Published:Updated:

அப்போதே எச்சரித்தோம் யாரும் கண்டுகொள்ளவில்லை! - பொள்ளாச்சி விவகாரத்தில் கொதிக்கும் மாதர் சங்கம்

அப்போதே எச்சரித்தோம் யாரும் கண்டுகொள்ளவில்லை! - பொள்ளாச்சி விவகாரத்தில் கொதிக்கும் மாதர் சங்கம்
அப்போதே எச்சரித்தோம் யாரும் கண்டுகொள்ளவில்லை! - பொள்ளாச்சி விவகாரத்தில் கொதிக்கும் மாதர் சங்கம்

சுமார் 7 வருடங்களாகப் பொள்ளாச்சியில் நடந்துவரும் பாலியல் பயங்கரம், கடந்த சில நாள்களாக தமிழகத்தை உலுக்கி வருகிறது. 

பொள்ளாச்சியில் இளம் பெண்களை காதல் என்ற போர்வையில் தங்களின் வலையில் விழ வைத்து, அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த கும்பல் பற்றிய செய்தி, நாடாளுமன்றத் தேர்தலை தாண்டி தமிழக மக்கள் மனதை நொறுக்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு தகவலும் நம்மைப் பதைபதைக்க வைக்கின்றது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தக் கும்பல் பல பெண்களை மிரட்டி வீடியோ எடுத்து அவர்களிடமிருந்து பணம், நகை போன்ற பொருள்களைப் பிடுங்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக பொள்ளாச்சி உட்பட ஒட்டுமொத்த தமிழக பெற்றோர்களையும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

இந்த விஷயத்தில் நாங்கள் முன்னரே எச்சரித்தோம், அப்போது இதை யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை எனக் கொதிக்கிறார்கள் கோவை மாவட்ட மாதர் சங்கத்தினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை நிர்வாகி ராஜலெட்சுமியிடம் பேசினோம், ‘ தொடர்ச்சியாக 7 வருடங்களாக இதுபோன்ற குற்றச்செயல் நடந்து வருகிறது. அதேபோன்று இந்த 7 வருடத்தில் பொள்ளாச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் எத்தனையோ இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அப்படி தற்கொலை செய்துகொண்ட பெண்களின் குடும்பத்தினரை விசாரித்தால் இந்த வழக்கில் பெரிய திருப்பம் கிடைக்கும். 

வெறும் நான்கு, ஐந்து பேர் மட்டும் தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்களில் நிச்சயம் ஈடுபட்டிருக்க முடியாது. இதற்குப் பின்னால் உள்ள அனைத்துக் குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என நாங்கள் முன்னதாக கோரிக்கை விடுத்தோம். எங்களின் கோரிக்கை நிறைவேறி, இன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு என்பதால் இதை விசாரிக்கப் பெண் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பது எங்களின் அடுத்த கோரிக்கையாக உள்ளது. இதுபோன்ற விஷயத்தில் யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சட்டத்தின் அடிப்படையில் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, இதற்கு முன்னதாக அவர்கள் மீது என்ன வழக்குகள் உள்ளது என்பதையும் ஆராய வேண்டும். 

பொள்ளாச்சியில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் அமைப்புகளைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். வரும் 15-ம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளோம். மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யவுள்ளோம். பொள்ளாச்சி பகுதியில் 2012-ம் ஆண்டு முதல் பல பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த வழக்கை மறு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில்,  ‘ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது. இந்த காலகட்டத்தில் பல காரணங்களுக்காக பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அனைத்தையும் எங்களால் மறு விசாரணை செய்ய முடியாது’ எனக் கூறிவிட்டனர்.

தற்போது ஒரு பெண் அளித்த புகாரின் விளைவாகவே இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதேபோல் இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் தைரியமாக வெளியில் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். புகார் அளித்த பெண்ணை மிரட்டியதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. நாங்கள் வழக்கு விசாரணையைக் கண்காணித்து வருகிறோம். சி.பி.சி.ஐ.டியும் இதை முறையாகக் கையாளவில்லை எனில் நாங்கள் சி.பி.ஐ விசாரணை கோர முடிவு செய்துள்ளோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த நான்கு பேருக்குப் பின்னால், அதிகாரம் படைத்த பண பலம் படைத்த பெரிய கும்பல் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் இவர்களால் இந்த துணிச்சலான காரியத்தைச் செய்ய முடியாது. அந்தப் பெரிய கும்பலைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக, விரிவான ஆய்வு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் முடிவில் நிச்சயம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்’ எனச் சொல்லி முடித்தார்.