Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 35

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை எடுத்துக் காட்டுகிறார்கள். ஒரு போலீஸ் துப்பாக்கியை நீட்டியபடி இருக்க, இன்னொருவர் அடையாள அட்டையைப் பார்க்கிறார்.

நாங்கள் மாலையில் வீட்டுக்குத் திரும்புவதற்காகப் பேருந்தில் ஏறினோம். மருதன் தன்னுடைய உடுப்புப் பையை மட்டும் எடுத்துவந்தார். நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் வரை ஒரு பேருந்து. மீண்டும் அங்கிருந்து இன்னொன்றில் ஏற வேண்டும். இரண்டாவது பேருந்து இணுவிலைத் தாண்டியதும் ராணுவத்தினரால் இடைமறிக்கப்பட்டது. சோதனை செய்தனர். சந்தேகத்துக்கு இடமானவர்களிடம் விசாரணை செய்தனர். மருதன் மிக மிக இயல்பாக இருந்தார். அவரது உடுப்புப் பையைக் கிண்டிக்கிளறி சோதனை செய்த ராணுவ சிப்பாய், “உன்னுடைய அடையாள அட்டையைக் காட்டு” என்றார். மருதன் எடுத்துக் கொடுத்தார். அவன் அதைப் பார்த்துவிட்டு “இப்ப எங்க போறது?” என்று கொச்சைத் தமிழில் கேட்டான். மருதன் சொன்னார், “சொந்தக்காரர் வீட்ட போறன்.” சிப்பாய் சரியென்று தலையாட்டினான். பேருந்து, பயணத்தைத் தொடங்கியது. மருதனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். அவர் எதுவும் நடக்காததைப்போல மிகவும் சாதாரணமாக இருந்தார். அவரிடம் மெதுவாகக் கேட்டேன்.

“உங்களுக்கு பயமே இல்லையா?”

“எங்கட மண்ணை வன்கவர்வு செய்துகொண்டு நிக்கிற அவங்களுக்கு, நான் எதுக்கு பயப்பிட வேணும்? அவங்கள் எங்களைக் கண்டு பயப்பிடுறாங்கள் என்பதற்கு இந்தச் சோதனைகள்தான் சாட்சி.”

“நாளைக்கு ‘பழம்’ அதை எடுத்துக்கொண்டு வரும்போது இந்த இடத்தில கவனமாய் வரச் சொல்லுங்கோ.”

“நாளைக்கு இஞ்ச நிண்டு சோதனை செய்ய மாட்டாங்கள்.”

“அப்ப, வேற எங்க?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 35

“அது தெரியாது. ஆனால் நாளைக்கு இங்க நடக்காது.”

நாங்கள் வீட்டுக்கு வந்தடைந்தோம். அக்கா எங்களுக்காகக் காத்திருந்தாள். வந்ததுமே மருதன் குளித்தார். நான் கொஞ்சம் களைப்பாறிக் கொண்டேன். ரெண்டு பேருக்கும் தேநீரை எடுத்துவந்த அக்கா, பயணம் எப்பிடி இருந்ததென என்னைப் பார்த்துக் கேட்டாள்.

“நான் என்ன சுற்றுலாவுக்கா போய்ட்டு வந்தனான்.”

“அதுதானே, அப்பிடிக் கேளுங்கோ” என்றார் மருதன்.

அக்கா மருதனைப் பார்த்துச் சொன்னாள். “நீங்கள் எங்க போய்ட்டு வந்தாலும் பரவாயில்லை, நான் கேட்க மாட்டன். ஆதீரன் வந்ததால கேட்டன்.”

“எனக்கு விளங்குது” என்றார் மருதன்.

நாளைக்கு ‘பழம்’ எப்பிடி கைத்துப்பாக்கியை எடுத்துவரப்போகிறார்... அவருக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதென கடவுளைப் பிரார்த்தித்தபடி குளிக்கச் சென்றேன்.

அதிகாலையில் எழுந்து கோயிலுக்குப் போனேன். பழத்துக்கு எதுவுமே நடந்துவிடக் கூடாதென நேர்த்தியும் பிரார்த்தனையும் செய்தேன். போராளிகளுக்காக ஆயுதங்களை இடம்விட்டு இடம் மாற்றுவது என்பது எத்தனை ஆபத்துகள் நிறைந்த பணி! வயோதிகமான தன்னுடலாலும், குலையாத மனோபலத்தாலும் ‘பழம்’ இந்தக் காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்போலும். நிலத்தின் துயரம் போக்க மனிதர்கள் தாங்கிக்கொள்ளும் துயரத்தின் எடை, யுகம் யுகமாகக் கூடியிருந்தது. மருதனைப்போல எத்தனை மருதன்கள். பழத்தைப்போல எத்தனை பழங்கள். இங்கே நிகழ்வது விடுதலைக்கான வடமிழுப்பு. உயிர் கொடுத்து, உயிர்களைக் காப்பாற்றும் தியாகம். உரிமையைப் பெற வன்முறையைத் தேர்ந்தெடுத்த ஒரு யுகத்தின் புதல்வர்கள் இவர்கள். திணிக்கப்படும் ஒடுக்குமுறையைப்போலவே இந்த வன்முறைப் போராட்டமும் ஆக்கிரமிப்பாளர்களால் திணிக்கப்பட்டுவிட்டது. நான் கோயிலைவிட்டு வெளியேறினேன். கையில் வெண்பொங்கல் இருந்தது. சாப்பிட்டுக்கொண்டே நடக்கத் தொடங்கினேன். எனது சிந்தையில் ‘பழம்’ நிரம்பியிருந்தார். அவரின் வருகைக்காகக் காத்திருந்தேன். வீட்டுக்கு அவர் கைத்துப்பாக்கிகளை எடுத்து வந்ததும், அவரைக் கட்டியணைத்து முத்தமிட வேண்டும். எனது முத்தம் அவருடைய செயலுக்கானது.

நேரம் காலை பத்து மணியாகியிருந்தது. பழம், சைக்கிளை வீட்டுக்கு வெளியே எடுத்துவந்தார். ஐஸ் பெட்டியைத் திறந்து அதற்குள் பொலித்தீன் பையை விரித்து, இரண்டு கைத்துப்பாக்கிகளையும் விரித்த பொலித்தீன் பையின் மீது வைத்தார். பிறகு அதை இன்னொரு தடிமனான மட்டை கொண்டு மூடினார். பெட்டியின் அடியில் ஒரு சிறிய கதவைப்போல இருந்த இரண்டு தகடுகளைக்கொண்டு அதை மூடினார். ஐஸ் பெட்டியை சைக்கிளில் தூக்கிவைத்துக் கட்டினார். இனி பெரிய ஐஸ்க்ரீம் தொழிற்சாலைக்குச் சென்று ஐஸ் பழங்களை வாங்கி அடுக்கிக்கொண்டு தொழிலைத் தொடங்க வேண்டும். ‘பழம்’ ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டு வீட்டின் முன்படியில் அமர்ந்திருந்தார். செம்பில் கிடந்த நீரைப் பருகினார். ஏதோ ஓர் அழைப்புக்காகக் காத்திருக்கும் துறவியைப்போல வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச நிமிடங்களில் எழுந்து சைக்கிளை எடுத்து உழக்கத் தொடங்கினார். நேராக ஐஸ்க்ரீம் தொழிற்சாலைக்குச் சென்று அவற்றைப் பெட்டிக்குள் வாங்கி அடுக்கினார். எந்தக் குழப்பமும் இல்லாமல் அங்கிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார்.

வீதியில் ஆட்கள் நடமாட்டம் நன்றாகவே இருந்தது, பழத்துக்கு நல்ல சகுனமாகவே தெரிந்தது. இன்னும் அறுபது கிலோமீட்டர்களில் இருக்கும் ஊருக்கு அவர் பயணிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சின்னஞ்சிறிய கிராமங்களின் வழியாக சைக்கிளில் பயணிப்பதை ‘பழம்’ ஒரு கொடுப்பினையாகக் கருதுவாராம். பழத்தின் நிதானமும் துணிச்சலும் நிறைய அனுபவங்களைக் கொண்டவை. அவர் பயணிக்கும் ஊர்களுக்குள்ளால் ஐஸ் பழங்களை விற்கத் தொடங்குகிறார். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானங்களில் நின்று வியாபாரம் செய்வதும், ஓய்வெடுப்பதுமாக இருக்கிறார். இரண்டு அடுக்குகள் உள்ளவரை ஐஸ் பழங்களை விற்றுவிட வேண்டுமெனத் தீர்மானம் செய்கிறார். ராணுவ முகாமிருக்கும் வீதிகளைத் தவிர்த்து, தனது பயணத்தின் வரைபடத்தை மூளைக்குள் விரிக்கிறார். சைக்கிளை உழக்கியபடி விரைகிறார். மருதனார் மடத்தைத் தாண்டி வந்துகொண்டிருக்கையில் ராணுவத்தின் வாகனம் வீதியில் நிற்பதைக் காண்கிறார். எல்லோரும் சோதனை செய்யப்படுகிறார்கள் என்பதை ‘பழம்’ உணர் கிறார். சைக்கிளை எந்தத் தயக்கமும் இல்லாமல் உழக்கிக்கொண்டு சோதனை செய்யப்படும் இடத்துக்கு விரைகிறார். தனக்கு முன்னால் சோதனைக்காகக் காத்திருக்கும் வாகனங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 35

“எதிரியின் கண்கள் சோதனை செய்வது, எங்களுடைய பொருள்களை அல்ல. பயப்படும் கண்களைத்தான்” என்பது பழத்துக்கு நன்றாகவே தெரியும். அவர் தன்னைச் சோதனை செய்யவந்த சிப்பாயைப் பார்த்து “ஆயுபோவான் மாத்யா” என்று சிங்களத்தில் வணக்கம் வைத்தார். அந்தச் சிப்பாய், “ஐஸ் பெட்டியைத் திறந்து காட்டு” என்றார். ஒரு வித்தைக்காரன் தனது தொப்பியைத் திறந்து காட்டும் அத்தனை பரவசத்தோடும் ‘பழம்’ அந்தப் பெட்டியைத் திறந்தார். சிப்பாய் உற்றுப் பார்த்தான். பிறகு போகலாமென்று சிங்களத்தில் சொன்னதும் பழம், `உத்தரவு மகாராஜா’ என்ற பாவனையோடு தனது சைக்கிளில் ஏறி அமர்ந்தார். ஒரு பீடியைப் புகைத்தால் ரத்தவோட்டம் இன்னும் உற்சாகம் அடையுமென அவருக்குத் தோன்றியது. அதோடு ஒரு தேநீர் அருந்தினால் இன்னும் பிரமாதமாக இருக்குமெனத் தோன்றியது. கொஞ்ச தூரத்தில் வந்த ஓர் உணவகத்தில் சைக்கிளை நிப்பாட்டி “ஒரு ப்ளேன் ரீ” என்றார். பீடியைப் பற்றவைத்து இழுப்பு இழுத்தபடி வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குள் எழுந்த எண்ணங்களெல்லாம் ஒன்றாகக் குவிய மறுத்தன. பழம், தன்னுடைய சைக்கிளைப் பார்த்தார். எவ்வளவு தூரம் பயணப்பட்டுவிட்டது என்று நினைத்துக்கொண்டார். அந்த உணவகத்தில் நிறைய பேர் உள்ளேயிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எப்போதும் நிறைய ஆட்கள் வந்துபோகும் உணவகம் அது. ஒரு “ப்ளேன் ரீ” சொல்லி பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் இன்னும் வரவில்லை என்பது பழத்துக்குக் கொஞ்சம் கோபத்தை உண்டு பண்ணியது. இரண்டு போலீஸார் கடைக்குள் போயினர். அவர்கள் போனதும் கடையில் கொஞ்சம் அமைதி நிலவியது. திரும்பிப் பார்த்தார். உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து ஒரு போலீஸ்காரர் கேட்டார் “இங்க உதயன் யார். அவன் மட்டும் கை உயத்து” நன்றாகத் தமிழ் தெரிந்திருக்கிறதே என்று பழம் நினைத்துக்கொண்டார். ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை எடுத்துக் காட்டுகிறார்கள். ஒரு போலீஸ் துப்பாக்கியை நீட்டியபடி இருக்க, இன்னொருவர் அடையாள அட்டையைப் பார்க்கிறார். உதயன் என்ற பெயரில் யாருமே இங்கில்லை என்று தெரியவந்ததும், உணவக உரிமையாளர் கொஞ்சம் ஆறுதலடைகிறார்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த சிலர், கைகழுவும் இடத்துக்கு எழுந்து செல்கின்றனர். ஆனால், இரண்டு போலீஸாரும் அங்கிருந்து செல்லாமல் அப்படியே நிற்கின்றனர். பழத்துக்கு `ப்ளேன் ரீ’ வேண்டாமெனத் தோன்றும் வேளையில் கொடுக்கப்படுகிறது. கைகழுவும் இடத்தில் பெருத்த தொந்தியோடு நின்றுகொண்டிருக்கும் ஒருவர் பெரிதாக ஏவறை விடுகிறார். கொஞ்சம் நெஞ்செரிச்சல் இருந்திருக்க வேண்டுமென பழத்துக்குத் தெரிந்தது. போலீஸ்காரன் தன்னுடைய கைப்பேசியை எடுத்து யாரிடமோ சிங்களத்தில் கதைத்துக்கொண்டிருக்கிறான்.

“நீ சொன்ன தகவல் பொய்யானது. உதயன் இங்கில்லை” எதிர்ப்புறத்தில் இருப்பவனை அந்தப் போலீஸ்காரன் திட்டுவது பழத்துக்கு விளங்கியது. ஆனால், இல்லை அங்குதான் உதயன் இருப்பதாக எதிர்ப்புறத்தில் இருப்பவன் வாதாடுவதும் நடந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கைப்பேசியைத் துண்டித்த போலீஸ்காரன் உணவகத்துக்குள் மூர்க்கமாக நுழைந்து “பொய் சொல்ல வேண்டாம், உதயன் மட்டும் என்கிட்ட வா” என்று கத்துகிறான். சாப்பிட்டு முடித்த ஓர் இளைஞன், காசு கொடுக்கும் மேசையை நோக்கி நடந்துவருகிறான். அவனைப் பின்தொடர்ந்து இன்னும் சிலர் வருகிறார்கள். துப்பாக்கி ஏந்தி நிற்கும் போலீஸ், தன்னுடைய சகாவிடம் ‘இங்கே உதயன் இல்லை’ எனச் சொல்கிறான். பெரிய தொந்தி கொண்டு ஏவறைவிட்ட நபர், காசு கொடுக்கும் மேசையை நோக்கி வரும்போது, போலிஸ்காரன் மறித்து அடையாள அட்டையைக் கேட்கிறான். அவர் எடுத்துக் காண்பிக்கிறார். ‘அரியரத்தினம் கோபிதன்’ என்று இருந்தது. அடையாள அட்டையைத் திருப்பிக் கொடுக்காமல் அவனைப் போகலாமென்று சொல்லினர். அவன் அடையாள அட்டையைக் கேட்டுக் கொண்டிருந்தான். பழம், குடித்த ப்ளேன் ரீக்கு காசைக் கொடுத்துவிட்டு அந்தத் தொந்தி பெருத்த நபரைப் பார்த்தார். தனது சைக்கிளை எடுத்து உழக்கத் தொடங்கினார்.

சில நிமிடங்களில் அந்த உணவகத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன.

(நீளும்...)