Published:Updated:

`நடவு செய்த பயிரை அழித்து குழாய்களைப் பதிக்குறாங்க’ - கெய்ல் நிறுவனத்திற்கு எதிராகக் கொதிக்கும் விவசாயிகள்

`நடவு செய்த பயிரை அழித்து குழாய்களைப் பதிக்குறாங்க’ - கெய்ல் நிறுவனத்திற்கு எதிராகக் கொதிக்கும் விவசாயிகள்
`நடவு செய்த பயிரை அழித்து குழாய்களைப் பதிக்குறாங்க’ - கெய்ல் நிறுவனத்திற்கு எதிராகக் கொதிக்கும் விவசாயிகள்

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் மாதானம் கிராமத்திலிருந்து நாங்கூர், காத்திருப்பு, தலைச்சங்காடு வழியாக தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் வரையுள்ள சுமார் 29 கி.மீ.தூரத்திற்கு தனியார் எண்ணெய் நிறுவனமான கெயில் சார்பில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

`நடவு செய்த பயிரை அழித்து குழாய்களைப் பதிக்குறாங்க’ - கெய்ல் நிறுவனத்திற்கு எதிராகக் கொதிக்கும் விவசாயிகள்

அதேநேரம் தற்போது இப்பகுதிகளில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி கோடை சாகுபடி நடைபெற்று வருகிறது சில இடங்களில் பயிர் நடவு முடிந்த நிலையிலும், சில இடங்களில் பயிர் நாற்றங்கால் நிலையிலும் உள்ளன. விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு மின்வெட்டு காரணமாக குறைந்த மணி நேரம் வருகிற மின்சாரத்தைக் கொண்டு பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடவு செய்த பயிரை அழித்து, அதன்மீது அத்துமீறி ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் செய்து வருகிறது. இதைக் கண்டித்து ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் போராடுவதும், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதும், அதன்பின் அடுத்த கிராமத்துக்குச் சென்று அதே வேலையைச் செய்வதும் தொடர்கதையாக இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன் காளஹஸ்தினாபுரம் கிராமத்தில் குழாய்கள் பதிப்பது கண்டித்து செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் விவசாயிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று முடிகண்டநல்லூர் கிராமத்தில் குழாய்கள் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டபோது விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். 

இதுகுறித்து விவசாயி விஷ்ணுவிடம் பேசியபோது, ``எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நாங்கள் பயிர் செய்துள்ள சாகுபடியின் மீது, எங்களைக் கேட்காமல், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பயிரை அழித்து சுமார் இரண்டடி அகலமுள்ள ராட்சத குழாய்கள் கெயில் நிறுவனம் பதிக்கிறது. இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. உழைக்கும் மக்களாகிய நாங்கள் அதைத் தடுத்து நிறுத்திய போது மயிலாடுதுறை டி.எஸ்.பி. எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி `பயிர் இழப்பீட்டுத் தொகையை வாங்கித் தருகிறோம். ஆனால், விவசாய நிலத்தில் தொடர்ந்து குழாய்கள் புதைப்போம்" என்கிறார்.

`நாங்கள் அறுவடை செய்து முடிக்கும் வரை குழாய்கள் பதிக்கும் பணியைச் செய்யக் கூடாது. அதன்பின் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்பதே எங்கள் நிலைப்பாடு. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிப்பதற்கு இந்த அரசு துணை போகலாமா மனசாட்சி உள்ள அரசாக இருந்தால் இத்தகைய தகாத செயலை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களை பழி தீர்க்கும் அரசாக இருக்கக் கூடாது. போலீஸைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி தனியார் கம்பெனிக்காக அரசு ஏன் துணை போகிறது என்ற மர்மம்தான் புரியவில்லை. கெயில் நிறுவனத்தின் செயலை அத்துமீறி தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இன்று மாலை மயிலாடுதுறை கோட்டாட்சியரிடமும்,டி.எஸ்.பி.யிடமும் புகார் அளிக்க இருக்கிறோம். விவசாயத்தை அழிக்கக் கூடிய ஹைட்ரோகார்பன், ஷெல் காஸ் போன்றவற்றைக் கொண்டு செல்ல விளைநிலத்தில் குழாய்கள் பதிப்பது மிகவும் கொடுமையான செயல். இதை அரசு உடனே தடுத்து நிறுத்திட வேண்டும்" என்றார்.

Vikatan