பிரீமியம் ஸ்டோரி

அழுகை

ரில் இருக்கும் முக்கியப் புள்ளிகள்
எல்லாருக்கும் விஷயத்தை
தனித்தனியாகச் சொல்ல வேண்டும்.
நாளை ஒரு பேச்சு வந்துவிடக் கூடாது
என்பதில் கூடுதல் கவனம் மண்டைக்குள்
வெளியூரில் இருக்கும் சொந்த பந்தங்கள்
எல்லாருக்கும் தகவல் சொல்லி
தாவு தீர்ந்துபோகிறது
இடையிடையே வந்தவர், வந்துகொண்டிருப்பவர்
எல்லாருக்கும் தேநீர்... நாற்காலி என்று
பார்த்துப் பார்த்து அது ஒரு பக்கம்
ஏழெட்டு முறை முயன்ற பிறகுதான்
கிடைக்கிறது ஸ்லாட்  
இடையிடையே துக்கம் விசாரிக்க
வருபவர்களிடம் அதே முகபாவனையில்
பதில் சொல்லக் கடமையும் இருக்கிறது
சாமி சம்பிரதாயம் பழக்கவழக்கம் என்று
எல்லாப் பேச்சுக்கும் முன்னிருக்க வேண்டியிருக்கிறது
மழை வர்ற மாதிரி இருக்கு.. வந்துடக் கூடாதுங்கிற
தடுமாற்றத்துல தவிப்போ தவிப்பு
காடு போயிட்டு வந்த பிறகு எல்லாரும்
சாப்பிடுவதற்குச் செய்ய நடக்கும் ஏற்பாட்டிலும்
முதன்மைப் பங்கெடுக்க அவனுக்குத்தான்
கோடித்துணி... கட்ட மொய்...
பங்காளி சொந்தம்... பாதி சொந்தம்...
கழுத்தறுக்கும் சம்பிரதாயங்களைக் கடப்பது பெரும்பாடு
எல்லாம் முடிய காத்திருக்கிறான்
விடிகாலை நேரம் கிடைக்கும்...
வாய் திறந்து
அம்மா அம்மா என்று அழுதுதீர்க்க..!

- கவிஜி

சொல்வனம்

மாதா பிதா குரு தெய்வம்

சாதம் ஊட்டாத அம்மாவுக்கு ஒன்று
சாக்லேட் வாங்கித்தராத அப்பாவுக்கு ஒன்று
ஸ்கேலால் அடித்த மிஸ்ஸுக்கு ஒன்று என்று
மூன்று தோப்புக்கரணங்களைக் கடவுள் போடுகிறார்
நிலாக்குட்டியின் கனவில்

- பனிமொழி சாதனா

நீர் முட்டைகளை உடைக்கும் `மியாவ்’கள்

ளர்ப்புப்பூனைக்கும் அலங்கார மீன்களுக்குமான
உறவென்பது கண்ணாடித்தொட்டி அறிந்த ரகசியம்
சதுரக்கடலை அவ்வப்போது வட்டமடிக்கும்
மியாவ்களுக்கு விசிறத்தொடங்கும் வண்ணத் துடுப்புகள்

இமைகளை மூடிக்கொண்டு சயனிக்கும் தருணங்களில்
தன் ஒளிரும் கண்களை நீருக்குள் நீந்தவிடும்
பூச்சையின் காதுகள் மெதுவாக அசைந்துகொண்டிருக்கும்,
சலசலவென நீரின் சப்தமென செவிக்குள் நுழைந்து
தாலாட்டுப் பாடும் மீனின் பாஷைகள்

தொட்டிக்குள் மிளிரும் ஜோடி கால்பந்துகளை
முட்டி விளையாடும் மீன்கள்
அளவில்லா முத்தங்களைப் பரிசளிக்கின்றன.
தன் வால் விறைத்து உயர்த்தி நன்றி நவிழும் பூனைக்கு
காற்றுக்குமிழ்களைப் பூக்கின்றன மீன்கள்

பூனைக்கும் வளர்ப்பு மீன்களுக்கும்
ரகசிய உடன்படிக்கையெல்லாம் இல்லை
சில நேரங்களில் தொடர்ந்து வரும்
மியாவ் சப்தங்கள் பசியால் வருவதாக நினைக்கும் மீன்கள்
அளவுக்கதிகமாக வெளியேற்றுகின்றன பிராணவாயுக் குமிழ்களை

மியாவ் கூச்சல்கள்தான் கண்ணாடித்தொட்டிக்குள் பாய்ந்து
மீன்கள் சுவாசிக்க குமிழ்களை உடைப்பதாகப் பூனையும்
நீர் முட்டைகளை சாப்பிட்டு
பூனை பசியாற்றிக்கொள்வதாக மீன்களும் நம்புவதை
ஒருபோதும் தடுத்ததில்லை கண்ணாடிச் சுவர்கள்.

- வலங்கைமான் நூர்தீன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு