Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -12

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

ஆர்மிக்காரங்கள்தான் பஸ்ஸ மறிச்சு வெச்சிருப்பாங்கள், அவங்களுக்கு எங்கட பள்ளிக்கூடத்தில கோபம் வந்திட்டுது

கடவுள்... பிசாசு... நிலம்! -12

ஆர்மிக்காரங்கள்தான் பஸ்ஸ மறிச்சு வெச்சிருப்பாங்கள், அவங்களுக்கு எங்கட பள்ளிக்கூடத்தில கோபம் வந்திட்டுது

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை அச்சுறுத்தினர். அச்சம் பீடித்திருந்தாலும் மாணவர்கள் அனைவரும் அப்படியே இருந்தார்கள். ஒருவர்கூட அங்கிருந்து தப்பிச்செல்ல மனதளவில்கூட எண்ணவில்லை. கோஷங்கள் ஓயாமல் ஒலித்தபடியிருந்தன. ராணுவத்தினர், மாணவர்களை வீதியில் போட்டு மிதித்தனர். தங்களுடைய வாகனத்திலிருந்து எடுத்த துடுப்பாட்ட மட்டைகளால் கிடைப்போரையெல்லாம் அடித்து வெறியாடினர். மாணவத் தலைவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் கைகலப்பு வந்திற்று. கண்ணீர்ப் புகைக்குண்டுகள் விழுந்தவண்ணமே இருந்தன. கற்களைக் கையில் எடுத்த மாணவர்கள், ராணுவத்தினரை நோக்கி வீசத் தொடங்கினோம். என்னுடைய கையிலிருந்து பறந்து சென்ற முதல் கல், ராணுவ வாகனத்தின் கண்ணாடியைச் சேதம் செய்தது. போலீஸார் மேல் வெடிவைத்து மீண்டுமொரு எச்சரிக்கை செய்தனர். ரத்த மணத்தின் மீது நடுவெயில் எரித்தது. காயங்களோடும் வலியோடும் இருந்த மாணவர்கள், “சங்கரப்பிள்ளை வாத்தியாரை விடுதலை செய்” என்று சொல்லிக்கொண்டேயிருந்தனர். ஊடகங்கள் நடப்பவை அனைத்தையும் செய்தியாக்கும் வேகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. அந்தப் போராட்டம் இறுதியாக அரச அதிகாரி ஒருவரால் மத்தியஸ்தம் வகிக்கப்பட்டு முடித்துவைக்கப்பட்டது. `சங்கரப்பிள்ளை வாத்தியார் விடுவிக்கப்படுவார்’ என்று மாணவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அந்திச் சூரியன் எங்களுடைய ரத்தத்தில் நிறமெடுத்து செக்கச் சிவந்திருந்தான்.

அடுத்தநாள் காலையில், எங்களுடைய பள்ளிக்கூடத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்த முதன்மையான மாணவர்கள் ஆயுதமுனையில் மிரட்டப்பட்டனர். ராணுவ அதிகாரி கொச்சைத் தமிழில் சொன்னார்.

“நீங் ந்தாமாத்திரி செஞ்சா... நாங் வேறே மாத்திரி செய்யம்... சரி?’’

நின்றுகொண்டிருந்த மாணவர்களில் ஒருவரான காண்டீபன் அதிகாரியை நோக்கிக் கேட்டான்.

“என்ன செய்வியள், பிடிச்சுக் கொண்டுபோய் சுட்டுக் கொல்லுவியள். அதுதானே உங்களால முடியும்?”

மாணவர்களுக்கும் ராணுவ அதிகாரிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை எந்த மாற்றங்களையும் கொண்டுவரவில்லை. பள்ளிக்கூடத்தை ராணுவம் முற்றுமுழுதாக ஆக்கிரமித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் மாறி மாறி விசாரணை செய்தனர். நாளேடுகளில் இந்தச் செய்திகள் வெளியாகின. சில மாணவர்கள் ராணுவ முகாமுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அக்கா முதன்முறையாக `இன்றைக்கு நீ பள்ளிக்கூடம் போகாதே’ என்று சொல்லும் நாள்கள் அப்போதுதான் வந்தன. ஆனால், நான் பள்ளிக்கூடம் போக விரும்பிய நாள்கள் அவையாகின.

கடவுள்... பிசாசு... நிலம்! -12

ஒருநாள் அதிகாலையில், மருதன் அண்ணா வீட்டிலிருந்து வேறோர் இடத்துக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தார். அக்கா அவருக்குத் தேத்தண்ணி போட்டுக் கொடுத்தாள். படுக்கையில் கிடந்தபடியே அவரைப் பார்த்தேன்.

“தம்பி நான் போய்ட்டு வாறன், நல்லாய் படியடா” என்றார்.

அவரின் புத்திமதி உபயம் அந்தப்பொழுதில் எனக்கு அந்நியமாகவிருந்தது. அக்கா அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கையில் கிடந்த வோக்மெனை அக்காவுக்குக் கொடுத்து, ``இதை நீங்கள் வெச்சுக்கொள்ளுங்கோ உமா’’ என்றார். அதிகாலையொரு நரம்புக் கருவியாக அக்காவுக்குள் ஸ்வரங்களை மீட்டியது. எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கி வைத்துக்கொண்டாள். விலகிடும் இருளும், கசிந்திடும் ஒளியும் சேர்ந்திருக்கும் அதிகாலைக்குள்ளால் மருதன் அண்ணா விடைபெற்றுக்கொண்டார். அக்காவின் உயிருள்ளே வலியின் குரல் தேம்பி நின்றது. உடையும் சொல்லைப்போல தனக்குள் முறிந்து கரைந்தாள். துஞ்சல் அழிந்த அவளுடைய கண்கள் கலங்கின. கதவைச் சாத்திவிட்டு அப்படியே பாயில் அமர்ந்துகொண்டாள்.

அடுத்த நாள் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்தோம். நேரங்கடந்தும் பேருந்து வருவதாயில்லை. மாணவர்களுக்குக் குழப்பம் தோன்றியது. சிலர் பயந்துபோய் வீடுகளுக்குத் திரும்பினர். என்ன நடந்தாலும் பள்ளிக்கூடம் போவதிலிருந்து இன்றைக்கு பின்வாங்கப்போவதில்லை என்று முடிவுசெய்தேன். கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோமீட்டர் நடந்துபோவதற்கான முதல் அடியை எடுத்துவைத்தேன். மனத்தின் கொந்தளிப்புத் தீராமல் சுழன்றடித்தது. என்னோடு பத்துக்கு மேற்பட்டவர்கள் இணைந்து வந்துகொண்டிருந்தனர். எங்களுக்குள் நிறைய ஊகங்கள் பிறந்தன.

“ஆர்மிக்காரங்கள்தான் பஸ்ஸ மறிச்சு வெச்சிருப்பாங்கள், அவங்களுக்கு எங்கட பள்ளிக்கூடத்தில கோபம் வந்திட்டுது.”

“நீ ஏன் அப்பிடி சொல்லுறாய் மச்சான். சிலவேளையில பஸ்ஸுக்குக் காத்து போயிருக்குமெல்லே.”

“என்ன சனியனோ தெரியேல்ல, ஆனால் ஆர்மிக்கு எங்கட பள்ளிகூடத்தில நல்ல கறள். அதுமட்டும் தெளிவு.”

நாங்கள் ராணுவ சோதனைச்சாவடியை வந்தடைய ஒரு மணித்தியாலம் ஆகியிருந்தது. அதைக் கடந்து ஐந்து நிமிடங்கள் நடந்துவிட்டால் பள்ளிக்கூடம் வந்துவிடும். சோதனைச்சாவடியில் நடந்துவந்த மாணவர்களை அழைத்துச் சென்று உள்ளே நிறுத்திவைத்தனர். உள்ளேயொரு வானொலியில் சிங்களப் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. எங்களைப் பள்ளிக்கூடம் போக வேண்டாம் திரும்பிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர்.

“பஸ் வராமல் அவ்வளவு தூரம் நடந்து வந்தனாங்கள், பள்ளிக்கூடம் போக விடுங்கோ” என்றேன்.

குள்ளமாக இருந்த சிப்பாய் ஒருவன் என்னைக் கன்னத்தில் அறைந்து “வீட்டுக்கு ஓடு, இல்லாட்டி சுட்டுப்போடுவேன்” என்று மிரட்டினான். எல்லோருக்குள்ளும் வாழ்தலின் ஆசை பொங்கிவழிந்தது. உடனடியாக அங்கிருந்து வந்தவழியே நடக்கலானோம். என்னால் சகிக்க முடியாத அவமானத்தின் ரேகைகளாக அந்தச் சிப்பாயின் தழும்புகள் கன்னத்தில் பதிந்திருந்தன. நான் வீட்டுக்கு வந்ததும் அக்காவிடம் நடந்ததைச் சொன்னேன். அவள் என்னைக் கட்டியணைத்து, ``நீ இனிமேல் பள்ளிக்கூடம் போக வேண்டாம்’’ என்று அழுது வடித்தாள்.

“நான் போவேன், மிலேச்சர்களின் சோதனைச் சாவடிகளைக் கடந்து எனது வகுப்பறைக்குள் போவேன்” என்றேன். “அப்படியெல்லாம் கதைக்கக் கூடாது தம்பி. உந்தத் திலைவாருக்கு ஈவிரக்கமே இல்ல. உனக்கொண்டு நடந்தால் ஆரிட்ட போய் நிக்கேலும் சொல்லு’’ என்றாள்.

சங்கரப்பிள்ளை வாத்தியாரை ராணுவம் கடத்திச் சென்றமைக்கான காரணங்கள் பலவிருந்தன. அவற்றில் ஒன்று, அவர் எழுதி அரங்கேற்றிய ‘ஒப்பந்தம்’ என்கிற நாடகம். அந்த நாடகத்தில் நானொரு வெள்ளைப்புறா கதாபாத்திரத்தில் நடித்தேன். மேடையையே முட்கம்பிகளால் சுற்றிவளைத்து அதற்குள் நின்று கொண்டு அந்த நாடகத்தை நிகழ்த்தினோம். அந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வந்திருந்த ராணுவ அதிகாரி, சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர் ஆகியோர் முன்னிலையில் நாடகம் தொடங்கியது. ஒரு பொல்லுக்கிழவனின் தோற்றத்தில் முள்ளுக்கம்பிக்குள் கையையும் காலையும் விட்டுக்கொண்டு சங்கரப்பிள்ளை வாத்தியார் பாடத் தொடங்கினார்.

“தாய்நிலமே... தாய்நிலமே...

உன் பிள்ளை நாம் அழுதே...

நாம் அழுதோம்; நாள் அழுதோம்

நம் வாழ்வு தீயெரிய...

முள்ளுக்கம்பி சூழ்ந்திருக்க

வெள்ளைப்புறா எங்கு பறக்க?

சொல்லுக்கேனும் அமைதியிங்கே

சொல்லிக் கொடுக்க ஆரு இருக்கா?

புத்தனுக்கு ரத்தபலி கேக்குமிந்த தீவிலே – எங்கள்

நித்தியத்தின் கழுத்தறுத்து வீசுகின்ற வெறியரே

நீங்கள் வேறு நாடு

நாங்கள் வேறு நாடு

நிறைய வேறுபாடு

நிறைய வேறுபாடு...”

பொல்லுக்கிழவன் தன்னுடைய குரலைத் தணித்து ``எங்கே சமாதானம்?’’ என்று கேட்க அலகில் தானியங்களைக் கொத்தியபடி வெள்ளைப்புறா வேடம் தரித்திருந்த நான் சொன்னேன்.

வெள்ளைப் புறா: நானே சமாதானம், நானே சமாதானம்...

கிழவன்: வாருங்கள் சமாதானமே, உங்களுக்கு எங்கள் மொழி புரிகிறதே, ஆச்சர்யம்தான்!

வெள்ளைப்புறா: எனக்கு எல்லோரினது மொழியும் புரிகிறது. ஆனால், என்னுடைய மொழியை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்.

கிழவன்: இல்லையே... எங்களுக்கு நன்றாக விளங்கும். நாங்கள்தான் உங்களைப் பாதுகாக்க எண்ணுபவர்கள்.

வெள்ளைப்புறா: அப்படியா? உங்களின் கையிலும் ஆயுதமிருக்கிறதே.

கிழவன்: (சிரிக்கிறார்) ஐயோ இது என்னுடைய பொல்லு. இந்தத் தள்ளாடும் வயதில் ஊண்டி நடக்க அதுதான் துணை.

வெள்ளைப்புறா: மன்னிக்க வேண்டும் ஐயா! இந்த நாட்டில் என்னைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நான் இங்கேயே இறந்துபோய்விடுவேன் என்று எண்ணுகிறேன்.

கிழவன்: சமாதானம் ஒரு பயங்கரவாதி என்று சொல்லிவிட்டால் அது நடந்துவிடுமே...

வெள்ளைப்புறா: ஐயோ அப்படியெல்லாம் சொல்லாதே. அதோ பிரதம விருந்தினர் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாளை என்னைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுவிடுவார்... அமைதியாய் இரு.

கிழவன்: நீங்களே பயப்பிடலாமா?

வெள்ளைப்புறா: நான் பயப்பிடாமல்?

கடவுள்... பிசாசு... நிலம்! -12

வெள்ளைப்புறா அங்குமிங்கும் தானியங்களைக் கொத்தித் தின்ன, அழுகிய முண்டங்கள் அதன் அலகில் கிடைக்கின்றன. பொல்லுக்கிழவன் மீண்டும் ஒரு பாடலைச் சமாதானமாகிய என்னை நோக்கிப் பாடத் தொடங்கினார்.

‘வெள்ளை நிறமுடுத்தி வந்த தேவதையே

உன்னை வாசமலர் தொடுத்து வாழ்த்தி வரவேற்றோம்

போர் அழித்து

எங்கள் வாழ்வுக்கு சுகமளிப்பாய்

என்று கோலமிட்டோம்

உன்னைக் கும்பிட்டோம்...

ஆனால் எங்கள் வாழ்வு அழிய

வேணுமென்றே வேடிக்கை பார்க்கிறாய்

நகரழிந்து

சனமழிந்து

நாடழிந்து போனாலும்

நீ வேடிக்கை பார்க்கிறாய்...

கொழும்புக்கு ஒரு நீதி

வன்னிக்கு ஒரு நீதி

அவனுக்கு ஒரு நீதி

இவனுக்கு ஒரு நீதி

நீயுந்தன் நாடகத்தை நிறுத்தடி – ஒப்பந்தச்

சேலைதனை மாற்றடி...

கலை நிகழ்வுகள் அனைத்தும் முடிவடைந்ததும் சங்கரப்பிள்ளை வாத்தியாரை அழைத்த அதிபர், கடுமையாகத் திட்டினார். ``உமக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?’’ சங்கரப்பிள்ளை வாத்தியார் எதுவும் கதையாமல் நின்றுகொண்டிருந்தார்.

அக்காவும் நானும் இரவுப் படுக்கைக்காகப் பூட்டம்மாவின் வீட்டுக்குச் சென்றோம். காலையில் ஆர்மிக்காரன் அடித்த விஷயத்தை அவளிடம் அக்கா சொன்னாள். என்னைக் கட்டியணைத்து ஆரத் தழுவிக்கொண்டு என்னை ஆற்றுப்படுத்தினாள். பின்னர் மனம் தோய்ந்து பன்னிச்சையடி கிராமத்தின் சில நினைவுகளைச் சொல்லத் தொடங்கினாள். அப்போது சரமாரியாகத் துப்பாக்கிகளின் ஓசை வெளியே கேட்கத் தொடங்கியது.

(நீளும்)