Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 28

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

இனிமேல் வன்னியைவிட்டு வேறு எங்கும் தன்னைப் போக வேண்டாமென இயக்கம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 28

இனிமேல் வன்னியைவிட்டு வேறு எங்கும் தன்னைப் போக வேண்டாமென இயக்கம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

காந்தியண்ணா என்னைக் கட்டியணைத்துக் கொஞ்சினார். அவரைப் பார்த்த அதிர்ச்சி என்னைப் பாம்பைப்போலச் சுற்றியிருந்தது. யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினரால் தேடப்படும் காந்தியண்ணா, வன்னிக்குள் எப்படி வந்தார்... ராணுவத்தின் சோதனைச் சாவடிகளைக் கடந்து அவரால் எப்படி வரமுடிந்தது? அதிர்ச்சியையும் வியப்பையும் புரிந்துகொண்ட காந்தியண்ணா சொன்னார் “நீ வந்த அதே பாதையாலதான் நானும் வந்தனான்.’’

நானும் அக்காவும் அதை நம்ப மறுத்தோம். அம்மாவுக்கு ஏற்கெனவே காந்தியண்ணா வன்னிக்குள் வந்திருப்பது தெரிந்திருந்தது. ``உங்களோடு இருந்தாரே ஓவியன் அவர் யாழ்ப்பாணத்திலயா... இஞ்ச வந்துட்டாரா?’’ என்று கேட்டேன். “அங்கதான்” என்றார்.

“நல்லதாய் போச்சு, புதைச்ச ராணுவச் சீருடையைக் கெதியாய் எடுக்கச் சொல்லுங்கோ, தற்செயலா கண்டுபிடிச்சிட்டாங்கள் எண்டால் அவ்வளவுதான்.”

“நீ ஒண்டுக்கும் யோசியாத, ஓவியனுக்குத் தேவைப்பட்டால் எடுத்திடுவான்.”

“ரெண்டு ஆர்மிக்காரரையும் கத்தியால குத்தியா கொண்டனியள்?”

“எங்க?”

“சுடலைக்குப் போற ரோட்டில.”

“ஓ....அதுவே! எங்களுக்கு அவங்கட சீருடை தேவைப்பட்டது. உடனடியாய் அப்பிடி ஒரு முடிவு எடுக்கவேண்டிப் போயிற்று.”

“ஆனால், உங்களுக்கும் அவங்களுக்கும் இடையில கடுமையான தள்ளுமுள்ளு நடந்திருக்கும்போல.”

“பின்ன, அண்டைக்கு என்ர கழுத்தில ரத்தம் வந்ததெல்லே. அந்தக் காயம் அங்கதான்.”

“ஆர்மியிட்ட துவக்கு இருந்திருக்குமே?”

“ஓம் இருந்தது. நாங்கள் அதைக் கைப்பற்றி இன்னொரு இடத்தில மறைச்சுவெச்சிருக்கிறம்.”

“நான் அதைக் கேக்கேல்ல, உங்களைச் சுட்டிருந்தால்...”

“அதுக்கு நாங்கள் நேரங் குடுக்கேல்ல, ஓவியன் மின்னல் வேகத்தில ஒரு தாக்குதல் நடத்தினான்” காந்தியண்ணா கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சொன்னார்.

இனிமேல் வன்னியைவிட்டு வேறு எங்கும் தன்னைப் போக வேண்டாமென இயக்கம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார். அரசியல் துறையின் கீழுள்ள நிர்வாகம் ஒன்றில் காந்தியண்ணாவுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பின் நிமித்தம் அவருக்கும் சனங்களுக்குமிடையே ஓர் உறவைப் பூண்டுகொண்டார். தன்னைப் போராளியென நினைப்பவர்களை இடைமறித்து ‘ஆதரவாளன் மட்டுமே’ எனச் சொன்னார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 28

அந்திப்பொழுது சிவந்த மேற்கு திசைநோக்கி, நகுலன் அண்ணா முகாமில் இருக்க வேண்டுமென்ற வேண்டுதலோடு சைக்கிளில் சென்றேன். விறகெடுக்கச் சென்ற சித்தியும், இன்னும் சில பெண்களும் வீதியில் வந்து கொண்டிருந்தனர். அம்பிகா என்னைக் கண்டதும் தலையில் கிடந்த விறகுக்கட்டோடு கண்களை கீழே இறக்கினாள். அவளின் நடையில் இறுக்கம் தொனித்தது. கொஞ்ச தூரம் அவளைக் கடந்து மீண்டும் திரும்பிப் பார்த்தேன். விறகுக்கட்டைச் சுமந்து நிற்கும் அவளின் தலை திரும்புவதற்கு முனைவதை உணர்ந்தேன். உடலின் ஒவ்வொரு திசுவிலும் சோதி. ‘மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே’ என்ற சிவபுராணத்தின் வரியில் என்னை நான் பூட்டிக்கொண்டேன். அம்பிகாவின் அமுத நிழலில் இளைப்பாறும் எனது செளந்தர்யத்தின் சுகந்தத்தைக் காற்றும் கொஞ்சம் பூசிக்கொண்டது. வீதியின் இறக்கத்தில் சைக்கிள் மிகவேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பருவத்தின் சிறகுகள் முளைத்த பறவையின் பரவசம் எனக்குள் கிளையாகப் பெருகியது. நகுலன் அண்ணாவின் முகாமை வந்தடைந்தேன். சைக்கிளை வேலியில் சாத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். வாசலில் பாதுகாப்புக்கு நின்ற போராளி என்னை மறித்து விசாரணை செய்தார்.

“நகுலன் அண்ணாவைப் பார்க்க வேணும்” என்றேன்.

“அவரில்லை, நாளைக்குத்தான் வருவார்.”

எங்க போய்ட்டார் என்று கேட்கலாம். ஆனால், கேட்கக் கூடாது.

இன்றைக்கு நகுலன் அண்ணாவைச் சந்தித்தால், நிறைய கதைக்க வேண்டுமென்று எண்ணினேன். உண்மையில் இந்தச் சமாதான காலம் யாருக்கானது? போரை எதிர்கொண்ட பொதுசனங்கள் குறித்து எந்தப் பரிவும் காட்டாத இந்தச் சமாதானத்தை ஆயுதங்களின் வேள்விக்காகப் படையலிடும் இரு தரப்பு குறித்தும் என்னிடம் விமர்சனங்கள் இருந்தன. நகுலன் அண்ணா ஒரு மூத்த போராளி. அவரிடமிருக்கும் அரசியல் தெளிவும் தொலைநோக்கும் என்னை வியப்பிலாழ்த்துபவை. கற்பனைகளோடும் சாகச உணர்ச்சிகளோடும் உரையாடக்கூடியவர்களோடு நேரம் செலவழிப்பது கிடையாது. அவர்களிடம் இருப்பது கண்மூடித்தனம். அப்படியானவர்களின் சொற்களுக்கு இடையில் தோன்றுகிற இடைவெளியில் காலம் பல்லிளித்துவிடும். நகுலன் அண்ணாவின் முகாமிலிருந்து சைக்கிளை எடுத்து மீண்டும் வீடு நோக்கி உழக்கலானேன். வருகிற வழியிலுள்ள ஆரம்பப் பள்ளியில் தெருக்கூத்து போடவிருப்பதாக ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்யும் வாகனம் கடந்தது. பின் நேரம் ஆறு மணிக்குத் தொடங்கும் தெருக்கூத்தைப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. நாகப்பர் உப்புக்காட்டுக்குப் போக வேண்டுமென காத்திருக்கவும் கூடும். நான் வீட்டுக்கு வந்தால், அவர் வாசலிலேயே அமர்ந்திருந்தார். உள்ளே அக்காவும் அம்பிகாவும் அலங்காரப் பொருள்களை வெட்டிக்கொண்டிருந்தனர்.

“இவ்வளவு நேரமும் எங்கையடா போனீ” நாகப்பர் கேட்டார்.

“நகுலன் அண்ணாவின்ர இடத்துக்குப் போனான். ஆனால், ஆள் வெளியால எங்கையோ போய்ட்டாராம்.”

“சரி, போகலாமோ அல்லது நீ வரேல்லையோ?”

“ஒரு நிமிஷம் இருங்கோ, வாறன்” என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தேன். அம்பிகாவின் கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. அக்கா எதையோ கத்தரிக்கோலால் வெட்டிக்கொண்டிருந்தாள். எங்கள் இருவரின் கண்களும் மொழிக்கு முன் தோன்றிய சொற்களைக் கதைக்கத் தொடங்கியிருந்தன. மெல்ல மெல்ல வளரும் வேப்பங்கன்றென வளர்ந்திருந்த அந்த நொடிக்குள் இருவரின் துளிர்ப்பும் ராகமும் பெருகி நின்றன.

“ஆதீரா, உள்ளுக்குள்ள என்ன அடையே கிடக்கிறாய். கெதியாய் வா.”

“வந்திட்டேன்” என்றபடிக்கு வெளியேறினேன். நாகப்பர் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு உப்புக்காட்டுக்குள் நடந்துபோனார். வேட்டைநாய்கள் எங்களோடு வந்தன. லேசாக மழை பெய்யத் தொடங்கியது. நாய்களைத் தடவிக்கொடுத்தேன். உடும்புகளின் சுவடுகளைத் தேடுங்கள் எனச் சைகை செய்தேன். “உப்புக்காடு எங்கட பரம்பரைக்குக் கோயில். அங்க இருந்துதான் எங்கட தெய்வம் எங்களைப் பாலிக்கும்” என்ற பூட்டம்மாவின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலிக்கத் தொடங்கின. மழை ஓங்கி வந்தது. நாகப்பர் ``மழையில் நனைந்து வேட்டைக்குப் போய் நாள்கள் ஆகிவிட்டன’’ என்றார். நான் அந்த மழையை ரசித்தேன். அப்போதுதான் அவிழ்ந்த ரகசியம்போல மழை தித்திப்பாக என் குருதிக்குள் களிப்பை உண்டாக்கியது. எனது வேர்கள் அங்குமிங்கும் ஓடி வளர்ந்து தொன்மை நிலத்துக்குள் என்னை பொக்கிஷமாகப் பதுக்கியதுபோலுணர்ந்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 28

அன்றைக்கு இரண்டு சிறிய உடும்புகள் அம்பிட்டன. பன்னிச்சை மரத்தடிக்கு வந்து, அவற்றின் ரத்தத்தைத் தெளித்து வீட்டுக்குள் வந்தோம். தொப்பலாக நனைந்து உடம்பும் கொஞ்சம் காய்ந்துபோயிருந்தது. உடும்பை நாகப்பர் உரித்துத் துண்டுகளாக ஆக்கினார். கொஞ்சம் பெரிய தாச்சியில் அம்மா இறைச்சியை அவியவைத்தாள். சம்பா அரிசிச் சோறும் உடும்புக் குழம்பும் இரவுக்குச் சுதி சேர்த்தது. கள்ளு மட்டும் இருந்திருந்தால் இந்த நாள் அவருக்கு அமிழ்தம்.

அம்பிகாவை ஏற இறங்கப் பார்த்தேன். திடீரென சாப்பாட்டின் மீது பிடிப்பற்றுப் போனது. நாகப்பர், ``சாப்பிடு’’ என்று இரண்டு தடவை சொல்லிவிட்டார். அம்பிகா எனக்குள் கூழாங்கல்போலாகிவிட்டாள். அவளைச் சுமந்து நதியாக ஓடும் என்னில் எத்தனை எத்தனை ஓசைகள், வளைவுகள், நொடிகள், நிமிடங்கள் என எண்ணிக்கொண்டேன். அம்பிகா இரவில் அணிந்திருக்கும் ஆடையில் வடிவு கூடியிருந்தாள். முழுகிவிட்டு, கூந்தலை விரித்துவிட்டு வந்திருக்கிறாள். நீரின்றி அமையாது உலகென்று பாடிய வள்ளுவன் எவ்வளவு ரசனைக்காரன். அம்பிகாவின் கூந்தலிலிருந்து சொட்டிய நீர்த்துளிகள் பூமியைத் தொட்டதும், உலகுக்கு செளந்தர்யம் கூடியதைக் கண்டேன். அவளது மகத்துவமான வடிவுக்குச் சாட்சியாக இருக்கிறேன். அம்பிகா குளிர்ந்த இரவில் லாம்புச் சிமிலி தருகிற மஞ்சள் சூட்டைப்போல எனக்குள் ஒளி பரவி ஆடி நிற்கிறாள்.

எழும்பிப் போய்க் கையைக் கழுவினேன். வீட்டுக்குள் போகும் காரணத்துக்காகக் காத்திருந்தேன். அக்காவிடமே வோக்மேனைக் கேட்டுப் பார்க்கலாம், உள்ளே நுழைந்தேன். அக்காவும் அம்பிகாவும் கதைத்துக் கொண்டிருந்தனர். என்னைக் கண்டதும் முகத்தை ஊதுவத்தியாக்கிக்கொண்டு மூக்கில் தணல் தெரிய கொதித்தபடி கேட்டாள்.

“என்ன வேணும் உனக்கு, நாங்களெல்லாம் கதைச்சுக் கொண்டிருக்கிறம்.”

“ஓம் உங்கட வோக்மேனை கொஞ்ச நேரம் தாங்கோவன்.”

அக்கா எந்த மறுப்பும் சொல்லாமல் எடுத்துத் தந்தாள். வாங்கிக்கொண்டு அம்பிகாவைப் பார்த்தேன். பிறகு வெளியே அமர்ந்திருந்து பாடலைக் கேட்கத் தொடங்கினேன். யேசுதாஸ் உயிரைக் கடையும் தனது குரலால் ஒரு காதல் தோல்வியை இன்னுமின்னும் ஆறாத வடுவாக்கிக்கொண்டிருந்தார். எனக்கு அந்தப் பாடல் பிடிக்கவில்லை. என்னுடைய மனம் இப்போது தந்தி அறுந்த வயலினிலும் அட்சர சுத்தமாக ராகம் இசைக்கும் வல்லபத்தோடு இருந்தது. நான் வாசிக்கும் ராகங்கள் எத்தனையாக இருந்தாலும், அனைத்துக்கும் ஒரே பெயர் அம்பிகா என்று நினைத்துக்கொண்டேன். வோக்மேனை நிறுத்தினேன். அக்கா வெளியே எழுந்து வந்தாள். நான் உள்ளே போனேன். அம்பிகா அப்போது தனது கூந்தலை விரல்களால் நீவிவிட்டு ஒரு சுழற்று சுழற்றினாள். எனது ஞானத்தின் பசுந்தரையில் அப்போதுதான் ஒரு விதை வெடித்து, செடி எழுந்தது.

லாம்பின் வெளிச்சம் திரி குறைந்து திடுமென அணைந்தது. அம்பிகாவும் நானும் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டோம். இருட்டில் நின்றபடி அக்கா “ஆதீரா” என்று கூப்பிட்டாள். எல்லாமும் உறைந்துவிட்டது!

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism