Published:Updated:

அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan

அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan
அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan

அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம்.

அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan

அது ஒரு வியாழக்கிழமை. வீட்டு பக்கத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன். அங்கு என்  நண்பர், `வாங்க ஒரு டீ சாப்ட்டு போகலாம்’’ என்று அழைக்க, நானும்  ``why not’’ என்று  சொல்லிவிட்டு., டீ வாங்கி கடைக்கு முன்னால் நின்று குடித்துக் கொண்டிருந்தோம்.  தூரத்தில் இரண்டு முதியவர்கள் வந்துக் கொண்டிருந்தனர்.  அதில் ஒருவர் வீல் சேரில் அமர்ந்து வந்தார். அவருக்கு எப்படியும் 80 வயசாவது இருக்கும். இன்னொருத்தர் அந்த வீல் சேரை தள்ளிக்கொண்டு வந்தார். அவருக்கும் 70 வயசு இருக்கும். அவர்களும்  டீ கடைக்குத்தான் வந்தார்கள். ஆனால் வாங்கினது காபி.

எனக்கு என்னமோ தெரியவில்லை வீல் சேரில் உக்கார்ந்து இருந்தவரிடம் பேச வேண்டும்போல இருந்தது. இதை என்னுடைய நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர், ``நான் இவர்கள் இருவரையும் அடிக்கடி இங்கு பார்ப்பேன். வீல் சேரை தள்ளிக்கொண்டு வருகிறாரே அவரை எனக்குத் தெரியும், இரண்டு பேரும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள்.  இப்போது அவருக்கு இவர் துணை, இவருக்கு அவர் துணை. இரண்டு பேருமே ஒரு வேளை உணவுக்கே கணக்கு பார்த்துத்தான் வாழ்கிறார்கள். 16 வருடமாக, வாரத்தில் இரண்டு மூன்று நாள் இங்கு காபி சாப்பிட வருவார்கள். வாங்கப் போய் பேசலாம்’’ என்று சொல்லி அவர்களிடம் அழைத்து சென்றார்.  என்னுடைய நண்பர் அவருடைய நண்பரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். மூன்று பேரும் ஒரு இரண்டு நிமிஷமாக பேசிக் கொண்டிருந்தோம்.  வீல் சேரில் இருந்தவர் எங்களை கண்டுக் கொள்ளவே இல்லை. எனக்கு அவரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. அவர் பேசவில்லை என்றால் என்ன, நாம் பேசுவோமென்று நினைத்து மெதுவாக ஆரம்பித்தேன். "நல்லா இருக்கீங்களா" என்றேன். அவர் அதற்கு எந்த பெரிய பதிலும் கொடுக்கவில்லை.  குழந்தைகள் மாதிரியேதான் வயசானவர்களும். அவர்களுடைய வழியிலேயே அவரை கையாள வேண்டும்.  "உங்களுக்குக் காபி ரொம்ப பிடிக்குமா" என்று கேட்டேன். "பிடிக்கும்’’ என்று சொல்லிவிட்டு, வீல் சேர் சக்கரத்தின் காற்றை பரிசோதித்தார்.  என்ன இவர் நம்மை இப்படி இக்னோர் செய்கிறாரே  என்று தோன்றியது.  சரி இருங்க வரேன்- என்று சொல்லிட்டு, அவருக்கும் அவருடைய நண்பருக்கும் ஆளுக்கு ரெண்டு Can Coffee வாங்கி வந்து கொடுத்தேன்.

அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan

ஜப்பானில் யாரும் சாமானியத்தில் அடுத்தவர்கள் கொடுப்பதை  வாங்கிக் கொள்ளமாட்டார்கள். இவர்களும் வேண்டாமென்று சொன்னார்கள். ஆனால் நான் சென்டிமெண்டாக ஒரு டயலாக்கை பேசி...காபியை கைகளில் கொடுத்தேன். அப்போது அவர் பேச ஆரம்பித்தார்.   ``எதற்கு இரண்டு காஃபி கேன்’’ என்றார்.   ஒன்று இப்போது குடிப்பதற்கு. இன்றொன்று நாளை காலையில் குடிப்பதற்கென்று சொன்னேன். என்னை பாராட்டுவாரென்று பார்த்தால்.. "எனக்குப் பொதுவா மனுஷங்களை பிடிக்காது. அதுவும் டோக்கியோல இருக்கவங்களை சுத்தமா பிடிக்காது!!" என்று சொன்னார். நானும் டோக்கியோவில் வசிக்கிறேன் என்பதால்,   என்னை பார்த்து இப்படி சொல்லிவிட்டாரே என்று எனக்கு பக்கென்று ஆனது. மீண்டும் தொடர்ந்த அவர், "மனுஷங்களை வெறுத்து அறுபது வருஷமாச்சி" என்றார் சலிப்புடன்.   நல்லவேளை, அவரின் சலிப்புக்கு  நான் காரணமில்லையென்று நிம்மதி ஆனாலும், அவருடைய வெறுப்புக்கான காரணம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ``ஏன் அப்படி வெறுப்பு’’  என்று கேட்டேன். ``இங்கு வெறும் சுயநலம்தான் இருக்கு. உண்மையான அன்பு யார்கிட்டயும் கிடையாது’’ என்று சொன்னார். இதை கேட்டதும் எனக்கு சிறிது கோவம் வந்தது. 

நான், "நாம எது கிடைக்காமலும் வாழ்ந்துடலாம், அன்பு கெடைக்காம ஒரு நாள் கூட வாழவே முடியாது. நீங்க இவ்வளவு நாள் வாழறீங்கன்னா உங்களுக்கு அன்பு கெடச்சிகிட்டு இருக்குன்னுதான் அர்த்தம்" என்று சொன்னேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, "நீ என்ன குடிச்சிகிட்டு இருக்க" என்று கேட்டார். Green Tea ... ஹலோ, நான் எதை குடித்தாலும், குடிக்கவில்லை என்றாலும் இப்படிதான் பேசுவேனென்று சொன்னேன். அவர், அவருடைய நண்பரை பார்த்து, ``இவன் அன்பை பத்தி ஏதோ சொல்கிறானே, உனக்கு புரியிதா’’ என்று கேட்டார். ``எனக்குப் புரியிது, உனக்கு புரியலயா’’ என்று  அவர் கனிவான குரலில் சொன்னார்.

தன் நண்பர் அப்படி சொன்னதும், என்னை கனிவுடன் பார்த்தார். வந்ததில் இருந்து என்னைப் பார்த்த பார்வைக்கும் இப்போது பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது. அவரிடம் மீண்டும் பேச ஆரம்பித்தேன்.  "சுயநலமில்லாத அன்பு இங்க கொட்டிக்கிடக்குது. இப்போது, இன்னைக்கி, உங்களுக்குச் சுயநலமில்லாத அன்பு உங்கள் பின்னாடி உங்களோடு வீல் சேரை16 வருஷமா தள்ளிக்கிட்டு இருக்கிறாரே அவரிடம் இருந்து கெடச்சிகிட்டுதான் இருக்கு".  என்றேன். இதைச் சொன்னதும், அவர் சில நொடிகள்,   கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டார். கண்ணை திறந்தார்... அவர் கண்களில் இருந்து கண்ணீர் . ``அடச்சே வயசானவரை கஷ்டப்படுத்திட்டோமே’’ என்று என்று குற்றவுணர்ச்சியாக இருந்தது.  ஆனாலும் எனக்கு அப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்ணை துடைத்துக் கொண்டு அவரின் பாக்கெட்டில் கைவிட்டு, அதில் இருந்த "எல்லா" சில்லறைக் காசையும் எடுத்து என்னிடம் நீட்டினார் "என்கிட்ட இவ்வளவுதான் இருக்கு. உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. என்னுடைய ஞாபகமா இந்த காசை நீ வச்சிக்கோ" என்றார்.  

அவ்வளவு நேரம் விளையாட்டாக இருந்த நான் நெகிழ்ந்துவிட்டேன். என் கண் கலங்கியது.  இப்போது. ``எனக்கு இவ்வளவு வேண்டாம், ஒரே ஒரு காசு குடுங்க உங்கள் ஞாபகமா நான் வச்சிக்கிறேன்’’ என்று  சொல்லி ஒரு காசு மட்டும் வாங்கிக்கொண்டேன். சுயநலமில்லாத அன்பைப் பற்றிய அவரோடு பார்வை அந்த நிமிஷத்தில் இருந்து மாறி இருக்குமென்று நம்பிக்கை வந்தது. ஆனால் என்னுடைய வாய் சும்மா இருக்குமா... "டோக்கியோல இருக்கவங்கள சுத்தமா புடிக்காதுன்னு சொன்னீர்கள்...நானும் டோக்கியோலதான் இருக்கிறேன்" என்று சொன்னேன். ஹாஹாஹா-வென வாய்விட்டு சிரித்தார். ஒரு அழகான உயிரை சம்பாதித்துவிட்டேன் என்ற சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து தூங்கினேன். 

கதை : அசோக் மு.

அன்பெனும் அருமருந்து! - சிறுகதை #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு