Published:Updated:

தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!
பிரீமியம் ஸ்டோரி
தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

நாணயம் புக் செல்ஃப்

தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

நாணயம் புக் செல்ஃப்

Published:Updated:
தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!
பிரீமியம் ஸ்டோரி
தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

நாளை மறுநாள் செய்துமுடித்தால் போதும் எனும் காரியத்தினைக்கூட, நாளை வரை தள்ளிப்போடாதீர்கள் என்ற பொன்மொழியுடன் ஆரம்பிக்கிறது பியர்ஸ் ஸ்டீல் என்பவர் எழுதிய ‘தி ப்ரொக்ராஸ்டினேஷன் ஈக்யுவேஷன்’ எனும் புத்தகம். தள்ளிப்போடுவதைத் தவிர்த்து நடக்கவேண்டியவற்றை உடனடியாக நடத்துவது எப்படி என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.  

தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

ஆதிகால எகிப்து நாட்டிலிருந்து இன்றைய நியூயார்க் சிட்டி வரை, புற்றுநோய் சிகிச்சைக்கான வார்டிலிருந்து பங்குச் சந்தை டிரேடிங் வரை தள்ளிப் போடுதல் என்பதன் சிக்கல்களை உணர்த்துகிறது இந்தப் புத்தகம்.

நாம் ஒரு காரியத்தைக் கையோடு செய்துமுடிக்காமல் தள்ளிப்போடுகிறோம். தள்ளிப்போடுவதினால் என்ன விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இதைச் சரிசெய்ய என்ன ஸ்ட்ராட்டஜிகளை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

முதலில், தள்ளிப்போடுதல் (Procrastination) என்றால் என்ன என்று பார்ப்போம். தள்ளிப்போடுதல் என்பது வெறுமனே தாமதப்படுத்துவது என்ற அர்த்தம் மட்டுமே கொண்ட ஒரு வார்த்தையல்ல. தள்ளிப் போடுவதால் நாம் நம்முடைய முன்னேற்றத்திற்குக் குந்தகம் விளைவிக்கிற விஷயத்தைச் செய்கிறோம் என்ற அர்த்தமும் இந்த வார்த்தையின் உள்ளே அடங்கியுள்ளது.

தள்ளிப்போடும் நபருடைய குணாதிசயங்கள் என்னென்ன என்று கேட்பீர்கள். தள்ளிப்போடுதல் குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்ப்போம். இதுகுறித்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களில் 95 சதவிகிதத்தினர், ‘‘ஆமாம், நான் பல காரியங்களை உடனுக்குடன் செய்யாமல் தள்ளிப்போடத்தான் செய்கிறேன்’’ என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவே செய்கின்றனர். இதில் 25 சதவிகிதத்தினர், ‘‘இது ஒரு நீடித்த நாள்பட்ட நோய்போல் ஆகிவிட்டது’’ என்கின்றனர். இதைவிட காமெடியான ஒரு விஷயம், பெரும்பான்மையானவர்கள் தங்களுடைய தனிப்பட்ட இலக்குகளாக வைத்திருக்கும் விஷயங்களில், தள்ளிப்போடுவதை நிறுத்துதல் என்பதுதான் முதலாவது இலக்காக இருக்கிறது என்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

எடுத்த காரியத்தை முழுமையாகவும் கச்சிதமாகவும் செய்துமுடிக்க நினைக்கும் பர்ஃபெக்‌ஷனிஸ்ட்களுக்கே உரித்தானது இந்த தள்ளிப்போடும் குணம் என்ற தவறான கருத்தொன்று மக்களிடத்தில் இருக்கிறது. அது உண்மையல்ல. எந்தக் காரியத்தையும் கன கச்சிதமாக செய்துமுடிக்கவேண்டுமென்று நினைப்பதனாலேயே தள்ளிப்போடுகிறீர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளது உலகம். இது கொஞ்சம் நம்பும்படியும் இருப்பதால், பெரும்பாலானோர் இதை நம்பியும்விடுகின்றனர்.

ஆனால், நிஜத்தில் பர்ஃபெக்‌ஷனிஸ்ட் என்பவர் ஒரு நாளும் தள்ளிப்போடுவதில்லை. பர்ஃபெக்‌ஷனிஸ்ட் தள்ளிப்போடும் குணத்தைக் கொண்டுவிட்டாரென்றால், அதைவிட்டு வெளி யேறுவதற்கான முயற்சிகளை (சிலசமயம் பிணி நீக்கும் வல்லுநர்களைக் கலந்தாலோசித்துகூட) எடுத்து அதைச் சரிசெய்து விடுவார். பர்ஃபெக்‌ஷனிஸ்ட் அல்லாதவர்களே இந்தத் தீராப் பிணியிலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கின்றனர்.

எந்தவொரு காரியத்திலும் மனிதர்கள் முடிவெடுப்பது இரண்டு விஷயங்களை உள்ளடக்கித்தான்  என்கின்றனர் பொருளாதார ஆராய்ச்சியாளர்கள். தனக்கு எவ்வளவு கிடைக்கும் (மதிப்பு), எந்த அளவுக்கு உறுதியாகக் கிடைக்கும் என்ற இரண்டு விஷயங்களே அவை. ‘உறுதி குறித்த எதிர்பார்ப்பு x மதிப்பு’ என்ற இரண்டையும் பெருக்கிவரும் விஷயமே மனிதர்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுக்கும் காரணியாக இருக்கிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

நாம் தள்ளிப்போடுதல் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். தள்ளிப்போடுதல் ஊக்கம் சார்ந்த ஒன்று. ஒருவர் எப்போது ஒரு செயலை ஊக்கத்துடன் செய்கிறார்? ஊக்கம் அதிகமாக இருந்தால் தள்ளிப்போடுதல் என்பது இருக்காது இல்லையா? எனவே, வெறுமனே பொருளாதார ரீதியான கணக்கான ‘உறுதி குறித்த எதிர்பார்ப்பு x மதிப்பு’ என்ற ஃபார்முலா நமக்கு உதவாது.

அதேசமயம், பிஹேவியரல் எக்கனாமிஸ்ட்கள் இதில் இன்னுமொரு விஷயத்தைச் சேர்த்தார்கள். ஒரு செயலைச் செய்வதனால் கிடைக்கும் பலன் எவ்வளவு காலதாமதமாகக் கிடைக்கும் என்பதுதான் அது. இப்போது இந்த ஃபார்முலாவை பார்ப்போம். 

தள்ளிப்போடும் பழக்கம்... தவிர்க்கும் சூட்சுமம்!

[(உறுதி குறித்த எதிர்பார்ப்பு x மதிப்பு)/எவ்வளவு நாள் கழித்து தாமதமாக அதன் பலன் கிடைக்கும்] 

இந்த ஃபார்முலாவில் எவ்வளவு நாள் கழித்து பலன்கிடைக்கும் என்பதனால், ‘உறுதி குறித்த எதிர்பார்ப்பு x மதிப்பு’ என்றவற்றை வகுக்கிறோம். இதில் தாமதத்தின் அளவு பெரிதாகப் பெரிதாக (அதைக் கொண்டு வகுக்கப்படுவதால்) அந்தச் செயலைச் செய்வதில் இருக்கும் ஊக்கத்தின் அளவு கணிசமாகக் குறைகிறது.

இதனுடன் ஃபார்முலா முடிந்துவிடுகிறதா என்றால், அதுதான் இல்லை. தாமதம் என்பதைப் புரிந்துகொண்டு, அதனால் வகுத்துவிடுவதுடன் முடிவதில்லை இந்த விஷயம். தாமதத்திற்கு நீங்கள் தனிமனிதனாக எந்த அளவுக்கு சென்சிட்டிவ்வாக இருக்கிறீர்கள் என்பதும் ஒரு முக்கிய காரணி யாகிறது. புரிய வில்லையா..? ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

நீங்கள் ஒரு பந்தயத்தில் 1,000 ரூபாய் ஜெயித்து பையில் காசு வைத்துள்ளீர்கள். நான் உங்களிடம் ‘‘அந்த ஆயிரம் ரூபாயைக் கொடுங்கள், ஒரு வருடம் கழித்து உங்களுக்குத் தருகிறேன். காசோலை தருகிறேன். நீங்கள் தேதியிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பணத்துக்கு கேரன்டி தர ஆள் இருக்கிறது, உங்களுக்கு ஒரு வருடம் கழித்து எவ்வளவு வேண்டும்?’’ என்று கேட்டால், உங்கள் விடை என்னவாக இருக்கும். பலரும் 2,000 முதல் 3,000 வரை உள்ள ஏதாவது ஒரு தொகைக்கே ஒப்புக் கொள்வீர்கள் (இதுதான் ஆய்வின் முடிவில் வெளிவந்த உண்மை).

ஆயிரம் ரூபாய் எப்படி ஒரு வருடத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ஆகும்? முதலீட்டுக் கணக்கு உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்பதைத்தானே இது காட்டுகிறது? அதிக பணம் என்ற உணர்ச்சி வசப்படும் நபராக நீங்கள் இருந்தால், தள்ளிப்போடத் துணிந்துவிடுவீர்கள் என்றுதானே அர்த்தம்! எனவே, இந்த உணர்ச்சிவசப்படுதலையும் இந்த ஃபார்முலாவில் சேர்க்கத்தான் வேண்டும், இல்லையா? இப்போது இந்த ஃபார்முலாவை பாருங்கள்.

[{உறுதி குறித்த எதிர்பார்ப்பு x மதிப்பு) / (உணர்ச்சிவயப்படுதல் x தாமதம்)]

இந்த ஃபார்முலா எண்ணத்திற்கும் நடவடிக்கைக்கும் உள்ள இடைவெளியைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு காரியம் முடிக்கப் பட வேண்டிய நாள் தள்ளிப்போகும்போது அந்த விஷயத்தைச் செய்ய நாம் ஆரம்பிக்கும் நாளும் அதிகமாகத் தள்ளிபோகவே செய்கிறது. அதனாலேயே நீண்ட நாள்கள் தள்ளி காலக்கெடு இருக்கும் ஒரு விஷயம் குறித்து நாம் கவலைப் படுவதேயில்லை.

காலக்கெடு வெகு அருகில் வந்தபின்னாலேயே அரக்கப் பரக்க அந்த வேலையைச் செய்து முடிக்கிறோம். என்னதான் நான் முயற்சி செய்தாலும், எப்படியோ தள்ளிப்போட்டு விடுகிறேன் என்பதே பெரும்பாலானோர் சொல்லும் பதிலாக இருக்கிறது. இதுவும் ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே இருக்கும் பூதாகரமான இடைவெளியையே காட்டுகிறது.

தள்ளிப்போடுதல் என்பதற்கு உதாரண புருஷனாக கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களைச் சொல்லலாம். அவர்களுக்கு உள்ள நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி வேலையை அவர்கள் தள்ளிப்போட்டே செய்கின்றனர். கல்லூரிகளின் செட்டப் அப்படியிருக்கிறது. இளைஞர்கள், உணர்ச்சி வசப்படுபவர்களின் கூட்டமாக இருப்பதால், தள்ளிப்போடுதல் என்பது அங்கே உரம் போட்டு வளர்க்கப்படுகிறது என்கிறார் ஆசிரியர்.

எல்லாவற்றையும் தள்ளிப்போடுபவர்கள் அதற்குக் கொடுக்கும் விலை மற்றும் இந்த ஃபார்முலாவில் இருக்கும் ஒவ்வொரு விஷயம் குறித்தும் சூப்பரான விளக்கங்களுடன் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

தள்ளிப்போடுதல் குறித்த பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து உதாரணங்களுடன் விளக்கியுள்ள ஆசிரியர், இறுதியில் தள்ளிப்போடுவதிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு வொர்க் புக்கையும் கொடுத்துள்ளார்.

எளிமையான நடை, உதாரணங்கள், உபயோகமான வொர்க் புக் என அனைத்தும் ஒருங்கே தரப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தினை தள்ளிப்போடும் குணம்கொண்ட அனைவரும் படித்துப் பலன்பெறலாம்.   
 
 -நாணயம் டீம்