Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -11

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

ராணுவத்தினர் மாணவத் தலைவரை அழைத்துச் சென்று ஏதோ கதைக்கின்றனர். ஆனால், அவர் மறுத்து மீண்டும் வந்து கோஷங்களை எழுப்புகிறார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -11

ராணுவத்தினர் மாணவத் தலைவரை அழைத்துச் சென்று ஏதோ கதைக்கின்றனர். ஆனால், அவர் மறுத்து மீண்டும் வந்து கோஷங்களை எழுப்புகிறார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

நாகப்பர், பவி மாமாவோடு கதைத்துக்கொண்டிருந்தார். அண்ணாவும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்துசேர்ந்திருந்தான். தொம்மைக் குஞ்சாச்சிக்கான ஈமக்கிரியைகள் தொடங்கின. கொள்ளிவைக்கும் உரிமையை அண்ணாவிடம் கையளித்தாள் பூட்டம்மா. குஞ்சாச்சியின் பூதவுடலைத் தூக்கிக்கொண்டு இலுப்பையடி சுடலைக்குச் சென்றார்கள். பெண்கள், வீட்டின் படலை வரை அழுது முடித்து ஓய்ந்தனர். அம்மா என்னைச் சுடலைக்குப் போக வேண்டாமென மறித்தாள். நான் அடம்பிடித்துப் போகத் துடித்தேன். பூட்டம்மா சொன்னாள். “நீ அங்க போய்ட்டு வந்து இரவிரவாய் பயந்து அழுதுகொண்டிருந்தால், நானே உன்னை அடிப்பன். போறதெண்டால் போ.” அக்காவையும் அழைத்துக்கொண்டு போக நினைத்தேன். ஆனால், அவள் அங்கு வர விரும்பவில்லை. நான் நடையும் ஓட்டமுமாக வேகமெடுத்துச் சுடலைக்குச் செல்லும் சனக்கூட்டத்தோடு இணைந்தேன். பவி மாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். வண்ணமலர்களாலும் தென்னம்பூக்களாலும் வடிவமைக்கப்பட்ட பாடையில், குஞ்சாச்சியின் உடல் முன்னேறிக்கொண்டிருந்தது. ஒரு முச்சந்தியில் எல்லோரும் நின்றுகொள்ள பறையிசைப்பவர்கள் வித்துவம் காட்டினர். கள்ளு மப்பில் நின்றவர்கள் `இன்னும் அடி, இன்னும் அடி’ என அவர்களை உசுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது நான் பவி மாமாவைக் கேட்டேன்.

“நீங்கள் எப்ப இயக்கத்தில சேர்ந்தனியள்?”

“இப்பதான், யாழ்ப்பாணத்தில என்னை ஆர்மிக்காரன் தேடினான். அண்டைக்கு ஓடிவந்து சேர்ந்தனான்.”

அவரோடு நடந்து வந்துகொண்டிருந்த போராளி ஒருவர், என்னைப் பார்த்துச் சிரித்தார். மாமா ஏமாற்றும்விதத்தில் சொன்ன பதில் என்னைக் கோபமூட்டியது. ஏன் இவர்கள் எல்லாவற்றையும் மறைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அண்ணா கொள்ளிப் பானையோடு நடந்து சென்று கொண்டிருந்தான். சுடலையை நெருங்குவதற்கு முன்னர் வருகிற வீதி வளைவில், இரண்டு போராளிகள் நடந்துவந்துகொண்டிருந்தனர். அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி, கடந்துசெல்லும் தொம்மை குஞ்சாச்சியின் பூதவுடலுக்கு நின்று மரியாதை செய்தனர். சுடலைக்குச் சென்றதும் சவப்பெட்டியின் மூடியை உடைத்து எறிந்து தொம்மை குஞ்சாச்சியை வெளியே தூக்கினர். விறகுகளால் எழுப்பப்பட்டிருந்த சிதைமேடையில் அவளுடலைக் கிடத்தினர். அண்ணா கொள்ளிப்பானையோடு குஞ்சாச்சியைச் சுற்றிவர, அந்தக் கொள்ளிப்பானையைக் கத்தியின் நுனியால் கொத்தித் துளையிட்டார் நாகப்பர். துளையினால் வீறிட்டு வருகிற தண்ணீரை தனது கைகளால் தட்டிக்கொண்டு நடந்து செல்லும் நாகப்பரின் கூனல் முதுகில் கனிந்த ஜீவிதத்தின் களைப்பு தெரிந்தது. தொம்மைக் குஞ்சாச்சியின் மீது நெருப்பெரிந்தது. அண்ணா திரும்பிப் பார்க்காமல் சுடலையைவிட்டு நடந்து போனான். நெருப்பு புதுமுகம் கொண்டு எழுந்தது. நெற்றியில் நீறள்ளிப் பூசி “பன்னிச்சைத் தாயே...” என்றழைக்கும் தொம்மை குஞ்சாச்சி நீறாகத் தொடங்கியிருந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -11

எட்டுச்செலவை முடித்துக்கொண்ட அடுத்த நாள் காலையில், அக்காவும் பூட்டம்மாவும் நானும் யாழ்ப்பாணத்துக்குப் பேருந்து ஏறினோம். பன்னிச்சைத் தாய் எனக்குத் தந்த உடுக்கை வீட்டில் பத்திரப்படுத்தியது நினைவுக்கு வந்தது. பக்குவமாக இருக்கவேண்டுமென வேண்டினேன்.

முகமாலைப் பகுதியிலிருந்த ராணுவத்தின் தடை முகாமில், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து வருகிற சிலரை இறுக்கமாக விசாரணை செய்தனர். புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் சிலரின் புகைப்படங்களைக் காட்டி, ‘இவரைப் பார்த்தாயா... எங்கேயேனும் கண்டாயா?’ என்று நூறு கேள்விகள் கேட்டனர். இந்தக் கண்டத்தைவிட்டுத் தப்பினால் வருகிற செவ்வாய்க்கிழமை ஆரிட்டையாவது கொடுத்து துர்கையம்மன் கோயிலுக்கு ஒரு பெட்டி கற்பூரம் கொளுத்த வேண்டுமென அக்கா நேர்ந்துகொண்டாள். நல்லதே நிகழ்ந்தது. வீட்டுக்கு வந்துசேர மதியமாகியிருந்தது. தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்த பூட்டம்மா “மோனே அந்தியேட்டி முடியும் வரை கோயிலுக்கொண்டும் போகப்பிடாது. ரத்தத் துடக்கு இருக்கு” என்றாள். எங்களுடைய வீட்டுக்குச் சென்றதும் நகுலன் அண்ணா தேத்தண்ணி வெச்சுத் தந்தார். நாங்கள் இல்லாத நாள்களில் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இருந்தன.

“உங்களுக்குச் சமைக்கத் தெரியுமோ?” அக்கா கேட்டாள்.

“எனக்கு மட்டும் சமைக்கத் தெரியும்.”

நகுலன் அண்ணாவின் இது போன்ற பதில்கள் அவர்மீதான மர்ம இழைகளை இன்னுமின்னும் பெரிதாகப் பின்னுபவை. இவர் தனியாக இருந்த நாள்களில், வீட்டுக்கு வந்தவர்களை மறைந்திருந்து பார்த்திருக்கிறார். ஆனால் யாரோடும் கதைக்கவில்லை. இவர் சொன்ன அடையாளத்தை வைத்துப் பார்த்தால், அல்லியக்கா வந்து போயிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டோம். அக்கா முழுகிவிட்டு வந்து இரவுணவைச் செய்யத் தொடங்கினாள். அவளுக்குப் புட்டு அவிப்பது சுலபமான காரியம்.

சலூனில்வைத்து ராணுவத்தினரால் கொண்டுசெல்லப்பட்ட சங்கரப்பிள்ளை வாத்தியாருக்கு என்ன நேர்ந்தது என்று அறிய முடியாமல் இருந்தது. ராணுவம் எங்களுக்குத் தெரியாதெனக் கைவிரித்தது. ஆசிரியர் சங்கம் அவரை விடுவிக்க வேண்டுமெனக் குரல் கொடுத்தது. மாணவர்களுக்கு மத்தியில் இதுவொரு தணலாகக் கொதித்து, நெருப்பாக எழும்பக் காத்திருந்தது. வாத்தியாரை விடுதலை செய்யக் கோரி மாணவர்கள் ஒருங்கிணைக்கும் போராட்டம் நாளை நடைபெறவிருந்தது. பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருக்கும் பெரிய போலீஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள பிரதேச செயலகத்தில் அமர்ந்திருந்து போராடத் திட்டமிட்டார்கள். காலையில் எழுந்ததும் மிக ஆர்வத்துடன் குளித்து முடித்து பள்ளிச் சீருடை அணிந்துகொண்டு வீதிக்கு ஓடினேன். பேருந்தில் ஏறிப் போராட்டம் நடக்கும் இடத்தில் சென்று இறங்கினேன். ஏற்கெனவே அங்கே வந்திருந்த பள்ளிக்கூடத்தின் மூத்த மாணவர்களும் மாணவிகளும், போராட்டத்தின் கோஷங்களையும் கோரிக்கைகளையும் வண்ண மட்டைகளில் எழுதிக்கொண்டிருந்தனர். ‘விடுதலை செய்! விடுதலை செய்! எங்கள் ஆசிரியரை விடுதலை செய்!’ என்ற கோரிக்கையை எழுதிக்கொண்டிருந்த ஆஷா அக்கா என்னை அழைத்து “என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய், எங்களுக்கு உதவி செய்” என்றாள். சங்கரப்பிள்ளை வாத்தியாரின் அணுக்கமான மாணவன் என்றால் எல்லோரும் என்னைத்தான் சொல்லுவார்கள். அவர் எழுதிய நாடகங்கள் பலவற்றில் நடித்திருக்கிறேன். அவரை விஞ்சி நிற்க யாழ்ப்பாணத்தில் வேறொரு நாடக வாத்தியார் இல்லை. ஆனால், இன்றைக்கு அவரை நாங்கள் இந்தக் கொடுங்கோலர்களிடம் பறிகொடுத்திருக்கிறோம். அவரை மீட்க வேண்டும். அவர் எழுதி நிகழ்த்திய `ஒப்பந்தம்’ என்கிற நாடகத்தில் ஒரு பாத்திரம் சொல்லுகிற வசனத்தை நான் சொல்லிப் பார்த்தேன்.

“ஓம், எங்களை நீங்கள் ஆயுதங்களாலும், புக்காராக்களாலும், ஹெலியாலும் கொல்ல முடியாமல் மீண்டுமோர் அமைதி ஒப்பந்தத்தால் கொல்லத் துணிந்துவிட்டீர்கள். மகாராஜாக்களே! உங்களுடைய கொலைவாள்களை எங்களுடைய முண்டங்களில் கூர் பார்ப்பீர்கள். ஆனால், புதைக்கப்பட்ட எங்களுடைய எலும்புகளை எடுத்துக்கொண்டு உங்களைத் தாக்க ஓடிவரும் எங்களுடைய குழந்தைகளைத் தாக்கவல்ல ஆயுதங்கள் உங்களிடம் இருக்கப்போவதில்லை. இருந்து பாருங்கள், உங்களுக்குத் தெரியாத யுத்தமொன்றை எங்களுடைய எலும்புகளை ஏந்தி நிற்கும் குழந்தைகள் நிகழ்த்துவர்.”

கடவுள்... பிசாசு... நிலம்! -11

பள்ளிச்சீருடையோடு மாணவர்கள் பெருமளவில் குவிந்தவண்ணமிருந்தனர். போராட்டம் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. கூட்டத்தின் முன்னணியில் மாணவத் தலைவர்களும் தலைவிகளும் நின்றுகொண்டனர். ஆசிரியர்கள் சிலர் அன்றைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வீடுகளில் நின்றனர். போராட்டத்துக்கு வந்திருந்த ஆசிரியர்கள்மீது மாணவர்களுக்கு வாஞ்சை ஏற்பட்டது. ஆசிரியை வசந்தி தன்னுடைய கைப்பட எழுதிய கண்டன அறிக்கையை ஆங்கிலத்தில் வாசித்தார். இப்படியான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் ராணுவத்தினரின் கெடுபிடிகள் மாணவர்களுக்கு அச்சத்தையும், நிம்மதியற்ற சூழலையும் ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். மாணவர்கள் கோஷங்களை எழுப்பியபடி அமர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின் பின்னால் புலிகள் இயக்கத்தின் மாணவர் அமைப்பினர் இருந்து செயல்படுவதாகவும், உடனடியாக மாணவர்கள் அனைவரும் கலைந்து செல்லவேண்டும் எனவும் போலீஸார் எச்சரித்தனர். ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஊடகங்கள் புகைப்படங்களையும் காணொலிகளையும் எடுத்தவண்ணமிருந்தன. மாணவத் தலைவர் ஓவியன், `இந்தப் போராட்டத்துக்கும் இயக்கத்துக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. எங்களுடைய போராட்டத்தை திசைதிருப்ப வேண்டாம்’ என போலீஸாரோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போலீஸார் ஒத்துக்கொள்ளவில்லை. மிரட்டல் தொனிக்க அறுதியாக இப்படிச் சொல்லி முடித்தனர்.

“இன்னும் பதினைந்து நிமிடங்களில் நீங்கள் இந்த இடத்தைவிட்டுக் கலைய மறுத்தால், நாங்கள் உங்களைத் தாக்குவோம். நாங்கள் என்றால் போலீஸ் மட்டுமல்ல, இதோ வந்திருக்கும் ராணுவத்தினரும்தான் என்பதை உங்களுக்கு அழுத்தமாகச் சொல்லிக்கொள்கிறோம்.”

கூடியிருந்த எங்களுக்குள் பயத்தின் கண்கள் விழித்தன. அடுத்த கணத்தில் எதுவும் நிகழலாம் என்கிற பதைபதைப்பும் நடுக்கமும் எனக்குள் அதிர்ந்தன. தாடைகள் முட்டி நடுங்கத் தொடங்கின. சிறுநீர் கழித்தால் கொஞ்சம் இயல்புக்கு வருவேன் என்று தோன்றியது. எழுந்து சென்று எங்கே போவது. மாணவத் தலைவர்கள் கோஷங்களை எழுப்புமாறு சொல்கின்றனர். அச்சமும் நடுக்கமும் சூழ்ந்திருக்க அடிப்படை வாழ்வுரிமைக்காகப் போராடும் ஒவ்வொரு கணமும் முக்கியமென எல்லோரும் கோஷம் எழுப்புகிறோம்.

``ஆக்கிரமிப்பாளரே! ஆக்கிரமிப்பாளரே!

எங்கள் ஆசிரியர் சங்கரப்பிள்ளை எங்கே? எங்கே?

ஆக்கிரமிப்பாளரே! ஆக்கிரமிப்பாளரே!

எங்கள் ஆசிரியர் சங்கரப்பிள்ளை எங்கே? எங்கே?’’

நிமிடங்கள் கழிகின்றன. போலீஸார் மீண்டும் வந்து எச்சரிக்கின்றனர். ராணுவத்தினர் மாணவத் தலைவரை அழைத்துச் சென்று ஏதோ கதைக்கின்றனர். ஆனால், அவர் மறுத்து மீண்டும் வந்து கோஷங்களை எழுப்புகிறார். ஆசிரியர்கள் சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விட்டனர். போலீஸார் கைகளைக் காட்டி ``எழும்புங்கள்’’ என்கின்றனர். நாங்கள் குரல் உயர்த்தி ‘`விடுதலை செய்... விடுதலை செய்... சங்கரப்பிள்ளையை விடுதலை செய்’’ என்று கத்துகிறோம். கலவரத்தை அடக்கும் கவச உடையணிந்து காத்திருந்த போலீஸ், முதல் கண்ணீர்க் குண்டை கூட்டத்தை நோக்கி எறிந்தான். அவனது கண்கள் வெறிகொண்டிருந்த அந்த நாளின் முதல் புள்ளியாகச் சிவந்திருந்தன.

(நீளும்...)