Published:Updated:

நம்ம சட்டம் சரி வருமா? - பொள்ளாச்சி விவகாரத்தில் கொதிக்கும் பா.விஜய்

நம்ம சட்டம் சரி வருமா? - பொள்ளாச்சி விவகாரத்தில் கொதிக்கும் பா.விஜய்
நம்ம சட்டம் சரி வருமா? - பொள்ளாச்சி விவகாரத்தில் கொதிக்கும் பா.விஜய்

கடந்த சில தினங்களாக மொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒரு சம்பவம் பொள்ளாச்சி பாலியல் விவகாரம். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருந்தும் இவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்து வருகின்றனர்.

தொலைக்காட்சி, செய்தித் தாள்கள், சமூக வலைதளங்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் பொள்ளாச்சி விவகாரம் பற்றிச் செய்திகள்தான் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பொள்ளாச்சி விவகாரத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் பா.விஜய். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ``பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு சம்பவத்துக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். ஆயிரமாயிரம் பெண் தெய்வங்களை வணங்கி வழிப்படும் இந்த மண்ணில், கொங்கு மண்டலத்தில் இப்படிப்பட்ட பாதகச் செயல் நடந்திருப்பது நம்மை பதைக்கச் செய்கிறது. மீண்டும் நாம் அந்த மிருகங்கள் மீது குற்றங்கள் பதிவு செய்து, வழக்குத் தொடுத்து, நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று முறைப்படி விசாரித்து, சட்டப்படி அவர்களுக்குத் தண்டனை அளிக்காமல், அரபு நாடுகளில் செய்வது போல் அதே பொள்ளாச்சி மண்ணுக்கு அவர்களை இழுத்து வந்து நடு சாலையில் அனைவரும் பார்க்கும் படி அவர்களைத் தூக்கில் ஏற்றித் தண்டித்தால் மட்டுமே இப்படிப்பட்ட பாதகச் செயல் அடங்கும். 

இல்லையெனில் இன்னும் ஆயிரக்கணக்கான பெண்களை இவர்களைப் போன்ற அக்கிரம காரர்கள் அழித்துக்கொண்டு தான் இருப்பார்கள். முறைப்படி நாம் செய்ய வேண்டியதைத் தாண்டி இந்த முறையற்ற மனிதர்களை நாம் வேரறுக்க வேண்டும் என்பதை அனைத்து பொதுமக்கள் சார்பாக, நீதியின் முன்னாலும் காவல் துறை முன்னாலும் எனது கோரிக்கையாக முன்வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.