Published:Updated:

எப்படியெல்லாம் விவசாயத்த காப்பாத்தியிருக்காங்க தெரியுமா?” - ’விதைத் தாய்’ வம்பாளம்மாவின் கதை! #MustRead

எப்படியெல்லாம் விவசாயத்த காப்பாத்தியிருக்காங்க தெரியுமா?” - ’விதைத் தாய்’ வம்பாளம்மாவின் கதை! #MustRead
எப்படியெல்லாம் விவசாயத்த காப்பாத்தியிருக்காங்க தெரியுமா?” - ’விதைத் தாய்’ வம்பாளம்மாவின் கதை! #MustRead

வரிடம் தெரியும் ஏதோ ஒரு வசீகரத் தன்மை, யாராக இருப்பினும் அவரை ’அம்மா’ என்று அழைக்க வைத்துவிடுகிறது. சென்னையில் நடந்துவரும் தேசிய விதைப் பன்மையத் திருவிழாவில் பல சூழலியல் விஞ்ஞானிகள், அறிஞர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டிருந்த அதே மேடையில் மண் மணம் மாறாத முகத் தன்மையுடன் அவரும் அமர்ந்திருந்தார். அனைவரும் சூழலும் இயற்கை விவசாயமும் பாரம்பர்ய விதைகள் குறித்தும் பேச இருந்த அந்த மேடையில் அந்தப் பெண்மணியின் நாட்டுப்புறக் குரலில் ஒரு பாடல் இடம்பெற்றது.

“இ ஜனா கொண்டிதோடி
இ ஜனா கி பெலதி கொட்டி ரெய்த்திரிவே...” என்ற வரிகளில் தொடங்குகிறது அந்தக் கன்னடப் பாடல்.

விவசாயத்துக்கான உழவர்களின் உழைப்பும், அதற்கு பாரம்பர்ய விதைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வதே அவர்களுக்கும் விவசாயத்துக்கும் தரும் மதிப்பு என்று அந்த பாடல் அமைந்தது.
பாடி முடித்த அந்தப் பெண்மணியும் தனது ஊர்ப்பக்கம் அதையேதான் சுமார் 30 ஆண்டுகளாகக் கொள்கையாகவே பின்பற்றிச் செய்துவருகிறார். 

அவரின் பெயர் வம்பாளம்மா. தமிழக எல்லையில் இருக்கும் ஓசூர் அருகே உள்ள தளி கிராமத்தைச் சேர்ந்தவர். முப்பது வருடங்களுக்கு முன்புவரை அதிக விளைச்சலுக்காக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் என... எல்லோரையும்போலவே தானும் விவசாயம் செய்துவந்துள்ளார். மண் உயிர்த்தன்மை இழந்து கெட்டிப்பட்டுப் போகும் நிலைக்குச் சென்றதும் சற்றே சுதாரித்துள்ளார். பிறகுதான் இவருக்கு இயற்கைமுறை விவசாயம் பற்றிய சிந்தனைகள் கிடைத்துள்ளன. 
 

அதையடுத்து, வம்பாளம்மா செய்ததெல்லாம் நாம் 'ஆ'வென வாய்பிளந்து ஆச்சர்யத்தில் பார்க்கும் ரகம். ”தினமும் தனது ஆடு மாடுகளைக் காட்டுக்கு மேய்ப்பதற்கு அழைத்துச் செல்பவர், அங்கே கிடைக்கும் விதைகளைச் சேகரித்துவந்து தனது நிலங்களில் விதைத்துள்ளார். அவரது ஆடு மாடுகள் காடுகளில் பழங்களை உண்டால் பழத்தின் விதைகள் அவற்றின் சாணத்துடன் வெளியேறும்வரை காத்திருந்து அதனையும் எடுத்து மண்ணில் விதைப்பார். இயற்கை விவசாயம் பற்றிப் படித்ததில்லை; எல்லாம் அவர் பட்டறிவுதான். அதன் வழியாத்தான் தன் நிலத்துக்கான சரியான திட்டமிடல் அவருக்குக் கிடைத்தது. எப்படியெல்லாம் விவசாயத்தைக் காப்பாத்தியிருக்கிறார் தெரியுமா” என்கின்றனர் இந்த முப்பது வருடங்களாக அவருடன் பயணிப்பவர்கள். தனியொரு மனிஷியாக அவர், காடுகளிலும் நிலங்களிலும் தேடிச் சுமார் நூறு பாரம்பர்ய ரக விதைகளை இன்றுவரை சேகரித்துள்ளார். 
 
கன்னடமும் தெலுங்கும் கலந்து அவர் தனது முப்பது வருட பயணத்தை விவரிக்கையில், “முதலில் ஒரு சின்ன பரப்பில்தான் என்னுடைய இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன். ரசாயன முறை விவசாயத்தில் கிடைப்பதைவிட எனக்கு அதிக ஈட்டு இந்த முறையில் கிடைத்தது. அப்போதுதான் எனக்கு இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்வதன் முக்கியத்துவம் தெரிந்தது. என்னைப்போன்று என் கிராம மக்களும் பயன்பெற வேண்டும் என நினைத்தேன். எல்லோருக்கும் விதைகள் தரத் திட்டமிட்டேன். ஆனால், நான் அவர்களிடம் வைத்த கோரிக்கை ஒன்றே ஒன்று மட்டும்தான். நான், அவர்களிடம் ஒரு விதை தந்தால்... அதற்கு மாற்றாக அவர்கள் எனக்கு இரண்டு விதைகள் தரவேண்டும் என்பதுதான் அந்தக் கோரிக்கை. முதல் வருடம் அவர்களால் தரமுடியவில்லை. ஆனால், அடுத்தடுத்த ஈட்டில் விதைகளைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்கள். இப்போது எங்கள் கிராமத்தில் எல்லோரும் இயற்கை முறை வேளாண்மையில்தான் ஈடுபடுகிறோம்” என்றார் புன்னகைத்தப்படியே. 

இத்தனையும் தனியொருத்தியாய் நிகழ்த்தியிருக்கும் வம்பாளம்மாவுக்கு வயது 88. தனக்கு அடுத்து மூன்று தலைமுறைகளைக் கண்டுவிட்டார். அவர்களும், தற்போது இவருக்கு விவசாயத்தில் உதவியாக இருந்துவருகின்றனர். “எனக்கு ஒரு நரைமுடிகூட இல்லை பாருங்க. உடலும் உழைப்புக்கு ஏற்ற மாதிரி வலுவா இருக்கு. காரணம், இயற்கையோட இணைந்து வாழறது. அது என்றைக்குமே நம்மைக் கைவிடாது” என்கிறார் கரங்களின் வலுவைத் தட்டிக் காண்பித்தபடி.

வம்பாளம்மாவை ’விதைத் தாய்’ என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.
பெண்ணியம் என்பது சுயத்தையும் சூழலையும் அதன் சுதந்திரப் போக்கிலேயே உணர்ந்து வாழ்வியலைக் கட்டமைத்துக்கொள்வது. அந்த வகையில் நம் வம்பாளம்மா நிச்சயம் ஒரு சூழலியல் பெண்ணியவாதிதான்.