை சுவாரஸ்யமானதாகிறது. 

எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?

உதாரணமாக, தண்ணீரில் (ஆறு / குளம் போன்ற வற்றில்) நீங்கள் விழுந்து மூழ்காமல் இருக்க முயற்சி செய்தால், அது உங்களை உள்ளே இழுத்துச் செல்லும். அதேசமயம், தண்ணீரில் நீங்கள் மூழ்க நினைத்து (ஒரு பொருளைப்போல) முயற்சி செய்தால், உங்களை அது மிதக்கவைக்கும். மூச்சு மனிதனுக்கு மிக முக்கியமானது என்று மூச்சைப் பிடித்து வைத்திருந்தால், என்ன ஆகும்... உயிர் போய்விடும் இல்லையா? இதுபோன்ற விநோதமான சிந்தனையுடன் ஆரம்பிக்கிறது ‘தி விஸ்டம் ஆஃப் இன்செக்யூரிட்டி’ என்ற இந்தப் புத்தகம். 1951-ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் புத்தகம், 2011-ல் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.

பாதுகாப்பை நோக்கி ஓடும் மனிதனின் பாதையையும் அதில் செயல்படும் விதிகளையும் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். மனிதன் பாதுகாப்பின்மையை முழுமையாக மனதில் கொண்டிருக்கும் வேளையில் எந்தவொரு விஷயத்திலும் தெளிவாகச் செயல்பட முடியாது. ஏன் இந்தப் பாதுகாப்பின்மை என்ற நிலை மனிதனுக்கு ஏற்படுகிறது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?மனிதன் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பதனாலேயேதானே. ஆண்டவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைத்து ஆறுதல்கொள்வதும், அவனை நோக்கிப் பிரார்த்திப்பதும் நம்மை நம்மால் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று நாம் தீர்க்கமாக நம்புவதினாலேயேதான் இல்லையா..?

நம்முடைய இறப்புக்குப்பின் இந்த உலகத்தைத் தாண்டிய நீண்ட நெடும் வாழ்க்கை ஒன்று உள்ளது என்பதுதான். வேடிக்கையான மனிதர்கள் நாம். இதுபோன்ற ஒரு வாழ்க்கை நமக்குக் கிடைத்திருக் கிறது. அதில் நாம் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் வீணடித்து, முற்றுப் பெறாத விஷயங்களைச் செய்து, ஒன்றுக்கும்  பயன் இல்லாமல் மாய்ந்துபோக எத்தனிக்கிறோம்.

இந்த உலகிற்கு நாம் வந்தது நம்பிக்கையை உருவாக்கவும், பல நல்ல விஷயங்களைச் செய்யவும், அன்பு செய்யவும் என்பது போன்ற ஏதாவது ஒரு காரணகாரியமாகத்தான் என்பதை வேகமான உலக வாழ்க்கையில் நாம் முற்றிலுமாக மறந்துவிடுகிறோம்.

நமக்குத் தெரியாத நம்முடைய முன்னோர்களின் சரித்திரம் எதுவும் இல்லை. உலக வாழ்வில் எவ்வளவு பிரச்னைகளை நம்முடைய முன்னோர்கள் சந்தித்துள்ளனர். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க ஏதாவது சுலபமான வழிகளைக் கண்டறிந்திருக்கிறோமா என்றால், அதுதான் இல்லை. அறிவியல் மற்றும் டெக்னாலஜி போன்ற இரண்டும் நம் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகப்படுத்திக் கொண்டல்லவா போகிறது?

இவை எதுவும் மனிதக் குலத்துக்கே (இருப்பவன், இல்லாதவன் என்ற பாகுபாடில்லாமல்) பாதுகாப்பை அளிக்கவில்லை. இல்லாதவர்களும் பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள் என்றால், இருப்பவர்களோ பாதுகாப்பின்மையின் உச்சத்தில் இருக்கவே செய்கிறார்கள். பாதுகாப்பின்மை என்பதே மகிழ்ச்சியைக் குறைத்துவிடுகிறது.

அப்படியென்றால் மனிதர்கள் மகிழ்ச்சியாகவே இல்லையா என்பீர்கள். மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, தாங்கள் சிந்திக்கக்கூடிய குறைந்தபட்ச காலகட்டத்தில் (நாளை, நாளை மறுநாள் மற்றும் அடுத்த வாரம் போன்ற குறுகிய காலகட்டங்கள்) பிரச்னைகள் ஏதும் வராது என்று தெளிவாகத் தெரிந்த பட்சத்தில்தானே தவிர, நீண்ட காலத்தினைக் குறித்தோ அல்லது மரணம் அடைந்த பிறகு இருக்கும் காலம் குறித்தோ இல்லை. அதிலும் மரணத்திற்குப் பின் என்பது குறித்து ஒருவரும் சந்தோஷமாக இருப்பதே இல்லை.

அடுத்துவரும் குறுகிய காலத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று தெரிந்து மகிழ்ச்சியாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்றால், அந்த நல்ல விஷயம் நடக்கும் நேரம் நிஜத்தில் வரும்போது, அதன் பின்னால் வரக்கூடிய கால கட்டங்களில் நல்ல விஷயம் நடக்க வாய்ப்பில்லாது போனால் நம்மிடம் மகிழ்ச்சி இருக்காதுதானே!

உதாரணத்திற்கு, சொந்த வீடு கட்டுகிறோம். சொந்த வீட்டிற்குச் செல்ல இருக்கிறோம் என்று எதிர்வரும் காலம் குறித்து மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். வீட்டில் குடிபோன நாளில் அடுத்துவரும் இ.எம்.ஐ கவலை நமக்குள் வந்துவிடுகிறது. இப்போது மகிழ்ச்சி எப்படி நம்மிடம் இருக்கும்? அதனாலேயே எதிர்பார்த்த நல்ல விஷயம் நடக்கும்போது மகிழ்ச்சியாக நாம் இருப்போம் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

தொழில்நுட்பம் என்னதான் வளர்ந்தாலும் பாதுகாப்பின்மையாக மனிதன் உணரும் காரண காரியங்கள் மாறவேயில்லை. எத்தனை நூறு ஆண்டுகளானாலும் சரி, ஏழ்மை, நோய், போர், மாற்றம் மற்றும் மரணம் போன்றவை மட்டுமே மனிதனின் பாதுகாப்பின்மையான உணர்தலுக்குப் பெரியதொரு காரணமாக இருக்கிறது. அனைவரின் வாழ்வின் சிறந்த தருணங்களிலும்கூட பாதுகாப்பு என்பது தற்காலிகமானதாகவே தோற்றமளிக்கிறது.

எதிர்காலம்... ஆசை... பாதுகாப்பின்மை... எது உண்மையான மகிழ்ச்சி?

பாதுகாப்பின்மை என்பது மனிதனுக்கு எப்போதும் இருக்கவே செய்கிறது. பேசாமல் அதை ஆண்டவனிடம் ஒப்படைத்துவிட்டால், வாழ்க்கை ஒழுங்காக ஓடிவிடுமே என்று நாம் நினைத்தால், கடவுள் இருக்கிறரா, இல்லையா என்கிற சந்தேகம் அவ்வப்போது நமக்கு வந்துவிடுகிறது. 

நாளைய நினைப்பே பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது. வாழ்க்கையை அப்போதைக்கு அப்போது ரசித்து வாழ்வதை விட்டுவிட்டு, எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளுடனான ஆசையே பாதுகாப்பின்மையைத் தூண்டுவதாக இருக்கிறது. மொத்த உலகத்தையும் வென்றுவிட்டு மனநிம்மதியைத் தொலைத்துவிட்டு வாழ்வதில் என்ன பிரயோஜனம் என்று கொஞ்சம் சிந்தித்தால் நம் வாழ்வு சீராகிவிட வாய்ப்புள்ளது.

தர்க்கரீதியாகவும், அறிவுத்திறனுடனும் மனிதன் புதிய உயரங்களை அடைகிற அதே சமயத்தில் அவனுடைய இதயத்திற்கு அதிக அளவிலான பசி எடுக்க ஆரம்பிக்கிறது. அந்தப் பசியே எதிர்காலம் குறித்த எக்கச்சக்கமான கேள்விகளை எழுப்புகிறது. நம்முடைய அறிவியல் நமக்கு நல்லதொரு எதிர்காலத்தைத் தரும் என்ற போதிலும் (சில வருடங்களுக்கு) அதன்பிறகு என்ன என்ற கேள்வி நமக்குள் வருகிறது. அதனாலேயே நாம் எப்போதுமே கவலையின் காலகட்டத்தில் வாழ்வதைப்போல் தோன்றுகிறது.

நாம் எப்போதும் பார்த்துப் பொறாமைப்படும் மிருகங்களைக் கொஞ்சம் உற்றுநோக்கினால் நமக்கு ஒன்று தெளிவாகப் புரியும். அவையும் நம்மைப் போல் கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி, போராடி மடிந்தும் போகின்றன. அவற்றுக்கும் நமக்கும் இருக்கும் ஒரு பெரிய வித்தியாசம் அவை இந்தக் கஷ்டங்கள் குறித்துக் கவலைப்படுவதும் இல்லை, புலம்புவதும் இல்லை. அதனாலேயே அவற்றின் வாழ்க்கையில் மிகக் குறைந்த அளவிலேயே சிக்கல்கள் இருக்கின்றன.

பசிக்கும் போது சாப்பிட்டு, சோர்வடையும் போது தூங்கி வாழ்வதால் அவற்றின் உணர்ச்சி களே அவற்றை வழிநடத்துகின்றதேயன்றி, எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் அல்ல. அவற்றைப் பொறுத்த வரை, மகிழ்ச்சி என்பது அந்த நிமிட வாழ்க்கையை முழுமையாக ரசித்து வாழ்வதாகவே இருக்கிறது.

மனிதனை மிருகத்துடன் ஒப்பிடுகிறீர்களே என்று நினைக்கிறீர்களா? கண்பார்வை, மோப்ப சக்தியில் அவை நம்மைவிட பலமடங்கு உயர்ந்தவை. மூளையில்தான் ஆறாவது அறிவு இல்லை. பகுத்தறிவு, கருத்து உருவாக்குதல், ஞாபக சக்தி இல்லாததாலேயே அவை எதிர்காலம் குறித்த சிந்தனையில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

எதிர்காலம் குறித்த கவலையே மனிதர்களைப் பாதுகாப்பற்றவர்களாக எண்ணத் தூண்டுகிறது. மனிதர்கள் அனைவரும் பாதுகாப்பற்றவர்களாக உணர்பவர்களாகவும் அவர்கள் அனைவருமே அதுகுறித்து கவலை கொண்டிருப்பவர்களாக இருக்கும்பட்சத்தில் நாம் மட்டும் கவலை இல்லாமல் வாழ்வது என்பது மிக மிகக் கடினமான  காரியமாகும். உலகமே இருட்டில் மூழ்கியுள்ளது. நாம் வெளிச்சம் தேட முயற்சி செய்கிறோம். இங்கே வெளிச்சம் என்பது விழிப்பு உணர்வினைக்  குறிக்கிறது.

உலகம் பாதுகாப்பற்ற ஓர் இடம். இதில் பாதுகாப்பு குறித்து நினைத்தால் மகிழ்ச்சி என்பது நம்மைவிட்டு வெளியேறிவிடும். இந்தப் பிரச்னையை யாருமே புரிந்துகொள்வதில்லை என்பதாலேயே பாதுகாப்பற்றவர்களாக அனைவரும் உணர்கிறோம். பாதுகாப்பில்லாத இடத்தில் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதைத் தவிர, வேறு மாதிரியான உணர்வு வருமா? அதை நாம் மாற்ற நினைத்தால் மகிழ்ச்சியாகத்தான் இருப்போமா? தரும சிந்தனைக்காக நன்கொடை அளிப்பதும், நம்பிக்கைக்குரியவனாகக் காட்டிக் கொள்வதற்காக மனைவியுடன் வாழ்வதும் போலியான வாழ்க்கையில்லையா? இந்த இருவருமே அடுத்தவர்கள் குறித்து சிந்திப்பதில்லை. தன்னைக் குறித்தே சிந்தித்துச் செயல்படுகின்றனர்.

ஒரு மனிதனிடத்தில் இருக்கும் ஈடுபாடு (அன்பு) என்பதே அவனை மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும். ஒரு சிறு திருத்தம், அந்த ஈடுபாடு அவனிடத்தில் அவன் கொண்டிருப்பதில்லை. அவனைத் தவிர மற்ற அனைத்திலும் வைத்திருப்பது என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

ஏக்கமும் மனச்சோர்வும் அதிகரித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் அறுபது வருடங்களுக்கும் முன்னால் எழுதப்பட்டாலும் இன்றைக்கும் நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள உதவும் கருத்துகளைத் தெளிவாகச் சொல்லும் இந்தப் புத்தகத்தை கட்டாயம் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்