Published:Updated:

“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”
பிரீமியம் ஸ்டோரி
“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

தீபச்செல்வன்சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: க.பாலாஜி

“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

தீபச்செல்வன்சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”
பிரீமியம் ஸ்டோரி
“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

ழத்து இளம்படைப்பாளிகளில் தவிர்க்கமுடியாத ஆளுமை, தீபச்செல்வன். தான் பங்காற்றிய ஒரு திரைப்படப் பணிக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்...

“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

“2009?”

“2009-ம் ஆண்டு, மே மாதத்தில், நான் முள்ளிவாய்க்காலில் இல்லை. யாழ்ப்பாண த்தில் படித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அம்மாவும் தங்கையும் அங்கிருந்தார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்ற பதபதைப்புதான் பிரதானமாக இருந்தது. ஏனென்றால், அப்போது வந்த செய்திகள் எல்லாமே மரணச் செய்திகளாகவே இருந்தன. ஈழமே மரணவீடாகத்தான் இருந்தது. யுத்தகளத்தில் இருந்த மக்கள் சந்தித்த உளவியல் துன்பத்தை, முள்ளிவாய்க்காலைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே எதிர்கொண்டோம்.”

“அம்மாவையும் தங்கையையும் எப்போது சந்தித்தீர்கள்?”

“இறுதி யுத்தம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்துதான் பார்க்க முடிந்தது. அவர்களை ஒரு முகாமில் அடைத்த பிறகு, ஒரு நபர் மூலமாக எனக்குத் தகவல் கொடுத்தார்கள்.”

“இறுதிவரை போர் நடந்துகொண்டிருந்தது. எந்தக் கட்டத்தில் தோல்வியை அல்லது பேரிழப்பைச் சந்திக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு பொதுமக்களும் இயக்கத்தினரும் வந்தார்கள்?”

“எங்கள் அம்மா சொல்வார், மே 16 அன்று சரணடையச் செல்லும்போதும் சண்டை தொடர்ந்துகொண்டுதான் இருந்ததாம். மக்களெல்லாம் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டதும்தான் போராளிகள் சரணடையும் முடிவுக்கு வருகிறார்கள்.”

“அம்மாவும் தங்கையும் சரணடைந்தபோது என்ன விதமான சோதனைகளை எதிர்கொண்டார்கள்?”

“பாதுகாப்பு ரீதியான கடுமையான கெடுபிடிகளுக்கு உள்ளாகவில்லை. ஆனால், இரண்டு நாள்களாக முள்வேலி முகாமிற்குக் கொண்டுபோவதிற்குள்ளே ஏராளமான முறை வாகனத்திலிருந்து ஏற்றி இறக்கி அலைக்கழித்தது பெரிய சித்ரவதையாக இருந்ததாம். போர்க்களத்திலிருந்து உடலளவிலும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை வண்டிகளில் மாற்றி மாற்றி கொண்டுபோவது என்பது துயரத்தைத்தானே தரும்.”

“ ‘2009 மே மாதம்’ என்பது அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் என்னவாகப் பதிவாயிருக்கிறது?”


“மொத்த போர் வரலாற்றிலும், அதிகமான மக்கள் கொல்லப்பட்டது 2009-ம் ஆண்டு, மே மாதத்தில்தான். எல்லா வீடுகளிலுமே இழப்புகள் இருக்கின்றன. சில குடும்பங்களில் மொத்தமாகவே ஒருவரும் உயிருடன் இல்லை. காணாமல்போனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்று புரியாமல் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். 2009-ம் ஆண்டையொட்டி, மகிந்த ராஜபக்‌ச ஆட்சிக்காலத்தில், இழந்த உயிர்களை நினைத்து அழக்கூட மக்களுக்கு அனுமதியில்லாமல் இருந்தது. அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு விளக்குகூட ஏற்ற இயலாது. இன்னும் கொடுமை என்னவென்றால், மே மாதத்தில் ராணுவத்தின் வெற்றியைக் குறிப்பதற்காக, அக்கொடிகளைப் பிடிக்க மக்களை பலவந்தமாக அழைத்துப்போகும் நிலைமையும் இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, நினைவுகூரல் நிகழ்ச்சிகளை நடத்தமுடிவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.”

“2009-க்குப் பிறகு, தமிழர்களிடையே கல்வி நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?”

“இன்று அங்கே கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டது. முன்பு, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, கல்வி சார்ந்து பெரிய அளவில் எந்தவித வசதிகளும் இல்லை. ஓலைக்கொட்டில்கள், இடிந்த கட்டடங்களில்தான் படித்தோம். ஆனாலும், அப்போதைய  தேர்வுகளில் வடக்கு கிழக்கில் மட்டக்களப்போ, யாழ்ப்பாணமோ, கிளிநொச்சியோ, இலங்கையின் கொழும்பு மாணவர்களோடு போட்டிபோட்டார்கள். சட்டை இல்லை, சாப்பாடு இல்லை. பள்ளிக்கூடத்தின் மேல் குண்டுகள் விழுந்துகொண்டிருந்த கடுமையான யுத்தக் காலத்திலும் ஒரு சிங்கள மாணவன் முதலிடம் வந்தால், கிளிநொச்சியிலிருந்து தமிழ் மாணவன் இரண்டாம் இடம் வருவான். ஆனால், இன்றைக்கு முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தும், வசதியான பாடசாலைகள், கல்லூரிகள் வந்தாலும்கூட, எங்கள் மாணவர்கள் அகில இலங்கை அளவில் பத்தாம் இடத்துக்குக்கூட வர இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்விலும்கூட தமிழ் மாணவர்களுக்குக் கடுமையான வீழ்ச்சிதான். குறிப்பாக, தரப்பட்டியலில் கிளிநொச்சி மாவட்டம், இலங்கையின் 25 மாவட்டங்களில் 24-வது மாவட்டமாகத்தான் இருக்கிறது. தமிழர்களின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய திருகோணமலை, 25-வது மாவட்டமாக இருக்கிறது. தமிழர் பகுதி எல்லாமே கடைசியாகத்தான் இருக்கிறது. மாகாண அளவிலும், வடக்கு கிழக்கு பகுதிகள் பின்னுக்கே இருக்கின்றன. இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், ஏன் தமிழர் பகுதி பின்னுக்குள்ளது என்பதை ஆராய்ந்தால், இது திட்டமிடப்பட்டது என்பது தெரியவரும். தமிழ் மாணவர்களைத் திசைதிருப்பும் விதத்தில் போதை வஸ்துகளுக்கு அடிமையாக்கி, கல்விமீது நாட்டமில்லாமல் செய்துவிடுகின்றனர். நான் என் கண்ணெதிரே பார்த்திருக்கிறேன். சிறுவர்கள் பாடசாலைகளைக் கைவிட்டு, ராணுவத்துக்குப் போதைப்பொருள் சுமக்கும் தொழிலாளியாக்கப்படும் அவலம் ஈழத்தில் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக ராணுவம், கல்வி நிர்வாகத்தில் தலையிடு வதைச் சொல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

இலங்கையில் ஒரு காலத்தில் தமிழர்களே கல்வியில் முன்னணியில் இருந்தவர்கள். பிரித்தானிய அரசின் ஆட்சியிலும் இலங்கையின் பிரதிநிதியே தமிழர்தான். தமிழர்- சிங்களர் இன முரண்பாடு எழ முக்கியக் காரணங்களில் ஒன்று, தமிழர்களின் கல்வி வளர்ச்சி நிலை. அதைக் கண்டு பொறாமைப்பட்டு, தரப்படுத்தல் சட்டம் எனும் தனிச் சிங்களச் சட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. அது கல்வி ஒடுக்குமுறைச் சட்டம்தான். இப்போது கல்வி தொடர்பான அதுபோன்ற சட்டம் இல்லை. ஆனால், இளம்தலைமுறையினரின் சிந்தனையை அழிப்பதில் திட்டமிட்ட நோக்கத்தில் அரசு இருக்கிறது.

நிலம், பெண்கள், சிறுவர்கள் இந்த மூன்று தரப்பை, தனித்தனிப் பொறிகளில் சிக்கவைத்திருக்கிறது அரசு. பெண்களை நுண்கடன்களில் சிக்கவைத்ததால், கிட்டத்தட்ட 200 பெண்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். அதேபோல, ராணுவப் படையில் பெண்களை இணைப்பதால், குடும்பங்கள் சிதைவடைகின்றன. பெண்களைத் திருமணம் செய்வது, கட்டாயக் கருத்தடை செய்வது என்பதும் இருக்கிறது. நிலம் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். உதாரணமாக, ஒருநாள் செய்தியில் 4000 ஏக்கர் நிலத்தை ராணுவம் விடுவித்திருக்கிறது என்று வந்தால், அதே நாளில்  விடுவிக்கப்பட்ட பகுதியைவிட அதிகமாக சிங்களக் குடியேற்றம் நடந்த செய்தியும் வரும். முள்ளி வாய்க்காலோடு இன அழிப்பு முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்புதான் கத்தியும் ரத்தமும் இல்லாமல் பெரும் யுத்தம் ஒன்று தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் தொடர்ந்து பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.”
 
“பாடத்திட்டங்களில் தமிழருக்கு எதிரான விஷயங்கள் புகுத்தப்படுகின்றனவா?”

“ஆமாம்! 2009-க்கு முன், தமிழர்களின் வரலாறு ஓரளவுக்காவது பாடத்திட்டத்தில் இருந்தது. ஆனால், இப்போது தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறி, வசித்துவருகிறார்கள் என்று எழுதப்பட்டு வருகிறது.  தமிழின அழிப்புப் போர் என்பது வீரவரலாறாகக் கற்பிக்கப்படுகிறது. பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிராகச் சிங்கள மனோபாவத்துடன் கட்டமைக்கப்படுகிறது. பாடத்திட்டக் குழுவில் தமிழர்கள் இடம்பெற்றாலும் கூட அவர்கள் மொழி பெயர்ப்பாளர்களாக மட்டுமே இருக்க முடியும். கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மொத்தமாக மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. மாகாண அரசு, பாடசாலைகளை நிர்வகிக்கிறதுதானே தவிர,  எதையும் தீர்மானிக்கவியலாது. தமிழ்ப் பாடத்தில் மட்டும் தமிழர்களின் இலக்கியம், வாழ்க்கை இடம்பிடித்திருக்கிறது. தமிழக இலக்கியம், ஈழத்து இலக்கியம் ஆகியவை உள்ளன. ஆனால், குடியியல் போன்ற பாடங்களில் தமிழர்களின் பூர்வீகம், பங்களிப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. ஆனால், தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் சுயாதீனமானவை என்பதால், அங்குள்ள பேராசிரியர்களின் பங்களிப்புகளால் மோசமான சூழலுக்குச் செல்லவில்லை.”

“2009-க்குப் பிறகு தமிழர்களிடத்தில் பண்பாட்டு அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா?”

“ஓர் இனத்தின் இருப்புக்கு முக்கியமான விஷயம் பண்பாட்டு நிகழ்வுகள்தாம். அதனால்தான், போரின்போது தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டன. பூர்வீகமான கோவில் ஆகட்டும், ஒரு கட்டடமாகட்டும், பயன்படுத்தப்பட்ட பொருளாகட்டும் அழித்தார்கள். இப்போது எங்களுடைய எல்லாவற்றின் ஆயுளும் பத்து வருடங்கள்தான். எங்கள் வீட்டின், ஆலயத்தின் வயது பத்துதான். இது சமூகத்திற்கு பேரிழப்புதான். இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் எழுப்பி ஆயிரம் ஆண்டுகளாயிற்று என்று சொல்கிறீர்களே... அதுபோல எங்களுக்குச் சொல்வதற்கு ஏதுமில்லை. இந்த ராணுவ மயமும், திட்டமிட்ட நெருக்கடியான பொருளாதார வாழ்க்கையும், குடும்பங்களை வறுமைச் சூழலுக்குத் தள்ளியதும், மக்களைப் பண்பாட்டு உணர்வழிப்புக்கு உள்ளாக்கிவிட்டது. நுண்கடன் எடுத்து குடும்பம் நடத்துபவர்கள், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது போன்ற வீட்டின் சின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட நடத்த முடியாதவர்களாகி விட்டனர். இதனால், பல குடும்பங்கள் பிரிந்தே போய்விட்டன. அடுத்து வரும் தலைமுறைக்கு எந்தப் பண்பாட்டு நிகழ்வும் தெரியாது. நான் ஆசிரியராக இருப்பதால், பெற்றோர்களை இழந்த பல குழந்தைகளை தினந்தோறும் பார்க்கிறேன். குடும்பச் சிதைவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நிலைமை இப்படி இல்லாதிருக்கலாம். ஆனால், போர் நடந்த பகுதிகளில் நிலைமை அவலமாகத்தான் இருக்கிறது.”

“சத்தமில்லாத போர் தொடரத்தான் செய்கிறது!”

“தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் பெருவாரியானவை இடிக்கப்பட்டிருக்கின்றன. துயரம் வரும்போதுதான் ஆன்மிக நம்பிக்கை அதிகமாகும் என்பார்கள். இந்தச் சூழலில், தமிழர்களின் ஆன்மிக நம்பிக்கை என்னவாக உள்ளது?”

“விடுதலைப் புலிகளின் காலத்தில், மதம் தொடர்பானவற்றில் மக்களின் நம்பிக்கையில் தலையிடுவதில்லை. மக்கள் ஆலயங்களில் கூடி வழிபட்டார்கள். போருக்குப் பிறகு, ஆலயங்கள் இடிக்கப்பட்டன. மீளவும் புதிய ஆலயங்கள் கட்டப்பட்டிருந்தாலும், மக்கள் அங்கு செல்லாத சூழலே இருக்கிறது. ஆலயங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பது ஒருபுறம் என்றாலும், போருக்குப் பின் மக்களிடம் ஆன்மிக வெறுப்பு இருப்பதைப் பார்க்க முடிகிறது. அது பகுத்தறிவு சார்ந்தது என நான் நினைக்கவில்லை. அவர்கள் சந்தித்த இன அழிப்பால் வந்திருக்கும் விரக்தி நிலைப்பாடு!

இதனால், உளவியல் ரீதியான அழுத்தத்தோடே வாழ்வதையும் உணர முடிகிறது. முன்பெல்லாம் கிளிநொச்சி முருகன் கோவில் தேர் கயிற்றைப் பிடிக்க இடம் கிடைக்காது. இப்போது தேர் இழுக்க ஆளேயில்லை. ஆனால், காணாமல்போன ஒருவருக்கான போராட்டம் என்றால் மக்கள் வருகிறார்கள். அரசுக்கு எதிராகக் கடையடைப்பு என்றால் ஆள்கள் வருகிறார்கள். ஆனால், கோவிலுக்கு வரும் ஆள்கள் குறைந்துவிட்டார்கள்.”

“முன்னாள் போராளிகளின் வாழ்க்கை நிலை தற்போது எவ்வாறு உள்ளது?”


“முன்னாள் போராளிகள் அதுவும் முக்கியப் பொறுப்புகளில் இருந்த போராளிகள் இன்று, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் சிக்கல், காய்ச்சல் என்று திடீர் திடீரென இறந்துபோகிறார்கள். பேருந்துக்காகக் காத்திருக்கும் வேளையில், பிள்ளைக்குப் பால் கொடுத்துக் கொண்டிரு க்கும்போதுகூட செத்திருக்கிறார்கள். தமிழினி அக்காவுக்குப் புற்றுநோய் இருக்கிறது என்பது அவர் சாவதற்குச் சில நாள்களுக்கு முன்புதான் தெரியவந்திருக்கிறது. என்னிடம் சில புத்தகங்கள் கேட்டு முகவரி அனுப்பியிருந்தார். அந்த முகவரியில் அவரின் இறப்புக்குத்தான் போக முடிந்தது. தமிழினி அக்காவின் மரண சடங்குக்குச் சென்றபோது, முன்னாள் போராளி ஒருவர் இறந்த தகவல் வந்தது. இவை குறித்து, இலங்கை அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன், முன்னாள் போராளிகள் சாட்சியங்கள் வழங்கி யிருக்கிறார்கள். ‘எவ்வளவோ பாரங்களைச் சுமந்த எங்களால், இன்று சின்ன பாரத்தையும் சுமக்க இயலவில்லை. தன்னையே கொண்டு நடக்க முடியவில்லை. எங்களின் தெளிவுகள் இல்லாமல் பல ஊசிகள், மருந்துகள் உடம்பில் செலுத்தப்பட்டன. அவற்றில் எதிர்காலத்தில் சிக்கல் கொடுக்கக்கூடியவை கலந்திருக்கலாம். அதுபோன்ற மருந்துகள் உணவிலும் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம்’ என்றும் கூறியிருக்கின்றனர். எந்தப் பலனும் இல்லை. முன்னாள் போராளிகள் திடீரெனச் சாவது, மற்ற முன்னாள் போராளிகளுக்கு உளவியல் சிக்கல்களைக் கொடுக்கிறது. மேலும், இலங்கை ராணுவத்திடம் முன்னாள் போராளிகளின் பட்டியல் இருக்கிறது. அவர்கள் சமூகம், அரசியல் சார்ந்து செயல்பட்டால், கருத்து தெரிவித்தால் அதுகுறித்து ராணுவத்திடம் விளக்கம் கொடுக்க வேண்டும். அவர்கள் மீதான விசாரணை நேரடியாக இருக்காது. முன்னாள் போராளி ஒருவரை விசாரணைக்கு என்று அழைப்பார்கள். காலையில் செல்பவரை மாலை மூன்று மணி வரை காத்திருக்கச் செய்வார்கள். பின் அழைத்து, வழமையான சில கேள்விகள் கேட்டுவிட்டு அனுப்பி வைப்பார்கள். விசாரணையை விட, காலையிலிருந்து மூன்று மணி நேரம் காத்திருக்கும் வாதைதான் உளவியல் ரீதியாகச் சித்ரவதைக்குள்ளாக்கும்.

போராளிகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. நான் ஏதாவது எழுதினால், என்னிடம் நேரடியாக விசாரிக்க மாட்டார்கள். அப்படிக் கேட்டால் உரிய பதிலைச் சொல்லிவிடலாம். ஆனால், அக்கம் பக்கத்தில்தான் விசாரிப்பார்கள். அது நம்மை உளவியல் ரீதியாக ரொம்பவே தொந்தரவு செய்யும். என்னுடைய ‘நடுகல்’ நாவலைப் பற்றி முகநூலில்தான் பதிவு போட்டிருந்தேன். அடுத்த நாள் காலையில், நான் பணிபுரியும் பாடசாலை அதிபரிடம் அது என்ன புத்தகம்? எழுதியவரின் வயதென்ன? என்று ராணுவ கேம்பிலிருந்து விசாரணை வருகிறது.

முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத்துக்குப் பெரும் பிரச்னைகள். கோழி வளர்க்கப் பணம் கொடுப்பார்கள். கோழி வளர்த்து மட்டுமே ஒரு குடும்பம் எப்படி வாழ முடியும். போராளிகள் சரணடைந்து, அவர்களுக்குப் பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதால், அவர்களுக்கு நிரந்தரமான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். நிறைய முன்னாள் போராளிகள் இயல்பான வாழ்க்கைக்கே கஷ்டப்படுகின்றனர். எனக்கு அப்பா இல்லை. அம்மா கூலி வேலைக்குப் போவார். நான் கல்வி கற்க, அப்போது உதவிய போராளிகள் இன்றைக்கு, அவர்களின் பிள்ளைகளின் படிப்புக்காகக் கையேந்தும் நிலையில் இருப்பதைப் பார்க்கையில் வேதனையாக இருக்கிறது.”

“2009-க்குப் பிறகு விடுதலைப் புலிகள்?”

“முள்ளிவாய்க்காலில் ‘ஆயுதங்களை மௌனிக்கிறோம்’ என்று தலைவர் பிரபாகரன் சொன்னதிலிருந்து புலிகளின் ஆயுதச் செயற்பாடு நிறுத்தப்பட்டுவிட்டது. 2009-க்குப் பிறகு, பல தடவை ‘விடுதலைப் புலிகள் மீளெழும்ப முயற்சி’ என்று ஆள்களைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றினர். அதன்மூலம், அங்கிருக்கும் மக்களை ராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருந்து, அரசியல் கட்டமைப்புகளை மறுப்பதே நடந்துவருகிறது. சர்வதேச அழுத்தம் வரும்போதெல்லாம், இந்த நாடகங்கள் நடக்கும். ஆனால், புலிகள் இயக்கத்தில் ஒழுக்கம் முக்கியமானது. ஆயுதம் மௌனிப்பு என்றால் மௌனிப்புதான். இங்கு நடந்த இனப்படுகொலையை உலக நாடுகளில் எடுத்துரைப்பதற்கு, புலம்பெயர் நாடுகளில் ஜனநாயக ரீதியான ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அது அவசியம். ஏனென்றால், தமிழர்களை அழித்த அரசுக்கு எதிராக, சர்வதேசக் கட்டமைப்பிடம் குரல் கொடுக்க வேண்டுமே!”

“2009-க்குப் பிறகான ஈழத்து வாழ்க்கை இலக்கியத்தில் பதிவாகவில்லை என்ற கருத்து நிலவுகிறதே?”


“இப்போது இலங்கையின் சூழல் மாறியிருக்கிறது. ஆனால், நான் போர் நடந்துகொண்டிருந்த வேளையிலும் அச்சுறுத்தலைக் கண்டுகொள்ளாதுதான் கவிதைகள் எழுதினேன். ஏனென்றால், எங்களுடைய வாழ்க்கையை, எங்களின் நிலத்தில் வாழ்வதைப்போலவே எங்களுக்கான கவிதைகளையும் எழுத வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் பாதுகாப்பான நாட்டைத் தேடியோ, சூழலைத் தேடியோ செல்லப்போவதில்லை. அப்படிச் செல்லும் வாழ்க்கையில் என்னைப் பொறுத்தவரை அர்த்தம் இல்லையென்று நினைக்கிறேன். என்னுடைய ‘நடுகல்’ நாவல் தொடங்குவதே 2010-ல்தான். ஆண்டுக்கணக்கில் முன்னும் பின்னுமாகச் செல்லும் கதை. 2009-க்குப் பிறகான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. அவை தமிழகத்தில் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. வெற்றிச்செல்வி, தமிழ்நதி படைப்புகளிலும் பதிவாகியுள்ளன. நான் இன்னும் நிறைய கதைகளில் இங்குள்ள மனிதர்களைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்”