Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 27

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

பன்னிச்சையடியில் காலையிலிருந்தே மழை பெய்துகொண்டிருந்தது. மணியனின் அப்பாவுக்கு உடம்பு சுகமில்லை.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட சனங்களில் ஒருவரை ராணுவம் அடித்துத் துவைத்தது. கூடியிருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற வேண்டுமென துடியாகத் துடித்தனர். என்ன பிரச்னை, எதற்காக ராணுவ முகாமுக்கு முன்னால் கூடி நிற்கின்றனர் என்று அறிய முடியாதிருந்தேன். ஆனால், நிலைமை மோசமாகிவிடுமெனத் தோன்றியது. முகாமுக்குள்ளிருந்து மில் சிவத்தானை இழுத்து வந்து சனங்களுக்கு முன்னே நிறுத்தினார்கள். அவரின் உடலெல்லாம் தழும்புகளும், ரத்தக் கண்டல்களும் வெம்பிக்கிடந்தன. சிவத்தானின் இடது கண் புருவம் வீங்கிப்போயிருந்தது. உள்ளடையோடு மட்டுமே மிஞ்சியிருந்த சிவத்தான், நிற்பதற்கு பலமற்று நிலத்தில் சரிந்து விழுந்து வெளியே கூடி நின்ற சனங்களைப் பார்த்து, ``காப்பாற்றுங்கள்’’ என்றார். பாவம் சிவத்தான், இவரை எதற்குப் பிடித்து அடிக்கிறார்கள்? சனங்களின் அரிசி திரிப்பதற்கும், மிளகாய் அரைப்பதற்குமே வாழ்க்கையை எழுதிவைத்தவர். சனங்கள் ``சிவத்தானை விடுவியுங்கள்’’ எனக் குரல் கொடுத்தனர். கொஞ்ச நேரத்தில் சிவத்தான் கண்டல் காயங்களோடு விடுவிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பாகத் தங்கள்மீது நடந்த தாக்குதலுக்கும் சிவத்தானுக்கும் தொடர்பு இருப்பதாக ராணுவம் நம்பியதன் விளைவு, இந்தக் களேபரத்தை உண்டுபண்ணியிருந்தது.

பேச்சுவார்த்தைகளும் அரசியல் தீர்வுத் திட்டங்களும் பண்டிகைக்காலப் பட்டிமன்றமாக நடந்துகொண்டேயிருந்தன. இரு தரப்புகளும் ஒன்றோடொன்று முரண்பட்டன. மத்தியஸ்தம் வகிக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தீவின் அமைதிக்காக முயல்வதைப்போலப் பேசினர். நாளிதழ்களில் பேச்சுவார்த்தைகள் தொடர்பாகக் கட்டுரைகள் வெளியாகின. இன்னொரு பக்கம் சனங்களுக்குக் கடுமையான அச்சுறுத்தல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ராணுவமும், அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுக்களும் சனங்களின் இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தன. நாள்களைத் தோட்டாக்கள் கிழித்தன. இரவையும் பகலையும் எண்ணிக் கடந்தும் வருடங்கள் போயின. அப்போது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். சங்கரப்பிள்ளை வாத்தியார் இல்லாமல் நான் மூன்று நாடகங்களை எழுதி நடித்திருந்தேன். `உன்னுடைய வயசுக்கு இதெல்லாம் தேவையில்லாத வேலை’ என்று சிலர் எச்சரித்தனர். இன்னும் சிலர் `இவ்வளவு சின்னப்பெடியனாக இருக்கிற நீயா இந்த நாடகங்களை எழுதினாய்?’ என்று ஆச்சர்யப்பட்டு நம்ப மறுத்தனர். டிசம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி அக்காவின் பிறந்தநாள். நாங்கள் பன்னிச்சையடிக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே சென்றோம். பூட்டம்மா எங்களை வழியனுப்பி வைத்தாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 27

பன்னிச்சையடியில் காலையிலிருந்தே மழை பெய்துகொண்டிருந்தது. மணியனின் அப்பாவுக்கு உடம்பு சுகமில்லை. அம்மா அவருக்குச் சமைத்துத் தந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போனேன். வீட்டின் வெளியே அமர்ந்திருந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். மழைக்கரு சுமந்த வானத்தில் சலனம் நிறைந்திருந்தது. படலையைத் திறந்து உள்ளே போனதும் “வாடா ஆதீரன்” என்றழைத்தார். “சாப்பாட்ட உள்ளே வைக்கவா” என்று கேட்டதும், சரியென்று தலையசைத்தார். வீட்டினுள்ளே பிளந்துகிடந்த பலாப்பழத்தின் மீது ஏராளமான கொசு குவிந்திருந்தது. சாப்பாட்டை வைத்துவிட்டு வெளியே வந்தேன். “மணியனைப் பார்க்கிறதுக்கு ஒருக்கால் இயக்கத்திட்ட கேட்டுப் பார்க்கப் போறேன். சந்திக்கவிடுவாங்கள் எண்டுதான் நினைக்கிறேன்” என்றார். “ஒருக்கால் முயற்சி செய்து பாருங்கோ, சிலவேளை அனுமதிப்பினம்” என்று நம்பிக்கையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென ஓடத் தொடங்கினேன்.

அம்பிகாவிடம் பிழையாக நடந்துகொண்ட மணியனை தண்டிக்கக்கூடிய அனைத்து உரிமைகளும் எனக்கிருப்பதாக இப்போது நம்புகிறேன். ஆனால், அவன் தண்டனை பெறத் தொடங்கியிருப்பான். சீர்திருத்தப்பள்ளியில் அவனுக்கு வழங்கப்படும் வேலைகளும் பாடங்களும் கொஞ்சம் கடுமையானதாகவே இருக்கும். நான் அவனைத்  தண்டிக்க மாட்டேன். மன்னிப்பேன். அவனுக்கு ஒரு வாழ்விருக்கிறது. அதைச் சொல்லித்தருகிற நண்பனாக இருப்பேன்.

அம்பிகா என்னைக் கண்டால் தலையைக் குனிந்து நளினத்தைக் கட்டுப்படுத்தி நடக்கத் தொடங்குகிறாள். அவளுடைய நீளக்கூந்தலை ரெட்டையாகப் பிரித்து பின்னிக் கட்டிவிட்டால், அது வேறு என்னை அலைபாய வைக்கிறது. அவளின் அழகு பற்றிய அகங்காரத்தினால் அழகெனும் சொல் அழகாகிறது. மெல்ல வளரும் இளங்குருத்தென என் காதல் அவளைக் கண்டதும் அசைகிறது. இவை எல்லாமும் தெரிந்த பின்னரும் ஒரு நொடியும் என்னைத் திரும்பிப் பார்க்க எண்ணாத அவளின் மமதையை இன்னும் விரும்பினேன்.

அன்றிரவு எங்களுடைய சொந்தக்காரர் ஒருவரின் பிள்ளைக்குப் பிறந்தநாள்விழா நடந்தது. அன்றிரவு அம்பிகா அணிந்து வந்திருந்த பச்சை நிறத்திலான சரிகைப் பஞ்சாவி, அவளைக் கொஞ்சம் பெரிய ஆளாகக் காட்டியது. வருபவர்களுக்குப் பலகாரங்களும் தேநீரும் வழங்கிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் வேறோர் ஆளிடம் கொடுத்தனுப்பியிருந்தாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவளிடம் நேருக்கு நேராகப் போய் நின்று உங்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்கலாம் என்று மனதுக்குள் எழுந்த கொதிப்பு உந்தியது. பிறந்தநாள் விழாவில் குடித்துவிட்டு நின்ற இளைஞர்கள் சிலர் பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். பெரியவர்கள், குடும்பங்களோடு வந்திருந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். நானும் அம்மாவும் போயிருந்தோம். அக்கா வரவில்லை. புகைப்படத்தை எடுத்து முடித்ததும் அம்மா சொன்னாள். “வாடா போவம்.”

“நான் கொஞ்ச நேரம் இஞ்ச நிண்டிட்டு வரட்டே அம்மா.”

“வேண்டாம், வேண்டாம். வா போகலாம்.”அம்மாவிடம் ஓடிவந்த அம்பிகா “அக்காவுக்குச் சாப்பாடு கட்டித் தாறன். கொண்டு போங்கோ” என்று சொன்னாள். அம்மா வேண்டாமென்று மறுத்து, அம்பிகாவின் கையைப் பிடித்துத் தனக்குப் பக்கத்தில் அமரச் செய்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் மீண்டும் தன்னுடைய கூந்தலை விரல்களால் நீவிக்கொண்டு அம்மா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.“நீ ஏன் இஞ்ச நிக்கிறாய், கெதியாய் வீட்டுக்குப் போகவேண்டியதுதானே?”

“ஓம் போகவேணும், கொஞ்ச வேலைகள் செய்து குடுத்திட்டுப் போகலாமெண்டு நினைச்சன்”அம்பிகா சொன்னாள். “சரி நீயும் வா. உன்னைக் கொண்டே வீட்ட விட்டிட்டு நாங்கள் எங்கட வீட்ட போறம்” என்றாள் அம்மா. அம்பிகா ஒரு நொடியும் தாமதிக்காமல், “இருங்கோ வாறன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். கையில் ஒரு பலகாரப் பையை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவிடம் சொன்னாள். “போகலாம்.”

அம்மா, நான், அம்பிகா மூவருமாக நடந்து போய்க்கொண்டிருந்தோம். இருட்டு. இதுவரைக்கும் சந்தித்திராத இருட்டு. பிடித்த பெண்ணோடு நடந்து போகிற இந்தத் தருணத்தில் பூமி ஏன் இருட்டுக்கட்டியிருக்கிறது? அவளது கூந்தல் தெரியவில்லை. இதென்ன நரக வேதனை. அம்பிகாவின் கூந்தலைக் காண முடியாத இருளில் எனக்கேன் கண்களெனக் காதல் பிரவாகமாக மொழியில் புரள்கிறது.

கடவுள்... பிசாசு... நிலம்! - 27

அம்பிகாவை அவளது வீட்டில் விட்டுச் சென்றோம். நாகப்பர் விடியற்காலையிலேயே வந்தார். இடதுபக்க நெற்றியில் சிறிய காயமிருந்தது. மருந்து கட்டியிருந்தார். என்ன நடந்தது என்று அம்மா கேட்டதும், “கீழ விழுந்திட்டன். கல்லு குத்திப்போட்டுது” என்றார். என்னைப் பக்கத்தில் அழைத்து “இன்றைக்குப் பின் நேரமாய்க் காட்டுக்குப் போகலாம் ஆயத்தமாய் இரு” என்றார். நான் அப்போதுதான் நித்திரையிலிருந்து எழும்பினேன். விரைவாகப் பல்லைத்தீட்டி முகத்தைக் கழுவிவிட்டு, இடியாப்பத்தைச் சாப்பிடத் தொடங்கினேன். நாகப்பருக்கு அம்மா உணவைப் பரிமாறினாள். மெல்லச் செருமிக்கொண்டு சாப்பிடத் தொடங்கினார். அம்பிகா நடந்துவருவது வேலியால் தெரிந்தது. நான் சாப்பிட்டு முடித்து, கைகழுவும் இடத்துக்குப் போனேன். அம்பிகா படலையைத் திறந்து உள்ளே வந்து அடுப்படிக்குள் போனாள். காலையிலேயே குளித்து நெற்றியில் நீறு பூசி, நறுமணம் வீச அவள் நடந்துபோனதைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அம்மாவிடம் ஐந்து சோடி அப்பத்தை வாங்கிக்கொண்டு வெளியே போனாள். படலைச் சாத்தும் அந்த நொடியில் என்னைப் பார்த்து கண்களைச் சிமிட்டிக்கொண்டாள். இந்தக் காலைப்பொழுது புத்தம் புதிய ஒரு மலரென எனது உடலில் பூக்கத் தொடங்கியது. பின்னால் ஓடிப்போய் அவளது நீளக்கூந்தலை எனது விரல்களினால் நீவிவிடத் தோன்றியது. பெண்ணின் கண்களுக்கென ஒரு மொழியிருக்கிறது. அதற்கு எத்தனை உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் என்று அறியேன். ஆனால், ஆயுத எழுத்து ஆயிரம் இருக்கின்றன. அவளைப் பாட வேண்டும், ஆராதிக்க வேண்டுமென்று என்னை நானே கெஞ்சிக்கொண்டேன். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்கிற இந்தப் பதிக வரியை மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொண்டேன். தாகம் பெருகிய ஒரு வழிப்போக்கனின் கையில் கிடைத்துவிட்ட செவ்விளநீர்போலக் காதல் என்னைக் கைகளில் ஏந்திக்கொண்டுவிட்டது. அம்பிகா எனும் பெயரை மனதுக்குள் உச்சாடனம் செய்யத் தொடங்கினேன். கூழாங்கல்போல எனக்குள் கிடந்தவள், மெல்ல மெல்ல ஓடும் நீரில் மேலேறி வந்தாள். அவளது ஜ்வலிப்பு, தனித்துவமான ஜாடை எல்லாமும் எனது புலன்களுக்குள் ஊடுருவி நின்றன. நதியின் கீழே அடைந்துகிடக்க இனி அவள் கூழாங்கல் இல்லை. நதியின் மேல் உதிக்கும் பிரகாசச் சுடர். அவளே என் தேவி. உப்புக்காட்டின் மீது ஆணை. பன்னிச்சைத்தாய் மீது சத்தியம். அவளே எனது ஜீவன். “இண்டைக்குப் பின் நேரம் நீ காட்டுக்கு வருவியோ, மாட்டியோ?’’ நாகப்பர் கேட்டார்.

“வருவன்.”

“பிறகு, அவளை விரும்பத் தொடங்கிட்டன். உப்புக்காடும் வேண்டாம், ஏழு நடுகற்களும் வேண்டாமெண்டு சொல்ல மாட்டாய்தானே?”

“நான் ஏன் அப்பிடி சொல்லுறன், எனக்கென்ன விசரே?”

“இப்பதானே தொடங்கியிருக்கிறாய். கொஞ்ச நாளில விசர் ஆக்கிடும்” என்றார் நாகப்பர். திடுமென வீட்டின் முன்னால் வந்து நின்ற வாகனத்திலிருந்து ஒருவர் எங்களுடைய வீட்டுக்குள் வந்தார். அவரைப் பார்த்ததும் திகைத்துவிட்டோம்.

(நீளும்...)