அரசியல்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -19

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

இவங்களுக்கு ஏனம்மா பயப்பிட வேணும், அநியாயம் செய்யிறவங்களே இப்பிடித் துவக்கோட சுத்தி திரியிறாங்கள்.

பூட்டம்மா வீட்டு வெளிக்கேற் ஆமைப்பூட்டால் பூட்டிக்கிடந்தது. “காலமை வெள்ளனவே கிழவி எங்கையோ அலுவலா போய்ட்டுதுபோலக் கிடக்கு” எனச் சொல்லியபடி, அம்மா மீண்டும் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள். “நாளைக்கு நானும் உங்களோட வன்னிக்கு வரட்டே அம்மா” என்று செல்லமாகக் கேட்டேன். “எல்லாருமாய்ச் சேர்ந்துதான் போகப்போறம்” என்றாள். மெல்ல மெல்ல எனக்குள் சந்தோஷத்தின் பெருங்கடல் விரிந்தது. சொந்தவூருக்குச் செல்லுகிற நினைப்பே என்னையொரு அதிஷ்டக்காரனாக ஆக்கிவிடுகிறது. மகத்துவமான வசீகரம் அப்போதுதான் எனக்குக் கிட்டுகிறது. ஓ... எனது பன்னிச்சையடியே! மீண்டும் மீண்டும் உம்மையே தொழுகிறேன். உனது காற்றை, வெக்கையை, சுடுமணலை, பொன்வண்டை, ஈச்சம்பழத்தை எனக்காக நாளையும் விளைவிப்பாயாக!

மணல் ஒழுங்கையின் முடக்கைத் தாண்டி நடந்துபோகையில், ராணுவத்தினர் இருவர் சைக்கிளில் வருவது தெரிந்தது. அம்மா எந்தத் தயக்கமுமில்லாமல் நடந்து முன்னேறிக்கொண்டிருந்தாள். எங்களை நெருங்கியதும் ராணுவத்தினர் சைக்கிளை நிறுத்தி “எங்க போறது?” என்று கேட்டனர். அம்மா சொன்னாள்...

“வீட்ட போறம், சேர்.”

“எங் வீடு?”

“அடுத்த முடக்குத் தாண்டி வருகிற குச்சொழுங்கைக்குள்ள.”

“சரி, போ.”

அம்மாவும் நானும் மிதமாக, மிக இயல்பாக நடந்து செல்லத் தொடங்கினோம். ராணுவத்தினர் பூவரசம் இலையைப் பிடுங்கி பீப்பி செய்து ஊதிக்கொண்டு அங்கிருந்து விலகினர்.

“ஆதீரா... ஆர்மிக்காரங்கள் உன்னை மறிச்சு விசாரிக்கேக்க, அவங்களுக்கு பயந்ததைப்போல நிக்க வேணும். சும்மா எங்கையாவது ஏமலாந்திக்கொண்டு அவங்களுக்கு பதில் சொல்லக் கூடாது. அம்மாவைப் பார்த்தனி தானே, எப்பிடி கைகட்டிக்கொண்டு பதில் சொன்னன்...”

“இவங்களுக்கு ஏனம்மா பயப்பிட வேணும், அநியாயம் செய்யிறவங்களே இப்பிடித் துவக்கோட சுத்தி திரியிறாங்கள். நாங்கள் எதுக்கு இவங்களுக்கு முன்னாடி கைகட்டி நிப்பான்...”

“நான் பயப்பிடவோ, கைகட்டி மரியாதை செய்யவோ சொல்லேல்ல, அப்பிடி நடிக்கவேணும் எண்டுறன். நீதானே சங்கரப்பிள்ளை வாத்தியாரிட்ட நாடகம் படிச்சனி, உனக்குச் சொல்லித் தர வேணுமே என்ர செல்ல மோனே.”

அம்மா கன்னத்தில் கிள்ளிக் கொஞ்சினாள். அவளிடம் கேட்டேன்.

“இந்த மணியனை நாளைக்கு என்ன செய்யப்போறியள்?”

கடவுள்... பிசாசு... நிலம்! -19

“அம்பிகா இயக்கத்திட்ட சொல்லியிருந்தால், இவ்வளவு நேரத்துக்கும் அவனை மணந்து பிடிச்சிருப்பாங்கள். அவள் சொல்லேல்லயெண்டு நினைக்கிறன். ஆனால் நாளைக்கு நான் முகமாலையிலேயே அவனை இயக்கத்திட்ட ஒப்படைச்சிடுவன்.”

“அவன் உங்களை நம்பிக்கொண்டிருக்கிறான். நீங்கள் இயக்கத்திட்ட சொல்லி மன்னிப்பு வாங்கித் தருவியளாம்.”

“இந்த ஊத்தக்காவாலிக்கு மன்னிப்புதான் இல்லாத குறை. இவனைக் கொண்டுபோய் கொஞ்சநாள் அடைச்சால்தான் திருந்துவான்.”

மணியன் எங்களிடம் சொல்லாத குற்றங்கள் நிறையவே உண்டு. அம்மாவுக்கு அதெல்லாம் தெரிந்திருக்கிறது. விநோதினியின் வீட்டுக்குள் ஒருநாள் இரவு நுழைந்தவன், அவளை வெறிகொண்டு புணர முயன்றிருக்கிறான். ஆனால் விநோதினி அவனை அடித்துக் கீழ் விழுத்தி வாய்க்குள் துணியைத் திணித்து இரவு முழுக்கக் கையையும் காலையும் கட்டிவைத்திருக்கிறாள். இந்தச் சம்பவத்தின் விளைவாக “பரத்த வேஷை பத்தினி வேஷம் போடுகிறாள்” என்று ஒருநாள் என்னிடம் சொல்லியிருக்கிறான். அதுமட்டுமில்லை. குளத்துமீன் வியாபாரம் செய்யும் சூப்பி வீட்டுக்குள் சென்று பணத்தைத் திருடியிருக்கிறான். ஏணைக்குள் நித்திரையாகிக் கிடந்த சூப்பியின் பெண் குழந்தை மோதிரத்தைக் கழற்றியிருக்கிறான். இத்தனைக்கும் அவன் ஒரு தடயத்தைக்கூட விடுவதில்லை. களவில் கைதேர்ந்தவனாய் ஆகியிருந்தான். இயக்கத்திடம் மணியன் ஒப்படைக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சீர்திருத்தப்பள்ளியில் வாழவேண்டி வருமென்று நினைத்துக்கொண்டேன்.

அக்கா, வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்து வோக்மெனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அம்மாவிடம் சொன்னேன்.

“மருதன் அண்ணா கொடுத்த வோக்மென் எனக்குத் தரவே மாட்டாள், அவள் மட்டுமேதான் கேட்கிறாள்.”

அம்மா சிரித்துக்கொண்டு சொன்னாள்... “உனக்குத் தேவையெண்டால், அடுத்த தடவை மருதன் வரும்போது கேள், தருவார். அவளுக்குக் குடுத்தத நீ ஏன் கேக்கிறாய்?”

மணியன் வீட்டுக்குள் படுத்திருந்தான். அவனின் கண்களில் ஒளியில்லை. ரத்தத்துக்கு பதிலாக அச்சம் ஓடும் உடலை அவன் தாங்கியிருந்தான். என்னைக் கண்டதும் ஒரு மெல்லிய தலையசைப்பு. அவனது உதடுகள் கறுத்துப்போயிருந்தன. முகத்தில் பருக்கள் அதிகமாகியிருந்தன. கண்களுக்குக் கீழே நித்திரையற்ற தழும்புகளாகக் கறுப்பு படர்ந்திருந்தது. நான் அவனிடம் சொன்னேன்.

“இண்டைக்குப் பின்னேரம் எங்கையாவது போகலாம்.”

“யாழ்ப்பாணத்தில கோயிலுகளைத் தவிர என்னடா இருக்கு” என்று சலித்துக்கொண்டான்.

“சும்மா உலாத்தலாம், கிரிக்கெட் விளையாடுவாங்கள். போய்ப் பார்க்கலாம்” என்றேன்.

அவன் வேண்டாமென்று மறுத்துவிட்டான். அவனுடைய புலன்கள் நாளைய பற்றிய பதற்றத்தில் நெளிந்தன. அவன் செய்த குற்றத்துக்குக் கிடைக்கப்போகும் தண்டனை குறித்தெல்லாம் அநாயாசமான கற்பனைகள் செய்தபடியிருந்தான்.

அடுத்தநாள் காலையில், மணியனும் நானும் ஆயத்தமாகியிருந்தோம். பூட்டம்மா வீட்டுக்குப் போன அம்மா வந்துவிட்டால் பேருந்து தரிப்பிடத்துக்குப் போய்விடலாம் என்று காத்திருந்தோம். அக்கா இரண்டு பைகளை வெளியேவைத்து வீட்டின் கதவைப் பூட்டினாள். அம்மா வந்தாள். அவள், வீட்டின் கோடிப்பக்கத்தில் போய் ஒன்றுக்கிருந்தாள். நால்வரும் வீட்டிலிருந்து பேருந்து தரிப்பிடத்தை அடைந்த சில நொடிகளில் பேருந்து வந்தது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம்.

மணியன் பேருந்தின் ஜன்னல் வழியாக யாழ்ப்பாணத்தின் வீதிகளையும் வீடுகளையும் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னேன்.

“நீ குற்றங்கள் செய்திருக்கிறாய். அதுக்கு ஒரு தண்டனை இருக்கு. ஆனால், நீ பயப்பிடுகிற மாதிரி ஒண்டும் நடக்காது.”

“இல்ல, ஆதீரன். எனக்குத் தெரியும். இயக்கம் என்னைப் பிடிச்சால் என்னைக் கடுமையாய் அடிப்பாங்கள்.”

“நீ யோசியாத. முகமாலைக்குள்ள போனதுக்குப் பிறகு இதைப் பற்றிக் கதைப்பம்.”

அக்கா வோக்மெனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள். அம்மா, எங்களிருவருக்கும் அல்பா மிக்சர் சின்னப்பையைக் கொடுத்தாள். இந்த ருசியை அடிக்க உலகத்தில எதுவுமே இல்லை. இந்த மிக்சர் இருந்தாலே எனக்குப் போதும்... சாப்பாடு எதுவும் வேண்டாமென்றேன். மணியனுக்கு அல்பா மிக்சர் பிடிக்கவில்லை. அவனுக்கு அந்த ருசியின் தன்மை எட்டவில்லை. பீடியும் சாராயமும் அருந்திய நாக்கில் இந்த ருசி ஏறவில்லை.

யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்தில் இறங்கி, கிளிநொச்சி செல்லும் பேருந்தில் ஏறினோம். அம்மாவுக்குத் தெரிந்த நடத்துநர் இருந்தார். அம்மாவைக் கண்டதும் சுகநலம் விசாரித்தார். ``தொப்பி குயிலன்ர தம்பி ஜெயத்தான் இவர்தான்’’ என்றாள் அம்மா. தொப்பி குயிலனின் சாயல் லேசாகத் தெரிந்தது. அம்மா அப்பிடிச் சொன்னதும் அவருக்குள் நுழைந்த கம்பீரத்தைக் கண்டேன். என்னைப் பார்த்துக் கேட்டார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -19

“அண்ணையை உங்களுக்குத் தெரியுமோ?”

“ஓம்’’ என்று தலையாட்டினேன்.

பேருந்தில் ஏறும் ஆட்களை அவதானித்ததும், ``சரி பிறகு கதைக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு வேலையில் ஈடுபடத் தொடங்கினார். கிளிநொச்சிக்குக்குச் சென்றுவரும் பேருந்துகள் அனைத்தும் ராணுவத்தினரின் கண்காணிப்புக்குள்ளேயே இருக்கும். அம்மா அந்தப் பேருந்தில் யாரோடும் அவசியமற்று கதைப்பது கிடையாது. சிலர் ஏறியதும், ``உங்கட சொந்த ஊரே கிளிநொச்சியே...’’ என்று கதைக்கத் தொடங்குவார்கள். அம்மா அந்தக் கதையை நீட்டாமல் மிகச் சுருக்கமாக, ``எனக்குச் சொந்த ஊர் புத்தளம்’’ என்பாள். இப்படிச் சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஒருநாள் அம்மாவும் நானும் பேருந்தில் ஏறி அமர்கிறோம். நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணொருவர் கிளிநொச்சிக்குப் பயணச்சீட்டு பெற்று அமர்கிறார். என்னைப் பார்த்து “தம்பியா நீ எங்க போறாய்?” என்று கேட்டார். நான் ``கிளிநொச்சி’’ என்றேன். ``கிளிநொச்சி எவ்வடம்? ’’இப்போது அம்மா சொன்னாள் “கிளிநொச்சி பஸ் டிப்போ.’’

“அங்கின எங்க வீடு?”

அம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவள் என்னை மடியில் தூக்கி அமர்த்திக்கொண்டு அந்த ஆணிடம் கேட்டாள்.

“நீங்கள் என்ன விசாரணையே செய்யிறியள்.., எங்கட வீடு எங்க இருந்தால் உங்களுக்கு என்ன”?

அவருக்கு வியர்த்துவிட்டது. அம்மாவைச் சமாதானம் செய்ய அவர் முயன்று பார்க்கிறார். அம்மா நிறையவே கோபித்துக்கொண்டாள். பிறகு அந்தப் பயணம் முழுக்கவே அவர் எங்களையும் நாங்கள் அவரையும் பார்க்காமலேயே அமர்ந்திருந்தோம். வீட்டுக்குப் போனதும் கேட்டேன்.

“ஏன் அந்தாளைப் போட்டு இப்பிடி பேசினியள்?”

“பின்ன என்ன, வீட்டு விலாசத்தைக் கேட்டு என்ன செய்யப்போறான் அவன்?”

“சும்மா கதைக்க வேணுமெண்டு கேட்டிருப்பார்.”

“இல்லை. ஆரும் சும்மா கதைக்க மாட்டினம். தகவல் சேகரிக்கத்தான் இப்பிடிக் கேப்பாங்கள். அவன் ஆர்மின்ர ஆளாய் இருப்பான், அவன் ஆர்மிக்கு ரெக்கி பார்க்கிற ஆள்தான்.”

“எப்பிடி சொல்லுறியள்?”

“அவன்ர கதையில விடுப்பு புடுங்கிற தொனியில்லை. இடங்களையும் ஆக்களையும் தெரிய விரும்புற பக்குவமிருந்தது.”

யாராலும் அறிய முடியாத இதிகாசத்தின் ஒரு கதாபாத்திரத்தையே கடவுள் எனக்கு அம்மாவாக அளித்திருக்கிறான். அவளை நான் அப்படித்தான் வணங்கிக்கொள்வேன். அம்மாவிடம் ஒருமுறை சொன்னேன்.

“அண்ணா இயக்கத்துக்குப் போனமாதிரி, வளர்ந்ததுக்குப் பிறகு நானும் போவன். நீங்கள் தடுக்கக் கூடாது.”

“நான் தடுக்க மாட்டன். ஆனால் நீ இயக்கத்துக்குப் போய் திரும்பி ஓடி வரக் கூடாது.”

ஒன்றும் விளங்காமல் அவளையே பார்த்தேன்.

“பின்ன என்ன, நீ ஒரு நொய்ஞ்ச உடம்புக்காரன். ஒரு கட்டை நடந்தாலே மூச்சுவாங்கிக் கால் நோகுதென்பாய். அங்க போனால் தாங்குவியே...”

அம்மா பேருந்தின் இருக்கையில் அமர்ந்து, லேசாகக் கண்மூடி நித்திரையாகியிருந்தாள். அக்கா வோக்மெனில் பாட்டுக் கேட்டுக்கொண்டேயிருந்தாள். மணியன் வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். முகமாலை ராணுவ சோதனைச்சாவடிக்குள் பேருந்து நுழைகிறது. இந்தச் சோதனைச்சாவடியைக் கடந்தால் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதி வந்துவிடும். மணியனுக்கு கண்ணீர் நிற்க வழியற்று வழிந்தது. தன்னுடைய மூச்சின் ஒலியை அச்சம் சூழ அவனுக்குள் கேட்கத் தொடங்கினான்.

(நீளும்...)