பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

படிப்பறை

ந்திய வரலாறு, இந்திய தத்துவவியல், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்ப்பதிப்பு வரலாறு ஆகியவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை பொ.வேல்சாமியின் கட்டுரைகள். தமிழ் அறிவுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர்களில் ஒருவரான பொ.வேல்சாமி, ஆய்வு மாணவர்கள் மட்டுமல்லாது சாதாரண வாசகர்களும் புரிந்து படித்து உள்வாங்கும் கட்டுரைகளை எழுதுவது மிகப்பெரிய எழுத்துத்தொண்டு. ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’, ‘கோவில்-நிலம்-சாதி’ என்னும் இரண்டு நூல்களைத் தொடர்ந்து பொ.வேல்சாமியின் மூன்றாவது நூலான ‘பொய்யும் வழுவும்’, தமிழில் மிக முக்கியமான நூல்.

படிப்பறை

நாமறியாத பல ஆச்சர்யமூட்டும் தகவல்களைத் தொகுத்து முன்வைப்பது, வரலாற்றைப் பலகோணங்களில் ஆராய்வது, விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் சான்றாதாரங்களுடன் உரையாடுவது ஆகியவை இவருடைய எழுத்துகளின் தனித்துவம். ‘அண்டப்புளுகும் அறிவியல் உண்மையும்’ கட்டுரை பிராமி எழுத்துகள், சிந்து சமவெளிக் குறியீடுகள், லெமுரியா கண்டம் ஆகியவை குறித்த கருத்துகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்கிறது. கி.பி.1837 வரை இந்தியர்கள் அசோக மன்னரைப் பற்றி அறிந்திருக்கவில்லை, ஜேம்ஸ் பிரின்சேப் என்ற ஆங்கிலேயர்தான் கல்வெட்டுகளைப் படித்து அசோகர் குறித்த உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது காடுவெட்டிச் சோழன் என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்க, 1900க்குப் பின்னர்தான் குல்ஸ் என்ற ஆங்கிலேயர் பெரிய கோயிலைக் கட்டியது ராஜராஜ சோழன் என்று நிறுவினார், வியாசர் எழுதிய நூலுக்குப் பெயர் ‘பாரதம்’ அல்ல, ஜெயம் என்று பல புதிய தகவல்கள் நமக்கு ஆச்சர்யமூட்டுபவை.

திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் நூல்களின் காலங்களை முன்னகர்த்திச் செல்லும் தமிழ்ப்பற்றாளர்களின் அதீத ஆர்வம், பழந்தமிழ் நூல்களின் காலத்தைப் பின்னகர்த்திச் சொல்லும் தமிழ் வெறுப்பாளர்களின் பாரபட்சம் - இவற்றுக்கிடையில் அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் மூலம் நூல்களின் காலத்தைக் கணக்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பொ.வே. ‘வடமொழி’ என்றாலே சம்ஸ்கிருதம் அல்ல, பாலி, பிராகிருதி போன்ற, பௌத்தர்களும் சமணர்களும் பயன்படுத்திய வடமொழிகள் தமிழோடு கொண்ட உறவையும் தமிழைச் செழுமைப்படுத்துவதற்கு அவற்றின் பங்களிப்பு குறித்தும் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் தமிழ்ப்புலவர் வரலாற்றை எழுதிய சைமன் காசிச்செட்டி, மளிகைக்கடை வைத்திருந்து, கடைக்கு வந்த தமிழாசிரியரின் நட்பினால் தமிழ் இலக்கியங்கள்மீது ஆர்வம் கொண்டு தமிழாராய்ச்சிகள் மேற்கொண்டு தலைமைத் தமிழாசிரியரான மளிகைக்கடை மகா வித்துவான் கோ.வடிவேலு செட்டியார் என்று அறியப்படாத பல ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை.

‘புதிய கோணங்களைத் தொட்டுச் செல்லும் கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதப்பட்டிருக்கலாமோ’ என்று தோன்றவைப்பது வேல்சாமி எழுத்துகளில் உள்ள குறை.
நாம் அறிந்த தகவல்கள், நம் அரசியல் சார்புகள், நம்முடைய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு அணுகவேண்டிய முக்கியமான நூல் இது.

பொய்யும் வழுவும் - பொ.வேல்சாமி
பக்கங்கள் : 176, 
விலை: 200
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 0ந்01.

- சுகுணா திவாகர்