``மோனே தினேஷா... ஞான் உடுத்துத் துணி எடுக்க மறந்துபோயி, எடுத்துக் கொடுக்கு...’’ - தாழிடப்பட்ட தகரக் கதவின் பின்னாலிருந்து குட்டியம்மை கத்தினாள்.

``அம்மே எத்ர தரம் பரஞ்சு, ஞான் மோன் அல்ல மோளான்னு.’’

``சரி மோளே தினேஷா. எடுத்துக் கொடுக்கு.’’

``ஜூலின்னு விளி அம்மே.’’

உடுத்துத் துணிகளைப் பற்றிக்கொண்டு வந்து, குளியலறையின் தகரக் கதவின் மேல் சாத்தினாள்.

``உள்பாவாடை எத்ர நஞ்சிபோயி… அம்மே, என்னோடத போட்டுக்கோ.’’

``வேண்டாம் மோனே...’’

சிறிது இடைவெளி விட்டு விட்டு ஒவ்வோர் உடையாய் குட்டியம்மை குளியலறைக்குள் இழுத்துக்கொண்டிருந்தாள். ஜூலி, வெளிர்பச்சையில் கறுப்புக் கரை வைத்த வேஷ்டியையும், ஆண்கள் அணிவது மாதிரியான சிறு சட்டையையும் உடல் இறுக்கமாய் அணிந்திருந்தாள்.

முழுக்க சவரம் செய்த முகம். நெற்றியில் திருத்தமாய் சிறு பூஜ்ஜியத்தில் சிவந்த நிறப் பொட்டு.
பெண்ணின் நளினமும், ஆணின் இறுக்கமான உடலும் கூடித் தெரிந்தாள்.

ஒற்றை அறை மட்டும் இருக்கும் சிவந்த ஓடுகள் பரப்பிய வீடு அது. எர்ணாகுளத்தின் புறவெளிப் பகுதியில் இருந்தது. வீட்டின் கொல்லையில் ஆறேழு தென்னைகளும், ஒரு பலாமரமும் நின்றிருந்தன.

பலாமரத்தின் உடலெங்கிலும் பலாப்பழங்கள் வெவ்வேறு அளவுகளில் நிறைய தொங்கிக்கொண்டிருந்தன.

உடலில் துணியைச் சுற்றிக்கொண்டு, குட்டியம்மை குளியலறைக் கதவைத் திறந்தாள். அம்மாவின் உடலெங்கிலும் சந்தன சோப்பின் வாசம். அம்மாவின் ஈரமான கையை எடுத்து ஜூலி தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள். ``ம்... நல்ல தணுப்பு!’’ சிறுவயதிலிருந்து ஜூலிக்கு எப்போதும் குளித்து முடித்த கையிலிருக்கும் குளுமை பிடிக்கும்.

குட்டியம்மைக்கு ஐம்பதை நெருக்கிய வயது. சரீரமும் சாரீரமும் மெலிந்து ஏனோபோல் இருப்பாள். வழக்கமான நிறம் வெளுத்த மலையாளப் பெண்களைப்போல் இல்லாமல், கொஞ்சம் கறுப்பு. அதனால், நிறையபேர் அவளை `பாண்டிச்சி’ என்று கிண்டல் செய்வார்கள்.

பலாமரத்திலிருந்து தொப்பென கனிந்த பலா ஒன்று தரையில் விழுந்து, தன் வயிற்றைப் பிளந்து காட்டியது. இருவரும் திரும்பி, மரத்தைப் பார்த்தார்கள்.

``ம்... நல்ல சக்க வாசம்.’’

வாசம் எழுந்து கொல்லை முழுக்கச் சுற்றி வந்தது.

இருவரும் வீட்டின் உள்ளே போனார்கள்.

அந்தச் சிறிய வீடு, சுத்தமாய்த் துலக்கிவிட்டதுபோல் இருந்தது. ``அம்மே, அச்சன் இப்போ ஜீவிச்சிருந்தால் அச்சனுக்கு என்ன வயசிருக்கும்?’’

``கழிஞ்ச வருஷத்தோடு, 49. கொஞ்சம் வெளிய இரு. புடவைய கட்டிக்குறேன்.’’

வீட்டின் பின்பக்கம் வந்து நின்றாள். `அம்மைக்கு, இன்னும் மனதுக்குள் தன்னை ஒரு பெண்ணாக ஏற்க முடியவில்லைபோல!’ என நினைத்துக்கொண்டாள்.

ஜூலிக்கு 23 வயதாகிறது. பள்ளியில் பதினொன்றாவது படிக்கையில் உடலிலும் நடவடிக்கையிலும் நிறைய மாற்றங்கள். எங்கிருந்தோ எல்லா விஷயங்களிலும் பெண்தன்மை சுரந்து வந்தது.

வருகைப் பதிவேட்டில் `தினேஷன்’ என்று பெயர் இருந்தது. உடன் படிக்கும் மாணவர்கள், கீச்சுக்குரலையும் பெண் நடையையும் கேலி பேசியதால், பதினொன்றுக்குமேல் `படிக்கச் செல்ல மாட்டேன்!’ எனப் பிடிவாதமாக இருந்துவிட்டாள். உடன் படிக்கும் மாணவனுக்குக் காதல் கடிதம் எழுதி, அறிவியல் ஆசிரியர் எட்வினிடம் மாட்டிக்கொண்டதும் முக்கியக் காரணம்தான்.

வகுப்பறையில் அவர் கடிதத்தை வேறு ஒருவனிடம் கொடுத்து எல்லோர் முன்னிலையிலும் உரக்கக் குரலெடுத்து வாசித்துக்காட்டச் சொன்னார். `என் பிரிய உண்ணிக்கு...’ எனத் தொடங்கி, `எப்போதும் உன் நினைவுகளோடு - உன் ஜூலி’ என முடிந்தது. அன்று முழுக்க அந்தப் பெயரை வகுப்பறையின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து யாராவது கத்திக் கத்தி அழைத்துச் சிரித்து ஓய்ந்தார்கள்.

அப்போதெல்லாம் ஜூலியின் தந்தை சோமன் உயிருடன் இருந்தார். சோமன், மிகவும் பயந்த சுபாவம்கொண்ட மனிதர். எர்ணாகுளம் முழுக்க கால் நடையாய் நடந்து, லாட்டரி டிக்கெட் விற்பனை செய்துகொண்டிருந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் வீட்டுக்குள் சென்றாள்.

``ஏன் அம்மே, அச்சனும் நீயும் சேர்ந்து ஸ்டூடியோக்குப் போயி ஒருமிச்சு ஒரு போட்டோகூட எட்டுதில்லே அம்மே?’’

``தாஸ் ஸ்டூடியோல ஒருக்கா எடுத்தோம். அது பழைய வீட்ல ஆத்து வெள்ளத்தோடு போயி மோளே.’’

குட்டியம்மை, பழைய தகரப் பெட்டியிலிருந்து பெரிய வெள்ளை கவர் ஒன்றை எடுத்துப் பிரித்தாள்.

அதில் நான்கைந்து எக்ஸ்ரே படங்கள் இருந்தன.

சோமனை கார்க்காரர்கள் விபத்து ஏற்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது எடுத்தது. தலை தனியாய், நெஞ்சுக்கூடு தனியாய், வலதுகால் தனியாய் அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்திருந்தார்கள்.

சோமனுக்கு ஒரு புகைப்படம்கூட இல்லாததால், அம்மா அந்த எக்ஸ்ரேக்களை இப்படித்தான் வரிசையாய் சுவரில் சாய்த்து வைப்பாள்.

கழிந்த நான்கு வருடங்கள் சோமனின் நினைவுநாளில் வைத்த சந்தனப்பொட்டு, மண்டையோட்டு எக்ஸ்ரேவில் காய்ந்து ஒட்டிக்கொண்டிருந்தது. குட்டியம்மை, அதைச் சுரண்டிவிட்டு புதிதாகக் குழைத்து நீவினாள். பிறகு, பித்தளை விளக்கின் திரிநாவை ஏற்றிவைத்து, சோமனை வணங்கி சிறிது நேரம் அழுது தீர்த்தார்கள். பிறகு, குட்டியம்மை அகன்ற வாழை இலையில் பெரிய பருக்கையாக இருக்கும் அரிசியில் சாதம் வடித்து, அம்பாரமாய்க் குமித்து அதில் மீன்குழம்பை ஊற்றினாள்.

``அயில மீன்குழம்பா?’’

``ம்...’’

இருவரும் அமர்ந்து உண்டார்கள். மீனின் வால் துண்டை மென்றபடி ஜூலி கேட்டாள், ``அம்மே, மீன் மட்டும் ஏன் மற்ற இறைச்சிபோல் இல்லாமல் வாசமாயிருக்கிறது?’’

``அது பொறந்ததிலிருந்தே தண்ணிக்குள்ளேயே கிடந்து தன்னைத்தானே கழுவிக்கிட்டே இருக்குல்ல அதான்.’’

சோமன் இறந்த பிறகு, பலரும் குட்டியம்மையை பயமுறுத்தினார்கள்... `இந்த மாதிரிப் பையன்கள் திடீரென ஒருநாள் இரவு கிளம்பி மும்பைக்கு ரயிலேறிப் போய், பிறகு ஏழெட்டு வருஷம் கழிஞ்சி பெண்ணாய்த் திரும்பி வருவார்கள்’ என்று.

ஜூலி தவிர தனக்குத் துணை என எவருமில்லை என்பதால், குட்டியம்மை பெரிதும் பயந்தாள்.

பல நாள் இரவு உறக்கம்கொள்ளாமல் இருந்தாள். ஓர் இரவு முழுக்க காணாமல்போய் காலையில் திரும்ப வந்த ஜூலியிடம், பாதத்தில் விழுந்து அழுதுதீர்த்தாள்.

``நான் சம்பாரிச்சி உனக்கு ஆபரேஷன் பண்ணிவைக்கிறேன். என்னைவிட்டு எங்கயும் போயிடாத...’’

``அம்மே, உன்னைவிட்டு நான் எங்கயும் ரயிலேற மாட்டேன்’’ - சத்தியம் செய்துகொடுத்தாள்.

உண்டு முடித்த பிறகு, குட்டியம்மை லாட்டரிச் சீட்டு விற்கக் கிளம்பினாள்.

நகுலன், துபாயிலிருந்து விடுப்பு எடுத்து சங்கரன்கோவிலுக்கு வருவதாக, கழிந்த வாரம் அம்மாவுக்குப் போன் செய்து சொன்னான். கோமதி, அப்போது சலித்துக்கொண்டாள்.

``ஊருக்கு வந்து போய் இன்னும் வருஷம் திரும்பல. அடிக்கடி வந்துபோனால், பண விரயம் எவ்வளவு ஆகும்?!’’

நகுலன் எவ்வளவோ எடுத்துச் சொன்னான், ``இதுல ஒத்தப் பைசா எனக்குச் செலவில்லை. அறை நண்பன்தான் வந்து திரும்ப டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறான்.

அவன் திருமணத்துக்குக் கட்டாயம் வந்துடணும்னு சொல்லிட்டான். மறுத்துச் சொல்ல முடியலை.’’

எவ்வளவு சொல்லியும் கோமதி சமாதானம் அடையவில்லை. ``விடுப்பு நாளின் சம்பளம் போய்விடுமே…’’ என்று புலம்பிவிட்டு வைத்தாள்.

`கல்யாணத்துக்குத் தயாராய் தங்கை இருக்கிறாள் என்ற பொறுப்புணர்வு கொஞ்சமாவது இருக்கிறதா...

அப்பன் இல்லாம நான் வளர்க்கப் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்’ - சீலைத்தலைப்பில் மூக்கைச் சிந்தி, பாத்திரங்களை கனத்த சத்தம் வரும்படியாய் உருட்டிப் புரட்டிப் புலம்பிக்கொண்டிருந்தாள்.

ஒருகாலத்தில் நகுலனின் அப்பா, சங்கரன்கோவில் பஜாரில் சாப்பாட்டுக் கடை வைத்திருந்தார்.

சாதாரண `ஒட்டு சாப்’ கடைதான். கடையின் நெற்றியில் ஊதா நிறத் தகர போர்டில் வெள்ளை பெயின்டால் `ஆஞ்சநேய விலாஸ்’ என எழுதியிருக்கும். நல்ல ஓட்டம். இப்போது குடியிருக்கும் வீடுகூட அந்த ஓட்டத்தில் வாங்கியதுதான்.

ஆனால், அவர் சீக்கிரமாகவே இறந்துவிட்டார். நகுலன் அப்போது நான்காவது படித்துக்கொண்டிருந்தான்.

ரஞ்சி, ஒன்றாவது படித்துக்கொண்டிருந்தாள். கடையைக் காலிசெய்துவிட்டு, கோமதி வீட்டிலேயே மெஸ் நடத்தினாள். அநாவசியச் செலவு என ஒன்றுமில்லை. பிள்ளைகள் நன்றாகப் படித்தார்கள்.

நகுலன், சிறுவயதிலிருந்தே கடையில் எல்லா எடுபிடி வேலைகளும் செய்வான் என்றாலும், கோமதி `பொறுப்பு போதவில்லை’ எனப் புலம்புவாள். இப்போது வரை அப்படித்தான்.

ஒரு வாரம் கழிந்து, சங்கரன்கோவிலுக்கு இன்று காலை நகுலன் வந்து சேர்ந்தான். வாசனைத் திரவியங்கள், கொஞ்சம் பேரீச்சை, அரபு எழுத்துகள் பதிக்கப்பட்ட அட்டை டப்பாவுக்குள்ளிருந்து ரஞ்சிக்குப் புதிய போன். அவ்வளவுதான். வேறு ஏதும் வாங்கினால், `அநாவசியம்’ என்று அம்மா திட்டுவாள். இரண்டு வேளை உணவு விழுங்கி, மதியம் கொஞ்ச நேரம் உறங்கி விழித்து...

வந்த நாளின் இரவே கிளம்பி எர்ணாகுளத்துக்கு வண்டி ஏறினான்.

முதன்முறையாகக் கேரளத்துக்கு வருகிறான். இந்த 30 வருடத்தில் ஒருமுறைகூட சுற்றுலாவுக்கும் பொழுது கழிக்கவும் அவன் எங்கேயும் போனதில்லை. அம்மா அனுமதித்ததுமில்லை.

பள்ளியில் படிக்கும் காலங்களில் அருகில் இருக்கும் அணைக்கட்டுக்குச் சுற்றுலா அழைத்துப் போவார்கள்.

சொற்பமான தொகைதான் என்றாலும், அம்மா அதற்கும்கூட மறுத்துவிடுவாள்.

எர்ணாகுளத்தில் திருமண மண்டபத்தின் அருகிலேயே மூன்று நாள் தங்க, சையதலி நல்ல அறை எடுத்துக் கொடுத்திருந்தான்.

`மஸ்தான் சாகிபு வீட்டுத் திருமணம்’ என்று வீதி முழுக்க மலையாளத்தில் போஸ்டரும் பேனரும் வைத்திருந்தார்கள். நிக்காஹ் நடக்கும் மண்டபம் இருக்கும் தெரு முழுக்க,உயர்ந்த விலை வெளிநாட்டுக்கார்கள் வரிசைகட்டி நின்றன. நிறுத்த இடம் இல்லாமல், சில கார்களை அருகே இருக்கும் மைதானத்துக்கு திசை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள்.

உள்ளே போய் மண்டபத்தில் இருந்த சையதலிக்குக் கை கொடுத்து, கட்டிப்பிடித்துக்கொண்டான்.

தன்னோடு ஒரே அறையில் இருக்கையில் சையதலி எவ்வளவு சாதாரணமானவனாக, எளிய மனிதனாகத் தெரிந்தான். இவ்வளவு பணம் படைத்தவனா… இப்போது சையதலியின் ஆகிருதி, நகுலனின் கண்முன்னே பெரிதாக விரிந்துகொண்டே வந்தது.

குட்டியம்மை, வழக்கமாய் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கும் இடத்துக்கு டவுன்பஸ்ஸில் வந்து சேர்ந்தாள். சிறிய மழை பெய்து முடிந்திருந்ததால், சாலையில் கொஞ்சமாய் ஈரம் இருந்தது.

தார் சாலை, பெரிய கறுப்பு நாவைப்போல வெயிலின் துணையோடு ஈரத்தைக் குடித்து உலர்ந்துகொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கி எப்போதும்போல் முத்தச்சன் கடையில் ஒரு சுலைமானி டீ.
முத்தச்சன் டீ போட்டபடியே ``இன்று ஏன் இவ்வளவு தாமதம்?’’ என விசாரித்தார்.

``சோமனோட மரித்த தினம்’’ என்று சொல்லிவிட்டு, டீயை எடுத்துப் பருகினாள்.

டீக்கடையின் மரபெஞ்சில் அமர்ந்திருந்த ஒருவர், குட்டியம்மையின் கையில் இருக்கும் லாட்டரிக் கத்தையை உருவினார். சட்டெனத் திரும்பி யார் எனப் பார்த்தாள். அடையாளம் கண்டுகொண்டு சிரித்தபடியே, ``ஆரு... ஜோசப் யேட்டனா. நோக்கு… திருவோணம் பம்பர் மொத ப்ரைஸ் எண்பது லட்சம்!’’

ஜோசப் யேட்டன் தனது ராசியான எண்களைத் துழாவி இரண்டு சீட்டுகளை உருவிக்கொண்டு 60 ரூபாய் கொடுத்தார்.

``குட்டியம்மே டீக்குக் காசுகொடுக்க வேண்டா, ஞான் கொடுத்து.’’

மிகச் சிறிய நன்றியோடு அவரைப் பார்த்தாள்.

கடையிலிருந்து அவர் கிளம்பும்போது ``ரேஷன் கார்டிலும் ஆதார் கார்டிலும் ஜூலியின் பேர மாத்தியோ?’’ என்று கேட்டார்.

``ரெண்டு வருஷமா அலையுறேன். கவர்ன்மென்ட் ஆபீஸருங்க மாத்த மாட்டேங்குறாங்க. தினேஷன் பேர ஜூலின்னுகூட மாத்திப்பாங்களாம். ஆனா, ஆணுன்னுதான் போட்டுத் தருவாங்களாம். `பாலினம் பெண்’ணுன்னு போட்டுத் தர மாட்டாங்களாம். அவள நேர்ல பார்த்துட்டுச் சொல்லிட்டாங்க.’’

``எனக்குத் தெரிஞ்ச கம்யூனிஸ்ட் பார்ட்டிக்காரர் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட சொல்லி முடிச்சுக் குடுக்கச் சொல்றேன்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

குட்டியம்மை, இப்போது ஜோசப் யேட்டனை அளவில் பெரிய நன்றியுடன் பார்த்தாள்.

திருமணம் முடிந்த மறுநாள், ஊரைச் சுற்றிப் பார்க்க எனக் கிளம்பி நகுலன் மட்டஞ்சேரிக்கு வந்தான்.

மட்டஞ்சேரி அரண்மனை, 16-ம் நூற்றாண்டில் சுண்ணாம்பும் இரும்பு மாதிரியான கறுப்புக்கட்டியும் சேர்த்து, பழைய நாலுக்கெட்டு மாடலில் கட்டியது. உள்ளே முட்டையின் வழுவழுப்பான வெள்ளைக்கருப் பூச்சுமானம், வெளிப்பகுதி முழுக்க மஞ்சள் நிறம் விரவியிருந்தார்கள்.

மழை பெய்து முடிந்திருந்ததால் அரண்மனையின் வெளிச்சுவர் ஈரம் படிந்திருந்தது. குளிக்கையில் பாத்திரத்தில் மொண்டு முதல் தண்ணீரை உடம்பில் ஊற்றியதும் முழு உடலும் நனையாமல் கொஞ்சம் மட்டும் நனைந்திருப்பதைப்போல் இருந்தது அரண்மனைச் சுவர்.

டூரிஸ்டுகளாக அங்கே வரப் போக இருப்பவர்களிடம் திருவோணம் பம்பர் லாட்டரியை வாங்கிக்கொள்ளுமாறு குட்டியம்மை நீட்டிக்கொண்டிருந்தாள். ஓரிரு ஆண்கள் வாங்கிக்கொண்டார்கள். அந்தப் பக்கமாய் வந்துகொண்டிருந்த நகுலனிடமும் நீட்டினாள்.

நகுலன் சங்கரன்கோவிலில் பள்ளி சென்றுகொண்டிருந்த காலங்களில், லாட்டரி டிக்கெட்டுகளையும் லாட்டரி விற்பவர்களையும் பார்த்திருக்கிறான். அவன் அப்பாவின் சட்டைப்பையில்கூட எப்போதாவது லாட்டரி டிக்கெட்டுகள் மடிந்து கிடக்கும். சட்டைப்பையில் காசு எடுக்கும்போது பார்த்திருக்கிறான்.

தமிழ்நாட்டில் பல வருடம் முன்பே லாட்டரியைத் தடைசெய்துவிட்டார்கள். லாட்டரி என்பது, அவன் நினைவிலிருந்து அழிந்தே பல வருடங்களாகிவிட்டன.

குட்டியம்மையிடம் நான்கு டிக்கெட்டுகளை விலை கொடுத்து வாங்கிக்கொண்டான்.

பரிசை மனத்தில்கொள்ளாமல் ஒரு சேகரிப்புப் பொருளைப்போல் வாங்கிக்கொண்டான்.

ஏனோ காரணமில்லாமல் அவனுக்கு பழைய ரேடியோவின் சித்திரம் நினைவுக்கு வந்து அடங்கியது.

இரண்டு வாரம் கழிந்து ஒருநாள் காலையில், குட்டியம்மை வீட்டுக்கு வெளியே தனது பைக்கில் நின்றபடி ஜோசப் யேட்டன் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார். யாரும் வராததால் வண்டியிலிருந்து இறங்கி ``குட்டியம்மே... குட்டியம்மே..!’’ என்று குரல் கொடுத்தபடியே வீட்டுக்குள் நுழைந்தார்.

வீட்டின் உள்ளே ஜூலி பெரிய சத்தத்தோடு பாடல் ஒன்றை டிவி-யில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

``ஜூலி, குட்டியம்மே எவ்விடயானு?’’

``அவ்விட புறத்தே உண்டு ஜோசப் யேட்டா’’ - கொல்லையை நோக்கிக் கை காட்டினாள்.

கொல்லையில் குட்டியம்மை தென்னம் மட்டைகளை அரிவாளால் துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தாள். சத்தம் கேட்டு நிமிர்ந்து, ஜோசப் யேட்டனைப் பார்த்தாள்.

``குட்டியம்மே, பம்பர் ரிசல்ட் வந்து... 783296 நம்பருக்கு ரெண்டாம் பரிசு. ஐம்பது லட்சம். என்கிட்ட 92 இருக்கு. நிச்சயம் அது நீ வித்த சீட்டுதான்.’’

ஜோசப் யேட்டன் கையில் இருக்கும் பேப்பரைப் பிடுங்கி எண்களைச் சரிபார்த்தாள். பிறகு, வீட்டுக்குள் வேகமாக ஓடிப்போய் தான் லாட்டரி வாங்கிய ரசீது இருக்கிறதா எனப் பரபரப்பாய்த் தேடி எடுத்தாள்.

குட்டியம்மைக்கு சந்தோஷம் தாளவில்லை. சந்தோஷத்தில் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஜூலியைக் கட்டித் தழுவிக்கொண்டாள்.

மீண்டும் மீண்டும் சரிபார்த்தாள். ``மோளே, பகவதி நம்ம ரெண்டு பேருக்கும் கண்ணத் திறந்துட்டா... கண்ணத் திறந்துட்டா. உனக்கு ஆபரேஷன் பண்ணிடலாம் மோளே. உனக்கு நல்ல உடை வாங்கலாம்.’’

ஜூலியும் அழுதாள்.

``ஜோசப் யேட்டா, டீ தரவா?’’

மூவரும் டீ குடித்தார்கள். ``உனக்கு கமிஷன் எவ்வளவு கிட்டும் குட்டியம்மே?’’

``எப்படியும் அஞ்சரைலேருந்து ஆறு லட்சம் வாய்ப்பிருக்கு. சொர்ணபூமி கடையில மோகன் சேட்டன்கிட்ட கேட்டா, சரியா சொல்லிடுவாரு.’’

``யாருக்கு வித்தோம்னு நினைவிருக்கா?’’

``தெரியலயே... முத்தச்சன் கடைக்கு வர்ற யாருக்காவதுதான் வாய்ப்பிருக்கும். முத்தச்சனுக்கும்கூட ரெண்டு வித்தேன். டூரிஸ்டுக்கு ரெண்டோ, மூணோ செட்டு வித்தேன்.’’

``ம்... கிளம்பி முத்தச்சன் கடைக்குப் போலாமா?’’ என்று ஜோசப் யேட்டன் கேட்டார்.

மூன்று பேரும் ஒரே பைக்கிலேயே முத்தச்சன் கடைக்குக் கிளம்பினார்கள். வழியெல்லாம் சந்தோஷமும் சிரிப்புச் சத்தமுமாகத்தான் இருந்தது. தாமரைக் குளக்கரை சாஸ்தா கோயிலைக் கடக்கையில் வண்டியை நிறுத்தச் சொல்லி உள்ளே போய் குட்டியம்மையும் ஜூலியும் விளக்கு போட்டு வேண்டிவிட்டு வந்தார்கள்.

முத்தச்சன் கடைக்கு வந்து சேரும் முன்பே கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விஷயம் தெரிந்திருந்தது. முத்தச்சன், தனக்கு அதிர்ஷ்டம் ஓர் எண்ணில் போய்விட்டது என்று அங்கலாயித்துக்கொண்டார். ``எப்படியும் நாளைக் காலைக்குள் பரிசு விழுந்தவர் உன்னைப் பார்க்கவோ அல்லது பரிசுச் சீட்டு அலுவலகத்தை விசாரித்தோ போய்விடுவார். நாளை மாலைக்குள் உனக்கும் சில லட்சம் கமிஷன் தொகை கிட்டிவிடும்’’ என்று வாடிக்கையாளர் ஒருவர் உற்சாகமூட்டினார்.

நெடுநேரம் டீக்கடையிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு குட்டியம்மையும் ஜூலியும் ஆட்டோ பிடித்துக் கிளம்பினார்கள்.

``அக்பர் ஹோட்டலில் பரோட்டாவும் இறைச்சியும் சாப்பிடலாமா?’’ என்று குட்டியம்மை கேட்டாள்.

``அம்மே, சாப்பிட்டுட்டு ஒரு சினிமா காணப் போலாமா?’’ என்று ஜூலி கேட்டாள்.

சினிமாவுக்குப் போய்விட்டு இரவு நெடுநேரத்துக்குப் பிறகு ஆட்டோவில் வீடு வந்து இறங்கினார்கள்.

ஒரு வாரம் ஆகிவிட்டது. தினமும் பரிசுச் சீட்டு அலுவலகத்துக்கு வந்து விசாரித்துவிட்டுச் செல்கிறாள்.

இன்னும் யாரும் லாட்டரிச் சீட்டைக் கொடுத்துப் பரிசுத்தொகையை வாங்கிக்கொள்ள முன்வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். சீட்டை உரியவர் வந்து மாற்றினால்தான் இவளுக்கும் கமிஷன்தொகை கிட்டும். குட்டியம்மையும் யாருக்கு விற்றோம் என நினைவுக்குக் கொண்டுவர முயன்று முயன்று தோற்றுப்போனாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு `கமிஷன்தொகை கைவிட்டுப் போய்விடுமோ!’ என பயம் வரத் தொடங்கியது.

ஒரு வாரம், இரண்டு மாதங்களாகிவிட்டன. கை வரை வந்து வாய்க்கு எட்டாத அந்தத் தொகையை நினைத்து, ஏங்கி உடல் சிதிலமடைந்தாள்.

சரியாக உணவுகூட எடுத்துக்கொள்வதில்லை. வாரத்தின் சில நாள்கள் டிக்கெட் விற்கவும் போவதில்லை. வீட்டுக்குள்ளேயே புலம்பியபடி முடங்கிக் கிடந்தாள். கையில் இருந்த சிறிய சேமிப்புத்தொகையும் கரைந்துபோக, மறுநாள் காலையில் கிளம்பி ஜூலி லாட்டரி விற்கப் போனாள்.

போனவள் இரவு நெடுநேரம் கழித்து உடம்பெல்லாம் காயத்தோடு வீடு திரும்பினாள். நான்கைந்து பேர் அவளைக் கிண்டல்செய்து வம்புக்கிழுத்து அழுந்த அடித்திருக்கிறார்கள். குட்டியம்மை, கதறி அழுதுவிட்டாள்.

``நீ எங்கயும் போக வேண்டாம் மோளே. நான் இனி ஒழுங்கா டிக்கெட் விற்கப் போகிறேன். என்னால்தான் உனக்கு இப்படி ஆனது. இனி அந்தப் பணத்தைப் பற்றி நினைக்க மாட்டேன்’’ - ஜூலியிடம் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

``அதெல்லாம் இல்ல அம்மே... ஒண்ணுமில்ல... நீ கரையண்டாம்...’’ குட்டியம்மையின் கண்களைத் துடைத்துவிட்டு அவளைக் கட்டிக்கொண்டாள்.

ஐந்து மாதம் கழிந்துவிட்டது. குட்டியம்மையால் இன்னும் அந்தத் தொகையை மறக்க முடியவில்லை. முத்தச்சன் கடையில் அமர்ந்தபடி ஜூலியை நினைத்துப் புலம்பிக்கொண்டிருப்பாள்.

``குட்டியம்மே, நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். கேரள சர்க்கார் சீக்கிரமே இந்த மாதிரி பிள்ளைகளுக்கு இலவச ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணப்போகுதாம்.’’

ஜோசப் யேட்டன் தகவல் சொன்னதும் உள்ளபடியே குட்டியம்மை சந்தோஷப்பட்டாள். அதை என்னவென்று தீவிரமாய் விசாரிக்கச் சொன்னாள்.

ஜோசப் யேட்டன் கேட்டார், ``அந்த லாட்டரிச் சீட்டை மாற்றி பணம் வாங்க இன்னும் எவ்வளவு நாள் அவகாசம் இருக்கு?’’

``இன்னும் மூணு வாரம் அவகாசமிருக்கு யேட்டா.’’

``கடைசியா ஒரு முயற்சி பண்ணலாமா?’’

என்னவென்று கேட்பதுபோல் குட்டியம்மை நிமிர்ந்து பார்த்தாள்.

``நாம ஏன் பேப்பர்ல ஒரு விளம்பரம் கொடுக்கக் கூடாது... `இந்த நம்பர்கொண்ட லாட்டரி வைத்திருப்பவர்கள் உடனே தொடர்புகொள்ளவும்’னு?’’

``செலவு பிடிக்குமே.’’

``அத நான் பாத்துக்குறேன். தொகை வந்ததும் திருப்பிக் குடு.’’

சட்டென உலகம் நம்பிக்கையும் வெளிச்சமும்கொண்டதாக மாறிவிட்டது குட்டியம்மைக்கு.

``ஜோசப் யேட்டா, அந்த விளம்பரத்துல உன் நம்பரையும் போடு. என் நம்பர் ஒருவேளை கிடைக்காட்டி உனக்குக் கூப்பிடுவாங்கல்ல.’’

``சரி.’’

மலையாள மனோரமாவிலும் மாத்ருபூமியிலும் விளம்பரம் கொடுத்தார்கள். ஜோசப்பின் பத்திரிகை நண்பன் ஒருவன் அதற்கு உதவி செய்தான்.

ஒரு வார காலமாய் போனை எப்போதும் பார்த்துக்கொண்டே இருந்தாள். குளிக்கையில்கூட போன் சத்தமிடுவதைப்போல உணர்ந்து ஓடிவந்தாள். அடிக்கடி போன் செய்து ஜோசப் யேட்டனிடமும் விசாரித்தாள்.

துபாயில் சையதலியின் வீட்டுக்குப் பல மாதம் கழித்து நகுலன் சென்றான். சையதலியின் மனைவி கர்ப்பமடைந்திருப்பதால் அவளின் குடும்பத்தினர் அவளை அருகில் வைத்து கவனித்துக்கொள்ள எர்ணாகுளத்துக்கு விமானம் ஏற்றி அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். கழிந்த வாரம் சையதலியின் மாமனார் தன் மகளை அழைத்துச் செல்ல வந்திருந்தபோது கையில் எடுத்து வந்திருந்த தினசரியில் இப்படி ஒரு விளம்பரம் வந்திருப்பதை சையதலி காட்டினான்.

அப்போதுதான் நகுலனுக்கு தான் வாங்கிய லாட்டரியின் ஞாபகம் வந்து பர்ஸைத் திறந்து லாட்டரியைத் தேடி எடுத்தான். இருவரும் பரிசு விழுந்த எண்ணைச் சரிபார்த்தார்கள். நகுலனுக்கு நம்ப முடியவில்லை .

சையதலி, எர்ணாகுளத்துக்கு குட்டியம்மையின் எண்ணுக்குப் போன் செய்தான். மறுபுறமிருந்து குட்டியம்மை அழுதேவிட்டாள். லாட்டரியோடு உடனே கிளம்பி வரும்படி கெஞ்சினாள்.

நகுலனால் தனக்குப் பரிசு விழுந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. அம்மாவுக்கு போன் செய்து சொன்னான். அம்மா, மிகுந்த சந்தோஷத்தோடு இன்றே விடுப்பு எடுத்துக் கிளம்பி வரும்படி சொன்னாள்.

``நாளை அலுவலகம் போய்தான் விடுப்பு சொல்ல வேண்டும். போனிலெல்லாம் அனுமதி கேட்க முடியாது’’ என்று சொல்லிவிட்டான்.

குட்டியம்மை, அன்று மாலையும் ஜோசப் யேட்டனை விட்டு நகுலனின் எண்ணுக்கு கால் செய்தாள்.

``எப்போது கிளம்புகிறீர்கள்?’’

``நாளைதான் தெரியும்.’’

``இன்னும் ஐந்து நாள்தான் இருக்கிறது. அவகாசம் முடிஞ்சா பரிசுத்தொகைய தர மாட்டாங்க. குட்டியம்மைக்கும் கமிஷன் பணம் கிடைக்காது. கட்டாயம் வந்திருவீங்களா?’’

``நிச்சயமா வந்திருவேன்...’’

மறுநாள் காலை மேலதிகாரி கண்டிப்புடன் மறுத்துவிட்டார். ``இந்தியாவுக்குப் போய் ஐந்து மாதம்தான் ஆகிறது. இப்போதைக்கு விடுப்பு தர முடியாது.’’

``வேலையை விட்டுப் போய்க்கொள்கிறேன் சார்.’’

``அப்படியென்றாலும் மூன்று மாதம் `நோட்டீஸ் பீரியடு’ முடிந்துதான் இங்கிருந்து கிளம்ப முடியும்.’’

குட்டியம்மை, சையதலி எண்ணுக்கும் நகுலனின் எண்ணுக்கும் மாற்றி மாற்றி போன் செய்துகொண்டே இருந்தாள்.

சங்கரன்கோவிலிலிருந்து அம்மாவும் போன் செய்தாள். யார் அழைப்பையும் எடுக்கவில்லை.

தவறவிட்ட 10, 20 அழைப்புகளுக்குப் பிறகு, குட்டியம்மைக்கு நகுலன் அழைத்துப் பேசினான்.

``விடுப்பு கிடைக்கல.’’

``ய்... யோ பகவதி... இன்னும் நாலு நாள்தான் இருக்கு. ஏதாவது பண்ணுங்களேன்.’’

``ம்... சாயந்திரம் கூப்பிடுறேன்’’ போனை கட்செய்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு குட்டியம்மை மீண்டும் போன் செய்து ஒரு யோசனை சொன்னாள். ``எனக்கு அந்த லாட்டரியை கூரியர் செய்துவிட முடியுமா? நான் உங்களுக்கு தொகையை மாற்றி சத்தியமாகத் தந்துவிடுகிறேன்.’’

``ம்’’

குட்டியம்மை முகவரி கொடுத்தாள்.

``கூரியர் எத்தனை நாளுல வந்து சேரும்?’’

``ரெண்டு நாளாவது ஆகும்.’’

``கூரியர் தொகையைக்கூட நான் குடுத்திடுறேன்.’’

``அதெல்லாம் வேண்டாம்.’’

அம்மாவிடம் சொன்னான்.

அம்மா, குட்டியம்மையின் முகவரிக்கு அனுப்புவதற்கு மறுத்துவிட்டாள். ``யாரையும் நம்ப முடியாது. வேண்டுமானால், சையதலியின் வீட்டுக்கு அனுப்பி அவர்களை மாற்றிக் கொடுக்கச் சொல்.

அவர்கள் கொஞ்சம் செல்வாக்கானவர்கள். அவர்களை நம்பலாம்.’’

சையதலியிடம் உதவி கேட்டான். தன் அப்பாவுக்கு இதிலெல்லாம் அனுபவமில்லை. அவர் இதுமாதிரி பரிசுச் சீட்டுகளைக் கண்டால் கிழித்தோ எரித்தோ போட்டுவிடுவார்.

மார்க்கத்தை உடும்புப்பிடியாகக் கட்டிக்கொண்டு திரிபவர். அதனால் பீடி கம்பெனி வைத்திருக்கும் தன் சித்தப்பா சுலைமானுக்குவேண்டுமானால் அனுப்பிவிடலாம் என்று யோசனை சொன்னான். நகுலனுக்கு இது சரியென்றே பட்டது. அவரிடம் போனில் தகவலைச் சொல்லிவிட்டு கூரியர் அனுப்பிவிட்டார்கள்.

குட்டியம்மை, அதற்குள் ஜோசப் யேட்டன் மூலமாகப் பரிசுச்சீட்டு அலுவலகத்தில் யாரையோ பழக்கம் பிடித்துவைத்திருந்தாள். ``கடைசித் தேதியின் 4 மணிக்குள் சீட்டு வந்துவிட்டால், நிச்சயம் பணத்தை வாங்கித் தந்துவிடுகிறேன்’’ என்று அவர் உறுதி அளித்திருந்தார்.

கூரியர் விவரத்தைக் குட்டியம்மைக்கும் போனில் அழைத்துச் சொல்லிவிட்டார்கள். குட்டியம்மை சுலைமானின் வீட்டு முகவரி, அவரின் தொடர்பு எண், வீட்டின் தொலைபேசி எண், அவர் எழுந்திருக்கும் நேரம், அவர் தொழுகைக்குச் செல்லும் நேரம், அவர் கம்பெனி இருக்கும் முகவரி என அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தாள்.

கடைசி நாளின் காலையில் ஜோசப் யேட்டனை போனில் அழைத்து, 9 மணிக்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி சொன்னாள்.

முத்தச்சன் கடைக்கு வந்து அமர்ந்திருந்தார்கள். கூரியர் வந்து சேர்ந்ததும் சுலைமான் கடையிலிருந்து அழைப்பதாகச் சொல்லியி ருந்தார்கள். மதியம் வரை காத்திருந்தார்கள்.

1 மணிக்கு மேலாகியும் போன் வரவில்லை என்பதால், ஜோசப் யேட்டனை விட்டு சையதலிக்கு போன் செய்தார்கள். இன்னும் அங்கு கூரியர் வந்து சேரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இருவரும் கிளம்பி கூரியர் ஆபீஸுக்குப் போனார்கள். அங்கு காலை 11 மணிக்கெல்லாம் டெலிவரி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். கூரியர் பையனை அடையாளம் கண்டு எந்த வீட்டில் டெலிவரி செய்தாய் என அடையாளம் காட்டச் சொன்னார்கள். அவன் பீடி கம்பெனி சுலைமான் வீட்டை விட்டு, அடுத்த தெருவில் இருக்கும் வேறொரு சுலைமானின் வீட்டை அடையாளம் காட்டினான்.

பதறி அந்த வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் ``கொஞ்ச நேரம் முன்புதான் சுலைமானுக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை. அடி பொறுக்காமல் மனைவி ரயிலடி நோக்கி ஓடியதால், அவரும் பின்னாடியே போனார். இன்னும் வரவில்லை’’ என்றார்கள்.

அவரின் தொடர்பு எண்ணும் அங்கு யாரிடமும் இல்லை.

குட்டியம்மை, அந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள். கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள். தனது வாழ்வைப் பிரகாசமாக்கும் அந்த கவரைத் தேடி அந்த வீடு முழுக்க அவளின் கண்கள் சுழன்றன.

சட்டென ஓரிடத்தில் அவளின் பார்வை கூர்மையாகி உன்னிப்பாக மீண்டும் மீண்டும் பாய்ந்தது.

அதுவேதான். சாப்பாட்டு உணவுமேசையின் மீது பிரிக்கப்படாமல் அந்த கவர் இருக்கிறது.

``ஜோசப் யேட்டா... தோ அங்கே இருக்கிறது.’’

ஜோசப் யேட்டனும் வந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். ``கதவை உடைத்துத் திறந்துவிடலாமா?’’

என்று கேட்டாள். ஜோசப் யேட்டன் மறுத்து தலையை மட்டும் ஆட்டியபடி இறுக்கமானார்.

``என்னாச்சி ஜோசப் யேட்டா?’’ சுவரில் தொங்கும் கடிகாரத்தை நோக்கி விரலைக் காட்டினார். அதில் மணி 4.20 எனக் காட்டியது.

குட்டியம்மையின் முகமும் சட்டென இறுக்கமாகியது. கண்ணாடி ஜன்னலின் வழியே உறைந்த கண்களால் குட்டியம்மை நெடுநேரம் அந்தக் கவரைப் பார்த்தபடி இருந்தாள்.

மௌனமாய் அவள் கண்களிலிருந்து நீர் கயிறுபோல் வந்துகொண்டேயிருந்தது.

ஓவியங்கள்: ஜெய சூர்யா