மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! -25

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

காந்தியண்ணாவை நினைத்துப் பார்க்கிறேன். ராணுவத்தைக் கத்தியால் குத்திக் கொன்று, முகாமில் தாக்குதலை நிகழ்த்தினார் என்பதை யாரால் நம்ப முடியும்?

குப்புறக் கிடந்த இரு சடலங்களையும் முகம் தெரியுமாறு புரட்டினார்கள். காய்ந்த ரத்தத்தின் நெடியும், மொய்த்த எறும்புகளையும் தாண்டி முகங்களை அடையாளம் கண்டனர். “ரெண்டு பேரும் ஆர்மிக்காரர்போலக் கிடக்கு” என்றது ஒரு குரல். “சாறமும், மாப்பிள கோடன் சேர்ட்டும் போட்டுக்கொண்டே ஆர்மிக்காரங்கள் நிப்பாங்கள், உனக்கென்ன விசரே” என்று குரல் எழுப்பினார் இன்னொருவர். ஐயரின் இறுதி ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த ராணுவ அதிகாரி, சடலங்களின் அருகில் போனார். முகங்களை உற்று நோக்கினார். ஒருவிதச் சாம்பலும் மஞ்சள் நிறமுமாக ஆகியிருந்த சடலத்தைப் பார்த்து உறுதிப்படுத்தினார். இரண்டு சிப்பாய்கள் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருப்பதை அவரே கண்டுபிடித்தார். ஆனால் எப்படி சாறமும், மாப்பிள்ளை கோடன் சேர்ட்டும் இவர்கள் அணிந்திருக்கிறார்கள் என எல்லோருக்குள்ளும் கேள்விகள் எழுந்தன. ஆனால், என்னிடம் பதில் இருந்தது. காந்தியண்ணாவும் ஓவியனும் இவர்களைக் கொன்று கைப்பற்றிய ராணுவச்சீருடையை அணிந்துகொண்டுதான் அடுத்த தாக்குதலைச் செய்திருக்கிறார்கள். காந்தியண்ணாவின் கழுத்திலிருந்து வழிந்த ரத்தத்துக்கு இங்கே நிகழ்ந்த கத்திக்குத்தே காரணமாக இருந்திருக்கிறது. இவர்களைக் கொலை செய்து, சீருடையைப் பறித்துக்கொண்டு, தங்களுடைய ஆடைகளை இவர்களுக்கு அணிவித்திருக்கிறார்கள். ஐயரின் இறுதி ஊர்வலம் தொடர்ந்தது. ராணுவ அதிகாரி தெரிவிக்கவேண்டிய இடங்களுக்குத் தகவலை அனுப்பியிருந்தார். அங்கேயே ஒரு சிப்பாயை நிறுத்திவைத்துவிட்டு ஊர்வலத்தோடு நடக்கத் தொடங்கினார். சுடலையிலிருந்து வந்ததும் அக்காவிடம் நடந்ததைச் சொன்னேன். அவள் பெரிதாக வியக்கவில்லை. அப்படித்தானே நிகழும் என்பதைப்போல முகபாவத்தை வைத்திருந்தாள். ஆனால், ராணுவம் எதையாவது பதிலுக்குச் செய்யுமென்று மட்டும் உறுதியாகச் சொன்னாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! -25

அடுத்த நாள் காலையில் பள்ளிக்கூடத்தின் காலைப் பிரார்த்தனையில் அதிபர் உரை நிகழ்த்தினார். நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அசம்பாவிதச் சூழல்கள் பற்றி கவலை தெரிவித்திருந்தார். சங்கரப்பிள்ளை வாத்தியாரின் விடுதலைக்காக மனித உரிமை அமைப்புகள் அரசாங்க மேல்மட்ட பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துகின்றன, ஆகவே மாணவர்கள் யாரும் இனிமேல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதென அறிவுறுத்தினார். மாணவர்கள் பலர் அதை ஆமோதித்தனர். சிலரோ “பயந்தாங்கொள்ளி” என்று குரல் எழுப்பினார்கள். அதிபர் கடுமையாகக் கோபங்கொண்டு “துணிச்சல்காரர்களே! நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் நான் நடாத்துவது பள்ளிக்கூடமே தவிர ஆயுதப் பயிற்சி முகாமில்லை” என்றார். மீண்டும் சில மாணவர்கள் “பயந்தாங்கொள்ளிகளே! பள்ளிக்கூடம் அக்கிரமக்காரர்களின் கூடாரமாக இருக்கும்போது, நாங்கள் ஆயுதப் பயிற்சி முகாமுக்குத்தான் போவோம்” என்றனர். காலைப் பிரார்த்தனையில் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது. அன்று முழுவதும் பள்ளிக்கூடமே ஸ்தம்பித்திருந்தது. குரல் எழுப்பிய மாணவர்கள் யார் யாரென அதிபருக்குப் பட்டியல் தரப்பட்டது. மதிய நேரத்தில் அவர்களை மட்டும் அழைத்து அதிபர் மிரட்டினார். மாணவர்கள் அவரின் வாதங்களைப் பொருட்படுத்தாமல் வெளியேறினார்கள். அவர்களின் உறுதியை எண்ணி வியந்தேன். சிறுவனாக இல்லாமல் போயிருந்தால் நானும் அவர்களோடு நின்றிருப்பேன். பள்ளிக்கூடம்விட்டுப் பேருந்தில் ஏறிக்கொண்டேன். மாணவர்கள் மத்தியில் காலையில் நடந்த சம்பவமே பேசுபொருளாக இருந்தது. நான் எதுவும் கதைக்கவில்லை. பாடப்புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தேன். வெறுமனே சொற்களால் பாசாங்கு காட்டித் திரியும் சிலரை எண்ணி வருந்தினேன். சொல்லைவிடச் செயல் பலமிக்கது. அவசியமானது. தாவரத்துக்குச் சூரியனைப்போல, புரட்சிக்கு செயலே ஊட்டமளிக்கிறது என்பதை விளங்கிக்கொண்டேன்.

காந்தியண்ணாவை நினைத்துப் பார்க்கிறேன். ராணுவத்தைக் கத்தியால் குத்திக் கொன்று, முகாமில் தாக்குதலை நிகழ்த்தினார் என்பதை யாரால் நம்ப முடியும்? அல்லியக்கா உயிரோடு இருந்து இந்தச் சம்பவங்களை அறிந்தாலும் நம்பியிருக்க மாட்டாள். கைதட்டி பெலத்து சிரித்திருப்பாள் என்றே தோன்றுகிறது. ஆனால், அல்லியக்கா அறிந்திராத காந்தியண்ணாவை அல்லவா கழுத்தில் ரத்தம் வழியச் சந்தித்திருக்கிறேன். ராணுவச் சீருடைகளை எங்களுடைய வீட்டில் புதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றை மோப்பம் பிடித்து ராணுவம் வந்துவிடுமே எனக்கூட பயந்தேன். பேருந்திலிருந்து இறங்கி நடந்துபோய்க்கொண்டிருந்தேன். இனியவனின் சலூன் பூட்டிக்கிடந்தது. மூன்று நாள்கள் விடுமுறை என்று கடைக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்தேன். அக்காவைக் காணவில்லை. கூப்பிட்டுப் பார்த்தேன், பதில் இல்லை. பூட்டம்மா வீட்டுக்குப் போயிருப்பாள். அடுப்படிக்குள் நுழைந்து மதியச் சாப்பாட்டைப் பார்த்தேன். பாகற்காய் குழம்பும், பருப்பும் இருந்தன. குழம்புச்சட்டியில் சோற்றைப் போட்டுக் குழைத்தேன். கொஞ்சம் பருப்பை ஊற்றினேன். மோர் மிளகாய்ப் பொரியலைக் கடித்தபடி சாப்பிடத் தொடங்கினேன். சரீரமெங்கும் உருசை படர்ந்தது.

அக்கா கடைக்குப் போய், பொருள்கள் வாங்கிக்கொண்டு வந்தாள். பள்ளிக்கூடத்தில் நடந்தவற்றைச் சொன்னேன். “நல்ல அதிபர், இப்பிடித்தான் இருக்க வேணும்” என்றாள். நான் சாப்பிட்டு முடித்ததும் மைதானத்துக்குப் போக வேண்டும். கபிலன் அண்ணா என்னை வரச் சொல்லியிருக்கிறார் என்பது ஞாபகத்தில் வந்தது. எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமென கபிலன் அண்ணா ஒத்துக்கொண்டதே சந்தோஷமாகவிருந்தது. இன்றும் துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைக்க வேண்டுமென எண்ணினேன். மைதானத்துக்கு எல்லோரும் வந்திருந்தனர். கபிலன் அண்ணா மட்டும் வரவில்லை. அவர் வந்தால்தான் எனக்கு வாய்ப்பு. இந்த அண்ணாக்களெல்லாம் என்னைச் சேர்த்துக்கொள்வதையே தியாகம்போல பாவனை செய்வார்கள். நான் அமைதியாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன். கபிலன் அண்ணா வரவில்லையென்றால், கொஞ்ச நேரத்தில் போய்விடலாமென்றுஎண்ணிக்கொண்டிருந்தேன். விளையாட்டு ஆரம்பமானது, நாகரிகத்துக்குக்கூட என்னிடம் விளையாட வருகிறாயா எனக் கேட்பதற்கு யாரும் தயாரில்லை. வன்னியிலிருந்து வந்தவனுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாதென நம்புகிற, தெரியக் கூடாதென விரும்புகிற யாழ்ப்பாண குணமிது. மைதானத்தைவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினேன்.

வீதியின் இரு மருங்கிலும் ராணுவத்தினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். கருவிகள் சிலவற்றை வைத்து தாம் சந்தேகிக்கும் இடங்களில் சோதனை செய்தனர். நாய்கள் வெருண்டோடின. நான் மிகவேகமாக வீட்டுக்கு நடக்கலானேன். எனக்கு எதிர்ப்புறத்தில் பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்த கபிலன் அண்ணா வேகத்தைக் குறைத்து “வன்னி, என்னடா விளையாடேல்லையா” எனக் கேட்டார். ``என்னை அவர்கள் சேர்த்துக்கொள்ளவில்லை’’ எனச் சொன்னேன். “மோட்டார் சைக்கிளில ஏறடா” என்றார்.

“இல்லையண்ணா, நாளைக்கு வாறன், நீங்கள் போங்கோ” என்று சொன்னதும் “நீ இப்ப வரப்போறியா, இல்லையா” என்று பாசத்துடனும் உரிமையுடனும் அழைத்தார். அவரோடு மீண்டும் மைதானத்துக்குப் போனேன். விளையாடிக்கொண்டிருந்த இரண்டு அணித் தலைவர்களையும் அழைத்து என்னைச் சேர்த்துக்கொள்ளாததற்காகக் கடிந்துகொண்டார். அன்றைக்கு நான் விளையாடினேன். ஆனால், சிலர் என்மீது கோபத்திலும் பொறாமையிலும் இருந்தனர். கபிலன் எனக்குச் செல்வாக்கு அளிப்பதாக அவர்களுக்குள் புகைச்சல்கள் இருந்தன. என்னை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டுமென எதிர் அணியினரும், நான் நன்றாக விளையாடக் கூடாதென எனது அணியினரும் எண்ணினர்.

விளையாடி முடித்ததும் கபிலன் என்னை ஏற்றிக்கொண்டு எங்கேயோ வெளிக்கிட்டார்.

“அண்ணா நான் வீட்ட போகவேணும்.”

“போகலாம், பேசாமல் வாடா.”

“எங்க கூட்டிக்கொண்டு போறியள்?”

“உன்னைக் கூட்டிக்கொண்டு போய் என்ன சுடவா போறாங்கள். சத்தம் போடாமல் வா.”

“எங்கையெண்டு சொல்லுங்கோவன்.”

ஒரு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்ததும் இரைந்துகொண்டிருந்த வானொலியை நிறுத்திவைத்தார். வெற்றிலையை மடித்து வாய்க்குள் வைத்து ஒரு அதக்கு அதக்கியபடி என்னைப் பார்த்த வயோதிகர், மெல்லப் புன்னகைத்து ‘உனக்கு என்ன பெயர்?’ என்று கேட்டார்.

“ஆதீரன்.”

“ஆரடா உனக்கு இந்தப் பெயர வெச்சது?”

“அம்மா.”

“என்ன அர்த்தமாம்?”

“தெரியேல்ல.”

கபிலன் என்னைத் தன்னுடைய தாய்க்கு அறிமுகப்படுத்திவைத்தார். “உன்னைப் பற்றி கபிலன் நிறைய சொல்லியிருக்கிறான்” என்றார். என்னைப் பற்றி நிறைய சொல்வதற்கு என்ன இருக்கிறதென குழம்பிப்போய்விட்டேன். தாய் தருவித்த தேத்தண்ணியை உறிஞ்சிக் குடித்தேன். என்னோடு கதைத்துக்கொண்டிருந்த வயோதிகர் என்னை அருகில் அழைத்து, “நீங்கள் என்ன ஆக்கள்?” என்று கேட்டார்.

“தமிழ் ஆக்கள்தான், வன்னியிலருந்து இடம்பெயர்ந்து இஞ்ச இருக்கிறம்” என்றேன்.

கபிலன் அந்த வயோதிகருக்கு அருகில் வந்து “தாத்தா உங்களுக்கு இன்னும் சாதியரிப்பு இருந்தால் எங்கையாவது கொண்டே தேயுங்கோ” என்றார். சாதியா... என்ன ஆக்கள் என்று கேட்டது சாதியைத்தானா? கேவலம்... இந்த வயோதிகப் படுக்கையிலும் சாதிப்புண் இவனைச் சீழ் பற்றி இருக்கிறதே என்று அங்கிருந்து விலகினேன். கபிலனும் நானும் அங்கிருந்து வெளிக்கிட்டோம்.

கடவுள்... பிசாசு... நிலம்! -25

“என்னை வீட்டுக்குப் பக்கத்தில இறக்கி விடுகிறியளா?”

“ஓம்.”

கபிலனோடு மோட்டார் சைக்கிளில் வந்தேன் என்று அக்கா கேள்விப்பட்டால், அடித்து உரித்துவிடுவாள். கபிலன் என்றால் காவாலி. அவரை யாருக்கும் பிடிக்காது. எப்போதும் சண்டைகளும் சச்சரவுகளும். யாழ்ப்பாணத்தில் நிகழும் குழுக்களுக்கிடையிலான வாள் வெட்டு மோதல்களில் கபிலன் பெயர்பெற்றவர். நான் அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கிறேன் என்பதைப் பார்த்துச் சொன்னால்கூட வீட்டில் அமர்க்களம் நிகழும். கபிலனும் நானும் `மேல்மாடி ஆர்மிக் காம்ப்’பை அண்மிக்கும் நேரத்தில், எங்களை ராணுவத்தினர் மறித்தனர். வயதில் சிறியவனான என்னிடம் அடையாள அட்டை இல்லை. கபிலன் தனது அடையாள அட்டையைக் காண்பித்தார். ராணுவத்தினருக்குக் கபிலனை நன்றாகத் தெரியுமென்றாலும், அதுவொரு ஆக்கிரமிப்புச் சடங்கு. கபிலனையும் என்னையும் மோட்டார் சைக்கிளைவிட்டு கீழே இறங்குமாறு ராணுவத்தினர் கூறினர். நானும் கபிலனும் இறங்கிக்கொண்டோம்.

கபிலனின் கையைப் பிடித்த ராணுவச் சிப்பாய், அவனைத் தரையினில் முட்டுக்காலிட்டு அமருமாறு கட்டளையிடுகிறார். கபிலன் ஏன் அமர வேண்டுமெனக் கேட்க, வாக்குவாதம் முற்றுகிறது.

ஏனையோரின் கண்களிலும் மூச்சிலும் பதற்றத்தின் வெக்கை. அவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்துக்கொண்டு செல்கின்றனர். என்னையும் ராணுவம் போகச் சொல்கிறது. கபிலன் மட்டும் நிலத்தின் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்க நிலம் இருள்கிறது.

நான் “கபிலன் அண்ணா...” என்று சொல்லிக்கொண்டே வீடு நோக்கி ஓடினேன். கொஞ்ச தூரம் போனதும் வெடியோசைகள் கேட்டன.

(நீளும்...)