Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -13

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

இந்தக் காட்டில இருக்கிற பன்னிச்சைத் தாய் எங்கட தாய் தெய்வம். அவள் எங்கட குடி காக்கிற ஆள் மட்டுமில்ல. அறம் காக்கிற ஆள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -13

இந்தக் காட்டில இருக்கிற பன்னிச்சைத் தாய் எங்கட தாய் தெய்வம். அவள் எங்கட குடி காக்கிற ஆள் மட்டுமில்ல. அறம் காக்கிற ஆள்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

`நேற்றிரவு ராணுவத்தினர்மீது துப்பாக்கிச்சூடு. மூவர் பலி, இரண்டு பேர் படுகாயம்’ என்று அடுத்த நாள் செய்திகள் வெளியாகின. பூட்டம்மாவின் வீட்டில் நின்று பார்த்தால் தெரிகிற பெரிய முடக்கில் இந்தச் சம்பவம் நடந்தேறியது. அன்றைக்கு நான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. எல்லாப் பக்கங்களிலும் கொதித்துக்கொண்டிருக்கும் ஒரு நாளைக் கடப்பதென்பது சிரமமானது. அக்காவும் நானும் பூட்டம்மாவின் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். வீதியில் இறங்கவே பயமாகவிருந்தது. சன நடமாட்டமற்ற வீதியில் எரிக்கும் வெயிலோடு பயங்கரமும் ஊர்ந்தது. ``சமாதானம் குருதியில் ததும்பி, தருணத்தின் மிகச்சிறு இடைவெளி களில் உயிர்தப்பிக்கொள்கிறது’’ என்றாள் பூட்டம்மா. கைவிடப்பட்ட நாளின் தத்தளிப்பு வேரடி மண்ணிலிருந்து உச்சிக்கிளைக்கு மேலேறி வந்தது. சங்கரப்பிள்ளை வாத்தியாருக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று திடீர் பதைபதைப்பு தோன்றியது. பகலின் சிறகு காயம்பட்டு அசைய மறுத்தது. உறைந்த கடலில் இறந்திருக்கும் மீன்களைப்போல நிமிடங்கள் காய்ந்தன. துயிலற்ற நிலத்தின் விழிகள் சிவந்திருந்தன. காற்றை நிறைக்கும் குருதி வீச்சம் சனங்களின் பிராணத்தில் தனித்திருக்கிறது. அமைதியும் ஓலமும் பெருநிலத்தை அதிர்விக்கின்றன.

மாலைப்பொழுதில் அக்காவும் நானும் வீட்டுக்கு வெளிக்கிட்டோம். பூட்டம்மா ``கவனமாகப் போங்கோ’’ என்று சொல்லி அனுப்பி வைத்தாள். இருவரும் பிரதான வீதியிலிருந்து உட்பாதைக்குள் போகும் வரை மிக வேகமாக நடந்து சென்றோம். என்னைக் கன்னத்தில் அறைந்த ராணுவத்தினனின் முகம் வெறி கொண்டலையும் விளைச்சலோடு என் கண்களுக்குள் கூச்சலிட்டது; உடல் தவித்தது. அவமானத்தின் கசப்பு எல்லையற்ற தீக்கனலாக அசைந்தது. ``இன்றில்லை என்றோ ஒருநாள் எங்கள் மண்ணைவிட்டு இவர்களை விரட்டியடிப்பேன்’’ என்று அக்காவிடம் சொன்னேன்.

“ரோட்டில சத்தம் போடாமல் வா.”

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தோம். நடுவீட்டில் கோயில் நாகம் நின்றுகொண்டிருந்தது. அக்கா பயந்துபோய் எனது கைகளைப் பிடித்துக்கொண்டாள். நாகத்தின் மினுக்கம் மாயக் கவர்ச்சியாக இருந்தது. தசை விரியத் தலைதூக்கி நிற்கையில், முப்புரம் எரித்த சிவனுக்கு நாணாக இருந்த நாகத்தை நினைத்துக்கொண்டேன். அக்காவும் நானும் கும்பிட்டபடி நின்றோம். நாகம் எங்களைக் கடந்து ஊர்ந்தது. அருள் சுழலும் அதன் மேனியில் குளிர் உலர்ந்து வெப்பம் கூடியிருந்தது. அக்கா பாம்பு போகும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -13

நெடுவல் ராசனோடு வேட்டைக்குப்போன முதல்நாள். உப்புக்காட்டினுள்ளே இரண்டு உடும்புகளை வேட்டையாடிய பிறகு களைத்துப்போய் அமர்ந்திருந்தோம். வேட்டை நாய்கள் எங்களைச் சூழ்ந்து நின்றுகொண்டன. மழை பெய்யுமாற்போலிருந்தது. நெடுவல் ராசன் சொன்னார்.

“ஆதீரா... இந்தக் காடு வேட்டைக்கு மட்டுமில்ல, எங்கட வணக்கத்துக்கும் உரியது. உனக்கு நான் சொல்லுறது இப்ப விளங்காது. ஒருநாள் முழுசா விளங்கும்.”

“இல்லையண்ணே, எனக்கு விளங்குது. நீங்கள் சொல்லுங்கோ.”

“இந்தக் காட்டில இருக்கிற பன்னிச்சைத் தாய் எங்கட தாய் தெய்வம். அவள் எங்கட குடி காக்கிற ஆள் மட்டுமில்ல. அறம் காக்கிற ஆள். கோபக்காரி.”

“ஓம் அம்மா சொன்னவா. பன்னிச்சைத் தாய் மன்னனுக்கும் அஞ்ச மாட்டாவாம். நீதியெண்டால் நீதியாம்.”

நாங்கள் கதைத்துக்கொண்டிருக்க மழை தூறத் தொடங்கியது. எழும்பி நடக்கத் தொடங்கினோம். மழையும் வெய்யிலும் முத்தமிட்டு முத்தமிட்டு மோகம்கொண்டு பெய்தும் எரித்துமிருக்க, உப்புக்காட்டின் வாசம் நீர்மையில் கலந்து ஆயிரமாயிரம் மலர்களாகின. ஓர் இறக்கத்தைக் கடந்து மேலேறி வருகையில், அடர்ந்த சிறுவெளியில் பாம்புகள் புணர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தோம். நெடுவல் ராசன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுச் சொன்னார்.

“இண்டைக்கு நல்ல மழை இருக்கு பெடியா, பெரிசுகள் கூடுறது நல்ல மழைக்கான சகுனம்.”

பிணையும் பாம்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவற்றின் அந்தர முத்தங்களையும் இரக்கமற்ற வேகத்திலான தழுவல்களையும் பொங்கிப் பெருகும் ஆவலோடு ரசித்திருந்தேன். காமத்தின் திணையில் உவமைக்கு இடமில்லை. அனைத்தும் மந்திரச் சொற்கள். சிதறுவதெல்லாம் முழுமை. வீசும் காற்றில் ஒடிவதெல்லாம் மோகத்தின் களைகள். வடிவின் சுடரொளி பரவி நிற்கப் பிணையும் நாகத்தின் கருமேனியில் நெருப்பின் பெருக்காகப் புணர்ச்சியின் மதர்ப்பு. ஒவ்வொரு நொடிக்குள்ளும் எத்தனை நெளிவுகள், அபிநயங்கள். ``பாம்புகளின் நிழலிலும் அருள் பொழியும்’’ என்றார் நெடுவல் ராசன்.

நாங்கள் முன்னர் இருந்த வாடகை வீட்டின் கோடிப்பக்கத்தில் ஒரு மழைநாளில் பாம்புகள் பிணைந்திருந்தன. அம்மா அப்போது வந்திருந்தாள். அக்காவை ஒரு புது வெள்ளைத்துணி எடுத்துவரச் சொல்லி பிணையும் பாம்புகளுக்கு அருகில் அதை விரித்துவைத்தாள். புணர்வின் நடனத்தில் நகர்ந்து நகர்ந்து வெள்ளைத் துணியின் மீது படர்ந்தன. அம்மா கையெடுத்துக் கும்பிட்டு கண்ணீர் மல்க அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பாம்புகள் அங்கிருந்து போனதும் வெள்ளைத்துணியை எடுத்துவந்து பார்த்தாள். மெல்லிய மஞ்சள் நிறம் கோடுகளாகப் பதிந்திருந்தன. அந்தத் துணியைக் கும்பிட்டு சாமித்தட்டில் மடித்துவைத்தாள்.

“கோயில் பாம்பு குற்றங்களைப் பொறுக்காதடா, சுத்தமாக இருக்க வேணும்” என்றாள் அக்கா. பூட்டம்மா அதிகாலையில் எழும்பி நீராடுவாள். அவளது நீளக்கூந்தலை ஒவ்வொரு நாளும் அரைத்த சீயாக்காயால் குளிர்விப்பாள். நித்தமும் அதிகாலை ஐந்து மணியளவில் கோயிலிலிருந்து வெளிக்கிட்டு, இந்த நாகப்பாம்பு பூட்டம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிடும். அவளது நீர்த்தொட்டியருகில் இருக்கும் செவ்வரத்தை பூங்கன்றில் நெளிந்தபடி பூட்டம்மாவைப் பார்த்துக்கொண்டிருக்கும். ஒருநாள் பூட்டம்மா உடம்பு சுகமில்லாமல் வீட்டுக்குள் படுத்திருந்தாள். அக்கா அவளுக்குத் துணையாக இருந்தமையால், காலையில் பாத்திரங்களை மினுக்கிக்கொள்ள நீர் எடுக்கச் சென்றிருக்கிறாள். தொட்டியினுள்ளே நாகம் நீந்திக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு பூட்டம்மாவிடம் பதகளித்து ஓடிப்போய்ச் சொல்லியிருக்கிறாள். பூட்டம்மா எழுந்து வந்து தனது கைகளால் நீர் எடுத்து, அதன்மீது தெளித்து “சரி ஆச்சி நீ போய்ட்டு நாளைக்கு வா” என்றதும் நாகம் அங்கிருந்து போயிருக்கிறது. அக்கா இந்தக் கதையை என்னிடம் சொன்னதும் நம்ப முடியாமல் இருந்தது. “சரியாக ஒரு கிலோமீட்டர் பயணம் செய்து ஒவ்வொரு நாளும் கோயில் பாம்பு இப்படி போய்ட்டு வராது” என்றேன்.

“நீ நம்பாட்டி போ” என்றாள்.

பின்னர் ஒருநாளில், இவற்றைவிடவும் வேறொரு மயிர்க்கூச்செரியும் சம்பவத்தை நானே கண்ணுற்றேன். மார்கழி மாதம், திருவெம்பாக்காலம். பூட்டம்மாவின் வீட்டிலிருந்து குளித்து கோயிலுக்குச் செல்வதற்காகக் கண்விழித்தேன். நீர்த்தொட்டியில் குளித்துக்கொண்டிருந்தேன். அப்போது செவ்வரத்தைப் பூங்கன்றின்மீது அசைவு தெரிந்தது. நான் மெல்லிய இருட்டில் அதைப் பொருட்படுத்தவில்லை. பின்னர் கேட்டுப் பழக்கமற்ற ஒரு சத்தம் கேட்கிறது. நான் குளித்து முடித்துவிட்டுத் துடைத்துக்கொண்டிருந்தேன். எனக்கருகே அவிந்த நெல்லின் வாசனை. `உஸ்...ஸ்...ஸ்...’ என்றொரு காற்றின் சத்தம். திரும்பிப் பார்க்கிறேன். படமெடுத்து நிற்கிறது நாகம். நான் பயந்தடித்து ஓடிப்போய் அக்காவைத் தட்டி எழுப்பினேன். “அது இருந்தால் உனக்கு என்னடா?” என்று கேட்டுவிட்டு புரண்டு படுத்துக்கொண்டாள். பூட்டம்மாவை எழுப்பி, “பாம்பு வந்திருக்கிறது” என்றேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! -13

“அவள் ஏன் இப்ப வந்தவள்” கேட்டுக்கொண்டே ஒருவித யோசனையோடு நீர்த்தொட்டிக்குப் போனாள் பூட்டம்மா. நான் அவளுக்குச் சில அடிகள் பின்னே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். பூட்டம்மா பாம்பின் முன்னால் போய் நின்று,

“என்னடி கிழவி, என்ன பிரச்னை” அதிகாரமாகக் கேட்கிறாள்.

பாம்பின் அசைவுகளைப் பூட்டம்மா பாஷையாகத் தெரிந்துவைத்திருக்கிறாள்போலும். பாம்பு தனது படமெடுத்தாடும் முகத்தை முன்னே பின்னேயென ஆட்டுகிறது.

“சரி, நான் நாளைக்கு வருகிறேன். இப்போது நீ போ” என்கிறாள்.

பாம்பு அங்கிருந்து நகரத் தொடங்கியது. பூட்டம்மா வீட்டுக்குள் வந்தாள். அவளது கண்கள் வெளிச்சம் பொருந்திய நீலமலர்களைப்போல இருந்தன. என்னிடம் கேட்டாள்.

“என்னடா விடுப்பு பார்த்துக்கொண்டு நிக்கிறாய்...”

“பாம்போட மாறிமாறி கதைக்கிறியள். அதுவும் கதைக்குதா உங்களோட?”

“விசரா... பூமியில எல்லாத்துக்கும் கதைக்கத் தெரியும். ஒரு பிறவி ஊமைக்கும் கதைக்கத் தெரியும். ஆனால் எங்களுக்கு அவையளோட பாஷை தெரியாது. அதுதான் பிரச்னை.”

“அப்ப பாம்புக்கும் பாஷை இருக்கோ?”

“இல்லாமல்... என்னால எப்பிடி கதைக்க ஏலும் சொல்லு.”

“அதென்ன பாஷை?”

பூட்டம்மா வெடித்துச் சிரித்தாள். வீசியெறியும் அலையின் உச்சியில் நீந்தும் கயலைப்போல் அந்தரத்தில் மிதந்தேன். என்னைச் சூழ்ந்திருக்கும் குளிர்போக்க வெம்மையளிக்கும் தெய்வமாக பூட்டம்மா என்னை அணைத்துக்கொண்டாள்.

“பாம்போட பாஷை!”

பூட்டம்மாவின் இந்த பதிலில் எத்தனை எத்தனை மர்மங்கள் குடிகொண்டிருக்கின்றன என்பதை என்னால் அறிய முடியாது. அவள் எல்லாவற்றையும் இப்படித்தான் சொல்வாள். அவளுக்குத் தெரிந்த பாஷைகள் யாருக்கும் தெரியாதவை.

பாம்பு வந்து நின்ற இடத்தை மிதியாமல் வீட்டுக்குள் நுழைந்தோம். அக்கா உலையேற்றினாள். நான் சங்கரப்பிள்ளை வாத்தியாருக்கு எதுவும் நடந்துவிடக் கூடாதென வேண்டிக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு முன்பாக உந்துருளியொன்று வந்து நின்றது. கறுப்பு நிறத்திலான தலைக்கவசம் அணிந்திருந்த நபர், அப்படியே நேராக வீட்டின் கதவடியில் நின்று அக்காவின் பெயரைச் சொல்லி அழைத்தார். அக்கா அடுப்படியில் நின்றுகொண்டு “ஆர்?” என்று கேட்டாள். நான் ஓடிவந்து அந்த நபரைப் பார்த்தேன். அவர் தலைக்கவசத்தைக் கழற்றாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார். நான் அக்காவிடம் ஓடிப்போய் சொன்னேன்.

“பின்பாதையால தப்பியோடுவம்!”

(நீளும்...)