அலசல்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -23

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

அல்லியக்கா கொல்லப்பட்டு இரண்டு நாள்கள் ஆகியிருந்தன. மருதன் அண்ணா எங்களுடைய வீட்டிலேயே தங்கியிருந்தார்.

‘நீங்கள் அப்பிடி நடந்துகொண்டிருக்கக் கூடாது ஆதீரன்’ என்று மருதன் அண்ணா கனிவு குலையாமல் சொன்னார். இன்னும்கூட கோபம் தணியாத என்னை ஆறுதல்படுத்தினார். “ஆத்திரமும் அவசரமும் புரட்சிக்கு உகந்ததில்லை தம்பியா” இந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு எழுந்து சென்றார். அக்காவுக்கு இந்த விஷயம் தெரியக் கூடாதென முன்கூட்டியே சத்தியம் வாங்கிவிட்டுத்தான் மருதனுக்குச் சொன்னேன். அந்த ராணுவச் சிப்பாய் என்னுடைய கைகளை மேல் நோக்கி உயர்த்தச் சொல்லிவிட்டு, ``முட்டுக்காலில் இரு’’ என்றார். பள்ளிக்கூடம் விட்டு மாணவர்கள் போய்க்கொண்டிருந்தனர். நான் முட்டுக்காலிட்டு கைகளை மேலே உயர்த்தியபடி இருந்தேன். திடீரென “சரி நீ எழும்பி வீட்டுக்குப் போ” என்றதும் புத்தகப் பையை எடுத்துக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். தீப்பெட்டி எதற்கு என்று சிப்பாய் கேட்ட கேள்விக்கு, “கோயிலில் கற்பூரம் கொளுத்த” என்றேன். ``ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வருவேன்’’ என்று மேலதிகமாக ஒரு பொய்யைச் சொன்னேன். என்னுடைய முகத்தைப் பார்த்து அவனுக்குள் இரக்கமூறியிருப்பதை எண்ணி மனம் வாடினேன், ஐயமுற்றேன். அநீதியாளர்களின் இரக்கத்தின் மீது சந்தேகப்படும் தார்மிகம் அவர்களால் பாதிக்கப்படுபவனுக்கு உண்டு.

அல்லியக்கா கொல்லப்பட்டு இரண்டு நாள்கள் ஆகியிருந்தன. மருதன் அண்ணா எங்களுடைய வீட்டிலேயே தங்கியிருந்தார். அவரைச் சந்திக்க வந்திருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவரை, எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார். பெண்மணியின் பெயர் மேகலா. இயல்பின் வசீகரம்கொண்ட முகம். தன்னுடைய கைப்பையிலிருந்து ஒரு சின்னக் கைப்பேசியை எடுத்துக்கொடுத்தார். மருதன் அதை வாங்கிக்கொண்டு நன்றி மட்டும் சொல்லிக்கொண்டார். அந்தக் கைப்பேசியை வாங்கிப் பார்த்தேன். `Motorola’ என்று எழுதப்பட்டிருந்தது. நான் அக்காவுக்கு எடுத்துச் சென்று அதைக் காட்டினேன். வாங்கியவள் ஒரு பொம்மையைப் பார்ப்பதைப்போல பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அன்றைக்கு விடிய விடிய அந்தக் கைப்பேசியை சும்மா அழுத்திக்கொண்டே இருந்தேன். ஐந்து நாள்கள் கழித்து மருதன் வீட்டிலிருந்து சென்றார். போகும்போது நிறைய புத்திமதிகள் சொன்னார்.

“நீங்கள் நினைக்கிறதெல்லாம் சரி. ஆனால் எது சாத்தியமோ, எது யதார்த்தமோ அதுக்குத்தான் வேலை செய்யவேணும்.”

நான் சரியென்று தலையாட்டினேன். அக்கா வாசல் வரை சென்று வழியனுப்பிவைத்தாள். அவளுக்குள் அப்போதும் வோக்மென் இல்லாமலேயே ஜேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்.

கடவுள்... பிசாசு... நிலம்! -23

அல்லியக்காவின் செத்த வீட்டுக்குக் குறைவான ஆட்களே வந்தனர். வர பயந்தனர். அம்மாவே வராமற்போனது அதிர்ச்சியாக இருந்தது. அவளுக்கு பயம் காரணமாக இருந்திருக்காது. பின்னர் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுந்தது. அக்காவிடமும் கேட்டேன். இயக்கம் பங்கெடுக்க வேண்டாமென்று சொல்லியிருக்கும் என்றாள். வீட்டைவிட்டுச் சென்ற மருதன் திரும்பி வந்தார். தன்னுடைய மூக்குக்கண்ணாடியை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டாராம். அக்கா “கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கோ” என்றாள்.

“என்ன சாத்திரமே, எனக்கு ஒண்டும் நடக்காது” என்று சிரித்தார். அக்காவுக்கு இப்படியான மீறல்களில் விருப்பமில்லை. அவள் சகுனத்தில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருப்பவள். அதனால் மருதனைக் கோபத்துடன் நோக்கினாள். அவர் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எழுந்து சென்றார். மூக்குக் கண்ணாடி அணிந்ததும் தோற்றம் மாறிவிட்டது. கண்கள் உள்ளே போய்விட்டன. மருதன் விடைபெற்றுப் போகும் அந்த நிமிடத்தில் குயிலொன்று கூவத் தொடங்கியது. இவ்வளவு நாடகீயமான தருணத்தை இயற்கை அளிக்குமென என்னால் நம்ப முடியாதிருந்தது. அக்கா அந்தக் குயிலில் தன்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மாலையில், ராணுவத்தின் பெரிய முகாமொன்றைத் தாண்டியிருக்கும் மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாடுவதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். எப்போதாவது விளையாட வாய்ப்பு கிடைக்கும். வயதில் மூத்தவர்கள் விளையாடுவார்கள். வேடிக்கை பார்ப்பேன். அந்த மைதானம் செம்மண்ணால் ஆனது. கால்களிலிருந்து அணிந்திருக்கும் உடுப்பு வரை செந்நிறமாகிவிடும். அந்த ராணுவ முகாமில் ஏழு அடிக்கு மேலாக முள்ளுக்கம்பி அடித்து பாதுகாப்புக்குச் சுற்றிவர சிப்பாய்கள் நின்றுகொண்டிருப்பார்கள். எப்போதாவது வீதியால் செல்வோரை மறித்து அடையாள அட்டையை வாங்கிச் சரிபார்த்துக்கொள்வார்கள். `மேல்மாடி வீட்டு ஆர்மி காம்ப்’ என்றழைக்கப்படும் அந்த முகாமிலிருந்து ராணுவத்தினர் வந்து பிடித்துச் செல்லப்போகிறார்கள், வேகமாகச் சாப்பிடு என்று வெருட்டி குழந்தைகளுக்குச் சோறூட்டும் அளவுக்குப் புகழ்பெற்றிருந்தது. அந்த முகாமைத் தாண்டிப்போகிறேன், என்னுடைய காற்சட்டைப்பையில் இருக்கும் தீப்பெட்டியைத் தொட்டுப் பார்க்கிறேன். நெருப்பு யுகத்தின் குச்சிகள் எரிவதற்கு ஆயத்தமாக உறக்கமற்று இருந்தன. ஆனால், இந்தத் தீக்குச்சியால் இவர்களை வீழ்த்த இயலாது. இந்தச் சிறு நெருப்பால் இவர்களை எதுவும் செய்ய முடியாதென உணர்ந்துகொண்டேன். கொந்தளிப்பு அடங்கிய கடற்கரைக்கு வந்துபோவதுபோல மனம் மிக மெதுவாக முன்னேறி அசைந்தது.

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். கபிலன் சிகரெட்டை ஊதித் தள்ளியபடி அமர்ந்திருந்தார். துடுப்பெடுத்தாடும் அணியின் பிரதான ஆட்டக்காரர். குடிகாரன், பெண் பித்தன். ஆனால் எல்லோருக்கும் உதவும் நல்லவன். இரண்டு குழுக்களுக்கிடையே நிகழ்ந்த வாள்வெட்டுச் சண்டையில் கையில் வெட்டு வாங்கி இப்போதுதான் மீண்டிருக்கிறார். கபிலன் என்னைப் பார்த்ததும் “வாடா வன்னி” என்று அழைத்தார். யாழ்ப்பாணத்தின் எள்ளலும் அன்பும் நிறைந்த அழைப்பு. நாங்கள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துவந்த நாளிலிருந்து யாழ்ப்பாணிகள் எங்களை ‘வன்னிச்சனம்’ என்றுதான் அழைத்தனர். கபிலனின் வெட்டுக்காயத்தைப் பார்த்தேன். காய்ந்த களிம்புபோலிருந்தது. விளையாட்டில் எப்போதும் ஓட்ட எண்ணிக்கை குளறுபடிகள் வந்து, வாக்குவாதம் முற்றும். அன்றைக்கும் அதுபோல வாக்குவாதம் வந்து விளையாட்டு குழம்பிப்போய்விட்டது. சிலர் விளையாட வரவில்லையென ஒதுங்கி நிற்க, என்னை விளையாட்டில் சேர்த்துக்கொண்டனர். அன்றைக்குச் சரியான விளையாட்டு. துடுப்பெடுத்தாடி இருபது ஓட்டங்களை எடுத்தேன். கபிலன் என்னைப் பாராட்டித் தீர்த்தார். ``நீ இனி ஒவ்வொரு நாளும் விளையாட வரவேண்டும்’’ என உத்தரவாய்ச் சொன்னார். அல்லியக்காவின் கொலை குறித்து கபிலன் அண்ணாவிடம் கதைக்கும்போது அவர் தீர்மானமாகச் சொன்னார், “இதுக்கு இயக்கம் பதிலடி குடுக்கும். இருந்து பார்.’’ அன்றைக்கு நான் வீடு வருவதற்குள் இருண்டிருந்தது. அக்கா பயந்துபோய் வீட்டின் முன்னாலேயே அமர்ந்திருந்தாள்.

“இவ்வளவு நேரம் எங்கையடா போனீ?”

“விளையாடத்தான், கொஞ்சம் பிந்திட்டுது.”

அக்காவுக்கு இப்படித் தாமதமாக வந்தது பிடிக்கவில்லை. ஆனால் கண்டிக்கவுமில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு நித்திரைக்குச் செல்ல ஆயத்தமானோம். துவக்குச் சூடுகள் கேட்டன. எங்களுக்குள் கிலி பிறந்திற்று.

“இஞ்ச எங்கையோ பக்கமாய்த்தான் நடக்குது.”

நடுங்கத் தொடங்கியது. நான் அக்காவின் அரவணைப்பில் போய் படுத்துக்கொண்டேன். ‘`கடவுளே ஆருக்கும் ஒண்டும் நடக்கக் கூடாது’’ என்று மட்டும் அக்கா வேண்டினாள். நாய்கள் குரைக்கத் தொடங்கின. அழுகுரல் சத்தம் கேட்கிறது. இரவுக்கும் ஓலத்துக்கும் இடையே ஊழிச் சூறாவளி எழுந்தாடுகிறது. “ஆர்மிக்காரங்களுக்குத்தான் அடி விழுந்திருக்கும். அவங்களுக்குத்தான் விழவேணும்” என்றேன். அக்கா வாயைப் பொத்தி, ஓர் அடி அடித்தாள். தழும்புகள் ஏறி நின்றன.

அன்றைக்கு அதிகாலையில் எழுந்தேன். நித்திரை வரவில்லை. என்ன நடந்திருக்கும்... யாரை யார் சுட்டிருப்பார்கள் என யோசித்துக்கொண்டிருந்தேன். காலை விடிந்ததும் பூட்டம்மாவின் வீட்டுக்குப் போனேன். அவள் கதவைத் திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள். நான் ஜன்னல் வழியாகத் தட்டினேன். என்னைப் பார்த்ததும் கதவைத் திறந்து உள்ளே இழுத்துக்கொண்டாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -23

“என்ன பிரச்னை, ஏன் வீட்டுக்குள்ள இருக்கிறியள்?”

“இரவு ஆர்மிக்காறற்ற வாகனத்தையல்லே அடிச்சுப் போட்டாங்கள், நாலு பேர் செத்திட்டாங்கள்.”

“சத்தம் கேட்டது. நான் அக்காவிட்ட சொன்னன், இப்பிடித்தான் நடக்குமெண்டு. எங்க நடந்தது?”

“சிவத்தான்ர மில் முடக்கில.”

“சுட்ட ஆக்கள இரவிரவாய் ஆர்மிக்காரங்கள் தேடித் திரியிறாங்கள். இஞ்சையும் வந்து தேடினவங்கள். ரெண்டு பேராம்.”

“இயக்கம் மோட்டர் சைக்கிளில வந்தெல்ல இப்படிச் செய்யிறவங்கள்.”

“இல்லை. சுட்டுப்போட்டு ஓடிப்போனவங்களாம். காயப்பட்டவன் சொல்லியிருக்கிறான். சுற்றிவளைச்சுத் தேடுறாங்கள்.”

“எங்கட வீட்டுப் பக்கம் ஆர்மி வரேல்லையே..”

“ஓடிப்போனவங்களோட திசையிலதான் தேடுவாங்கள்.”

“அல்லியக்காவின்ர கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கியிருக்கினம்போலக் கிடக்கு.”

“அதுக்கு சனமிருக்கிற ஊருக்குள்ள வந்தே இப்படிச் செய்யிறது... மோடனுகள்.” பூட்டம்மா இயக்கத்தைத் திட்டினாள்.

அக்காவும் பூட்டம்மா வீட்டுக்கு வந்திருந்தாள். மூவரும் அங்கேயே இருந்தோம். ராணுவம் ஊரைச் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தது. பூட்டம்மா எல்லோருக்கும் சேர்த்துச் சமைத்தாள். அன்றைக்கு மாலையில் சிறுவர் பள்ளிக்கூடமொன்றின் கட்டி முடிக்கப்படாத கட்டடத்தில் மறைந்திருந்தவருக்கும் ராணுவத்தினருக்கும் மோதல் நிகழ்ந்தது. மறைந்திருந்த நபர் கொல்லப்பட்டதோடு, அவரின் சடலத்தை ராணுவம் தனது முகாமின் முன்னேயுள்ளே தகர ரம்முக்குள் போட்டுவைத்திருந்தது. அந்த ரம்மில் எழுதப்பட்டிருந்த வாசகம் `பயங்கரவாதி – தள்ளி நில்லுங்கள்’ என்றிருந்தது.

நானும் அக்காவும் வீட்டுக்குச் சென்றோம். பூட்டம்மா எங்களை வழியனுப்பிவிட்டு கதவை இறுகச் சாத்திக்கொண்டாள். மாலைக்கும் இரவுக்கும் நடுவே பொழுது மங்கியது. அக்கா விளக்கேற்றி வைத்தாள். அக்காவிடம் கேட்டேன்.

``மருதன் அண்ணா இஞ்ச வந்து போறது எங்களுக்குப் பிரச்னையில்லையே?’’

“ஏன் இல்லை, பிரச்னைதான்.”

“பின்ன ஏன் அவர் அடிக்கடி வந்து போறார்?”

“இயக்க வேலையாய்த்தான்.”

“இப்பிடி மூக்குக்கண்ணாடியப் போட்டுக்கொண்டு என்ன இயக்க வேலை செய்யிறார்?”

“ஆதீரா, நீ நினைக்கிறது மாதிரி மருதன் லேசுப்பட்ட ஆளில்லை. யாழ்ப்பாணத்தின்ர வரைபடமே மருதன்ர உள்ளங்கையில இருக்கு.”

“என்னக்கா சொல்லுறாய்?”

“ஓமடா, மருதன் தாக்குதல் பிரிவு. நான் நினைக்கிறன் இண்டைக்கு ராணுவத்தோட வாகனத்தை அடிச்சதும் மருதன்ர அணியாய்த்தானிருக்கும்.”

“எப்பிடிச் சொல்லுறாய்?”

“எனக்கு அப்பிடித்தான் தெரியுது. ஏனெண்டால் சிவத்தான்ர மில்லுக்கும், பள்ளிக்கூடச் சந்திக்குமாய் அஞ்சாறு நாளாய்ப் போய்ட்டு போய்ட்டு வந்தவர்.”

“அவர் மாட்டினால் நாங்களும் மாட்டிடுவம்.”

“ஆனால், அவர் மாட்ட மாட்டார்.”

கதைத்துக்கொண்டிருக்கும்போது எங்களுடைய வீட்டின் பின்புறமாக நின்றுகொண்டு அக்காவின் பெயரைச் சொல்லி ஒரு குரல் அழைக்கிறது.

“ஆர்?” அக்கா கேட்கிறாள்.

“நான் காந்தியண்ணா பிள்ளை, கதவைத் திற.”

வெளியே ராணுவச் சீருடையோடு காந்தியண்ணாவும் இன்னொருவரும் நின்றுகொண்டிருந்தனர். காந்தியண்ணாவின் கழுத்திலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.

(நீளும்...)