Published:Updated:

வெற்றிக்கு இதுவும் வழி!

வெற்றிக்கு இதுவும் வழி!
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிக்கு இதுவும் வழி!

பாலு சத்யா

வெற்றிக்கு இதுவும் வழி!

பாலு சத்யா

Published:Updated:
வெற்றிக்கு இதுவும் வழி!
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிக்கு இதுவும் வழி!

 `புதுசா ஏதாவது பண்ணணும்’ என்கிற எண்ணமும், அதில் தீராத ஆர்வமும் உள்ளவர்களை வாரியணைத்துக்கொள்கிறது உலகம். `வெற்றி’ எனும் பரிசுக்கோப்பையை அவர்கள் கைகளில் எப்படியாவது தவழச் செய்துவிடுகிறது காலம். அதற்கு உதாரணம் இந்த ஜப்பான்காரர்.  

அந்த இளைஞரின் பெயர், கியாசிரோ ஆனிட்சுகா (Kihachiro Onitsuka). 32 வயது. ராணுவத்தில் பணியாற்றியவர். அது, இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். அடுத்து என்ன செய்வது? ஒரு நிறுவனத்தில் மாதாந்திரச் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தார். உப்புச் சப்பில்லாத வேலை. `நான் சொல்றதை மட்டும் செய்.’ கடுமையாக ஒலிக்கும் முதலாளியின் குரலை ஒருகட்டத்தில் சகிக்க முடியாமல் வெளியேறினார்.

வெற்றிக்கு இதுவும் வழி!

பிறகு, விளையாட்டு வீரர்களுக்கான ஷூ தயாரிப்பில் இறங்குவது என முடிவெடுத்தார். வெறும் நான்கு தொழிலாளிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது `ஆனிட்சுகா கம்பெனி.’ உள்ளூரிலிருந்த ஓர் உயர்நிலைப் பள்ளியில் பேஸ்கட் பால் டீம் இருந்தது. அந்த மாணவர்களுக்கு ஷூ தயாரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தார். இரவும் பகலும் வேலை பார்த்து, ஷூ ஒன்றை வடிவமைத்தார். பேஸ்கட் பால் கோச்சைப் போய்ப் பார்த்தார். ஷூவைப் பார்த்த கோச், ``இதைப் போட்டுக்கிட்டு எப்படி விளையாட முடியும் தம்பி... ரொம்ப கனமால்ல இருக்கு?’’ என்றார்.

மனம் தளரவில்லை ஆனிட்சுகா. இரண்டு நாள்கள் மாணவர்கள் பேஸ்கட் பால் விளையாடுவதைப் பார்த்தார். அவர்களின் ஷூக்களுக்கு பிடிமானம் (Grip) அவசியம் என்பதைப் புரிந்துகொண்டார். ஆனாலும் எப்படி வடிவமைப்பது என்பது புரியவில்லை. அதே யோசனையாக வீட்டிலிருந்தபோது அம்மாவின் குரல் கலைத்தது. ``முதல்ல சாப்பிடுப்பா... அப்புறம் யோசிக்கலாம்.’’

ஆனிட்சுகா நிமிர்ந்து பார்த்தார். டைனிங் டேபிளில் ஆக்டோபஸும் சில வெள்ளரித் துண்டுகளும் இருந்தன. ஆக்டோபஸை உற்றுப் பார்த்தார். திரவத்தை உறிஞ்சுவதற்காக ஆக்டோபஸின் உடலிலிருந்த வட்ட வட்ட வடிவங்கள் தெரிந்தன. அதிலிருந்து தெரிந்துகொண்டார் சூட்சுமத்தை. சிறு சிறு கப்கள், இடைவெளிகள் இருப்பதுபோல ஷூக்களை வடிவமைத்தார்.

அவற்றை அணிந்துகொண்டு மாணவர்களால் எளிதாக விளையாட முடிந்தது.அந்த மாணவர்கள் கலந்துகொண்ட அடுத்த போட்டியில் அவர்களுக்கே வெற்றி! பிற கென்ன? இன்று `ஏசிக்ஸ்’ (ASICS) என்ற பெரும் நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது.

ஒருநாள், ஃபின்லாந்தின் தடகள வீரர் லேஸ்ஸே விரேன் (Lasse Virén), ஆனிட்சுகாவைப் பார்க்க வந்தார். ``நாளைக்கு போட்டியில கலந்துக்கணும். ஒரு ஷூ வேணும்’’ என்றார். மறுக்காமல் செய்துகொடுத்தார் ஆனிட்சுகா. அடுத்த நாள் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விரேனுக்குத்தான் தங்கப் பதக்கம். அது சாதாரணப் போட்டியல்ல... 1976-ம் ஆண்டு மான்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக் போட்டி. `என் வெற்றிக்குக் காரணம் இந்த ஷூக்கள்தான்’ என்று, மைதானத்திலேயே அவற்றைத் தூக்கித் தன் தலையில் வைத்துக்கொண்டார் விரேன். இது விரேனுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; ஆனிட்சுகாவுக்குக் கிடைத்த வெற்றியும்தான்.

ஒரு துளி சிந்தனை :  `புதுமையும் படைப்பாற்றலும்தான் ஒரு நிறுவனத்தின் இதயமும் ஆன்மாவும்.’ - பாப் ஐஜெர் (வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைவர்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism