‘தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது’ என்று சொல்லி, நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் ரஃபேல் பேர ஊழல் பற்றியப் புத்தகங்களைப் பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரியின் செயல் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. பின்பு, ‘தடை விதிக்கப்படவில்லை’ என்று தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்துப் புத்தகங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பாரதி புத்தகாலயம் சார்பில், எஸ்.விஜயன் எழுதிய `நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, ஏப்ரல் 2-ம் தேதி, சென்னை புரசைவாக்கத்தில் நடைபெறவிருந்தது. தகவல் அறிந்த ஆயிரம் விளக்குத் தொகுதி 1-வது தேர்தல் பறக்கும்படை அதிகாரியான மாநகராட்சியின் உதவிச் செயற்பொறியாளர் கணேஷ், ‘‘தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உள்ளதால், புத்தகத்தை வெளியிடத் தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறிப் புத்தகங்களைப் பறிமுதல் செய்துள்ளார்.

இதையடுத்து, பதிப்பகத்தின் சார்பில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பான செய்திகளும் சமூக ஊடகத்தில் வைரல் ஆகின. இதன் தொடர்ச்சியாகப் புத்தகத்தைப் பறிமுதல் செய்த செயற்பொறியாளர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளிடம், ‘தேர்தல் ஆணையம் உத்தரவு எதுவும் போடாத நிலையில், தன்னிச்சையாக நடந்துகொண்டது ஏன்?’ என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டார். இதையடுத்து வேறு வழியில்லாமல், ‘புத்தகத்துக்கான தடை நீங்கியது’ என்று சொல்லிப் பதிப்பாளரிடமே புத்தகங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்துப் பாரதி புத்தகாலயம் நாகராஜனிடம் பேசினோம். ``புத்தகங்களை ஒடுக்குவது பாசிச அரசின் அடையாளம். இந்தப் புத்தகத்தில், தேர்தல் தொடர்பாக எந்தச் செய்தியும் இல்லை. ரஃபேல் ஊழல் குறித்தும், நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய பொய்களையும்தான் இதில் தெரிவித்திருந்தோம். தேர்தல் ஆணைய அதிகாரியின் போக்கு வருத்தமளிக்கிறது’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடை இல்லை என்று தெரியவந்ததும், அன்று மாலையே தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. மூத்தப் பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் நூலை வெளியிட்டுப் பேசினார். ‘‘ஊடகம் இந்த விஷயத்தை உடனடியாகத் தேசிய அளவில் கொண்டுசென்றதால், தீர்வு கிடைத்துள்ளது. ரஃபேல் ஒப்பந்தம் விதிமுறைகளைமீறி கையெழுத்தாகியுள்ளது. பி.ஜே.பி-க்கு இந்தப் புத்தகம் ஒரு கசப்பான விஷயம்’’ என்றார்.
இதற்கிடையில், புத்தகங்களைப் பறிமுதல் செய்த உதவிச் செயற்பொறியாளர் கணேஷ், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- இ.லோகேஷ்வரி
படங்கள்: தே.அசோக்குமார், வீ.சீனிவாசலு