Published:Updated:

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!

பிரீமியம் ஸ்டோரி

மிழ் மக்களின் உணர்வுகளுடன் வம்பிழுக்க வேண்டும் என வாரந்தோறும் ஏதோ ஒரு பிரச்னையைக் கையில் எடுத்து சுழன்று கொண்டிருக்கிறார்கள் சிலர். அந்த வகையில், இந்த வாரம் பீட்டா வாரம்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!

சிவகங்கை மாவட்ட கிராமங்கள் சிலவற்றில், ‘முதல்வரிடம் நிதி உதவி வாங்கித் தருகிறேன்’ என்று பெண்களை மூளைச்சலவைச் செய்து, ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கியதுடன், ‘ஜல்லிக்கட்டு ஆபத்தான விளை யாட்டு’ என்ற ரீதியில் பேசவைத்து வீடியோவும் எடுத்துள்ளனர், பீட்டா அமைப்பினர். இந்தச் சம்பவம், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!சிவகங்கை மாவட்டம், சிங்கம் புணரி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்கள்… சதுர்வேதி மங்களம், காளாப்பூர், எம்.வைரவன் பட்டி ஆகியவை. இந்தக் கிராமங்களில்தான் பீட்டா அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், பெண்களை ஏமாற்றிக் கையெ ழுத்து வாங்கியிருப்பதாகச் சர்ச்சை எழுந்துள் ளது. இந்தச் சம்பவம் குறித்து, மாவட்ட ஆட்சிய ரிடம் புகார் அளித்திருக்கிறார்கள், தமிழ்நாடு வீர விளையாட்டுக் கூட்டமைப்பினர்.

சதுர்வேதி மங்களத்தைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரிடம் பேசினோம். “நான் வீட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தேன். அப்போ, ஒருத்தர் என்கிட்ட வந்து, ‘நான் தொண்டு நிறுவனத்திலிருந்து வர்றேன். உங்க கணவர் இறந்துட்டதால, உங்க ளுக்கு முதல்வர் நிவாரண நிதி வாங்கித் தர்றதுக்காக வந்திருக்கேன். நீங்க, ஜல்லிக்கட்டு ஆபத்தானது. இந்த விளையாட்டால் மனிதர்கள் இறந்துபோறாங்க. மாடுகள் துன்புறுத்தப்படுதுனு சொன்னாபோதும். அதை முதல்வர்கிட்ட காட்டி, உங்க குடும்பத்துக்கு நிவாரணம் வாங்கித் தர்றோம்’னு சொல்லி ஒரு பேப்பர்ல கையெழுத்து போடச் சொன்னார். நான், என் மகளை வரச் சொல்லி அதுல என்ன எழுதியிருக்குனு படிக்கச் சொன்னேன். அவதான் அதுல, ‘பீட்டானு போட்டிருக்கும்மா’னு சொன்னா. அதுக்குள்ள ஊர்ப் பசங்கள்லாம் வந்துட்டாங்க. அந்த ஆளைப் பிடிச்சு விசாரிச்சு, அவர் எடுத்த வீடியோவை எல்லாம் அழிக்கச் சொன்னாங்க. அப்புறம் அவரை போலீஸ்ல ஒப்படைச்சுட்டாங்க” என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த பெண்மணியான பூபதி, “எங்க வீட்டுக்கு முன்னாடிதான் காரை நிறுத்தினாங்க. யாருனு கேட்டதுக்கு, ‘நாங்க, பத்திரிகை நிருபருங்க. ஜல்லிக்கட்டு சம்பந்தமா செய்தி எடுக்க வந்திருக்கோம். சிவகங்கை மாவட்டத்தில்தான் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு விளையாட்டு ரொம்பத் தீவிரமாக நடக்குது. அதுக்கான மாடுகளையும் அதிக அளவுல வளர்க்குறாங்க. அதுபத்தி விசாரிச்சு எழுத வந்திருக்கோம்’னு சொன்னாங்க. ஆனா, தாயம்மாகிட்ட வேற மாதிரி சொல்லிக் கையெழுத்து வாங்கப் பார்த்தாங்க. மஞ்சு விரட்டுக்கு எதிராக வாக்குமூலம் வாங்கினா சும்மா இருப்போமா? எப்படியாவது ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ணும்னு பீட்டா துடிக்குது. அதுக்குத் தமிழர்கள் ஒரு போதும் துணைபோக மாட்டாங்க” என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி!

சதுர்வேதி மங்களத்தைச் சேர்ந்த மணிகண்டன், “பீட்டா அமைப்பைச் சேர்ந்த ஒருத்தர், ஊர் மக்கள்கிட்ட ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் கையெழுத்து வாங்கின விஷயம் தெரிஞ்சதுமே, ஊரே ஒண்ணு கூடிடுச்சு. அந்த ஆள்கிட்ட விசாரிச் சப்போ, மாத்திமாத்திப் பேசினார். அப்புறம்தான் அவர், பீட்டா அமைப்பைச் சேர்ந்தவர், அவர் பெயர் பிரகாஷ்னு தெரிஞ்சது. அவரை போலீஸ்ல ஒப்படைச்சுப் புகார் கொடுத்தோம். தமிழ்நாடு வீர விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பிலும் புகார்கொடுத்துருக்காங்க.

பீட்டா அமைப்பைச் சேர்ந்தவங்க, ‘சதுர்வேதி மங்களத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எங்க கேமராவைத் திருடிட்டாங்க’னு எங்க ஊர் இளைஞர்கள் மேல புகார் கொடுத்துருக்காங்க. அதை வெச்சுக்கிட்டு எங்களை மிரட்டிட்டு இருக்குறாங்க, போலீஸ்காரங்க. பீட்டா காட்டுற பணத்தாசைக்கு எல்லாம் நாங்க அடிபணிய மாட்டோம்” என்றார்.

தமிழ்நாடு வீரவிளையாட்டுக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செல்வகணபதியிடம் பேசினோம். “மத்திய அரசு, ‘மக்களின் மத உணர்வுகளிலும் அவர்களின் வழிபாட்டிலும் தலையிட மாட்டோம்’ என்று சொல்லியிருக் கிறது. பீட்டா போன்ற அமைப்பு களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் அடிபணியக் கூடாது. பீட்டா அமைப்புக்கு, இந்தியாவில் நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டும். ‘நிதியுதவி செய்கிறோம்’ என்று பொய் சொல்லி ஜல்லிக்கட்டுக்கு எதிராக வாக்குமூலம் பெற்றிருக்கும் பீட்டா அமைப்பின் நிர்வாகியான பிரகாஷ்மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பீட்டா அமைப்பு தொடர்பான பிரகாஷ், ‘‘நான் பீட்டாவுக்கு ஆதரவாக மக்களைத் திரட்டுவதற்காக வந்தேன். அதற்குள் மக்கள் சூழ்ந்துகொண்டார்கள். ஆனால், அவர்களால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பத்திரமாக போலீஸாரிடம் அனுப்பிவிட்டார்கள்’’ என வீடியோ பதிவாகக் கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்துத் திருப்பத்தூர் காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர் அண்ணாதுரையிடம் பேசினோம். “தமிழ்நாடு வீரவிளையாட்டுக் கூட்டமைப்பின் சார்பில் பீட்டா அமைப்பைச் சேர்ந்த பிரகாஷ்மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்மீதான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

- தெ.பாலமுருகன்

படங்கள்: சாய் தர்மராஜ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு