Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 26

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

எதுவும் நடக்கக் கூடாது’ எனப் பிரார்த்தித்தாள்.

வெடியோசைகள் அங்கிருந்துதான் வந்தன. கபிலனைத்தான் கொன்றுவிட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், ராணுவ முகாமுக்குள் தவறுதலாக ஏற்பட்ட வெடிவிபத்து எழுப்பிய சத்தமென அறிந்ததுமே கபிலனுக்கு எதுவும் நிகழவில்லை என உறுதியடைந்தேன். எனக்குள் ஒரு கனல் பற்றத் தொடங்கியிருந்தது. இரவை வெறித்துக் கடந்துகொண்டிருந்தேன். இந்த மண்ணில் எப்போது நிம்மதியாகவும் கெளரவமாகவும் நாம் வாழப்போகிறோமோ என்ற ஏக்கமும் தவிப்பும் வழமைபோல எனக்குள் மிதந்துவந்தன. யாழ்ப்பாணம்போலவே ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் தமிழ்ச் சனங்களின் இன்னல்களை எண்ணிப் பார்த்தேன். கிளிநொச்சியும் முல்லைத்தீவும்போல சுதந்திரச் சுவாசிப்புக்கு உத்தரவாதம் இல்லாமல்போன யாழ்ப்பாணத்தை உறுத்தும் ஊழ்வினை எதுவென்று அறியேன்! படுக்கையில் கிடந்தபடி விழித்திருந்தேன். என்னையறியாமல் கண்ணீர் பெருகியோடும் பலவீனமான நிமிடங்கள் நீளுகின்றன. விம்மியழுதால் உடைந்து பெருகும் வெள்ளம்போலப் பாயக் காத்திருந்த கண்ணீரை எனக்குள் சுமந்துகொண்டிருந்தேன். இந்தப் படிப்புக்காக ஏன் இங்கிருந்து அல்லற்படுவான், மொத்தமாகப் பன்னிச்சையடிக்கே திரும்பிவிடலாமென்ற எண்ணம் உந்தித் தள்ளியது. ஆனால், அக்கா ஒத்துக்கொள்ள மாட்டாள். யாழ்ப்பாணத்தில படிக்கிற மாதிரி வராது என்று ஒற்றைக்காலில் நிற்பாள். “உழுகிற மாடு எங்கையெண்டாலும் உழும்” எனச் சொல்லிப் பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் விடியட்டுமென்று விழித்திருந்தேன். அதிகாலையிலேயே எழுந்த அக்கா, என்னைத் தட்டியதும் அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

“எனக்கு பயமாய் இருக்கு, பூட்டம்மாவுக்குப் பல்லு விழுகிற மாதிரி கனவு கண்டனான்” என்றாள்.

“அவாவுக்குப் பல்லு நல்லாய்த்தானே இருக்குது, நீங்கள் ஏன் பயப்பிடுகிறியள்?”

“உனக்கென்ன நக்கலாய் இருக்கோ. இப்பிடித்தான் முதலொருக்கால் பல்லுவிழக் கனவு கண்டு கூடாததெல்லாம் நடந்தது. உனக்கு ஞாபகமில்லையோ?”

“ஞாபகம் இருக்கு.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 26

அக்கா திருநீற்றை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு, ‘கடவுளே... எதுவும் நடக்கக் கூடாது’ எனப் பிரார்த்தித்தாள். காலையில் பள்ளிக்கூடம் போவதற்காகப் பேருந்துக்காகக் காத்திருந்தேன். என்னைக் கடந்து மோட்டார் சைக்கிளில் சென்ற கபிலன் அண்ணா திரும்பி வந்து “ஏறு” என்றார். கபிலனைப் பார்த்த சில மாணவிகள் முகத்தை விடுக்கென திருப்பிக்கொண்டனர். நான், ‘`இல்லை பேருந்து வரும்’’ என்று சொன்னேன். அவர் அடம்பிடித்து என்னை ஏற்றிக்கொண்டு சென்றார். பள்ளிக்கூடத்துக்குப் போவதற்கு முன்னிருக்கும் ராணுவ சோதனைச்சாவடியிலிருந்து சரியாக இருநூறு மீட்டர் முன்பாக என்னை இறக்கிவிட்டார். நான் அங்கிருந்து நடந்து போனேன். அந்தச் சோதனைச்சாவடிக்கு புதிதாக வந்திருக்கும் ராணுவச் சிப்பாய் ஒருவர் எல்லோருடனும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்தார். கோப்ரல் நிசாங்க என்று எங்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் அன்றைக்கு ராணுவச் சீருடையில் மிடுக்காக நின்றார். மாணவர்கள் சோதனை செய்யப்பட்டு வெளியேறும் பகுதியில் காத்திருந்து ஒவ்வொருவருக்கும் ரொபி கொடுத்துக்கொண்டிருந்தார். அது புதுவிதமான அதிர்ச்சியாக இருந்தது. சோதனைச்சாவடியில் நிற்கும் ராணுவத்தினர் ஒருவர் மாணவர்களுக்கு இனிப்பு மிகுந்த ரொபியைக் கொடுக்கிறாரே என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நானும் சோதனை முடித்துப் போகும்போது, அதை வாங்கிக்கொண்டேன். ஆனால், ``ஏன் தருகிறீர்கள்?’’ என்ற கேள்வியையும் கேட்டேன். அப்போது கோப்ரல் நிசாங்க “இன்று என்னுடைய காதலிக்குப் பிறந்தநாள்” என்றார். நான் அவருக்கு வாழ்த்துகளைச் சொன்னேன். எனது கன்னத்தைக் கிள்ளி தமிழில் “நன்றூய்...” என்றார். நான் ஒரு புன்னகையை மட்டும் அன்பளித்தேன்.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் வருகை அன்று குறைவாக இருந்தது. காலைப் பிரார்த்தனை முடிந்ததும் வழமைபோல வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அக்கா “பல்லு விழுந்து போகிற கனவைக் கண்டிருக்கிறாளே” என்ற தயக்கம் வேறு ஓடிக்கொண்டிருந்தது. பாடத்தை கவனிக்க மனம் இசையவில்லை. அங்குமிங்கும் தரிப்பிடமற்று தறி ஓடிக்கொண்டிருந்தது. இறுதியாகப் பன்னிச்சையடிக்குப் போயிருந்தபோது, நாகப்பரும் நானும் ஒன்றாக உப்புக்காட்டுக்குள் போனது ஞாபகத்துக்கு வந்தது.

நாய்கள் எங்களுக்கருகிலேயே படுத்திருந்தன. போராளிகள் சிலர் நடந்துபோயினர். ஒருவருடைய கையில் இரண்டு சாம்பல் நிற முயல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. “நல்ல விளைச்சலான முயல், பெடியளுக்கு இண்டைக்கு பதமான வேட்டை” நாகப்பர் சொன்னார். ஆனால் இன்றைக்கு வேட்டைக்குச் செல்ல வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நாகப்பரிடம் கதைத்துக்கொண்டிருப்பது ஒருவித சுகமாய் இருந்தது. உப்புக்காட்டின் கதையைச் சொல்ல எஞ்சியிருக்கும் அரிதானவர்களுள் இவரும் ஒருவர் என்பதை விளங்கிக்கொண்டேன். நாகப்பர் செருமிக்கொண்டு “ஆதீரன் நாங்கள் ஒண்டு வீட்டுக்குப் போகவேணும், இல்லாட்டி உள்ள நடக்கத் தொடங்கவேணும்” என்றார். நடக்கலாம் என்று எழுந்தேன். நாகப்பர் தன்னுடைய சாறத்தை அவிழ்த்து மீண்டுமொருமுறை இறுக்கிக் கட்டினார். நாய்கள் எங்களுக்குப் பின்னால் மெல்ல நடந்து வந்தன. எத்தனையோ தடவை இந்தக் காட்டுக்குள் தூரங்களை நடந்திருக்கிறேன். ஆனால், இன்று வேறொரு உணர்வாக இருக்கிறது. பெரிய வாகை மரமொன்றில் இரண்டு செம்போத்துப் பறவைகள் அமர்ந்திருந்தன. கண்களில் தீக்கனலின் சிவப்பு தெரிந்தது.

“எல்லா தெய்வங்களும் கோயிலில் இருக்க, பன்னிச்சைத்தாய் மட்டும் ஏன் இந்த உப்புக்காட்டுக்குள்ள வந்தவா” கேட்ட என்னை நின்று பார்த்த நாகப்பர், மெல்லச் செருமினார். அவரின் வெறும் மேலில் வியர்வையைத் துடைத்துக்கொண்டு சொன்னார்.

“ஆதீரா எங்களைக் காப்பாத்திற தெய்வங்களுக்குக் காட்டிலதான் இருப்பு. அது இண்டைக்கு நேற்றில்லை... எண்டைக்கும் அப்பிடித்தான்.”

“அப்ப கோயிலில இருக்கிற தெய்வங்கள் என்ன சும்மாவே...”

“எனக்குச் சும்மாதான். தெய்வம் எண்டு சொன்னால் வழிபடுகிற என்னோட இருக்க வேணும். என்னை அது தொடவேணும். நான் அதைத் தொடவேணும். பரஸ்பரம் எனக்கும் தெய்வத்துக்கும் கதைப் பேச்சு இருக்கவேணும்.”

“எங்கட புதையல் வைரவரையும் அப்படியே சொல்லுவியள்?”

“புதையல் வைரவர் அப்பிடிக் கிடையாது, எங்கட தெய்வம். போர்த்துக்கீசரை எதிர்த்து நின்று சண்டை போட்ட பண்டாரவன்னியன் காலத்திலருந்து, இண்டைக்கு பிரபாகரன் காலம் வரையும் வைரவர் காட்டின புதுமைகள் ஏராளம்.”

“புதையல் வைரவர் என்ன இயக்கமே?’’

“ஓம் உனக்குத் தெரியாதே. கேணல் புதையல் வைரவர் என்று ராங் குடுத்தது” சொல்லிவிட்டுச் சிரித்தார். எனது கையைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச தூரம் மெல்ல நடந்தார். ஈச்ச மரத்தில் செங்காய்கள் இருந்தன. நான் ஆசைபொங்கக் காய்களைப் பறித்துச் சுவைத்தேன். இனிப்பும் துவர்ப்பும் புரள உப்பின் சுவை கனிந்திருந்தது.

“கனக்க சாப்பிடாத, தொண்டை வறண்டு போயிடும்” என்று குரல் கொடுத்த நாகப்பரைத் திரும்பிப் பார்த்தேன். பட்டு வீழ்ந்துபோன கருங்காலி மரத்தில் ஏறி நின்றபடி, ஒன்றுக்குப் போய்க்கொண்டிருந்தார்.

“இப்பவும் சின்னப்பிள்ளையெண்டு நினைப்பு, மூத்திரம் போக உயரம் கேக்குது” குரல் கொடுத்ததும் “டேய் நானெல்லாம் உன்ர வயசில பனைமரத்தில ஏறி நிண்டு மூத்திரம் போய்க் காட்டுவன்” என்றார். நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்துவிட்டது. பனைமரத்தில் ஏறி நின்று மூத்திரம் போறது அந்தக் காலத்தில வித்தைக்குச் சமம் என்றார். மீண்டும் நடக்கத் தொடங்கினோம். நாகப்பரிடம் கேட்டேன்.

“பன்னிச்சைத்தாய் உப்புக்காட்டவிட்டு எப்பவாவது போயிருக்கிறாவோ?”

“கிழவி போக மாட்டாள். ஆனால் அவளின்ர கோபத்துக்கு ஆளான நிறைய பேருக்கு தண்டனை கொடுத்திருக்கிறாள்.”

“அப்பிடியே, ஆனால் இந்த ஆர்மிக்காரங்கள இன்னும் தண்டிக்கேல்லையே?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 26

நாகப்பர் சிரித்துக்கொண்டு சொன்னார் “ஆதீரா பன்னிச்சைத்தாய் தண்டிப்பாள். அவளின் நெருப்பு அநீதியை எரிக்கும், எரிச்சிருக்கு.”

“எங்க எரிச்சவா?”

“பாண்டியன்ர மதுரயை.”

“அது கண்ணகி அல்லே?”

“அவள்தான் இவள்.”

எனக்குத் திகைப்பாகிற்று. மதுரையை எரித்த கண்ணகியா எங்கள் பன்னிச்சைத்தாய், அப்போது வேட்டையாட வேண்டும்போலிருந்தது. நாய்களைத் தடவிக் கொடுத்தேன். `உடும்புகளின் சுவடைத் தேடுங்கள்’ எனச் சைகை செய்தேன். மழை மெல்ல தூறத் தொடங்கியது. “உப்புக்காடு எங்கட பரம்பரைக்குக் கோயில். அங்க இருந்துதான் எங்கட தெய்வம் எங்களைப் பாலிக்கும்” என்ற பூட்டம்மாவின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலிக்கத் தொடங்கின.

“ஆதீரன் இதுக்கு பதிலைச் சொல்லு” என்ற ஆசிரியரின் குரல் என்னைத் தட்டியதுமே வகுப்பறைக்குத் திரும்பினேன்.

“என்னடா யோசினை?” என்ற ஆசிரியரைப் பார்த்து “ஒன்றுமில்லை” என்றேன்.

மனத்தினுள் அமிலம்போல் தடுமாற்றம் ஓடிக்கொண்டிருக்கிறது. பள்ளிக்கூடம்விட்டு பேருந்தில் ஏறும்வரை அப்படியே இருந்தேன். பேருந்திலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து போகும் பாதையில் நிறைய துண்டுப்பிரசுரங்கள் விழுந்து கிடந்தன. காற்றில் எழுந்து பறந்தன. ஒன்றைக்கூட எடுக்காமல் நடந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். சிறிய ராணுவ முகாமின் முன்பாக சனங்கள் குவிந்திருப்பது தெரிந்தது. நான் மிக வேகமாக நடக்கத் தொடங்கினேன். சனக்கூட்டத்திலிருந்து வாக்குவாதம் ஏதோ நிகழ்ந்துகொண்டிருந்தது. என்னவென்று விளங்காமல் சனக்கூட்டத்தின் அருகில் போனேன். ராணுவத்தினர் எல்லோரையும் கலைந்து போகுமாறு சொல்லிக்கொண்டிருந்தனர்.

அங்கேயிருந்த ஒருவரிடம் கேட்டேன் “என்ன பிரச்னை?”

அவர் சொல்ல வாயெடுக்கையில்... ‘பளார்’ என்று யாரின் கன்னத்திலோ விழுந்த அறையின் சத்தம் எழும்பியது!

(நீளும்...)