நாளை வரும் நாளில்...

கங்கைக் கரையில் இருந்த அந்த ராஜ்ஜியத்தில் ஒரு விசித்திரமான வழக்கம். பட்டத்து யானை மாலை போட்டு அரசனைத் தேர்ந்தெடுக்கும். ஆனால், அவன் ஐந்து ஆண்டுகளுக்குத்தான் அரசாள முடியும். பிறகு, அந்த மன்னனை அக்கரையில் இருக்கும் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவர். அங்கே அவன் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.
அரசாளும் ஒவ்வொருவனும் ஐந்தாண்டு காலம் ஆனந்த போகம் அனுபவிப்பான். முடிவில் அக்கரைக்குக் கொண்டு செல்லப்படும் போது ஓ வென்று கதறிப் புலம்புவான்; இது வாடிக்கை.
ஆனால், ஒரு முறை மட்டும், அக்கரை செல்லப் படகில் ஏறிய அரசன், பாடிக் கொண்டு சந்தோசமாக இருந்தான். “ உங்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடிகிறது ? “ என்று மந்திரி கேட்டான். “என்னுடன் வந்து பார் “ என்றான் முன்னாள் அரசன்.
கங்கையின் அக்கரையில் இறங்கிப் பார்த்த மந்திரி பிரமித்துப் போனான். அங்கே ஒரு அழகிய அரண்மனை. அதிலே நிறைய பணியாட்கள்! ஆம்; அரசனாக இருந்த போதே அக்கரையில் காத்திருக்கும் அவல வாழ்க்கையையும் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தான் அவன். அதற்கு முன்னேற்பாடு செய்து கொண்டு விட்டான்.
அதாவது, இம்மையில் இன்பம் துய்க்கும் போதே மறுமைக்கும் வசதி செய்து கொள்ள வேண்டும் என்பது பொருள்.!
(ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளியது...)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வெறுமைச் சுமை

ஞானத்தைத் தேடி அலைந்தார், ஒருவர். பற்றுகளைத் துறப்பதே ஞான வாயிலின் திறவுகோல் என்றனர் பலர். அவர் தனது உடைமைகளை உதறினார் ; சொத்துக்களைத் துறந்தார்; ; நிலையான இருப்பிடம் என்று கூட ஒரு பற்றுதல் கூடாதென்று ஊர் ஊராக அலைந்து திரிந்தார். அப்படியும் அவர் மனம் அமைதியுறவில்லை.
வழியில் ஒரு ஜென் குருவை சந்தித்தார்.
“ கருவே! நான் ஞானத்தைத் தேடி அலைகிறேன். உடைமைகளை உதறிவிட்டேன்; பற்று பாசங்களைத் துறந்து விட்டேன்; என் மனம் நிர்சலனமாக உள்ளது “ என்றார்.
“ சரி , அதையும் விட்டு விடு ! “ என்றார் குரூ.
“ என் மனதில் வெறுமை தானே குடி கொண்டுள்ளது. அதை எப்படி விட முடியும் ? “
“ அப்படியானால் அதையும் தூக்கிக் கொண்டு திரி !” என்றார் குரு.