Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -18

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

அவங்கள் எங்கட வீட்டுக்க தேடல்ல. ஆரையோ தேடுறாங்கள். எங்கட வளவைக் அங்கால எங்கையோ போயிருக்கிறாங்கள்

கடவுள்... பிசாசு... நிலம்! -18

அவங்கள் எங்கட வீட்டுக்க தேடல்ல. ஆரையோ தேடுறாங்கள். எங்கட வளவைக் அங்கால எங்கையோ போயிருக்கிறாங்கள்

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

மணியனும் நானும் படுக்கையைவிட்டு எழுந்து, வீட்டின் வாசலில் போய் நின்றுகொண்டோம். டோர்ச் வெளிச்சம் இடையிடையே நின்று வந்தது. அல்லியக்கா பயந்துபோய் நடுங்கிக்கொண்டிருந்தாள். `நாங்கள் இயக்கத்தோட முகாமுக்குப் போய்ட்டு வந்தது ஆருக்கேனும் தெரிஞ்சிருக்குமோ...’ என்று புலம்பினாள். அம்மாவும் அக்காவும் அவளைப் ஆற்றுப்படுத்தினர். டோர்ச் வெளிச்சம் இப்போது அணைந்தது. எங்களுக்கருகில் வந்த அம்மா, “ஆர் அது?” என்று கேட்டாள். இருட்டிலிருந்து ஒரு குரல் பிறந்தது.

“அது நாங்கள்தான்.”

“நாங்கள் எண்டால்?”

“நாங்கள்தான்.”

என்னையும் மணியனையும் படுக்கைக்குப் போகுமாறு சொன்னாள். நடப்பதெல்லாம் புதிராகவே இருந்தது. மணியன் தன்னைத்தான் இயக்கம் பிடிக்க வந்துவிட்டதென மெல்ல மெல்ல அழத் தொடங்கினான். அம்மா முன்கதவை இறுக்கிச் சாத்திப் பூட்டினாள். வெளியே இனந்தெரியாதவர்களின் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. அம்மா சொன்னாள் “ஆரெண்டு தெரியேல்ல, சிலவேளையில கள்ளராய்க்கூட இருக்கலாம்.”

“கள்ளர் எண்டால் உங்களோட கதைச்சுக்கொண்டே இருக்கிறாங்கள்.”

“ஓமடா, அவங்கள் அப்பிடித்தான். பயத்தைக் காண்பிக்காமல் கதைச்சுக்கொண்டே போய்டுவாங்கள்.”

விடியும்வரை மணியன் விழித்திருந்தான். ‘`கண்களை மூடவே பயமாய் இருந்தது’’ என்றான். அல்லியக்கா அதிகாலையிலேயே எழும்பி தனது வீட்டுக்குப் போனாள். அக்கா காலைச் சாப்பாட்டை செய்து கொண்டிருந்தாள். நேற்றிரவு இனந்தெரியாதவர்கள் நடந்துபோன தடத்தை அம்மா உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். ராணுவத்தின் சப்பாத்துத் தடத்தைப் பார்த்தவுடன் என்னை அழைத்த அம்மா ``நேற்றைக்கு வந்தது கள்ளர் இல்லை. ஆர்மிக்காரங்கள்’’ என்றாள்.

“அப்ப தமிழில உங்களுக்குப் பதில் சொன்னது?”

“ஆர்மிக்குக் காட்டிக்குடுக்கிற ஆளாயிருக்கும்.”

“ஆனால் அவன்ர குரல், எங்கேயோ நல்லாய் கேட்ட குரல். உங்களுக்கு அப்பிடி தெரியேல்லையோ அம்மா?”

“அப்பிடி எங்களுக்குத் தெரிஞ்ச ஆள் எண்டால், குரல் குடுத்திருக்க மாட்டான். ஆரையோ தேடித் திரியிறாங்கள்போலக் கிடக்கு.”

“எங்கட வீட்டு வளவுக்க வந்து ஆரைத் தேடுறாங்கள்?”

“அவங்கள் எங்கட வீட்டுக்க தேடல்ல. ஆரையோ தேடுறாங்கள். எங்கட வளவைக் அங்கால எங்கையோ போயிருக்கிறாங்கள்.”

கடவுள்... பிசாசு... நிலம்! -18

மணியன் வாசலில் நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான். அம்மா சொன்னாள்... “இவனை இண்டைக்கே வீட்டைவிட்டு அனுப்ப வேணும்.’’ மணியனை அழைத்து “உனக்கு என்னடா பிரச்சனை? ஏன் இயக்கத்துக்குப் பயப்பிடுறாய் சொல்லு” என்றாள். மணியன் விசும்பி அழத் தொடங்கினான். “அழாத மணியன்... நடந்ததைச் சொல்லு, என்ன செய்யேலும் எண்டு பார்க்கிறன்.” அம்மா சொன்னதும் மணியன் இறைஞ்சிய தனது கண்களால் கண்ணீர் சொட்டினான். என்னைப் பார்த்தபடிக்குச் சொல்லத் தொடங்கினான்.

``நான் விறகு தறித்து மரமடுவத்துக்கு ஏற்றிச் செல்லவேண்டிய இரண்டு வண்டில் விறகுகளை நேரடியாக ஒருத்தரின் கடைக்கு விற்றுவிட்டேன். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட சிலர் என்னைக் கண்டித்து `இனிமேல் இப்படிச் செய்யாதே, இயக்கத்துக்குத் தெரிந்தால் குற்றமாகிவிடும்’ என்று எச்சரித்தனர். அதோடு நான் காட்டுக்கு விறகு தறிக்கச் செல்வதில்லை என முடிவெடுத்தேன். கொஞ்ச நாள்களாகக் குடியும் வெறியுமாக இருந்தேன். ஒருநாள் பின் நேரம் வீட்டிலிருந்த எனக்கு விநோதினியிடம் காசு கேட்கலாம் என்று தோன்றியது. அவளுடைய வீட்டுப்படலையில் நின்று கூப்பிட்டேன். அவள் அடுப்படியில் இருந்தபடிக்கு “உள்ள வா மணியன்” என்றாள். படலையைத் திறந்து வாசலில் போய் நின்றுகொண்டேன். வினோதினி அடுப்பில் நின்று வேர்த்திருந்தாள். அவளுடைய கண்களை சந்திக்கக் கூடாதென எனது பார்வையை நிலத்தில் குத்தி நின்றேன்.

``எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் இருந்தால் தாங்கோ, காசு வந்ததும் தாறன்’’ என்றேன்.

வினோதினி கூரையில் செருகிக்கிடந்த காசுப்பையை எடுத்து சில்லறையைப் பொறுக்கித் தந்து “உன்ர வயசுக்குக் குடியாத, ஆராவது இயக்கத்திட்ட சொன்னால் அவ்வளவுதான். உன்னைப் பிடிச்சுக் கொண்டுபோய் சீர்திருத்தப்பள்ளியில போட்டிடுவாங்கள்” என்றாள்.

``உன்ர ஆலோசனைகள் எனக்குத் தேவையில்லை. நன்றி’’ என்று சொல்லிவிட்டு கள்ளுத்தவறணைக்குப் போனேன். அங்கே நிறைய பேர் இருந்தனர். இயக்கத்துக்குத் தகவல் சொல்லும் உள்ளூர் முகவர்கள் நால்வர் இருந்தனர். நாகப்பர் என்னைப் பார்த்ததும் “என்னடா இஞ்ச வந்து நிக்கிறாய்” என்றார். நான் ஒன்றுமில்லையென்று தலையாட்டிவிட்டுக் களவாக மதுபானம் விக்கும் மோகனோட இடத்துக்குப் போனேன். என்னிடமிருந்த மொத்த காசுக்குக் கால் போத்தலுக்கும் குறைவான சாராயத்தைத் தந்தார்கள். குடித்துக்கொண்டிருந்தேன். அங்கே வந்திருந்தவர் சிலரிடம் பிச்சைக் கேட்பதைப்போல ஒரு மிடறு சாராயத்துக்காகக் கையெடுத்துக் கும்பிட்டேன். இரண்டு மிடறுகள் நிரப்பிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றேன். அப்போது மழைமப்புக் கட்டியிருந்தது. நான் வீட்டுக்குப் போகு முன்னர் மழை பெய்துவிடக் கூடாதென எண்ணினேன். இயக்கத்தோட முகாம்கள் இல்லாத பாதையாகப் பார்த்து பன்னிச்சையடியை நோக்கி நடந்துபோனேன். நல்லாய் இருட்டியிருந்தது. சுடலையடி ரோட்டில் வந்துகொண்டிருந்தேன். என்னைக் கடந்து போராளிகளின் வாகனங்கள் சென்றன. மங்கலாகவும் துல்லியமற்றும் காட்சிகள் தெரிந்தன. சுடலை ஏத்தத்தில் சைக்கிளை உழக்கிக்கொண்டு ஒருத்தி வருவது தெரிந்தது. நான் அந்த சைக்கிள் எனக்கருகில் வருகிற வரைக்கும் நின்றுகொண்டிருந்தேன். மஞ்சள் நிறச்சட்டையும் வெள்ளைப்பாவாடையும் அணிந்திருந்த அம்பிகாவைப் பார்த்ததும் “என்னை ஏத்திக்கொண்டு போடீ” என்றேன்.

“மணியண்ணா இப்பிடி குடிச்சிருக்கிறியளே, உங்கட அப்பாவுக்குத் தெரிஞ்சால் அவர் உங்கட தோலை உரிச்சுப்போடுவார்.”

``இஞ்ச... அவர் தோலை உரிக்கட்டும், உரிக்காமல் போகட்டும். என்னைக்கொண்டே நீ வீட்டில விடுவியா, மாட்டியா?’’

“சரி ஏறுங்கோ. பின்னால ஆடாமல் இருக்க வேணும்.”

நான் சைக்கிளில் ஏறி அமர்ந்தேன். அம்பிகா என்னை ஏற்றிக்கொண்டு இறக்கத்தில் சைக்கிளை ஓட்டினாள். வேகம் எடுத்தது. வெள்ளைப்பாவாடை அணிந்திருந்த அவளது பிருஷ்டத்தை மோகித்து தொட்டேன். ஆனால், எனக்குத் தெரியாமல் தொடுவதைப்போல ஒரு பாவனையை வரவழைத்துக்கொண்டேன். மழை லேசாகத் தூறத் தொடங்கியது. நனைந்தபடிக்கே இருவரும் பயணிக்கத் தொடங்கினோம். யாருமற்ற அந்தப் பாதையில் மழையும் நாமும் தனித்திருந்தமை எனக்குத் துணிச்சலைத் தந்தது. எனக்குத் தலைச் சுற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அம்பிகாவை மெல்ல அணைத்தேன். அவளுடைய வாசனையை அள்ளிப்பருகிக்கொண்டால் போதுமென்று அப்போதிருந்தது. நான் அவளை மூர்க்கத்தோடு சீண்டத் தொடங்கினேன். சைக்கிளை மிக வேகமாக உழக்கியபடி இருந்தவள், என்னைத் தள்ளிக் கீழே வீழ்த்தினாள். சைக்கிளை ஓரமாக நிப்பாட்டிவிட்டு அருகில் இருந்த விறகுக் கட்டையால் அடிக்கத் தொடங்கினாள். வெறியும் இயலாமையும் சூழ்ந்த என்னால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. அம்பிகா என்னை வேகங்கொண்டு தாக்கிவிட்டுச் சொன்னாள்.

“நடந்ததைப் போய் இயக்கத்திட்ட சொன்னன் எண்டால், இந்த மழை நிக்க முதல் உன்னைக் கொண்டுபோய் சுட்டுப்போடுவாங்கள். எழும்பி ஓடுடா நாயே... உனக்கு அரிப்பெண்டால் எங்கையாவது போ... எழும்பி ஓடு.”

கடவுள்... பிசாசு... நிலம்! -18

அம்பிகா என்னை அடிக்கவில்லை. தாக்கினாள். காறி உமிழ்ந்தாள். அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு நேராக இயக்கத்திட்ட சொல்லிவிடுவாளோ என்று பயந்து நான் வீட்டுக்கே போகவில்லை. நேராக ஐந்து குளத்துக்குப் போனேன். அங்கே இருந்த மீன்குடிலில் படுத்துக்கிடந்தேன். அடுத்த நாள் மதியம் யாழ்ப்பாணத்துக்குப் பேருந்து பிடிச்சுப் போகலாமென்று எண்ணினேன். ஆனால் காசு இல்லையே, ஊருக்குள் போகவே பயமாகவிருந்தது. அம்பிகா எல்லோரிடமும் சொல்லியிருப்பாள். இப்போது என்னை இயக்கம் தேடிக்கொண்டிருக்குமென்று நம்பினேன். எங்களுடைய புதையல் வைரவர் கோயில் உண்டியலை உடைப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அன்றைக்கிரவு கோயிலுக்கு வெளியே இருந்த உண்டியலை வெட்டிரும்பால் திறந்தேன். எனக்குத் தேவையான பணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலையிலேயே பேருந்தில் ஏறி இங்கே வந்தேன்.’’

“தயவுசெய்து என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ, எல்லாமே குடியால வந்த வினை. நான் திருந்தி வாழ ஒரு வாய்ப்பை வாங்கித் தாங்கோ” என்று அம்மாவின் காலில் விழுந்தான். அம்மா அவனைப் பொருட்படுத்தமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் மணியனைப் பார்த்துச் சொன்னாள்.

“அதுக்கு நான் பொறுப்பு. நாளைக்கு நான் உன்னை வன்னிக்குள்ள கூட்டிக்கொண்டு போறன். நீ பயப்பிடாதே.”

மணியன் அம்மாவை நம்பினான். ஆனால், எனக்கு ஏதோ தந்திரமான நகர்வைப் போலிருந்தது. அம்மா மணியன் மீது கடுமையான கோபத்துடனும் ஆத்திரத்துடனும் இருந்தாள். அம்பிகாவின் துணிச்சல் என்னை வியப்பிலாழ்த்தியது. மணியனுக்கு என் சார்பில் இரண்டு அடிகளை அடிக்கவே விரும்பினேன். தனியாக என்னிடம் மாட்டினால் அதைக் கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். `அம்பிகாவின் மீது கையை வைத்துவிட்டு எனக்கருகே நின்றுகொண்டிருக்கிறாயே குடிகாரக் காவாலியே’ என்று கொதித்துக்கொண்டிருந்தேன். மணியன் அப்படியே உறைந்துபோய் நின்றான். அம்மா அவனை அழைத்துக்கொண்டு காலையுணவைப் பரிமாறினாள். அம்பிகாவின் வதனம் எனக்குள் ஊற்றெடுத்துக் குமிழியிட்டது. அடுத்த தடவை பன்னிச்சையடிக்குப் போனால், அவளுடன் கதைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டேன். மணியன் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய சட்டையைப் பிடித்து அடிக்க வேண்டுமெனத் தோன்றியது. அவனை நோக்கி நடந்துபோனேன்.

(நீளும்...)