பிரீமியம் ஸ்டோரி

ண்டன் நைட்ஸ்பிரிட்ஜ் பகுதியில் அமைந்திருக்கும் ஈகுவடார் தூதரகத்தை, ஏழு ஆண்டுகளாக லண்டன் போலீஸ், தனியார் பாதுகாப்பு அமைப்புகள், செய்தியாளர்கள், துப்பறிவாளர்கள் என்று பலநூறு பேர் உற்றுநோக்கிக்கொண்டேயிருந்தனர். அதனுள்ளே தஞ்சமடைந்திருந்த ஒரு மனிதருக்காக. 

உண்மைகள் ஓய்வதில்லை!


ஈகுவடார் தூதரக அலுவலக அறை ஒன்றிலே படுக்கை, சமையல் பொருள்கள், மேஜை, கழிவறை என இன்றியமையாத விஷயங்களுடன் தனது வீடாக மாற்றிக்கொண்டு ஏழாண்டுகள் வாழ்க்கையைக் கழித்த அந்த மனிதர், ஜூலியன் அசாஞ்சே.  

ஒற்றை மனிதர், அவரைக் கட்டடத்திற்குள் பத்திரமாக வைத்திருக்க ஈகுவடார் அரசு 3.7  மில்லியன் யூரோ செலவிட்டிருக்கிறது. அவர் கட்டடத்தைத் தாண்டினால் கைது செய்வதற்காக, கட்டடத்தைச் சுற்றிய காவலுக்கு மட்டும், இங்கிலாந்து அரசு 12.6 மில்லியன்  யூரோ செலவு செய்திருக்கிறது.

ஏழு ஆண்டுகள் அறை வாசத்திற்குப் பிறகு, ஈகுவடார் அரசு அவருக்கு அளித்த சிறப்புப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள, அவரைக் கைது செய்திருக்கிறது இங்கிலாந்து காவல்துறை. அதுவும் சாதாரணமாக அல்ல. மரியாதையின்றி, மனித உரிமைகளை மீறி, கழுத்தைப்பிடித்து வெளியே இழுத்து வந்து வாகனத்தில் ஏற்றிச்சென்றிருக்கிறது. உலகம் முழுவதும் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார் அசாஞ்சே.

ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் என்ற வலைதளத்தின் நிறுவனர். தகவல் வெளிப்படைத் தன்மையினைத் தன் வாழ்நாள் பணியாக வகுத்துக்கொண்டவர். உலக நாடுகள், முக்கியமாக அமெரிக்கா போன்ற பெரும்பலம் பொருந்திய நாடுகள், உலக மக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் கொடூரமான வன்முறை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முறைகேடுகள், ஊழல் குற்றங்கள் என்ற அரசின் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகத்தையே விக்கித்துப்போக வைத்தவர். 

உண்மைகள் ஓய்வதில்லை!

‘collateral murders’  என்ற பெயரில் அவர் வெளியிட்ட வீடியோ, உலகையே அதிர்ச்சியில் உறையவைத்தது, அமெரிக்க விமானங்கள், ஈராக் வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருக்கும் பலரைக் குறிவைத்துத் தாக்கும் அந்தக் காணொலியும், அமெரிக்க பைலட்டின் குரல் பதிவும், அமெரிக்காவின் கோரமுகத்தை உலகிற்குக் காட்டின. கியூபா நாட்டின், குவாண்டனமோ பே கடற்கரையில், தன் ராணுவத் தளவாடம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தது அமெரிக்க அரசு, ஆனால் அங்கிருந்ததோ போர்க்குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அமெரிக்கச் சிறை. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளை அங்கு அடைத்துவைத்து, அமெரிக்கா சித்ரவதை  செய்ததை விக்கிலீக்ஸ் வெளிச்சம் போட்டுக் காட்டியது.

மிக ரகசியமான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து அவர்மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்த அமெரிக்கா, ஜூலியன் அசாஞ்சேவைக் கைது செய்ய உதவுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்ட ஸ்வீடன் நாட்டில், அவர்மீது பாலியல் புகார்கள் எழுப்பப்பட்டு அவரை விசாரணைக்கு அழைத்தது ஸ்வீடன் அரசு. அசாஞ்சே பிறந்த நாடான ஆஸ்திரேலியாவும் அவருக்கு உதவ மறுத்தது. ரஷ்யாவுடன் தொடர்பு இருப்பதாலேயே, அமெரிக்காவிற்கு எதிராக அவர் செயல்படுவதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது.

உண்மைகள் ஓய்வதில்லை!

ஈகுவடார் மட்டுமே, கருத்துச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜூலியன் அசாஞ்சேக்கு 2012-ம் ஆண்டு அடைக்கலம் அளித்தது. கடந்த ஏழு ஆண்டுகளில், அமெரிக்கத் தேர்தலின்போது, ஹிலாரி கிளிண்டனின் தனிப்பட்ட மின்னஞ்சல்களை வெளியிட்டது உட்பட பல சர்ச்சைகள் அவரைத் தொடர்ந்தன. ஈகுவடார் நாட்டின் அதிகாரிகளுக்கும் அசாஞ்சேவிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

ஈகுவடார் ஜனாதிபதி லெனின் மொரேனோவிற்கு எதிரான, ஊழல் குறித்த ஆவணங்களை வெளியிட்டு, ஜூலியன் அசாஞ்சே தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பின் விதிகளை மீறிவிட்டதாக அவர்மீது புதிய புகாரும் எழுந்தது. கடந்த வருடம், அசாஞ்சேவிற்கு அளித்திருக்கும் பாதுகாப்பை விலக்கிக்கொள்வது குறித்த பேச்சுவார்த்தையை பிரிட்டிஷ் அரசோடு தொடங்கிய ஈகுவடார்அரசு, 2019 ஏப்ரல் 11 அன்று  அவருக்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதை அடுத்து, ஈகுவடார் தூதரகத்திற்குள்ளே சென்று பிரிட்டன் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இடைப்பட்ட காலங்களில், தொடர்ந்து அசாஞ்சே மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள், அவரின் வழக்கறிஞர்கள் இருவர் உட்பட பலரது மர்மமான மரணங்கள் ஆகியவை, உண்மைக்கெதிராக உலகநாடுகளின் அதிகார வர்க்கங்கள் தொடுத்த  போராகவே உலக மக்களால் பார்க்கப்படுகிறது.

ஜூலியன் அசாஞ்சே கைது உலகிற்கு உணர்த்தியிருப்பது ஒன்றை மட்டும்தான், அதிகார வர்க்கம் தனக்கெதிரான உண்மைகளைக் கையாளுவதில் எப்போதும் அடக்குமுறையையே கையாள்கிறது. அசாஞ்சே கைது தற்காலிகப் பின்னடைவுதான். ஆனால் உண்மையின் வாசலை ஒருநாளும் மூட முடியாது. 

- ஜெனிபர் ம.ஆ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு