பிரீமியம் ஸ்டோரி

சாதித் தீயின் ஒரு குறியீடாகவே நாவலெங்கும் பயணிக்கிறது சுளுந்தீ எனப்படும் மரம். தீபமாகவும் தீப்பந்தமாகவும் போர் ஆயுதமாகவும் வெவ்வேறு உருக்கொள்ளும் சுளுந்தீ, சாதி நீக்கம் பெற்றவர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பொருளாகவும் இருக்கிறது.

படிப்பறை

சாதி இறுக்கங்கள் முதிர்ச்சி பெற்ற ஒரு காலகட்டத்தில் தொடங்குகிறது கதை. நாவிதர் பரம்பரையில் வந்த ஒருவன் படைவீரனாக விரும்புவதுதான் கதையின் அடிநாதம். அரச குடும்பத்தின் அந்தரங்கம் வரை அறிந்த நாவிதர் வம்சாவளியின் ஆளுமையாக இருக்கிறான் ராமன்; பன்றிமலைச் சித்தரின் முக்கிய சீடனாகவும் வர்ணிக்கப்படுகிறான்.

18-ம் நூற்றாண்டு. தேனி மாவட்டம், கன்னிவாடியை மையமாகக் கொண்டு ஆண்ட நாயக்க ஆட்சியின் பின்னணி. அரச குடும்பத்தினருக்கு நாவிதராக இருக்கும் அங்கீகாரத்துடன் அவர்களின் நோயைத் தீர்க்கும் பண்டுவமும் அறிந்தவர்கள் என்பதன் முக்கியத்துவம் நாவலில் பெருமைப்படப் பேசப்படுகிறது. அரண்மனையாரின் உயிரைக் காப்பாற்றிய வீரனாகவும் போற்றப்படுகிறான் ராமன். குதிரையில் பயணிக்கும் உரிமம் அவனுக்குத் தரப்படுகிறது. அடுத்த கட்டமாக அவனுடைய மகன் மாடன் பொறுப்புக்கு வரும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது. மாடன் இயல்பிலேயே தைரியமிக்கவனாகவும் வீரனாகவும் இருக்கிறான். அரசப்படையின் வீரனாக மாற வேண்டும் என்ற அவனுடைய பேரவாவுக்கு அணை போடுகிறார் தளபதி. நாவிதன் படைவீரனாக முடியாது என்பதே காரணம். அடங்க மறுக்கிறான் மாடன். ‘‘என்னுடன் மோதி யாரேனும் ஜெயிக்கட்டும். அதன்பிறகு நான் நாவிதத் தொழில் செய்கிறேன். என்னோடு மோதியவன் தோற்றால் அவன் நாவிதத் தொழில்செய்ய வேண்டும்’’ என்பது அவனுடைய சவால். வீரத்தால் வீழ்த்த முடியாத அவனைப் போர் விதிகளைமீறித்தான் வீழ்த்த முடிகிறது.

விஜயநகர ஆட்சி, சுல்தானியர் படையெடுப்பு, ஆங்கிலேயரின் மதப் பிரசாரம் எனத் தமிழ்ச் சமூகத்தைச் சூழ்ந்திருந்த மெல்லிய பதற்றச் சூழலோடு, குலவிலக்கம் செய்யப்பட்டவர்களின் சூழ்ச்சிகளும் நாவலின் கள நிலவரத்தை விவரிக்கத் துணைபுரிகின்றன. மிகமிக முக்கியமாகப் பாராட்டப்பட வேண்டிய அம்சம் ஒன்றுண்டு; பக்கம்தோறும் விவரிக்கப்படுகிற மருத்துவக் குறிப்புகள். மருத்துவம் அறிந்த ஒரு சமூகம், காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட சாதியாகக் கீழிறக்கம் செய்யப்பட்ட வேதனையின் உச்சம்தான் நாவல் பதிவுசெய்யும் உண்மை. அதைப் படைப்பின் வழியே மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இரா.முத்துநாகு.

சுளுந்தீ

இரா.முத்துநாகு
ஆதி பதிப்பகம், 15, மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம்,
திருவண்ணாமலை - 606806. அலைபேசி: 999488000. பக்கங்கள்: 472, விலை: 450

- தமிழ்மகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு