கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

என் அப்பா!

என் அப்பா!
பிரீமியம் ஸ்டோரி
News
என் அப்பா!

க.பார்த்திபன்

என் அப்பா!

ன் அப்பா பெயர் கந்தசாமி. அவர் ஒரு நெசவாளர். நான் வசிக்கும் சேலம், பள்ளிப்பாளையத்தில் எங்கும் தறி சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். என் குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தச் சத்தத்தை கேட்டு வளர்ந்திருக்கிறேன். இப்போதும் அந்தச் சத்தம்தான் எனக்கு சங்கீதம். அந்தச் சத்தத்தில் ஓயாமல் வேலை செய்துதான் என் அப்பா என்னை வளர்த்தார். என் அப்பாவைப் போல இன்னும் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்துகொண்டே வருகிறது. என் அப்பாதான் எனக்கு ஹீரோ. ஆகவே, ஸ்டார் பக்கங்களுக்காக என் அப்பாவையே பேட்டி எடுத்துள்ளேன்.

என் அப்பா!

‘’இந்தத் தொழிலில் நீங்க எத்தனை வருஷமா இருக்கீங்க?’’

‘‘எனக்கு சின்ன வயசுல படிப்பே வரலை. வசதியும் இல்லை. அதனால்,  10 வயசுல இந்தத் தொழிலுக்கு வந்தேன். இப்போ என்னோட வயசு 43. ஆரம்பத்தில் கைத்தறி இங்கே சிறப்பாக இருந்துச்சு. விசைத்தறிகள் வந்த பிறகு கைத்தறி நலிவடைந்து போச்சு. இப்போ, விசைத்தறியும் கொஞ்சம் கொஞ்சமா நலிவடைஞ்சுட்டு இருக்கு. இந்தத் தொழிலையே நம்பி இருக்கும் என்னை மாதிரியானவர்கள் ரொம்ப கஷ்டப்படறோம். 33 வருஷமா இந்தத் தொழிலில் இருந்தாலும் எந்த முன்னேற்றத்தையும் அடையல. இப்போ, விசைத்தறிகளுக்குப் பதில் தானியங்கி தறிகள் வந்திருக்கு.’’

‘‘விசைத்தறி தொழிலின் மேம்பாடாகத்தானே தானியங்கி தறிகள் வந்திருக்கு. அதனால் என்ன பிரச்னை?’’

‘‘தானியங்கி தறிகளால் விசைத்தறியை வைத்திருக்கும் என்னை மாதிரியான சிறிய நெசவாளர்கள் பாதிக்கப்படுகிறோம். தானியங்கி தறிகளால் விரைவாக உற்பத்தி அதிகரிக்கலாம்தான். ஆனால், செலவு அதிகமாக இருக்கு.  அதை ஈடு செய்ய போதுமான கூலியும் தருவதில்லை. தானியங்கித் தறிகளை அமைக்க 5 லட்சம் முதல் 15 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். அந்த அளவுக்கு பணம் எல்லோரிடமும் இருக்காதல்லவா?’’

என் அப்பா!

‘‘அரசு உதவி செய்யறதில்லியே?’’

‘‘அரசின் உதவிகள் முறையாக எல்லோருக்கும் கிடைக்கறதில்லை. அதுபற்றி பெரிதாக அக்கறையும் எடுத்துக்கொள்ளாத நிலைமைதான் இருக்கு’’

‘‘ஒருவேளை இந்த விசைத்தறி தொழிலும் முற்றிலும் நலிவடைந்துவிட்டால் என்ன செய்வீங்க?’’

‘‘வேற என்ன செய்யறதுன்னு இப்போதைக்குத் தெரியலை. ‘கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி’ன்னு சொல்வாங்களே, அப்படி இருப்பேனோன்னு தோணுது. என் பிள்ளையான நீதான் என்னைக் காப்பாத்தணும்.’’

‘‘நிச்சயமா காப்பாற்றுவேன் அப்பா. சுட்டி வாசகர்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?’’

‘‘ஒரு மனிதனின் அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். விவசாயிகள் போலவே நெசவாளர்களும் வறுமைக்கு நடுவில்தான் அனைவருக்கும் ஆடையை உருவாக்கி மானம் காத்துட்டிருக்கோம். நெசவாளிகள் நூலை கையில் எடுத்தால்தான் உங்களுக்கு உடை கிடைக்கும். உள்ளூரில் அந்தத் தொழில் அழிந்தால் நிறைய பேர் வேலைவாய்ப்பு இழந்துருவாங்க. அதனால், நீங்கள் ஆடை வாங்கும்போது நம் உள்ளூர் தயாரிப்பா, நம் நாட்டு தயாரிப்பா எனப் பார்த்து வாங்கினால் சந்தோஷம்” என்றார்.

நாம் உடுத்தும் ஆடை, நம் நெசவாளர்களை வாழவைப்பதாக இருக்கட்டும்!

படங்கள்: ரமேஷ் கந்தசாமி