Published:Updated:

'பத்தாம் வகுப்புகூட தாண்டாத, என் மாத வருமானம் லட்சத்துக்கும் மேல்!' - 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை #SuccessWoman

'பத்தாம் வகுப்புகூட தாண்டாத, என் மாத வருமானம் லட்சத்துக்கும் மேல்!' - 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை #SuccessWoman
'பத்தாம் வகுப்புகூட தாண்டாத, என் மாத வருமானம் லட்சத்துக்கும் மேல்!' - 'சுயதொழில்' ராஜேஸ்வரியின் கதை #SuccessWoman

ல சராசரி பெண்கள்போல கணவன், குடும்பம் என இருந்தவர்தான் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றைச் சேர்ந்த ராஜேஸ்வரி ரவிக்குமார். பிற்காலத்தில் சத்தான, ஆரோக்கியமான, சுகாதாரத்தை முன்னிறுத்தும் 'சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ்' கம்பெனியை ஆரம்பித்து, வெற்றிகரமான தொழிலதிபராக சிறகடித்துவருகிறார். அந்தப் பயணத்தை நினைவுகூர்கிறார்.

''டாக்டருக்குப் படிக்கணுங்கிறதுதான் என் சின்ன வயசு ஆசை, கனவு. வீட்டுச் சூழல் காரணத்தால் பத்தாம் வகுப்போடு நிக்க வேண்டியதாப்போச்சு. குறிப்பிட்ட வயசு வந்ததும் கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. 'பத்தாவதுகூட தாண்ட முடியலையே'னு அவ்வளவு ஆதங்கப்பட்டேன். அதேநேரம் நம் அம்மா மாதிரி வீட்டோடு, சமையல் அறையிலேயே இருந்திடக்கூடாது என்பதிலும் தீவிரமாக இருந்தேன். எந்த விஷயத்துக்கும் பொதுஅறிவு ரொம்ப முக்கியம். நியூஸ் பேப்பர், புத்தகங்கள் என நிறைய விஷயங்களைத் தேடிப் பிடிச்சு படிப்பேன். அப்படிப் படிக்கும்போதுதான் இயற்கை உணவுச் சார்ந்த, மருத்துவம் சார்ந்த செய்திகள் கண்ணில் பட்டுச்சு. என்னை அறியாமல் அதன்மேல் ஈர்ப்பு வந்துச்சு. அதில் ரொம்ப அக்கறைக் காட்ட ஆரம்பிச்சேன். நியூஸ் பேப்பரில் படிக்கும் விஷயங்களை கட் பண்ணி ஃபைல் பண்ண ஆரம்பிச்சேன். அதை படிச்ச பலனா, பலவித நவதானியங்களில் முதன் முறையா கஞ்சி செய்து என் கணவருக்குக் கொடுத்தேன். அதுதான் எல்லாவற்றும் ஆரம்பம். 

என் கணவருக்கு எதுவுமே சுவையாகவும் சரியாகவும் இருக்கணும். அதில் ஏதாவது குறை இருந்தா வெளிப்படையா சொல்லிடுவார். சில நேரம் 'என்ன இந்த மனுஷன் இப்படி முகத்துல அடிச்ச மாதிரி சொல்றாரே'னு வருத்தப்பட்டு அழுதிருக்கேன். அப்படிப்பட்டவர், அந்த நவதானிய கஞ்சியைக் குடிச்சுட்டு, 'ஆஹா... ஓஹோ'னு பாராட்டி சர்டிஃபிக்கேட் கொடுத்தார். அந்தப் பாராட்டு சிறுதானிய சமையல்ல அடுத்தடுத்து  புது வகைகளை அறிமுகம் செய்யும் ஆர்வத்தை தூண்டுச்சு. சிறுதானிய சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்கிட்டு வந்து சுத்தப்படுத்தி, அரைச்சு பாக்கெட்டுகளில் அடைச்சு விற்கலாமேனு தோணுச்சு.

என் கணவர் டிடர்ஜண்ட் சோப்பு டீலரா வேலைப் பார்க்கிறதால், வீட்டுக்கு அடிக்கடி ஆள்கள் வந்து சோப்பு வாங்கிட்டுப்போவாங்க. அப்படி வரும் பல பெண்கள், 'அக்கா உங்களுக்குத் தெரிஞ்சு வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க'னு கேட்டாங்க. நம்ம சமையல் விஷயத்தையே கையில் எடுக்கலாமேனு தோணுச்சு. தேனி, ராமநாதபுரம், கோவை போன்ற இடங்களிலிருந்து சிறுதானிய உணவு செய்றதுக்கு தேவையான பொருள்களை வாங்கிட்டு வந்து ரெடி பண்ணி அக்கம்பக்கத்து வீடுகளில் விற்க ஆரம்பிச்சேன். நிறைய பேர் விரும்பி வாங்கினாங்க. ஆர்டர்களும் வர ஆரம்பிச்சுது'' என்ற ராஜேஸ்வரி, புன்னகையுடன் தொடர்ந்தார். 

''இந்தத் தொழிலை முறைப்படி புரிஞ்சு செய்வோம்னு தஞ்சாவூரில் இருக்கிற INDIAN INSTITUTE OF GROPP PROCESSING TECHNOLOGY (IICPT)-க்குப்போய் பயிற்சி எடுத்துக்கிட்டேன். உணவுப் பொருள்களுக்கான விற்பனை விதிமுறைகள், தொழிலை விரிவுப்படுத்த மிஷின் வாங்குவதற்கான நடைமுறைகள், ஃபுட் புராடெக்டுகளை பேக்கிங் பண்ணினால் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள், அரசு அனுமதி போன்றவற்றைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்படித்தான் 'சுகா டயட் நேச்சுரல் ஃபுட்ஸ்' ஆரம்பிச்சது. ஏழு வருஷமா பிசினஸ் பண்ணிட்டிருந்தாலும், நாலு வருஷம் முன்னாடிதான் அரசு ஒப்புதல் கிடைச்சு மற்ற மாவட்டங்களுக்கும் டெலிவரி கொடுத்துட்டிருக்கோம். 

நீண்ட நாள் வைத்திருக்கும் உணவுப் பொருள்கள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்ககூடியவை. அதனால், மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டும் வரும் வகையில் பவுடர் வடிவில் எங்கள் உணவுப் பொருள்களை பாக்கெட் செஞ்சு நியாயமான விலையில் விற்பனை செய்துட்டிருக்கோம். நாம் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு வயதுக்கும் ஏற்ற வகையில் சத்துகள் உணவில் இருக்கணும். அதில் நாங்கள் கவனமா இருக்கோம். டயட் கஞ்சியைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எனத் தனித்தனியே தயாரிக்கிறோம். ஒவ்வொரு பாக்கெட்டிலும் அதில் என்னென்ன உணவுப் பொருள்களைச் சேர்த்திருக்கோம்னு கொடுத்திருப்போம். 

வரகு மற்றும் வெந்தயம் சேர்த்து செய்த ஒரு பொங்கல் மிக்ஸை, பிரீ க்ளினிக்கல் ரிப்போர்ட்டுக்காக, சாஸ்த்தா யுனிவர்சிட்டியில் கொடுத்தோம். இந்த உணவை சுகர் ஏற்றப்பட்டிருந்த எலிக்குக் கொடுத்திருக்காங்க. சில நாள்களில் அந்த எலிக்கு சுகர் குறைஞ்சிருக்கு. அதனால், இந்த உணவை மனிதர்களுக்கு சுகரை கன்ட்ரோல் செய்ய பயன்படுத்தலாம்னு சான்றிதழ் கொடுத்தாங்க. அதேமாதிரி அண்ணா பல்கலைக்கழகத்தின் நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன் நியூட்டிரிஷன் ரிப்போர்ட்டும் வாங்கியிருக்கேன்'' என்கிற ராஜேஸ்வரி, சில ரெசிப்பிகளின் பயன்களையும் குறிப்பிட்டார். 

''கொள்ளு, பார்லி, சோயா ஆகியவற்றைப் பொடியாக தயார்செய்து விற்கிறோம். இதை இரவில் கஞ்சியாகக் குடிக்கும்போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் நீங்கும். மிளகு, சீரகம், இஞ்சி, உப்பு என கஞ்சி வகைகளுக்கும், அடை செய்வதற்கு தேவையான விஷயங்களை அந்த பாக்கெட்டுகளில் சேர்த்தே கொடுத்திருக்கிறோம். நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐநூறு ரூபாய் வரை இந்த உணவுப் பொருள்களை பாக்கெட் செய்து விற்கிறோம். சிறியதாக ஆரம்பிச்ச இந்தக் கடையில் இப்போ பத்து பேர் வேலைப் பார்க்கிறாங்க. மாசம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியுது. நமக்குத் தெரிஞ்ச சமையலை மத்தவங்களுக்கு பயன்படுற மாதிரி எப்படி கொடுக்கலாம்னு யோசிச்சா அதுதான் பிஸ்னஸ் சக்சஸ் டெக்னிக். இதுதான் நம் வாழ்க்கைனு வீட்டுக்குள்ளேயே இருந்துடாம வாசலுக்கு வந்ததால்தான் இன்னிக்கு வெற்றிப்படிகளில் நின்னுட்டிருக்கேன்'' என்கிறார் வெற்றிப் பெண்மணி ராஜேஸ்வரி ரவிக்குமார். 

அடுத்த கட்டுரைக்கு