Published:Updated:

`748 ஸ்டால்கள்; கீழடிக்கு சிறப்பு அரங்கு!’ 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி ஹைலைட்ஸ்

சென்னை புத்தகக் காட்சி!
சென்னை புத்தகக் காட்சி!

இந்த முறை கீழடி அகழ்வாராய்ச்சிகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 'கீழடி அகழாய்வு தொல்லியல் கண்காட்சி' அமைக்கப்பட்டிருக்கிறது.

மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு, புத்தகம். வெவ்வேறு காலங்களில் நடந்த நிகழ்வுகளை, வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை, தத்துவங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பவை புத்தகங்கள். நாவல், சிறுகதைகள், அரசியல் நூல்கள், தத்துவ நூல்கள் எனக் கலவையாகப் பல வகையான புத்தகங்களை நமக்கு அறிமுகப்படுத்துவது புத்தகக் கண்காட்சிகள்தான். சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்றைய தினம் தொடங்கி, வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை புத்தகக் காட்சி!
சென்னை புத்தகக் காட்சி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். புத்தகக் கண்காட்சியை 'பபாசி' அமைப்பு நடத்திவருகிறது. இம்முறை, புத்தகங்கள் மட்டுமின்றி குறும்படங்களுக்கென்றும் சில கடைகள் ஒதுக்கியுள்ளனர். இந்த புத்தகக் கண்காட்சியில், அனைத்துப் புத்தகங்களும் 10 சதவிகித தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

இந்த வருட புத்தகக் காட்சியில், வாசகர்களுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, 'பபாசி' செயலாளர் முருகனிடம் பேசினோம். "கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 'கீழடி அகழாய்வு தொல்லியல் கண்காட்சி' வாசகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளோம். அந்த அரங்கில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான பொருள்களைக் கண்காட்சிக்கு வைத்துள்ளோம்.

மேலும், வாசகர்களைக் கவரும் விதமாக, மெய்நிகர் காட்சிக்கூடம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் (Virtual Reality ). இதன் மூலம் 3D அருங்காட்சியகத்தை எளிமையாகக் காணலாம். தமிழகத் தொல்லியல் துறை, கீழடி குறித்து சிறப்புப் புத்தகம் வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகம், கண்காட்சி அரங்கில் கிடைக்கும். புகழ்பெற்ற மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் செய்த திருவள்ளுவர் மணல் சிற்பம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ரசாயனப் பொருள்கள் எதுவும் கலக்காமல் செய்த மணல் சிற்பம் அது" என்று கூறினார்.

சென்ற வருடம் 805 ஸ்டால்களோடு புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்த ஆண்டு, 748 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "முடிந்த அளவு ஸ்டால்களை குறைக்கப் பார்த்தோம். 748 என்பது நாங்கள் கணக்கிட்டதைவிட அதிகம். ஒவ்வோர் ஆண்டும் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாசகர்களைத் திருப்திப்படுத்தும் அளவிற்கு ஸ்டால்களை உருவாக்கியுள்ளோம்" என்றார்.

முதல்நாள் புத்தகக் கண்காட்சியில், புதுப்புத்தக வாசனையுடன் பரபரப்பாக பதிப்பகங்கள், பதிப்பித்த புத்தகங்களைக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தன. வாசகர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் புத்தகக் காட்சிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு