Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 3

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

உங்களுக்காய் ஒதுக்கப்பட்டிருக்கும் தோட்டா காலாவதி ஆகாது

கடவுள்... பிசாசு... நிலம்! - 3

உங்களுக்காய் ஒதுக்கப்பட்டிருக்கும் தோட்டா காலாவதி ஆகாது

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்

காலையில் வீட்டின் முற்றமெங்கும் ராணுவத்தின் சப்பாத்துக் காலடிகள் பதிந்திருந்தன. வீட்டின் முன்கதவிலும் சேறுபடிந்த காலடிகள் நிரம்பியிருந்தன. இரவு நடந்தவற்றைப் பூட்டம்மாவுக்குச் சொன்னோம். “இப்பிடி வெறியாட்டம் காட்டினால் பெடியளிட்ட அடி வாங்கித்தான் சாவினம்” பூட்டம்மா வெற்றிலை எச்சிலைத் துப்பியபடி தொடர்ந்தாள். “நல்ல குடுவை குடுக்கத்தான் வேணும்” என்றேன். அக்கா, “வாயைப் பொத்தடா’’ என்று பிடரியில் அடித்தாள். நான் அமைதியானேன்.

அன்றைக்கே காளி கோயில் பொங்கலுக்காக வன்னிக்குச் சென்றோம். முதன்முறையாகப் போராளிகளின் முகாமுக்குப் போகும் வாய்ப்பு அப்போதுதான் கிட்டியது. “எங்கட அடைக்கல மாதாவின்ர மகன், யாழ்ப்பாணத்தில தங்கிப் படிக்கிறான். நல்ல கெட்டிக்காரன்” நகுலன் அண்ணா என்னை அறிமுகப்படுத்தினார். போராளிகள் புன்னகைத்தனர். அவர்களின் ஒவ்வோர் அசைவையும் ஆசையோடு உள்வாங்கிக்கொள்ள எத்தனித்தேன். அம்மாவை அடைக்கல மாதாவென அழைப்பவர்கள் இயக்கத்தின் பழைய ஆட்களாகவே இருப்பார்கள். நகுலன் அண்ணா இந்த முகாமின் பொறுப்பாளர். அவருடைய உடல்மொழியை நான் நகலெடுத்துக்கொண்டிருந்தேன். அவரது சிறிய வோக்கியை எடுத்து ஆரோடாவது கதைக்கலாம் போலிருந்தது. ஓர் அறையில் அடுக்கப்பட்டிருந்த ஆயுதங்களைப் பார்த்தேன். ஒயில் வாசம் நிறைந்திருந்தது. உலோகத்தின் மினுக்கம் ஒளிக்கோடாகி என்னை வந்தடைந்தது. ஒருநாள் இந்த ஆயுதத்தைத் தூக்கி நின்று சமராடுவேன். நகுலன் அண்ணாவுடன் இரவு வரைக்கும் முகாமிலேயே இருந்தேன். வீட்டுக்குப் போகலாமென்று அவர் சொன்னதும் வேண்டாமென்றேன்.

“அப்ப எங்களோடேயே இருக்கிறியோ?”

போராளியொருவர் நக்கலாகக் கேட்டார். தீர்மானமாகச் சொன்னேன்.

“ஓம் இருக்கிறன்.”

பன்னிச்சையடி கிராமத்தின் காவல் தெய்வமாக, காளியே இருந்தாள். அவள் குடிகொண்டிருக்கும் பன்னிச்சை மரத்துக்கு வயதுமில்லை மூப்புமில்லை. ஊரின் வடக்குத் திசையில் காய் தள்ளியிருந்த பன்னிச்சை மரத்தின் முன்னால் சனங்கள் பொங்கல் வைத்தனர். பூசாரிக்கு அடுக்கெடுத்துக்கொண்டிருந்தாள் அம்மா. பொங்கிக்கொண்டிருந்தாள் அக்கா. இன்றிரவு காளிக்கு மடையெடுப்பு இருக்கிறது. நெடுவல் ராசன் இல்லாத மடையிரவு. அவரின் திரண்ட மேனியில் காளி நின்றாடுவாள். காலம் சேமித்த சிதைகளில் அவரை ஏற்றியிருந்தது. மரணம் எரியட்டும்.

உப்புக்காட்டின் பன்னிச்சை மரத்தடிக்குப் போகலாமென்று நடந்தேன். காட்டினுள்ளே மூட்டமான குளிர் இருந்தது. பொன்வண்டுகள் பிடித்து விளையாடிய வாகை மரத்தைக் கடந்து, பன்னிச்சை மரத்தை அடைந்ததும் வணங்கி எழுந்தேன். மரத்தின் குரல் துரிதகதியில் என்னை அடைந்தது. `எனக்குப் பசிக்கிறது, ஏதேனும் படையலிடு’ என்றது. சிறிய முள்மரத்தின் கிளையொன்றை முறித்து வந்து எனது நெஞ்சில் ஓங்கி அடித்தேன். ரத்தம் வழிந்து பன்னிச்சை மரத்தின் வேர்களைத் தொட்டது. காற்று வீசாமல் மரம் கிளைகளை அசைத்து பூக்களைச் சொரிந்தது.

நெடுவல் ராசன் சொன்ன ஏழு நடுகற்களைத் தேடலாமென்று எண்ணினேன். ஆனால் திருநீற்று வாய்க்கால் ஓடும் இடத்துக்குச் செல்வதற்கு பயமாகவிருந்தது. முனியின் கண்களில் தென்படாமல் செல்வதற்கு நெடுவல் ராசனிடம் ஒரு கள்ளப்பாதையிருந்தது. இன்று வேண்டாம். ஆனால் ஒருநாள் அந்த நடுகற்களை நான் கண்டடையாமல் விட மாட்டேன் என்று பன்னிச்சை மரத்தின் மீது சத்தியம் செய்தேன். அந்தியிறங்கிக்கொண்டிருந்தது. போராளிகள் சிலர் காட்டுப்பாதையில் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் கையில் நவீன கருவிகள் இருந்தன. அவற்றால் எதையோ அளந்து குறிப்பெடுத்தபடியிருந்தனர். நான் அவர்களுக்குப் பின்னால் போக விரும்பினேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 3

உப்புக்காட்டுக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. இங்கு வேட்டையாடிய விலங்கினது இறைச்சியைச் சமைக்கையில் உப்பு சேர்க்கக் கூடாது. இயல்பிலேயே அந்தக் காட்டிலுள்ள அனைத்துச் செடிகளிலும், விலங்குகளிலும், ஓடைகளிலும் உப்புத்தன்மை இருக்கும். காட்டில் விளையும் ஈச்சம்பழங்களில்கூட உப்புச்சுவை கனிந்திருக்கும். அம்மா விறகெடுக்கச் சென்ற ஒருநாள், காட்டில் வைத்து அமுதுண்டேன். அவளது முலைகளே இனிமையான உப்பளமாயிருந்தது.

வருடாந்திர காளி கோயில் பொங்கலுக்குப் பிறகு, ஊரில் ஒரு பெண் பூப்பெய்திவிடுவாள் என்பது ஐதீகம். இம்முறையும் அது அப்படியே நிகழ்ந்தது. காட்டுக்கு விறகெடுக்கப் போயிருந்தபோது அம்பிகா சாமத்தியப்பட்டாள். தன்னுடலின் சின்னஞ்சிறு பகுதியில் வித்தியாசமான பிசுபிசுப்பை உணர்ந்தாள். விறகுகளைச் சேமித்துக்கொண்டிருந்த வேறு யாரும் பார்த்துவிடாதபடி அம்பிகா தன்னுடைய தலையை இடப்புறமாகத் திருப்பி பாவாடையின் பின்புறத்தைப் பார்க்க முயன்றாள். உடலினுள்ளே ஊறும் பிசுபிசுப்பும், உணரத் தகுந்த நோவும் அவளுக்கு வியர்வையாகப் பெருக்கெடுத்தன. கண்கள் பிதுங்கி பயமெழுந்தது. அவள் அப்படியே குந்தியிருந்து ஏனையவர்களை நோக்கிக் குரல் கொடுத்தாள். அவளுக்கருகில் மிக விரைவாக ஓடிப்போன நளினியக்கா காட்டிலுள்ள அனைத்தும் அறியும் வண்ணம் “செல்வராசாவோட இளய மேள் புக்கை” என்று சந்தோசம் பொங்க கத்தினாள். காட்டுக்குள் சிறுமியாக விறகு வெட்டும் கைக்கத்தியோடும் கயிற்றோடும் சென்ற அம்பிகா ஊருக்குள் குமரியாகத் திரும்பிவந்தாள்.

செல்வராசாவின் வீடு பரபரப்பாகியது. பன்னிச்சையடிலிருந்த நாற்பது குடிகளும் அங்கேயே குழுமின. அவரின் மனைவி வசந்தாவும் இன்னும் சில பெண்களும் ‘குப்பைத்தண்ணி’ வார்ப்பதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தனர். தலையில் வெள்ளைத்துணியால் மொட்டாக்குப் போட்டு கை விளக்குமாற்றின்மீது அம்பிகாவை இருக்கச் செய்தனர். கிணற்றிலிருந்து நீரள்ளி அவளுக்கு முழுக வார்த்தனர். வசந்தா உரலில் கத்திரிக்காயை இடித்து வெள்ளைத் துணிகொண்டு பிழிந்தாள். தேநீர்க் கோப்பையில் வழிந்த கத்திரிக்காய்ச் சாற்றில், முட்டையை அடித்து ஊற்றினாள். அதனோடு கொஞ்சம் நல்லெண்ணெயும் ஊற்றிக் கலக்கினாள். முழுகி முடித்து குமரியாகப் பருவந்தரித்து வீட்டுக்குள் வெறித்திருந்த அம்பிகா, கத்திரிக்காய்ச் சாற்றை ஒரே மிடறில் அருவருத்து அருந்தினாள். நாற்பது குடும்பங்களும் அன்றிரவு செல்வராசா வீட்டில்தான் உடன் புக்கையும் கத்திரிக்காய் பால் கறியும் உண்டனர்.

அம்பிகா சுடரசையும் குப்பிவிளக்கின் வெளிச்சத்தில் வீட்டுக்குள் அமர்ந்திருந்தாள். இப்போது அவள் கண்ணுறும் ஒளியும் இருளும் இதற்கு முன்பு அவள் வாழ்வில் நிகழ்ந்ததில்லை. அம்பிகாவுக்குப் பதினோராவது நாளே பூப்புனித நீராட்டுவிழா நடந்தது. சேமிப்பில் கிடந்த காசெல்லாம் செலவழித்து செல்வராசா விமர்சையாகச் செய்து முடித்தார். இரண்டு நாள்களாக அந்த விசேஷக் களை ஊரில் நின்றது. வெளியிடங்களில் இருந்து வருகை தந்திருந்த சொந்தக்காரர்கள் நிரம்பிவழிந்தனர். நானும் அக்காவும் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.

நகுலன் அண்ணாவின் முகாமுக்குச் சென்று சொல்லிவிட்டு வரத் துணிந்தேன். முகாமின் வாசலில் நின்ற போராளியிடம் நான், ``யாழ்ப்பாணம் வெளிக்கிட்டேன்’’ என்றேன்.

“நீ எங்களோட இருக்கப் போறியெண்டு சொன்னாய், இப்ப யாழ்ப்பாணம் போறாய். உனக்கு ஆர்மிக்காரங்களதான் பிடிச்சிருக்கு போல.”

``உங்களுக்கு என்ன விசரா..? யாழ்ப்பாணம் போனா அதுதான் அர்த்தமா? அப்ப அங்க இருக்கிற இயக்க அண்ணாக்கள என்ன சொல்லுவியள்?’’

``அவங்கள் இயக்கமாய்தானே போய் நிக்கிறாங்கள். ஆனால் நீ?’’

“நான் இயக்கத்தில சேரத் தயார். உங்கட நகுலன் அண்ணாதான் வேண்டாம் என்கிறார். அவரிட்ட சேக்கச் சொல்லுங்கோ.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 3

“சரி நீ அடுத்த தடவை வா. நான் நகுலனிட்ட சொல்லி விடுறன். அதுமட்டும் நல்லாய்ப் படி” என்று சொல்லி வழியனுப்பிவைத்த அந்தப் போராளி அண்ணா, எனக்கொரு பேனாவைப் பரிசளித்தார்.

நான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் தாக்குதலுக்கு உள்ளான ராணுவத்தின் சிறிய முகாமைப் பார்த்தேன். முகாமில் பத்துக்கு மேற்பட்ட ராணுவத்தினர் இருந்தனர். அதிலொருவர் சனங்களோடு நன்றாகப் பழக ஆரம்பித்திருந்தார். தங்களிடம் மிஞ்சிய உணவுப் பொட்டலங்களையும் பழங்களையும் தருவித்தார். எங்களுடைய வீட்டுக் கிணற்றைக் குடிநீருக்காகப் பயன்படுத்த அனுமதி கேட்டார். அக்கா ஓமென்று தலையசைத்தாள். இல்லையென்று மறுக்கவும் முடியாது. நாங்கள் வீடு மாற வேண்டுமென்று முடிவுசெய்தோம். மெல்ல மெல்ல ராணுவத்தினர் முகாமைச் சுற்றியுள்ள சனங்களோடு ஐக்கியம் பாராட்டினார்கள். எங்களுடைய கிணற்றில் குடிநீர் அள்ளவருகிற சிப்பாயின் கண்களில் வாரித்தின்னும் வெறியிருந்தது. நாங்கள் அவசரமாக வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டோம்.

பூட்டம்மாவின் கோயில் வளவில் இருந்த வீட்டில் குடிபோனோம். அந்த வீட்டில் பாம்புகளின் புழக்கமிருந்தது. இரவானதும் வீட்டுக்குள் உளுந்து வாசம் பரவத் தொடங்கிவிடும். `கோயில் பாம்பு, ஒன்றும் செய்யாது’ என்று பூட்டம்மா சொன்னாள். அக்காவுக்கு மாதவிடாய் வரும் நாள்களில் அவள் வீட்டின் பின்புறத்தேயுள்ள பத்தியில் தங்கியிருப்பாள். வெளியே அடுப்பை மூட்டிச் சமைத்துச் சாப்பிடுவோம்.

“தம்பி உன்னை நல்லாய் படிப்பிக்க வேணுமெண்டுதான் இப்பிடி அக்கா கஸ்ரப்படுறன். வேறோண்டையும் சிந்திக்காமல் படி. படிச்சால்தான் எதிர்காலத்தில சந்தோசமாய் வாழலாம். அம்மா நெருப்பு தின்று உழைக்கிறாள். அவளுக்காகவேணும் படி” என்பாள் அக்கா. சாத்தியம் இல்லையென்றாலும் அக்காவின் நிம்மதிக்காய் ஓமென்று தலையசைப்பேன். அவள் தாய்மை பொங்கும் கண்களால் என்னை அணைப்பாள்.

நொங்கின் நறுமணமுள்ள அந்திப்பொழுதில், கூடலில் திளைத்திருந்தார் காந்தியண்ணா. அமுதவெள்ளத்தைக் கறந்து அருந்தும் மோனத்தில் படுக்கையறை குளிர்ந்திருந்தது. ததும்பும் பரவசத்தில் சந்தன வெளிச்சம் உடல்களில் அலர்ந்திருந்தது. கூந்தலால் மார்புகளை அலங்கரித்துக்கொண்டு களைப்பில் கிடந்த அல்லியை இறுக அணைத்து முத்தமிட்டார். காந்தியண்ணாவின் பின்கழுத்தில் பற்கள் பதியமிட கடித்து அணைத்தாள் அல்லி. மழை பெய்யுமாற் போலிருந்தது. மின்னல் நரம்புகள் வானில் ஓடி மறைந்தன. காந்தியண்ணா கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். மழையிருட்டில் வீட்டின் முன்னால் யாரோ ஆயுதங்களோடு நடமாடிக்கொண்டிருந்ததைக் கண்டார். கதவை இறுகச் சாத்திவிட்டு அல்லியைக் கூட்டிக்கொண்டு பின்வளவால் தப்பியோடி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அல்லியக்கா பயந்து மூச்செறிந்து அழுதபடியிருந்தாள். காந்தியண்ணா என்ன செய்வதெனத் தெரியாமல் விறைத்துப்போயிருந்தார். இரவு முழுக்க நித்திரையற்று இருந்தோம்.

“நான் சாகிறதுக்கு அஞ்சேல்ல, ஆனால் செய்யவேண்டிய வேலைகள் இன்னுமிருக்கு. அதுவும் இவங்கள் கூலிக்குக் கொலை செய்யிற ஆக்கள். இவங்களின்ர கையால வெடிவாங்கிச் சாகக் கூடாது.” காந்தியண்ணா சொல்லிக்கொண்டிருந்தார்.

அதிகாலையில் தனது வீட்டுக்குச் சென்றபோது, நடுவீட்டில் பிணமொன்று தலைகீழாகத் தொங்கியதைக் கண்ட காந்தியண்ணா, அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடினார். பிணத்தின் வாயில் ஒட்டப்பட்டிருந்த காகிதத்தில் எழுதப்பட்டிருந்த இந்த வாசகம் நிணத்தால் நனைந்திருந்தது.

`காந்தி! உங்களுக்காய் ஒதுக்கப்பட்டிருக்கும் தோட்டா காலாவதி ஆகாது.’

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism