மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -22

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

“ஒரு நாலு நாலரை இருக்கும். அப்பதான் துவக்குச் சத்தம் கேட்டது.” பக்கத்து வீட்டுக்காரர் நடுநடுங்கிச் சொன்னார்.

அக்காவும் நானும் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினோம். அம்மா பனங்காய்ப் பணியாரம் சுட்டு, பொதி செய்து தருவித்திருந்தாள். பூட்டம்மாவிடம் கொண்டு சென்று அதைக் கொடுத்தேன். அவள் ஆசை ஆசையாக அதை வாங்கினாள். தொம்மைக் குஞ்சாச்சிக்கு அந்தியேட்டி முடிந்திருந்தது. இனிமேல் நான் கோயிலுக்குப் போக முடியும். பள்ளிக்கூடமும் போக வேண்டும். சங்கரப்பிள்ளை வாத்தியாரை இன்னும் ராணுவம் விடவில்லை. அவரை மெல்ல மெல்ல பள்ளிக்கூடம் மறந்துபோய்விட்டதெனக் கோபம் வந்திற்று. அண்ணா புதிய பயிற்சிக்குப் போய்விட்டான். இனி அவன் யாழ்ப்பாணத்துக்கு வருவானா தெரியவில்லை. தனித்துப்போன ஓர் உணர்வு குபுகுபுவென மனதுக்குள் நிரம்பிற்று. வீட்டைக் கூட்டி அக்கா விளக்குவைத்தாள். வெளியே குவிந்துகிடந்த சருகுகளைக் கூட்டிக் குவித்துவைத்த நெருப்பு தணலாடக் கிடந்தது. திடீரெனப் பதுங்கி வந்த இரவு, அனைத்து இடங்களிலும் பெருகி நின்றது. கூந்தலை நீவிவிடும் அம்பிகாவின் விரல்களைப்போல இவ்விரவை நீவுகிறது குளிர்ந்த காற்று. பயணக் களைப்பில் இருவரும் வெள்ளனவே நித்திரை கொள்ளலாம் என முடிவெடுத்தோம். கண்களை மூடினால் மணியன் வந்துவிடுகிறான். கண்ணீர் விசும்பி அழும் அவனது வார்த்தைகள் நடுங்குகின்றன. `இயக்கம் என்னைச் சுட்டுவிடும்... காப்பாற்று... காப்பாற்று’ என்று என்னை நோக்கிக் கைகளை நீட்டுகிறான். கண்களை இறுக்கி, போர்வையால் என்னை மூடிக்கொண்டேன். இரவு நெடுந்தூரம் போகுமொரு பயணி. அதற்கு எத்தனை காலத்து களைப்பும் தாகமும் இருக்கும்!

இரவுக்கு எத்தனை சக்கரங்கள், எத்தனை வடங்கள்... எத்தனை விழிப்புகளும், பிரார்த்தனைகளும் இரவை இழுத்துப்போகின்றன... `இரவே! எனக்கு நித்திரையைக் கொடு.’ அதிகாலையிலேயே கோயிலுக்கு வெளிக்கிட்டேன். வீட்டிலிருந்து வீதியை அடைந்ததும் எதிரே வந்த பொயிலைக் கிளியண்ணா சைக்கிளை நிறுத்தாமலேயே அந்தச் செய்தியைச் சொல்லிக்கொண்டு போனார்.

“தம்பி காந்தியோட அல்லியைச் சுட்டுப்போட்டாங்கள்.”

பாய்ந்தடித்து வீட்டுக்கு ஓடினேன். அக்காவிடம் விஷயத்தைச் சொன்னதும் அவள் தலையில் கையைவைத்து ``ஐயோ...’’ என்று கதறி அழுதாள். அவளும் நானும் அல்லியக்காவின் வீட்டை நோக்கி ஓடிப்போனோம். பக்கத்து வீட்டில் இருக்கிறவர்கள் மட்டுமே இருந்தனர். கட்டிலில்வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -22

“ஒரு நாலு நாலரை இருக்கும். அப்பதான் துவக்குச் சத்தம் கேட்டது.” பக்கத்து வீட்டுக்காரர் நடுநடுங்கிச் சொன்னார்.

சமாதான நீதிவான் வந்து சடலத்தைப் பார்வையிட்டு, விசாரணைக்கு உத்தரவிடும் சடங்குக்காகக் காத்திருந்தோம். அவை முடிந்த பிறகு, பிரேத பரிசோதனை முடிந்து, சடலம் தருவதாகக் கூறப்பட்டது. அடுத்த நாள் காலையில் சடலம் கையளிக்கப்பட்டது. அம்மாவுக்குத் தகவல் சொன்னோம். அவள் வருவதில் சிக்கல்கள் இருந்தன. காந்தியண்ணாவால் வர முடியாது. ஆனால், அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சலூன் இனியவன் அதற்கான ஏற்பாடுகளை எப்போதும்போலச் செய்து முடித்தார். அல்லியக்காவுக்குக் கொள்ளிவைப்பதற்கான சடங்குகளை நானே செய்து முடித்தேன். காந்தியண்ணா, செத்த வீட்டுக்கு வருவார் என ராணுவமும், அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஆயுத இயக்கமொன்றும் காத்திருந்தன. அல்லியக்காவின் மீது நெருப்பு சுழன்றது. சுடலையின் மரங்களில் ஓலம் இரைந்தது. கொள்ளிக்குடம் தூக்கிவந்த எனது தோள்களில் துவக்கைச் சுமந்து இந்த அக்கிரமக்காரர்களை ஒருநாள் சங்ஹாரம் செய்வேன். அல்லியக்காவை எரியூட்டிவிட்டு வந்த அக்கணத்திலிருந்து நான் மிகவும் தளர்ந்துபோயிருந்தேன்.

“நாங்கள் நாளைக்குப் பன்னிச்சையடிக்கு வெளிக்கிடுவம்.” அக்கா சொன்னாள்.

“இல்லை, நான் வரேல்ல” என்றேன்.

“இஞ்ச இருந்தால் எங்களுக்கும் ஆபத்து வரும்போலக் கிடக்கு.”

“ஆபத்து வந்தாலும் பரவாயில்லை, ஓட வேண்டாம்” என்று சொன்னேன்.

அக்கா வாசலைப் பார்த்தாள். மருதன் அண்ணா நின்றுகொண்டிருந்தார். அவருடைய நெற்றியில் காயம் மாறியிருந்த தடயம் இருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அல்லியக்காவுக்கு நடந்தது குறித்துக் கவலைப்பட்டார். எனது மனமும் வார்த்தைகளும் இருட்குகைக்குள் மாய்ந்துபோயிருந்தன. ஆனால் மருதனிடம் சொன்னேன்.

“அல்லியக்காவைக் கொன்டவங்களுக்கு நல்ல பதிலடி கொடுக்க வேணும்.”

“ஆர் கொண்டது?” மருதன் கேட்டார்.

“உங்களுக்குத் தெரியாதே, ஏன் என்னட்ட கேக்கிறியள்?”

அக்காவும் அப்படியே அமர்ந்திருந்தாள். மருதன் தேத்தண்ணி கேட்டதும், நானே எழுந்து சென்று தண்ணீரைக் கொதிக்கவைத்தேன். அன்றிரவு நானும் மருதன் அண்ணாவும் நீண்ட நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம். ஆச்சர்யமாக மருதன் என்னிடம் நிறைய விஷயங்களைக் கதைத்தார். “உனக்கு இப்பதான் பன்னிரண்டு வயசாகுது. கொஞ்சம் போகப் போக நாட்டில என்ன நடக்குதெண்டு விளங்கும்” என்றார்.

“அல்லியக்காவின் கொலையை மன்னிக்கவே முடியாது. புலிகள் இயக்கத்தின் அபிமானிக்கு மனைவியாக இருந்ததால் கொல்லப்பட்ட அப்பாவி அவள். இதுக்கு நீதி கிடைக்காது. ஆனால், பதிலடி அடிக்கவேணும்” எனக் கொந்தளித்தேன்.

“பதிலடி என்று நீ என்னத்த சொல்லுறாய்?”

“இந்தக் கொலையைச் செய்தவங்களோட இருப்பிடங்களைத் தாக்கவேணும்”

“தாக்கினால் அது நீதியா?”

“ஓம், அது பாதிக்கப்பட்டவனின் பதிலடி. நீதிவேண்டிய சமிக்ஞை. உங்களுக்கு அது தெரியாதா?”

“தெரியாது. உன்னை மாதிரி எனக்குக் கதைக்கவே தெரியாது.”

“எனக்குத் தெரியும். நீங்கள் இருந்து பாருங்கோ... நான் பதிலடி கொடுப்பன்.”

மருதன் என்னுடைய தலையைத் தடவிக்கொடுத்தபடி “கண்மூடித்தனமான கோபம் உனக்கு மட்டுமில்ல, உன்னைச் சுத்தி இருக்கிற ஆக்களுக்கும் ஆபத்தைத் தரும்” என்றார். இரவிரவாக கதைத்துக் கொண்டிருந்தோம். மருதன் தன்னையொரு போராளியென என்னிடம் ஒப்புக்கொண்டார். ``மனதளவில் நானும் போராளியாகி மாதங்கள் ஆகிவிட்டன’’ என்றேன். அவர் சிரித்தபடி என்னைக் கட்டியணைத்தார். அல்லியக்காவின் இழப்பை காந்தியண்ணாவால் தாங்க முடியாது. அவர் இந்தத் துயரத்தின் வெந்தணலில் புழுவைப்போலத் துடிதுடிப்பார். கடவுளே அவரை ஆற்றுப்படுத்து என்று வேண்டினேன்.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு ஆயத்தமானேன். அக்கா போக வேண்டாமென்று சொல்லி மறித்தாள். மருதன் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தார். அவருக்கு என்னைப் புரிந்துவிட்டதுபோலும். நான் பள்ளிக்கூடப் பேருந்துக்காகக் காத்திருந்தேன். மாணவர்கள் கொஞ்ச பேரை ஏற்றிக்கொண்டு வந்து நின்ற பேருந்தில் ஏறினேன். ஆயுதம் தாங்கிய இரண்டு ராணுவத்தினர் பேருந்தில் அமர்ந்திருந்தனர். புதியதும் பயங்கரமுமான காட்சி. பள்ளிக்கூடத்து மாணவர்கள் போகிற பேருந்தில் இவர்களுக்கு என்ன வேலை... நாம் இருப்பது அமைதிக் காலத்திலா, ராணுவ ஆட்சிக்காலத்திலா... இராக்கில் அமெரிக்கப் படைகளைப்போல எங்கள் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த வன்கவர்வாதிகளை எதுவும் செய்ய முடியாதா? சோதனைச்சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவராகச் சோதனை செய்யப்பட்டனர். எல்லாம் நிறைவுற்று பள்ளிக்கூடத்துக்குள் நுழைகிறேன். இயல்புக்கு மாறாகப் பள்ளிக்கூடமே ராணுவச் சீருடைகளால் நிரம்பியிருந்தது. என்னுடைய வகுப்பறையில் இருந்த நண்பர்களிடம் நடப்பது பற்றிக் கேட்டேன். இரண்டு நாள்களாக இப்படித்தான் நடக்கிறது என்றனர். சங்கரப்பிள்ளை வாத்தியாரைக் கடத்திச்சென்று, இத்தனை நாள்களாகியும் விடாமல் உலகையும் எங்களையும் ஏமாற்றும் இந்தக் கயவர்கள் இங்கே நடமாடித் திரிவதன் மர்மம் என்ன?

கடவுள்... பிசாசு... நிலம்! -22

பள்ளிக்கூடத்தின் உணவு இடைவேளையின் போது, வகுப்பறைக்கு அருகில் நின்ற வேப்பமரத்தின் கீழே ராணுவ அதிகாரி ஒருவர் இளைப்பாறிக்கொண்டிருந்தார். அவருடைய வாகனம் சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தில் ஏதேனும் ஒரு சேதத்தை விளைவிக்க எண்ணினேன். பள்ளிக்கூடத்தின் பூசையறைக்குள் நுழைந்து தீப்பெட்டியை எடுத்துவந்தேன். யாருக்கும் சந்தேகம் வராதபடி அந்த வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் ஒரு தீக்குச்சியை எறிந்துவிடத் துணிந்தேன். பார்வைகள் விலகக் காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உணவு இடைவேளை முடிந்து மணி ஒலித்தது. ஆனாலும், நான் அந்தச் சிறு நொடிக்காகக் காத்திருந்தேன். நான் மறைந்திருக்கும் அந்த இடத்திலிருந்து ஓடி வாகனத்தை அண்மித்தால் போதும். அதன் பிறகு எல்லாமும் சரியாக நிகழும். இந்த பூமியில் கையாலாகாதவன் விரும்பி நிற்கிற ஒரு நொடியைத் தரவல்ல கடவுளையோ, பிசாசையோ இறைஞ்சி நின்றேன். ஒடுக்குதலை ஏற்க மறுக்கும் இந்த நிலத்தின் யுகத்தில் இப்படி எத்தனை நொடிகளுக்காக, எத்தனை பேர் காத்திருக்கின்றனரோ!

நான் வகுப்பறைக்குச் சென்றேன். ஏற்கெனவே வகுப்பு ஆரம்பமாகியிருந்தது. பாட ஆசிரியர் ``இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தாய்?’’ என மிடுக்கு குலையாமல் கேள்வி கேட்டார்.

“ராணுவத்தினர் என்னை விசாரணை செய்தனர், நீங்களே வந்து கேளுங்கள்” என்றேன்.

ஆசிரியர் திடீர் செவிடனைப்போல ஆகி, ‘`சரி இருங்கள்’’ என்றார். பயம், மனிதனை எவ்வளவு கீழ்மையையும் சகிக்கப் பண்ணிவிடுகிறது. சகிக்க முடியாதவர்கள் வீறுகொண்டு எழுந்து கீழ்மைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். என்னுடைய காற்சட்டைப் பையில் இருக்கும் தீப்பெட்டியில் உறங்கும் நெருப்பைக்கொண்டு இவர்களைப் பொசுக்குவேன். எனது நெருப்பின் பிராணம் சத்தியத்தால் எழும்பும். பள்ளிக்கூடம் விடுகிற நேரம் வரை அந்த வாகனம் அப்படியே நின்றது. யாரின் பார்வையும் படாத ஒரு நொடியை நிலம் எனக்குக் கையளித்தது. விறுவிறுவென வாகனத்தின் அருகே நடந்துபோனேன். ஒரு ராணுவச் சிப்பாய் சிறுநீர் கழித்தபடி ‘`என்ன?’’ என்று கேட்டான். காற்சட்டைப் பைக்குள் இருந்த எனது கைவிரல்களை வெளியே எடுத்தபடி, ‘`ஒன்றுமில்லை’’ என்றேன். அந்தச் சிப்பாய் ஓடிவந்து பிடித்து ‘`பொய் சொல்லாதே’’ என்றான். ‘`நான் சும்மாதான் வந்தேன்’’ என்று மீண்டும் மீண்டும் சொன்னேன். கைகளை மேலே உயர்த்துமாறு சோதனை செய்யத் தொடங்கினார்.

நான் மீள மாட்டேன் என்று கடவுளும், பிசாசும், நிலமும் ஒருகணம் திகைத்தனர்!

(நீளும்...)