Published:Updated:

ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்!

ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்!

நாணயம் புக் செல்ஃப்

முப்பது ஆண்டுகளுக்குமுன், ஐ.பி.எம்., ஹாவ்லெட் பெக்ர்ட், மைக்ரோ சாஃப்ட் என பல நிறுவனங் களுக்கும் போட்டியாக இருந்த சன் மைக்ரோ சிஸ்டத்தின் சிலிக்கான் வேலி அலுவலகக் கட்டடத்தை இன்றைக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி, பயன்படுத்துகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய பெயர்ப் பலகைக்குப் பின்னால் சன் மைக்ரோ சிஸ்டத்தின் லோகோவை நிலையாக வைத்துள்ளது.  

ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்!

ஏன் தெரியுமா? வெற்றி பெற்ற எப்பேர்ப்பட்ட நிறுவன மானாலும் புதிய விஷயங்களை உடனுக்குடன் நடைமுறைப் படுத்தாவிட்டால், என்னவாகும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவதற்காகத்தான். மாற்றத்தை எதிர்கொள்ளாததால், சன் நிறுவனம் மட்டுமல்ல, பல நூறு நிறுவனங்களும் மறைந்து வருகின்றன என்பதே உண்மை.

காலமாற்றத்துக்கேற்ப தங்களைப் புத்தாக்கம் செய்து மாற்றிக்கொண்டு வேறு வடிவம் எடுக்கமுடியாத நிறுவனங்கள், டிஜிட்டல் டிஸ்ரப்ஷன் குறித்து சிந்தனையே  செய்யாத நிறுவனங்கள், தங்களுடைய பணியாளர் களுக்குத் தேவையான பயிற்சி களைக் கொடுத்து அவர் களுடைய திறனை வளர்க்க நினைக்காத நிறுவனங்கள் எல்லாம் இதுபோன்று காணாமல் போகும் நிறுவனங்களின் பட்டியலில் இருக்கும் என்பது உறுதி.

ஆரம்பத்தில் இந்த உலகமே விவசாயம் சார்ந்த பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து மாறி, தொழில் சார்ந்த பொருளாதாரமாக உருவெடுத்தது. இன்றைக்கு டிஜிட்டலைசேஷன், ஆட்டோ மேஷன் மற்றும் ஆக்சிலரேஷன் என்ற மூன்று விஷயங்களை அடிப்படையாகக்கொண்டே இயங்குவதால், திறமையும் நிபுணத்துவமுமே இந்தப் பொருளாதாரத்தில் வெற்றி பெற அடிப்படையாக இருக்கிறது. வேகமான பொருளாதார வளர்ச்சியினைக் கொண்டிருக்கும் நாடுகள் அனைத்திற்குமே இருக்கும் முக்கியமான சவால் எதுவெனில், அந்த நாட்டில் இருக்கும் நடுத்தர வயது பணியாளர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து இன்றையத் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதுதான் என்கிறது மென்கின்சியின் ஆய்வறிக்கை ஒன்று.

இது என்ன பெரிய காரியமா என்று நமக்குத் தோன்றும். ஆனால், இதுவரை தசாப்தங்களில் நடந்துவந்த மாறுதல்கள் பலவும் ஒரு வருட கால கட்டத்திற்குள் நடந்துவிடுகிறது. பணியில் இருக்கும் நபர்களுக்கு இன்றைக்குத் தேவையான முக்கியத் திறன்கள் இருப்பதில்லை என்று சொல்வதைப் பார்க்கிறோம். அதேசமயம், கல்லூரியிலிருந்து வெளிவரும் மாணவர் களிடமும் இன்றைக்குத் தேவையான திறன்கள் இல்லை என்று கூறுவதைக் கேட்கிறோம். அப்படி என்றால், இன்றைக்குத் தேவையான திறன்கள்தான் என்ன, இன்றைக்குத் தேவையான குணாதிசயங்கள் என்ன என்கிற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

எதையும் வேகமாகக் கற்றுக்கொள்ளும் திறன், இணைந்து செயல்படும் திறன், எதையும் விடாது முயற்சி செய்யும் திறன், எதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டும் திறன் மற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் உலகில் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளைக் கேட்கும் திறன் போன்றவையே பிரதானமாக இன்றைக்குத் தேவைப்படும் திறன்களாகும்.

நல்ல கல்லூரியில் ஒரு பட்டப்படிப்பு முடித்துவிட்டால் போதும். ஆயுசுக்கும் செட்டி லாகிவிடலாம் என்று இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இன்றைய சூழ்நிலை களுக்கு தேவையான திறன்கள் நம்முடைய பணியாளர்களிடம் இருக்கிறதா என்று பார்த்து, அந்தத் திறன்களை கற்றுக் கொள்ளுங்கள் என வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பதால், பலன் ஏதும் இல்லை. தொடர்ந்து பணியாளர்கள் தங்களை சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் தயார்ப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்பதே இன்றைய சூழ்நிலை. சூழ்நிலை மாறும் வேகத்திற்கு ஏற்றாற்போல் தொழிலாளர்களுக்குப் பயிற்சிகளைக் கொடுத்து அவர்களைத் தயார் செய்வதே போட்டி நிறைந்த  இன்றைய சூழலில் அவசியமாகப் பார்க்கப் படுகிறது. கற்பது ஒரு கடினமான விஷயமாக இருப்பதால், நிறுவனங்கள் தங்களது பணி யாளர்கள் வெளியுலகம் மாறும் வேகத்துக்கு ஏற்றாற்போல் தங்களைத் தயார் செய்து கொள்ளும் சூழலை உருவாக்கித் தரவேண்டியது கட்டாயமாகிவிட்டது. இன்னமும் சொல்லப் போனால், தகுதிப்படுத்திக்கொள்வதற்கான தொடர் கற்றல் என்பது வேலையின் ஒரு பகுதியாகவே  மாற்றிவிடப்பட வேண்டுமே தவிர, கற்றல் என்பதற்கான தனியானதொரு நேரம் ஒதுக்கவேண்டிய தேவையில்லை.

பின்வரும் ஏழு வகையான கொள்கைகளை நிறுவனங்கள் கடைப்பிடித்தலின் மூலம் தொடர் கற்றலுக்கு வழிவகை செய்ய முடியும். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊழியர்களின் திறனை வளர்க்கும் ஏழு கொள்கைகள்!

முதலாவதாக, கற்றல் என்பது இன்றைய போட்டி உலகின் அடிப்படை அம்சமாக (Competative advantage) உணர்த்துதலாகும். ஒரு நிறுவனத்தின் கலாசாரம் கற்றலுக்குண்டான அடித்தளத்தை அமைத்துத் தருவதாக அமைகிறது. கற்றல் என்பது கட்டுப்பாட்டினால் அமையாமல் வேண்டி விரும்பி செய்யவேண்டிய ஒன்று என்பது போன்ற கலாசார சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பொதுவாகவே, நல்ல திறமைமிக்க மனிதர்கள் கற்றலுக்கு முக்கியத்துவம் தரும் நிறுவனங்களிலேயே பணிபுரிய விரும்புவார்கள். ஏனென்றால், கற்றலை ஊக்கு விப்பதன்மூலம் அவர்களுடைய எதிர்காலம் பாதுகாப்பானதாக மாற்றப்படுகிறது என்று அவர்கள் உணர்கின்றனர்.

இரண்டாவதாக, ஒவ்வொரு மனிதரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளித்தல் என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படவேண்டும். இன்றைய சூழ்நிலையில், டெக்னாலஜி இந்த விதமான கற்றலுக்குத் துணையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு சுலபத்தில் புரிந்தவற்றை ஒதுக்கிவிட்டு, புரியாதவற்றில் நேரம் செலவழிக்கும்படி டெக்னாலஜி மூலம் அளிக்கப்படும் பயிற்சி உதவி செய்கிறது.

மூன்றாவதாக, எக்கச்சக்கமான விஷயங்களைப் பயிற்றுவிப்பதைத் தவிர்க்கவேண்டும். கடுகளவு தகவல்களுடன் கடுமையான தகவல் பற்றாக் குறையினால் கஷ்டப்பட்ட காலகட்டத்தில் இருந்து, இப்போது கடலளவு தகவல்களுடன் எதை எடுப்பது, எதை விடுவது என்பது தெரியாமல் திண்டாடும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஒரு புதிய விஷயம் குறித்து கற்றுக் கொள்ள வகுப்புகள், கான்ஃபரன்ஸ்கள், புத்தகங்கள், வெப்சைட்டுகள், அனுபவங்கள், பயிற்சி ஏடுகள் எனப் பல்வேறு வழிகள் இன்றைக்கு இருக்கிறது. இந்தத் தகவல் கடலில் மூழ்கி எப்படி முத்தெடுப்பது என்பதை நிறுவனங்கள் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நான்காவதாக, பணியாளர்கள் தமக்கு இணையானவர்களிடம் (peer) இருந்து கற்றுக் கொள்ளுதல் என்பதன் மகத்துவத்தை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது. பணியாளர்களுக்கு நம்முடன் இருப்பவர்கள் பலரும் ஒரு விஷயத்தை செவ்வனே கற்றுக் கொண்டு, ஒரு ஸ்பெஷலிஸ்டாக இருப்பார்கள் என்பதைப் புரியவைத்து அவர்களிடமிருந்து எப்படி நாம் கற்றுக்கொள்வது என்பதற்கான ஸ்ட்ராட்டஜிகளையும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஐந்தாவதாக, சரியான டெக்னாலஜிகளைக் கையாளுதல் என்பது. என்னதான் டெக்னாலஜி என்பது பல்வேறு ஜாலங்களைச் செய்தாலும் நமக்கும் நம் நிறுவனத்திற்கும் எது மிகவும் சரியாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். பயில்வோரை மனதில் வைத்து வடிவமைக்கப்படும் பயிற்றுவிக்கும் முறைகளுக்கே நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

ஆறாவதாக, நம்மிடம் இருக்கும் பணியாளர் களின் திறனை ஆராய்ந்தறிந்து, அதில் இருக்கும் நுண்ணறிவைப் பெருக்கிப் பயன் பெற முயற்சி செய்ய வேண்டும். நம் பணியாளர்கள் குறித்து பொதுவான ஒரு கருத்தை நாம் கொண்டுவிடாமல் அவர்கள் எவற்றில் சிறந்தவர்கள், அந்த சிறப்புக் குணாதிசயத்தைக் கொண்டு தற்போது கற்றுக்கொள்ளப் போவதை எப்படி சுலபமாக பயிற்றுவிக்கலாம் என்பது குறித்துச் சிந்திக்கப் பழக வேண்டும்.

ஏழாவதாக, பணியாளர்களின் தனித்திறனும் அனுபவமும் இணைதல் மட்டுமே நிறுவனத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதாகும். பணியாளரிடம் இருக்கும் திறன் மற்றும் அனுபவத்தினை அறிந்துகொண்டு அத்துடன் எந்தப் புதிய திறன் சேர்க்கப்பட்டால் அவர் நமக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்பதை ஆராய்ந்தறிந்து அதற்கேற்ப நாம் செயலாற்றவேண்டும்.

இந்த ஏழுவகை கொள்கைகளை எப்படி உருவாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது என்பதை விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள் இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான கெல்லி பால்மர் மற்றும் டேவிட் ப்ளேக்.

இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தேவை யான திறன்களைப் பயிற்றுவித்து, அவர்களை நிபுணர்களாக மாற்ற பல்வேறு டெக்னாலஜிகள் வந்துவிட்டது. இந்த முயற்சியில் வெற்றி பெற நிறுவனங்களுக்கு எந்தமாதிரியான மனநிலை இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

- நாணயம் டீம்