Published:Updated:

`` ஜிப்ஸி போஸ்டர் குதிரை இதான்!’’ - `நாட்டியக் குதிரை’ வளர்க்கும் ஜாகீர் உசேன்

`` ஜிப்ஸி போஸ்டர் குதிரை இதான்!’’ -  `நாட்டியக் குதிரை’ வளர்க்கும் ஜாகீர் உசேன்
`` ஜிப்ஸி போஸ்டர் குதிரை இதான்!’’ - `நாட்டியக் குதிரை’ வளர்க்கும் ஜாகீர் உசேன்

ராஜுமுருகன் இயக்கத்துல, ஜீவா நடிக்கும் `ஜிப்ஸி' படத்துல நடிக்கிறதுக்காக எங்க ஆட்டக்குதிரையைக் கேட்டிருந்தாங்க. அந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்ல கம்பீரமாக இருக்குதுல ஒரு குதிரை, அது எங்களோடதுதான். டைட்டிலுக்குக் கொடுத்தோம். அதுக்கப்பறம், `தொடர்ச்சியா மூணு மாசத்துக்கு உங்க ரெண்டு குதிரைங்களைத் தருவீங்களா?'னு கேட்டாங்க.

உடல் முழுவதும் பளபளப் பட்டாடை, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, திருமண விழாவில் மணமகனை ஏற்றிக்கொண்டு நாட்டியம் ஆடியபடி வருகிறது அந்த வெள்ளைக்குதிரை. ஒருவித பயத்துடன் அதை இறுக்கி அணைத்துப் பிடித்துக்கொண்டிருந்தார் மணமகன். அங்கு முழங்கும் தாரைதப்பட்டை, பேண்டு வாத்தியங்களுக்கு ஏற்ப நாட்டியம் ஆடி, பார்க்கின்ற அனைவரையும் தன் ஆட்டத்தால் கட்டிப்போட்டுவிடுகிறது அந்த வெள்ளைக் குதிரை. அதிரவைக்கும் ஆட்டத்தில் மயங்கிய பலரும், ஆட்ட இறுதி வரை நாட்டியத்தை ரசித்துவிட்டுத்தான் நகர்ந்தனர்.

தமிழகத்தில் வசதி படைத்த பெரும்பாலானோர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில், இந்த நாட்டியக் குதிரைகளின் ஆட்டத்தைப் பார்க்கலாம். பெருமைமிக்க நாட்டியக் குதிரைகளின் பூர்வீகம், புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கிராமம். இங்குள்ள ஏழு இஸ்லாமியக் குடும்பங்கள், தலைமுறைத் தலைமுறையாக இந்தத் தொழிலை செய்துவருகின்றனர்.

``நான் மட்டுமல்ல சகோதரர்களும் பரம்பரை பரம்பரையா இந்தத் தொழில் செய்றாங்க. நாலாவது தலைமுறையா என் பையனும் இப்ப இந்தத் தொழில்ல இருக்கிறான். எங்கள் ஐயா ஷேக் லெப்பை ராவுத்தர், மீரா லெப்பை ராவுத்தர்தான் எங்களுக்கு முன்னோடி. இவங்க குதிரையை முழுவதுமாகத் தெரிஞ்சுக்கிட்டு இந்தத் தொழிலைச் செஞ்சிருக்காங்க.

நான் எங்க அத்தாகிட்ட இருந்து இந்தத் தொழிலைக் கத்துக்கிட்டேன். என் பையன் இப்ப என்கிட்ட கத்துக்கிட்டு இருக்கிறான்" என்று  கூறும் ஜாகீர் உசேன், ஆவணத்தில் `வி.எஸ்.எம்.சன்ஸ்' என்ற பெயரில் நாட்டியக் குதிரைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார்.

``குதிரையில் நிறைய வகைகள் இருக்கு. எல்லா குதிரைகளும் ஆட்டத்துக்கு உகந்ததா இருக்காது. `நுக்ரா’தான் நாட்டியத்துக்குச் சிறந்தது. வெண்ணிறத்தில், உயரமா, கம்பீரமா, மிடுக்கா இருக்கும். இது ஆட்டத்தை ஈஸியா கத்துக்கும். பெரிய சத்தத்துக்குக்கூட மிரளாம நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். கொஞ்சநாள் பழகினா போதும், வளர்க்கிறவங்க சொல்ற பேச்சைக் கேட்டுக்கிட்டு அன்பா இருக்கும். இந்த இனத்தைத்தான் தேடி வாங்கி வந்து வளர்ப்போம்.  

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறும் சந்தைகளுக்கு நேரடியா போயி, குதிரைகளைத் தேர்ந்தெடுத்து வாங்கி வருவோம். மகாராஷ்டிரா சாரங்கடா, அக்குலிஜ் சந்தை, கர்நாடகா அருகே கராடு சந்தை, சென்னை அந்தியூர் சந்தை ஆகியவற்றுக்கு ஒவ்வொரு வருஷமும் போயிடுவோம். மகாராஷ்டிரா அக்குலிஜ் சந்தை, ராஜஸ்தான் புஷ்கர் சந்தை விசேஷமா இருக்கும். இந்தச் சந்தைக்கு, எங்க ஊர்ல இருந்து ஒரு டீமா கிளம்பிடுவோம். அங்கேயே ரெண்டு மூணு நாள் தங்குவோம்.

இந்தச் சந்தையில ஏராளமான குதிரைகளைக் கொண்டுவந்திருப்பாங்க. குதிரைக்குத் தேவையான எல்லா அலங்காரப் பொருள்களும் ஒரே இடத்துல கிடைக்கும். நாலு வயசுக்கு மேற்பட்ட ஆண் குதிரைதான் ஆட்டத்துக்கு உகந்தது.

பேறுகாலப் பிரச்னைகள் வரும்கிறதால, பெரும்பாலும் பெண் குதிரைகளை வாங்க மாட்டோம். குதிரைகளை வாங்குறதுக்குன்னு சில விதிகளை எங்க முன்னோர் வகுத்துக்கொடுத்திருக்காங்க. உடம்புல பொட்டு கறுப்புகூட இருக்கக் கூடாது. குறிப்பாக, சுழி பார்த்து வாங்குறதுதான் ரொம்ப முக்கியம். குதிரைக்கு உடம்பில் 7 அல்லது 9 சுழி என ஒற்றப்படையில் இருக்கும். இந்தச் சுழி ஒவ்வொண்ணுக்கும் ஒரு பெயர் இருக்கு. நெஞ்சில் பூரான் மாதிரி ஒரு சுழி இருக்கும். அதை `ராஜா சுழி'னு சொல்வோம். அதுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு சுழி இருக்கும். அது `மந்திரி சுழி'. நெத்திச் சுழி கொஞ்சம் ஏற்றமா இருக்கணும். மார்புக்கு மேல் முன்பறவை, ரெண்டு காதுகள்கிட்டயும் கிடக்கிற சுழிகள் `மஸ்துவம்'னு சொல்வாங்க. தொப்புள்ள உள்ள சுழி `தொப்புள் சுழி'. பின்னங்கால்களில் கிடக்கிற சுழியைத்தான் `சிந்தாமணி'னு சொல்வாங்க. இந்தச் சுழி உள்ள குதிரைகளை வாங்கிட்டு வந்தா, தொழில்ல நல்ல நிலையை அடைவோம் என்பது காலம்காலமா எங்க நம்பிக்கை.

`விலங்கு சுழி’ மாதிரி கெட்ட சுழிகள்கொண்ட குதிரைகளும் இருக்கும். அது எங்களுக்கு ஆகாது. கெட்ட சுழி உள்ள குதிரைகளை, ஒரு ரூபாய்க்குக் கொடுத்தாக்கூட வாங்க மாட்டோம். அப்புறம் உடல்வாகு பார்ப்போம். கைகால்கள் பலமாக, திடகாத்திரமாக இருக்கான்னும் பார்ப்போம். அதற்கப்புறம் பேரம் பேசவேண்டியதுதான். ஒருவழியா பேரம் பேசி வாங்கிட்டு வந்து, நமக்கு ஏத்த மாதிரி பயிற்சி கொடுத்து ஆட்டத்துக்குத் தயார்படுத்துவோம்'' என்று சிலிர்க்கும் ஜாகீர் உசேனிடம், இரண்டு நுக்ரா வெள்ளைக்குதிரைகள் இருக்கின்றன. இவை சுபநிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் `உரிமைக்குரல்' தொடங்கி தற்போது `யங் மங் சங்' படம் வரையிலும் திரையில் தோன்றியுள்ளன.


 

``1962 காலகட்டத்துல யார்கிட்டயும் வெள்ளைக்குதிரை இல்லை. தேவர் ஃபிலிம்ஸ்லகூட இல்லை. எங்கள் அத்தா முகமது ஷரீப்தான் வெள்ளைக்குதிரை வெச்சிருந்தார். 1962-ல் ஆரம்பிச்சு 1984 வரையிலும் நம்ம குதிரைக்கு செம மவுசு. எம்.ஜி.ஆர் நடித்த `உரிமைக்குரல்', `ராஜா  தேசிங்கு', நாகேஷ் நடிச்ச `அப்பாஸ்'னு அப்பா காலத்துல பல படங்கள்ல எங்க குதிரை நடிச்சிருக்கு. சில படங்கள்ல, குதிரைக்காரராக அப்பாவும் தோன்றுவார். இப்ப எங்க காலத்துல மாதவன் நடிச்ச `டும் டும் டும்', பாண்டியராஜன் நடிச்ச `மாப்பிள்ளை மனசு பூப்போல', லேட்டெஸ்டா `யங் மங் சங்' படத்துலகூட எங்க குதிரை நடிச்சிருக்கு.


ராஜுமுருகன் இயக்கத்துல, ஜீவா நடிக்கும் `ஜிப்ஸி' படத்துல நடிக்கிறதுக்காக எங்க ஆட்டக்குதிரையைக் கேட்டிருந்தாங்க. அந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்ல கம்பீரமாக இருக்குதுல ஒரு குதிரை, அது எங்களோடதுதான். டைட்டிலுக்குக் கொடுத்தோம். அதுக்கப்பறம், `தொடர்ச்சியா மூணு மாசத்துக்கு உங்க ரெண்டு குதிரைங்களைத் தருவீங்களா?'னு கேட்டாங்க. `இந்த மாதங்கள்லதான் எங்க பிழைப்பே ஓடுது. முன்னாடியே எங்களை நம்பி விழா நடத்துறவுங்க, ஆர்டர் கொடுத்திருக்காங்க. அந்த நிகழ்ச்சியெல்லாம் ரத்து செஞ்சு அவங்களை நம்ம ஏமாற்றக் கூடாது. அதனால, எங்களால் இந்த நேரத்துல தர முடியாது'னு சொல்லிட்டோம்"  என்கிறார் வருத்தமாக.

``முன்னாடியெல்லாம் நுக்ரா குட்டி, ரொம்ப விலை கம்மியா இருக்கும். இப்ப 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரைக்கும் வந்திடுது. அதைச் சந்தையில வாங்கி இங்கே கொண்டுவர, வண்டிச்செலவு மட்டும் 70,000 ரூபாய் வரை ஆயிடும். அப்படியே குதிரைகளைக் கொண்டுவந்தாலும் ஒரு மாசத்துக்கு முன்னாடி நம்ம நிகழ்ச்சிக்கு குதிரையைக் கொண்டுபோக முடியாது. நிகழ்ச்சிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வர்றதுலயும் போக்குவரத்துல கடுமையான பிரச்னைகள் இருக்கு. வாங்கிட்டு வந்த உடனே பயிற்சியைத் தொடங்க முடியாது. வட இந்தியாவில் இருந்ததால் அதுக்கு நம்ம மொழி தெரியாது. நம்ம மொழியை மெள்ள மெள்ள கத்துக்கொடுக்கணும்'' என்று கூறும் ஹைதர் அலி, மூன்று குதிரைகள் வைத்திருக்கிறார். காசிம் புதுப்பேட்டையில் `கே.பி.எஸ்' என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். பயிற்சி குறித்து நம்மிடம் விவரித்தார்.

``நம்ம மொழியைப் புரிஞ்சிக்கவே ரெண்டு வாரத்துக்குமேல ஆயிடும். அப்புறம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுபோயி ஆண்மை நீக்கம் செஞ்சு கொண்டுவருவோம். அது நம்ம கட்டுக்குள்ள வந்ததுக்கு அப்புறம்தான் நாட்டியப் பயிற்சியையே ஆரம்பிப்போம். யாராவது ஒருத்தர் நெருங்கிப் பழகுவோம். குதிரைக்கு தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் கண்டிப்பாக புல் கொடுக்கணும். அப்பப்போ கோதுமை, சோளம், கேரட், முள்ளங்கியும் தீவனமா கொடுப்போம்.

இதேபோல தினமும் காலை, மாலை ரெண்டு வேளையும் பயிற்சிக்கு அழைச்சுட்டுப் போயிருவோம். கொஞ்சதூரம் நடக்கவிடுவோம். அப்புறம் ஓடவிடுவோம். முன்னங்காலைத் தூக்கி நிக்கிறது, காலை மடக்கி வணக்கம் வைக்கிறது மாதிரியான பல வித்தைகளுக்குப் பழக்குவோம்.

கொஞ்ச நாள் பயிற்சிக்கு அப்புறம் ஒருத்தரை குதிரை மீது உட்காரவெச்சு பயிற்சி கொடுப்போம். கால்ல சலங்கை கட்டிவிட்டு, தொடர்ந்து நடக்கவிடுவோம். அப்புறம் டிரம் செட் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிச்சு  ஆடவிடுவோம். கொஞ்சநாள்ல அது, ஆட்டத்தை கத்துக்கும். மூணு மாசத்துல நிகழ்ச்சிக்கு தயாராகிடும். அப்புறம்தான் அந்தக் குதிரை மூலம் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். இதுவரைக்கும் எந்த நிகழ்ச்சியிலயும் எங்க குதிரை சொதப்பினதில்லை. இதுல பல சிரமம் இருந்தாலும், காலம்காலமா குதிரைகளை எங்கள்ல ஒருத்தராத்தான் வளர்க்கிறோம். எங்களுக்கு அப்புறம் எங்க சந்ததியினரும் இதைத் தொடரணும்கிறதுதான் எங்க  ஆசை" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு