பொது அறிவு
Published:Updated:

அப்துல் கலாம் 25

அப்துல் கலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்துல் கலாம்

கனவு நாயகன் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரைப் பற்றி 25 தகவல்கள்

பூத்தது ஏவுகணை

அக்டோபர் 15, 1931-ல், இந்தியாவுக்குப் புகழ் சேர்த்த அந்த ஏவுகணைப் பூ பூத்தது. ஆம்! ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, காலையில் செய்தித்தாள் போடும் வேலையைச் செய்தார்.

ஏவுகணை எழுந்தது

திருவனந்தபும் தும்பா ராக்கெட் ஏவுதளத்தில், 1962-ல் பணிக்குச் சேர்ந்தார். அப்போது, SLV-3 ராக்கெட் வடிவமைப்பில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. எடை குறைவான பிளாஸ்டிக்கில் ஏவுகணைகளைத் தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.

அசத்திய கலாம்

ஒரு வலிமையான ராக்கெட்டைத் தயாரித்து விண்வெளியில் ஏவுவதற்கு, அமெரிக்காவுக்கு 12 ஆண்டுகள் ஆனது. ஆனால், அப்துல் கலாம் 7 ஆண்டுகளில் அந்தச் சாதனையை எட்டினார். ராக்கெட் தொழில்நுட்பத்தில் வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தார்.

அப்துல் கலாம் 25

புத்தகங்களை விதைத்தவர்

இளைஞர்களுக்கு அவர் பரிந்துரைத்த புத்தகங்கள், ஸ்டீபன் கவாய் எழுதிய ‘Every day greatness’ மற்றும் ஹார்வர்டு கார்ட்டர் எழுதிய ‘Five minds for the future’. தன் வாழ்நாளில் பல தேவதைகளைச் சந்தித்ததாகக் கூறுகிறார். அவர், ‘தேவதை’ என்று குறிப்பிடுவது புத்தகங்களை‌.

விஷன் 2020

1997 சுதந்திரப் பொன்விழாவின்போது, ‘விஷன் 2020’ தலைவராக அப்துல் கலாம் நியமிக்கப்பட்டார். அடுத்த 50 ஆண்டுகளில் நம் நாடு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது அந்தக் குழு.

கல்லூரிக் கனவுகள்

திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சென்னை எம்.ஐ.டி-யில் வானூர்தி தொழில்நுட்பப் பொறியியல் முடித்து, பெங்களூரில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சியாளராய்ச் சேர்ந்தார்.

ஒலியை மிஞ்சிய வழி

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (DRDO) இயக்குநராக 1982ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஒலியின் வேகத்தை விடப் பல மடங்கு அதிவேகத்தில் பாயக்கூடிய அக்னி, ஆகாஷ் போன்ற செயல்திட்டங்களை வகுத்தளித்தார்.

இந்தியா 2020

‘குழந்தைகள்தான் நிறைய கேள்விகள் கேட்பார்கள். குழந்தைகள்தான் விஞ்ஞானிகள்’ என்பார். இந்தியாவின் தேவை நுண்ணறிவு மட்டுமே என்றவர், நாடு முழுவதும் பயணம்செய்து, கோடிக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்து, ‘இந்தியா 2020’ என்ற உயர்ந்த கனவை விதைத்தார்.

மக்கள் ஜனாதிபதி

தேசப் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் எனப் பல காரணங்களுக்காக அவர் ஜனாதிபதியாகி இருக்கலாம். ஆனால், அவரை மக்கள் ஜனாதிபதியாக மாற்றியது, 1998ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியா 2020’ என்ற புத்தகம்தான்.

அப்துல் கலாம் 25

தண்ணீர் மறுசுழற்சி

தண்ணீரைத் தேசிய வளமாகவும் பொதுவுடைமையாகவும் அங்கீகரிக்க வேண்டும். நாடு முழுவதும் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என்று சொன்னார்.

நெருப்பில் செய்த சிறகு

1999-ல் வெளிவந்த அப்துல் கலாமின் புத்தகம், ‘Wings of Fire’. இது, சீன மொழியில் ‘Huoyi’ என்ற தலைப்பில் வெளிவந்த ஆண்டில், ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

முதல் குடிமகன்

ஜனாதிபதி வேட்பாளராக 2002 ஜூன் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டார். அன்றைய வாய்பாய் அரசின்போது, இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்றார்.

மருத்துவ விஞ்ஞானி

ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டால் மாற்றாகப் பொருத்தும் ஸ்டென்ட் ஒன்றையும், உடல்நலம் பாதுகாக்க உதவும் கம்ப்யூட்டர் ஒன்றையும் மருத்துவ நிபுணர் சோமராஜுவுடன் இணைந்து உருவாக்கினார்.

தமிழில் விரிந்த சிறகுகள்

இந்தப் புத்தகம், ‘அக்னி சிறகுகள்’ என்கிற பெயரில் தமிழில் வெளியானது. 2012ஆம் ஆண்டு, ‘திருப்புமுனை’ என்ற புத்தகம் வெளியானது. இதை, அக்னி சிறகுகள் பகுதி 2 எனச் சொல்லலாம்.

அதிர்ந்த அணுகுண்டு

பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக 1992-1999 வரை பணியாற்றியபோது, பொக்ரான்-2 என்கிற இரண்டாவது அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தினார்.

அப்துல் கலாம் 25

உழைப்பின் பெருமை

‘வளர்ச்சி என்ற வார்த்தையை உச்சரித்தால் மட்டும் போதாது. கடுமையான உழைப்புக்கான உத்வேகம், நாட்டு மக்களின் மனங்களில் கொழுந்துவிட்டு எரிய வேண்டும்’ என்ற கலாம். இதை விவரிக்க எழுதிய புத்தகம்தான்,Ignited minds (தூண்டப்பட்ட மனங்கள்).

கண்ணான கணினியே

அரசாங்க வேலைகள் அனைத்தையும் கணினிமயமாக்கும் பணி, குடியரசுத் தலைவர் மாளிகையில் செயல்படுத்தப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன நடக்கிறது என்பதை நேரடியாக குடியரசுத் தலைவர் மாளிகையிலேயே அறியும் கணினிப் புரட்சியைத் தனது மேற்பார்வையில் நிகழ்த்தினார் கலாம்.

குர்ஆனின் குரல்

தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில், ‘இறைவா உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ என்கிற வரிகள் அவருக்குப் பிடித்த வரிகள்.

மாணவர்களுக்காக

மாணவர்கள், தங்களைத் தாங்களே சிறப்பாக வடிவமைத்துக்கொள்ள You Are Born to Blossom என்ற புத்தகத்தை அருண் கே.திவாரி உடன் இணைந்து எழுதினார்.

புதிய உலகம்

நவீன தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் நமது பாரம்பரிய தொழில்களைப் புதிய பரிமாணத்துக்குக் கொண்டுவர முடியும் என்பது குறித்துப் பேசிய புத்தகம், Envisioning on Empowered Nation. அறிஞர் சிவதாணுப்பிள்ளையோடு இணைந்து எழுதிய நூல் இது.

சுதேசி நாயகன்

இந்திய பாதுகாப்புத் துறையின் ஆய்வுக்கு வெளிநாட்டுக் கருவிகள், பொருள்கள் பயன்படுத்தப்பட்டதை நிறுத்தி, முழுக்க உள்நாட்டுப் பொருள்கள் மூலம் ஆய்வுப் பணிகளைச் செய்யவைத்தார்.

இயற்கையுடன் இணைந்தார்

‘தூக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு’ என்ற கலாம், 2015 ஜூலை 27ஆம் தேதி, ஷில்லாங் நகரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களுடன் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்தார். கலாமைத் தன்னோடு இணைத்துக்கொண்டது இயற்கை.

தன்னம்பிக்கைத் தமிழன்

என் இத்தனை பணிகளுக்கும் தன்னம்பிக்கைத் தந்தது, தாய்மொழியான ‘தமிழ்தான்’ என்று பெருமையுடன் சொல்வார்.

நேர்மையின் நாயகன்

அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் இன்றும் எளிய பொருளாதாரத்திலே உள்ளனர். இதுவே அவரின் நேர்மைக்குச் சான்று இது.

விமான விபத்து

2001 செப்டம்பர் 30ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தப்பினார். அப்போது, மயக்க மருந்து கொடுக்கப்பட்டபோது, தனக்கு ஒரு கனவு வந்ததாகவும், அந்தக் கனவில் ஒரு பாலைவனத்தில், மாமன்னர் அசோகர், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஆபிரகாம் லிங்கன், காலிப் உமர் ஆகியோரைச் சந்தித்ததாகவும் சொன்னார்.