Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -10

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

தொம்மைக் குஞ்சாச்சியின் வீட்டில் சனங்கள் கூடியிருந்தனர். இளந்தாரிகள் சேர்ந்து பந்தலைப் போட்டுக்கொண்டிருந்தனர்.

கடவுள்... பிசாசு... நிலம்! -10

தொம்மைக் குஞ்சாச்சியின் வீட்டில் சனங்கள் கூடியிருந்தனர். இளந்தாரிகள் சேர்ந்து பந்தலைப் போட்டுக்கொண்டிருந்தனர்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

தொம்மை குஞ்சாச்சிக்கு சேடம் இழுத்துக்கொண்டிருந்தது. அவள் படுத்துக்கிடக்கும் வேப்பமர வாங்கைச் சுற்றி ரத்த உருத்துக்காரர்கள் நின்றனர். குஞ்சாச்சியின் வாயில் பாலூற்றினார்கள். அம்மாவின் கையைப் பிடித்தபடி அருகில் நின்றேன். அவளது உடல் சூம்பிய மாம்பழத்தைப்போல வாடிக்கிடந்தது. உடல் குளிர்ந்து கண்கள் சொருகிக்கொண்டுபோயின. தொம்மை குஞ்சாச்சியின் வாயில் அம்மாவும் பாலூற்றினாள். அவளின் கடைவாயில் பால் வழிய, கண்கள் கூரையில் நிலைகுத்தி நின்றன. அசையாது வெளிறிய பகலைப்போலிருந்த குஞ்சாச்சியின் கண்மடல்களை அம்மா வலது உள்ளங்கையால் மேலிருந்து கீழ் நோக்கி அழுத்தி மூடினாள். நள்ளிரவின் தரையில் கமுகென எழுந்த ஒப்பாரி, `தொம்மை’ என்றழைக்கப்படும் விசாலாட்சிப் பிள்ளையின் மறைவை வெளியெங்கும் எழுதிற்று.

நித்திரைக் கண்களோடு ஊரிலுள்ள ஆண்கள் சிலர் வந்தமர்ந்தனர். அம்மா குஞ்சாச்சியின் முகத்தை மெல்லிய ஈரச்சீலையால் துடைத்து, நெற்றியில் நீறு பூசினாள். தலைமாட்டில் வெள்ளிக்குத்து விளக்கு ஏற்றிவைத்தனர். விடிவதற்குள் பந்தல் போட்டுவிட வேண்டுமென அங்கிருந்தவர்கள் கதைத்துக்கொண்டிருந்தனர். பூட்டம்மாவுக்கு இப்போதே தகவலைச் சொல்லிவிட்டால் விடியவே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிடச் சரியாக இருக்குமென்றாள் அம்மா. பூட்டம்மாவின் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் கணியன் தொலைத் தொடர்பு நிலையத்துக்கு அழைத்துச் சொல்ல வேண்டும். `நகுலன் அண்ணாவிடம் போய் இந்தத் தகவலைச் சொல்’ என அனுப்பிவைத்தாள். சாமம் மூன்று மணியிருக்கும். சைக்கிளை உழக்கிக்கொண்டு நகுலன் அண்ணாவின் முகாமை நோக்கிப் போனேன்.

பனிபொழியும் இருளில் எதுவுமற்றுக் கிடக்கும் வெளியினில் நிலத்தின் சயனம் மகிழ்ச்சியைத் தந்தது. வீதியைக் குறுக்கறுத்து காட்டுக்குள் போகும் பாம்பொன்றின்மீது சைக்கிள் ஏறி இறங்கியதுபோலோர் எண்ணம். தொம்மை குஞ்சாச்சியின் இறுதி நொடிகளில் அவளின் கடைவாயில் வழிந்த பாலின் வாசனை என்னைவிட்டு நீங்க மறுக்கிறது. சைக்கிளை முகாமுக்கு வெளியே விட்டேன். பூட்டிக்கிடந்த தகரக் கதவைத் தட்டினேன். யாரும் திறப்பதாயில்லை. சில நிமிடங்கள் கழித்து உள்ளிருந்து ஒரு குரல் “நில்லுங்கோ வாறன்.’’ வந்தவரின் முகத்தில் நித்திரையறுந்த தடயமில்லை. அப்போதுதான் குளித்து முடித்து தேநீர் அருந்திய உற்சாகத்தோடு இருந்தார். என்னைப் பார்த்து “என்ன விடயம் சொல்லுங்கோ...” என்றார்.

“நகுலன் அண்ணா நிக்கிறாரோ, அவரிட்ட ஒரு தகவல் சொல்லிவிடச் சொல்லி அம்மா அனுப்பினவா, கொஞ்சம் அவசரம்.”

நாங்கள் கதைத்தது நகுலன் அண்ணாவுக்குக் கேட்டிருக்க வேண்டும். ``அவனை உள்ள கூட்டிக்கொண்டு வா’’ என்று குரல் கொடுத்தார். உள்ளே சென்றதும் எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்திவைத்துவிட்டு, “சொல்லு ஆதீரன், திருப்பள்ளியெழுச்சி படிச்சு சுவாமியை எழுப்புற நீ, இண்டைக்கு எங்களை எழுப்ப வந்தனியே.” நக்கலாகக் கேட்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -10

“எங்கட தொம்மை குஞ்சாச்சி மோசம் போய்ட்டா. யாழ்ப்பாணத்தில இருக்கிற பூட்டம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரியப்படுத்தவேணும்.”

“கொமினிக்கேஷன் நம்பர் உனக்குத் தெரியுமோ?”

“ஓம்.”

“நம்பரைச் சொல்லு.”

நான் சொல்லியதை எழுதி முடித்து மீண்டும் ஒரு தடவை சொல்லுமாறு கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டார். எழுதிய இலக்கத்தைப் போராளி ஒருவரிடம் கொடுத்துத் தகவலைத் தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

“அம்மா வேற எதாவது சொல்லிவிட்டவாவா?”

“இல்லை. இதுமட்டும்தான். நான் வெளிக்கிடுறன்.”

“இரடா, நானும் வாறன்’’ என்றார்.

நகுலன் அண்ணா மிக வேகமாக சைக்கிளை மிதித்தார். பின்னாலிருந்த எனக்கு பயமாகவிருந்தது. பனி, காதுக்குள் இறங்கி இரைந்தது. வீதியின் ஒவ்வொரு வளைவிலும் வேகம் பெருக்கெடுத்தது. நிலம் விடியத் தொடங்கும் முகாந்திரங்கள் தெரியத் தொடங்கின. மெல்ல மெல்ல வெளிச்சம் ஊடுருவத் தொடங்கியிருந்தது.

தொம்மைக் குஞ்சாச்சியின் வீட்டில் சனங்கள் கூடியிருந்தனர். இளந்தாரிகள் சேர்ந்து பந்தலைப் போட்டுக்கொண்டிருந்தனர். முகத்தீட்டு வெள்ளைக் கட்டும் ‘கட்டாடி’ துரையரை அழைத்துவரச் சென்றிருந்தார்கள். நகுலன் அண்ணா குஞ்சாச்சியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பறை இசைப்பவர்கள் வந்ததும் அவர்களுக்குத் தோதான இடமொன்றில் பாய் விரிக்கப்பட்டது. புலரத் தொடங்கும் பொழுதில் பறையொலி இசைத்தது. பறையிசைக்கும் மாரிமுத்தண்ணாவின் பெரிய மீசையும், அவரது வெள்ளைநிறச் சட்டையும், வெற்றிலைச் சப்பலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பறையிசையும் ஒப்பாரியும் இழைந்து நெய்ய மரண வீட்டின் கோலம் பெருத்திருந்தது. ஒப்பாரியின் லயம் பிசகாமல் குஞ்சாச்சியைச் சூழ்ந்திருந்த பெண்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

முகத்தீட்டு வெள்ளைக்கட்டும் துரையர் வந்ததும், பந்தலுக்கு நடுவில் வெள்ளைத்துணி கட்டினார். அந்தத் துணிக்குக் கீழே குஞ்சாச்சியைக் கொண்டுவந்து கிடத்தினார்கள். மாலை கட்டுவதற்காகப் பூக்களை ஆய்ந்துவந்த குமரிகள், வீட்டின் உள்ளறையில் நார்களைச் சுழற்றிக்கொண்டிருந்தனர். குஞ்சாச்சிக்கு மாலை கட்டுவதற்காகப் பூக்கள் குவிந்தன. அம்பிகா இரண்டு பை நிறைய பூக்களோடு வந்தாள். என்னைப் பார்த்தும் பார்க்காததைப்போலவே வீட்டுக்குள் நுழைந்தாள். அவளுடைய கூந்தலும் நடையும் வடிவு பொருந்தி பின்னியிருந்தன.

அம்மாவை அழைத்த நகுலன் அண்ணா, “எதாவது உதவி வேணுமா அக்கா?” என்று கேட்டார். “யாழ்ப்பாணத்துக்குத் தகவல் போயிருந்தால் சரி” என்றாள்.

“பெடியள் போனடிச்சு அந்தக் கொமினிக்கேஷனுக்கு சொல்லியிருப்பாங்கள் அக்கா” நகுலன் அண்ணா வெளிக்கிட்டுச் சென்றார்.

ஏ-9 பாதை திறக்கும் நேரம் நெருங்கியது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நேற்றிரவு தரித்து நின்ற வாகனங்கள் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல ஆயத்தமாகின. பாதை திறக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கொழும்பு வரை செல்லும் வாகனங்கள் வரத் தொடங்கியிருந்தன. பூட்டம்மாவும் அக்காவும் ஒரு நீலநிற ஓட்டோவில் வந்திறங்கினர். வீட்டின் படலையைச் சனங்கள் நிறைத்தனர். பறையொலி ஓங்கி எழுந்தது.

எத்தனையோ ஆண்டுகள் கழித்து தன்னுடைய சொந்த கிராமத்தின் காற்றை முகர்ந்தாள் பூட்டம்மா. தன்னுடைய சகோதரியின் பூதவுடல் மீது அழுது புரண்டாள். எங்கள் குலத்தின் தலைமகள் மாரடித்து ஒப்பாரி பாடத் தொடங்கினாள். தலைமாட்டில் கூடுபத்தி எரிந்துகொண்டிருந்த குத்துவிளக்குக்கு அக்கா எண்ணெய்விட்டு திரியைச் சிறிதாக வெளித்தள்ளினாள். பூட்டம்மாவை ஒரு கதிரையில் இருத்திவிட்டு, அவளது காலடியில் அம்மா அமர்ந்துகொண்டாள். நான் பூட்டம்மாவுக்கு அருகில் போய் நின்று கொண்டேன். தொம்மைக் குஞ்சாச்சியின் நெற்றியில் கிடந்த திருநீற்றுக் குறிகள் காய்ந்துபோயிருந்தன. அவளின் முகம் இப்போது மலர்ந்திருந்தது. பறையிசைப்பவர்களோடு அமர்ந்திருந்த நாகப்பர் முகத்தில் கள்வெறி பல்லற்ற பாம்பாகச் சுருண்டிருந்தது. குஞ்சாச்சியை நினைத்து நினைத்து விசும்பி மூக்குச் சிந்தினார். மாரிமுத்தண்ணாவும் நாகப்பரும் எழுந்து சென்று மறைவில் நின்று கள் குடித்தனர். குஞ்சாச்சியைப் பற்றி அவருக்குள் எழுந்த பாடலைக் குரலெடுத்துப் பாடினார்; பறை மேளத்தை இசைக்கத் தொடங்கினார். தொம்மை குஞ்சாச்சியின் பூதவுடலில் இலையான் இருந்துவிடாமல் வேப்பிலை கொண்டு விசுக்கிக்கொண்டிருந்தாள் அக்கா.

தொம்மை குஞ்சாச்சி பிறவி ஊமை. திருமணம் செய்யாது வாழ்ந்துவந்தாள். அவளின் வயோதிக காலங்கள் தனிமையிலானது. யாருக்கும் தீங்கு நினையா மனம்கொண்டவள். எட்டுப்பரப்பு காணியில் நிற்கும் தென்னைமரங்களிலிருந்து வருகிற வருவாய் அவளுக்குப் போதுமானதாக இருந்தது. வீட்டிலேயே தோட்டம் செய்து காய்கறிகளைச் சுற்றியுள்ள வீடுகளுக்கும் கொடுத்தனுப்புவாள். தொம்மைக் குஞ்சாச்சி என்னைத் தூக்கிவைத்திருக்கும் பழைய புகைப்படமொன்று எங்களுடைய வீட்டில் இருக்கிறது. குஞ்சாச்சிக்கு அருகில் போனேன். அவளுடைய கால்களில் ஓடிக்களைத்த ரேகைகள் நம் நிலத்தின் பாதைகளாகத் தோன்றின. அம்மா விசும்பிக்கொண்டிருந்தாள். பூட்டம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். அக்காவும் அம்பிகாவும் அருகருகே பாயில் அமர்ந்திருந்தனர். அம்பிகா அணிந்திருந்த பச்சை நிறச் சட்டையில் சின்னஞ்சிறு வண்டைப்போலப் புள்ளிகள் பரவியிருந்தன. நான் அவளை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் நொடிகளில் அவளின் அழகு துளித்துளியாகப் பெருகுமென்று தெரிந்துகொண்டேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! -10

வெளியூரிலிருந்து சனங்கள் வந்துகொண்டேயிருந்தனர். அம்மாவுக்காக நிறையப் போராளிகள் வந்துபோயினர். வருகிற எல்லோருக்கும் ஆனைச் சோடா வாங்கிக் கொடுக்குமாறு அம்மா சொல்லியிருந்தாள். ஈமக் கிரியைகளுக்காக ஐயர் வருவதற்குச் சரியாகப் பன்னிரண்டு மணியாகுமெனத் தெரிந்தது. சுடுகாட்டில் விறகு வெட்டி அடுக்கப்பட்டது. தொம்மைக் குஞ்சாச்சிக்கு அளவான சவப்பெட்டி அப்போதுதான் வந்திருந்தது. முதலில் ஒன்றை வாங்கி வந்தபோதும் நீளம் அதிகமாக இருந்ததால் பூட்டம்மா வேண்டாமென்று சொல்லித் திருப்பி அனுப்பினாள். பெட்டியினுள்ளே குஞ்சாச்சியைத் தூக்கிவைத்தார்கள். குளிப்பாட்டி முடித்ததும், உடுத்துவதற்கான சீலையைக் கிளிநொச்சி சென்று வாங்கிவந்தார்கள். எதிலும் குறைவிடக் கூடாதென்கிற பூட்டம்மாவின் உத்தரவில் எல்லாமும் நடந்துகொண்டிருந்தது.

உற்றார் ஆருளரோ – உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல்லால் நமக்கு
உற்றார் ஆருளரோ.

பறையொலிக்கு மத்தியில் நாகப்பர் திருஅங்கமாலை பதிகமொன்றைக் குரல் தழுதழுக்கப் பாடினார். கள்வெறியில் அவரின் சோகம் இன்னும் கூடிவந்தது. அப்போது ஒரு பிக்கப் வந்துநின்றது. அதிலிருந்து போராளிகள் சிலர் இறங்கினர். அவர்களோடு நடந்து வந்துகொண்டிருந்தவரைக் கண்டு அம்மா கதறி அழுதுகொண்டு ஓடினாள். பவி மாமா, அம்மாவைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்வதைக் கண்டேன். யாழ்ப்பாணத்தில் ராணுவம் தேடிய பவி மாமா, கைத்துப்பாக்கியை இடுப்பில் கட்டியபடி மிடுக்குடன் தொம்மைக் குஞ்சாச்சியைத் நோக்கி நடந்துவந்தார். நாகப்பர் பாடுவதை நிறுத்திவிட்டு அக்காவைக் கூப்பிட்டுக் கேட்டார்.

“ஆரடி வந்திருக்கிறது, தமிழ்ச்செல்வனா?”

“இல்லை, எங்கட பவி மாமா.”

பறையொலிக்கு நடுவே நாகப்பர் அதிர்ந்துபோய்,

“கடவுளே... இவன் பவியும் இயக்கமெண்டு எங்களுக்குத் தெரிய தொம்மை செத்துப்போகவேண்டி இருக்கு” என்று பகிடியாகச் சொன்னார்.

(நீளும்...)