நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்!

நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்!

நாணயம் புக் செல்ஃப்

வ்வொருவருக்குமே வாழ்க்கையில் உச்சபட்ச வெற்றியைத் தொட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அந்த ஆசையை எல்லோராலும் அடைந்துவிட  முடிவதில்லை. நிச்சயமற்ற சூழ்நிலைகளை           (Uncertainty) எதிர்கொள்வதில் யாரெல்லாம் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களே  வாழ்க்கையில் உச்சபட்ச வெற்றியை எட்டிப் பிடிக்கிறார்கள். 

நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்!

உச்சபட்ச வெற்றியைப் பெறுவதற்காக நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்வது எப்படி என்ற சூட்சுமங்களைச் சொல்லித் தருகிறது ஜோனத்தன் ஃபீல்ட்ஸ் என்பவர் எழுதிய ‘அன்செர்ட்டினிட்டி’ என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தில் முதலில் வெற்றியாளரின் குணங்களைச் சொல்கிறார் ஆசிரியர்.

வெற்றியாளரின் குணங்கள்

“மிகப் பெரிய வெற்றியைப் பெற நினைப்பவர்கள் நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கும் குணம் கொண்டவர்கள். ரிஸ்க் எடுப்பவர்களாகவும், எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிந்தவர்களாகவும் இருப்பவர்கள் அவர்கள். பயம், கவலை, பதற்றம் என்ற எதுவுமே இல்லாமல் இருப்பவர்களே தொடர் வெற்றிகளைச் சந்திக்கின்றனர்.

எவ்வளவு குழப்பங்கள் சூழ்ந்து வந்தாலும்,   அதிலிருந்து விடுபட்டுத் தெளிந்த மனதுடன் வாழத் தெரிந்துகொள்கிறவர்களே நிச்சயமற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளத் தகுதியானவர்கள். ஆனால், குழப்பமான சூழலில் தெளிந்த மனநிலை என்பது பலருக்கும் கொஞ்சம் கடினம்தான்” என்கிறார் ஆசிரியர்.

“வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பயத்தை விலக்கி, அதையே வெற்றிக்கான விதையாக மாற்றும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்களா, வெற்றி பெற்றவர்கள் அனைவருக்குமே இந்தக் குணம் பிறவியிலேயே இருக்கிறதா, இந்தக் குணாதிசயம் நமக்குத் தேவை என்பதை உணர்ந்து அவற்றை  வளர்த்துக்கொள்ள முடியுமா, இந்த விஷயங்களை ஒருவர் சொல்லித் தந்து மற்றொருவர் கற்றுக்கொள்ள முடியுமா” எனப் பல கேள்விகளை எழுப்பும் ஆசிரியர், அவற்றுக்கான விளக்கத்தை  இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கிறார்.

“நிச்சயமற்ற நிலை என்பது ஒவ்வொருவரின் மூளை, மனது மற்றும் தைரியம் என்ற மூன்றை நோக்கியே தாக்குதலைத் தொடுக்கிறது. புதிய விஷயங்களைச் செய்ய நினைப்பவர்கள் பலரும், பின்வாங்கிவிடுவது இந்தத் தாக்குதலால்தான். 

நிச்சயமற்ற நிலை, ரிஸ்க் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் என்ற மூன்றையும் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் மட்டுமே இந்தத் தாக்குதலைச் சமாளித்து, வெற்றியை நோக்கி நகர்கிறார்கள்” எனச் சொல்லும் ஆசிரியர்,  திட்டமிட்ட நடவடிக்கைகள்மூலம் நிச்சயமற்ற நிலையை எப்படி எதிர்கொள்வது, என்னென்ன செயல்திட்டங்கள் அதற்குத் தேவை என்பதை விளக்கமாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார்.

பெரிய வெற்றி எப்போது?

நெருக்கடி உருவாகும்போதுதான், அதிலிருந்து எப்படி வெளிவருவது எனப் பல கோணங்களில் நாம் சிந்திக்கிறோம். நிச்சயமற்ற சூழல் வரும்போது தான் தேடல் என்பதே உருவாகிறது. ஒரு மனிதன் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும் துணிச்சலையும் உபயோகித்து புதிதாக ஒரு விஷயத்தை உருவாக்குகிறான் என்றால், அது நிச்சயமற்ற சூழலில்தான். ஏனென்றால், நிச்சயமான ஒரு விஷயம் இருந்தால், அதில்  முயற்சிகள்  பெரிதாக இருக்காது என்பதே நிஜம். 

நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்!

‘இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும்’ என்று தெளிவாக இருந்தால், அதை ஏற்கெனவே பலபேர் செய்து முடித்திருப்பார்கள். ‘என்ன நடக்கும், விளைவுகள் எவ்வளவு பெரிதாக இருக்கும், எப்படி முடியும் என்பது தெரியாத  நிச்சயமற்ற விஷயங்களிலேயே சாதனைகள் நடத்தப்படுகின்றன. எனவேதான், நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் வித்தகர்கள் பெரிய வெற்றியை அடைகிறார்கள்.

உதாரணமாக, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு ஸ்டார்ட்அப்பின் நிறுவனருக்கு மகிழ்ச்சியான நாள் எது?   முதலீட்டாளர்கள் அந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்யும் நாள் தானே! எது நடக்கும், எப்படி நடக்கும் எனப் பல நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொண்ட நிறுவனர், ‘இந்த விஷயம் ஜெயிக்கும்; நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்; பணமும் தருகிறோம்’ என்று முதலீட்டாளர்கள் சொல்லும் நாளில் கிட்டத்தட்ட நிச்சயமான நிலைக்கு வந்துவிடு கிறார்.

ஆரம்பத்தில், பூதாகரமாக இருந்த நிச்சயமற்ற நிலையானது, முதலீட்டாளர்கள் பணம் போடும் சூழலில் கொஞ்சம் நிச்சயமான நிலைக்கும், அதன்பின்னால் செய்யப்படும் வேலைகளைத் தாண்டி தயாரிப்போ/சேவையோ சந்தையில் வழங்கப்பட்டு லாபம் பார்க்கும்போது, முழுக்க முழுக்க நிச்சயமான நிலைக்கும் வந்துவிடுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

“பல்வேறு படிநிலைகளில் செயல்பட்டு, ரிஸ்க் மற்றும் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு நிறுவனர் செயல்படுகிறபோதுதான்,  நிச்சயமான நிலையைச் சென்றடைகிறார். அதற்குப் பிறகும் நிச்சயமான நிலை என்பது திடமாக இருக்குமா என்றால், அதுதான் இல்லை. எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடியதுதான் அது. எனவே, நிச்சயமற்ற நிலை என்பது எல்லாக் கால கட்டத்திலும் தொடர்ந்து இருப்பதே’’ என்கிறார் ஆசிரியர்.

மனப்பக்குவமே முக்கியம்

“வெற்றி பெற விரும்பு பவர் கள் நிச்சயமற்ற நிலையையும், ரிஸ்க் மற்றும் எதிர்மறை விமர்சனங்களையும் சகித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும். நிலையற்ற தன்மை யிலிருந்து நிலையான தன்மையை நோக்கி வேகமாகச் சென்றுவிட வேண்டும் என்று நாம் அனைவரும் முயற்சி செய்வ தாலேயே நாம் தவறுகள் பலவற்றையும் செய்கிறோம்.

நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் சூட்சுமங்கள்!

முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது,    நிச்சயமற்ற தன்மை எல்லோரையுமே கவிழ்த்துப் போட்டு விடுவ தில்லை. இதைத் துவம்சம் செய்து வெற்றி பெற்றவர்கள் பலருடைய கதையையும் நாம் கேட்கவே செய்கிறோம். ‘அவருக்கு வொர்க் அவுட் ஆச்சு; நமக்கு ஆகுமா’ என்று கேட்டுக் கொள் கிறோம். மிக அரிதாகவே இது அதிர்ஷ்டத்தின் காரணமாக நடக்கிறது. வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் நிச்சய மற்ற தன்மையை முழுமையாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் படிப்படியாக பெற்றவர் களாகவே இருக்கின்றனர்” எனச் சொல்கிறார் ஆசிரியர்.

இன்னும் சில வழிகள்

நிச்சயமற்ற சூழலில் முடிவெடுத்தல், எதிர்மறை விமர்சனம் மற்றும் பின்னூட்டம் போன்றவற்றைக் கையாளும் திறமையை வெற்றிபெறத் துடிப்பவர்கள் வளர்த்துக்கொண்டே ஆகவேண்டும். மாற்றவேண்டிய எல்லாவற்றையும் மாற்றிவிட்டாலும், நம்முடைய மூளைக்கு நிச்சயமற்ற சூழ்நிலையில் செயல்படுவதற்கான பயிற்சியை நாம் கட்டாயம் கொடுக்கவேண்டும். 

பிரச்னைகள் உச்சத்தில் இருக்கும்போது சட்டென  அதை நிறுத்திவிட்டு, மற்ற விஷயங்களில் கொஞ்சம் ஈடுபட்டு, பின்னர் புதிதாகப் பிரச்னைகளை எதிர்கொள்ள ஆரம்பித்தால், புத்தம்புது ஐடியாக்கள்மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். நிச்சயமற்ற தன்மையை நிலையான தன்மையாக மாற்ற முடியும்” என்கிறார் ஆசிரியர்.

அனுபவமே வாழ்க்கை

“இந்த முயற்சியில் பெரிய பிரச்னை என்னவென்றால், நம் செயல்பாடு பூஜ்யம் என்ற நிலைக்குச் சென்றுவிடுமோ என்று பயப்படுவதுதான். செய்யும் காரியத்தில் இருக்கும் நிலையற்ற தன்மையின் வீரியத்தினால் இருப்பதை யெல்லாம் இழந்து, பூஜ்யம் என்ற நிலைக்குச் சென்றுவிடவும் வாய்ப்புள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இருப்பினும், பூஜ்யம் என்ற நிலைக்குச் (பணம், அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றை முழுமையாக இழந்துநிற்பது) செல்வதைவிடக் கொடுமை யானது, நாம் பூஜ்யம் எனும் நிலைக்குச் சென்று விடுவோமோ என்று எல்லா காரியத்தையும் சொதப்புவது” என்கிறார் ஆசிரியர். ஒருபோதும் ‘எல்லாவற்றையும் இழந்து விட்டால்...’ என்ற யோசனையை முன்வைத்துச் செயல்படக்கூடாது’ என்று வாதிடுகிறார் ஆசிரியர்.

“நிலையற்ற தன்மை என்பதை முற்றிலுமாக களைந்த பிறகுதான், நான் வெற்றிக்கான செயலில் இறங்குவேன் என்று கிளம்பாதீர்கள். அப்படி நினைத்தால், பல காரியங்களைச் செய்யத் தொடங்காமலே வாழ்க்கை முடிந்துவிடும்’’ என்று சொல்லும் ஆசிரியர், “வாழ்க்கை என்பதே ஒரு அனுபவம்தான் என்ற கருத்தை மறக்காமல், நிலையற்ற தன்மையைக் கையாளக் கற்றுக் கொண்டு வெற்றி பெறுங்கள்” என்று முடிக்கிறார்.

முன்னேறத் துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது எனலாம்!

- நாணயம் விகடன் டீம்