Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 38

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

தம்பி சண்டையில அவங்கட இடங்களை அடிச்சுப்போட்டு அங்க இருக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தான் கொஞ்ச காலம் வாழ்ந்தனாங்கள்

தத்தளிப்பும் அச்சமும் எனக்குள் சுழன்று கொண்டிருந்தன. அந்த ராணுவச் சிப்பாய் என்னை நோக்கி வருகிறார். ``நில்... நில்...’’ என்று கிணற்றடியில் நிற்கும் இன்னொரு சிப்பாய் கட்டளையிடுகிறார். மூச்சுத்திணறுகிறது. நொடியின் அளவு பெருகுகிறது. ஒவ்வொரு நொடியும் என்ன செய்து தப்புவதென்ற யோசனையே அலையாக எழுந்தது. என்னுடைய உடலோடு ஒட்டிக்கிடக்கும் கைத்துப்பாக்கியை எடுத்து இவர்கள் இருவரையும் சுட்டுக்கொல்வதை விட தப்புவதற்கு வேறென்ன வழி? அவர்கள் என்னைச் சோதனை செய்தால் அவ்வளவுதான். எல்லாமும் முடிந்துவிடும். ஒரு நொடியில் இந்த முடிவுக்கு நானே வந்தடைந்தேன். என்னை நோக்கி வருகிற ராணுவச் சிப்பாயை முதலில் கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது, அதன் பிறகு கிணற்றடியில் நிற்பவரைச் சுடுவது. என்னை நோக்கி வந்த சிப்பாய், ``பயப்படாதே’’ என்று சொல்கிறார். அவரின் வார்த்தைகளைச் செவிமடுக்காமல் நின்றேன். கோயில் வளவில் யாருமில்லை. எது நடந்தாலும் யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால், நான் நினைத்தவற்றுக்கு எதிராகவே எல்லாமும் நடந்தன. என்னை நோக்கி வந்த சிப்பாய், தன்னுடைய சீருடைப் பையிலிருந்து இரண்டு சொக்லேட்டுகளைக் கொடுத்து ``சாப்பிடு’’ என்றார். நான் வாங்கிக்கொண்டு சிட்டுக்குருவிபோல அங்கிருந்து பறந்து மறைந்தேன். வீட்டுக்குள் ஓடினேன். மருதன் எனக்காகக் காத்திருந்தார். நடந்தவற்றைச் சொல்லிக்கொண்டே கைத்துப்பாக்கியை எடுத்துக் கொடுத்தேன். மருதன் அதை வாங்கிப் பார்த்துவிட்டு தன்னுடைய பையில் போட்டுக் கொண்டார். ‘`கெட்டிக்காரன். நீ செய்தது பெரிய வேலை. ஆனால் நீ இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பாய் என்று எனக்குத் தெரியும்’’ என்றார். நான் வைரவர் கோயிலில் நடந்ததைச் சொன்னேன். அவர் தலையில் கைவைத்தபடி “நல்லகாலம், உன்னை பலியெடுத்திருப்பாங்கள்” என்றார்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 38

“நீ பயந்திருந்தால் உன்னில சந்தேகம் வந்திருக்கும்.”

“ஆனால், நான் பயந்தனான். உடம்பே நடுங்கிற்று. அவங்கள் என்னட்ட ஒரு பிஸ்டல் இருக்குமெண்டு நினைக்கிற மாதிரி நான் நடந்துகொள்ளேல்ல.”

“பிறகு என்ன நடந்தது?”

“என்னை நோக்கி வந்த சிப்பாய் இந்தச் சொக்லேட்டை தந்து, கொண்டுபோய் சாப்பிடு என்றார்.”

“நீ ஆர்மியிட்ட சொக்லேட் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய்” சொல்லிக்கொண்டே மருதன் சிரித்தார்.

“நான் என்ன எனக்கு வேணுமெண்டு அடம்பிடிச்சு அழுதா வாங்கினான். தந்ததை வாங்கி வந்தன். அதைச் சாப்பிட வேணுமெண்டு இல்லை. எறிவம்.”

“உனக்கென்ன விசரே தம்பி. பக்கெற்றை உடை, ரெண்டு பேருமாய்ச் சேர்ந்து சாப்பிடுவம்.”

“இது அவங்கள் தந்தது.”

“தம்பி சண்டையில அவங்கட இடங்களை அடிச்சுப்போட்டு அங்க இருக்கிற சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தான் கொஞ்ச காலம் வாழ்ந்தனாங்கள்... இதெல்லாம் தேசத்துரோகமில்லை உடை... சாப்பிடுவம்” என்ற மருதனின் இந்தப் பேச்சு சுபாவம் புதிதாக இருந்தது. அவர் தன்னை யாரென என்னிடத்தில் தோலுரித்துக் காட்டினார். ஆனால், எனக்கிருக்கும் இந்தச் சந்தேகங்களை அவரிடம் கேட்கவேண்டுமென நினைத்தேன். கபிலனுக்கும் மருதனுக்கும் என்ன தொடர்பு... கபிலன் யார்... அவர் என்ன செய்து கொண்டிருந்தார்... கபிலனை ராணுவம் இப்படியாகக் கொன்றுபோடவேண்டிய தேவைக்கு என்ன காரணம்? “கபிலன் எங்களுக்கு வேலை செய்தவன். அது எப்பிடியோ ஆர்மிக்கு தெரிஞ்சுபோச்சு. அது இவனோட அசட்டையால வந்த வினை. எங்களுக்கு இது பெரிய இழப்புத்தான். கபிலனைப்போல ஆருமில்லை” என்று மருதன் சொன்னார்.

“கபிலன் அண்ணாவுக்கு ஊருக்குள்ள நல்ல பெயர் கிடையாது. `ஊத்தவாளி’ என்றுதான் நிறைய பேர் சொல்லுவினம். அக்காவுக்கு அவரைக் கண்ணிலேயே காட்டக் கூடாது. இப்பிடியொரு ஆள எப்பிடி இயக்கம் தங்கட வேலைக்கு வெச்சிருந்தது?”

“நீ சொல்லுறது சரிதான். கபிலன் தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ள அப்பிடியொரு வேஷத்த போட்டவன். அவனுக்கும் இயக்கத்துக்கும் தொடர்பில்லை என்று நம்புறதுக்குத்தான் இந்த வேஷம்.”

“அவர் இயக்கமா?”

“அவன் உறுப்பினர் கிடையாது. ஆனால் பயிற்சி எடுத்திருக்கிறான்.”

“என்ன பயிற்சி?”

“அவனுக்கு நாங்கள் என்ன வேலை கொடுக்கிறமோ, அதுக்கேற்ற பயிற்சி.”

“கபிலன் அண்ணாவில எனக்குச் சரியான விருப்பம். அவர் ஒரு நல்ல சீவன். என்னை ‘வன்னி’ யென்று அடிக்கடி கூப்பிடுவார். உங்களுக்கும் அவருக்கும் பழக்கம் இருக்கிறத அவர் சொல்லவேயில்லை.”

“உங்களுக்கும் எனக்கும் பழக்கம் இருக்கிறதையும் கபிலனுக்கு நான் சொல்லேல்ல.” மருதன் சிரித்துக்கொண்டு சொன்னார்.

“உண்மையிலும் அவருக்குத் தெரியாதா?”

“இல்லை... உண்மையாய்த்தான் சொல்லுறன்.”

“சரி. நான் கபிலன் அண்ணா வீட்டுக்குப் போறன். சுடலைக்குப் போகிற நேரம் வந்திட்டுது.”

மருதன் தலையாட்டினார்.

கபிலன் மீது எனக்கு இன்னுமின்னும் மரியாதையும் அன்பும் கூடின. எப்போதும் சச்சரவுகளிலும் சேட்டைகளிலும் ஈடுபடும் சாதாரணமான ஓர் இளைஞனில்லை. மண்ணுக்காகவும் சனங்களுக்காகவும் போராடும் இயக்கத்தின் பின்னால் நின்று செயற்பட்ட அபிமானி. யார் யார் என்னவாக இருக்கிறார்கள் என அறியாத முடியாத மர்ம நாடகம்போல இருக்கிறது. கபிலன் தன்னை இயக்கத்தின் ஆதரவாளனாகக்கூட சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாமும் வியப்பாக இருக்கிறது. கோயில் ஆலமரத்தில் கபிலனின் உடல் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த நொடிகள் புகைப்பட மின்னல்போல எனக்குள் படபடக்கின்றன. நான் கபிலனின் வீட்டுக்குள் நுழைந்தபோது நிறைய பேர் வந்திருந்தனர். ஏற்கெனவே வந்த சிலர் புறப்பட்டனர். எப்போதும் பதற்றம் காத்திருக்கும் மரண வீடுகள் வீதிக்கு வீதி தோன்றத் தொடங்கியிருந்தன. அகால மரணம் என்கிற இந்த வார்த்தையில் சுடலையில் அணையாமல் நெருப்பு எழுந்தாடிக் கொண்டேயிருந்தது. ‘கபிலனைக் கொன்றது யார்?’ என்கிற பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தன. கபிலனின் அம்மா தன்னுடைய பிள்ளையின் தலைமாட்டில் அமர்ந்திருந்தாள். சொல்லறுந்த ஒரு மொழியைப்போல அவளிடம் ஜீவன் துடித்துக்கொண்டிருந்தது. கபிலனின் நண்பர்கள் சிலர் கடுமையாகச் சாராயம் அருந்தியிருந்தார்கள். இடையில் ஒருவர் தீனக்குரலில் “கபிலா... உன்னைக் கொலை செய்தவங்கள நான் கொல்லாமல் விட மாட்டேன்” என்று சபதம் போட்டுக்கொண்டிருந்தார்.

“அவனுக்கு இன்னொரு கால் போத்தல் சாராயம் வாங்கிக் குடுங்கோடா, கனக்க கோபப்படுகிறான்” என்றார் இன்னொருவர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 38

மரணம் எந்தக் கலக்கத்தையும் தராத ஒரு பழம்பொருள்போல ஆகியிருந்தது. செத்த வீட்டில் கதைப்பதற்கென்றே சிலர் தங்களுடைய வாயைக் கொண்டுவருவார்கள். பீடியைப் பற்றிக்கொண்டு ஓர் இழுப்பு இழுத்தபடி “உந்தச் சமாதானம் விரைவில குழம்பும், இருந்து பாருங்கோ” என்பார். அதற்கு பதிலாக இன்னொருவர் சொல்லுவார் “இவங்களுக்கும் அதில பெரிய விருப்பம் கிடையாது. சண்டையெண்டால் பெடியள் வலுகெதியாய் வெண்டுபோடுவாங்கள்.” மறுபடி பீடியை இழுப்பு இழுத்து “உன்ர ரெண்டு பெடியளையும் கொழும்பில படிக்க விட்டிட்டு, சண்டையெண்டால் பெடியள் வெண்டிடுவாங்கள் எண்டுறியே, உனக்கு வெக்கமாய் இல்லையோ.”

“நான் என்ன மயிருக்கு வெக்கப்படவேணும்?”

“நீ எல்லாம் சுமை தூக்காமலே கூலி வாங்கப் பார்க்கிற ஆள்.”

“நீ வாயை மூடிக்கொண்டு இரடா.”

“நீ ஒரு ஆளெண்டு என்னட்ட வந்து நிக்கிறாய் கதைக்க.”

இப்படியாக வாக்குவாதம் முற்றி, வெற்றிலைத் தட்டங்கள் மண்டையில் அதிரும். ஒருவரின் வேட்டியை இன்னொருவர் பிடித்திழுத்துக் கடுமையான தூஷணச் சொற்களால் தாக்குவார்கள். செத்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அவர்களைச் சமாதானப்படுத்த முனைவார்கள். சடலம் இலையான்களோடும் உருத்துக்காரர்களோடும் தனித்துக் கிடக்கும். கபிலனின் சடலத்தைச் சுடலைக்குக் கொண்டு செல்லும் வேலைகள் ஆயத்தமாகின. வண்ணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பாடை, வீட்டின் முன்னே கொண்டுவரப்பட்டது. அக்கா என்னையும் அழைத்துச் செல்லக் காத்திருந்தாள். ``நான் சுடலைக்குப் போய்ட்டு வருகிறேன்’’ என்றேன். அவள் மறுத்துவிட்டாள். ``நான் போய்ட்டு வருகிறேன்’’ என அக்காவும் இளகிப் போகுமளவுக்குக் கெஞ்சினேன். சுடுகாட்டுக்குப் பயணம் ஆரம்பமானது. வீதிக்கும் வீட்டுக்குமாகக் கட்டப்பட்டிருந்த தோரணங்கள் அறுக்கப்பட்டன. கபிலன் இனிமேல் திரும்பி வர முடியாத வீட்டின் முகப்புக் கதவை தாண்டிச் சென்றுகொண்டிருந்தார். தாயின் அழுகுரல் நிலத்தின் சாயலில் இருந்தது.

சுடலைக்குச் செல்லும் வழியில்தான் நாங்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமும் இருந்தது. கபிலன் அண்ணாவின் நிழல்போல விரிந்துகிடந்த அந்த மைதானத்தின் முன்னால் கொஞ்ச நேரம் கபிலனின் சடலத்தை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இனிமேல் நான் இந்த மைதானத்துக்கு வரப்போவதில்லை. எனக்கு இங்கு இடமில்லை. அங்கிருந்து பயணத்தைத் தொடங்கினோம். சுடலையை வந்தடைந்ததும் விறகுகள் அடுக்கப்பட்டிருந்த மேடையில் சவப்பெட்டியைத் திறந்துவைத்தனர். பெட்டியின் மேல் மூடியை அடித்து உடைத்தனர். கபிலன் அண்ணாவை இறுதியாகப் பார்த்துக்கொண்டேன். அவருடைய முகம் கறுத்து, ஊதிப்போயிருந்தது. பூமியைப் பார்க்க விருப்பமற்று கண்களை மூடிக்கொண்டவனைப்போல இருந்தார். கொள்ளி போடுபவர் தனது கையில் கிடந்த கொள்ளிக் கட்டையால் நெருப்பை மூட்டினார். மெல்ல மெல்ல எரியத் தொடங்கும் நெருப்பின் படர்ச்சி உடலைத் தொடுகையில், அங்கிருந்து வெளிக்கிட்டோம். `கபிலன் அண்ணா...’ என்று ஒரு தடவை கூப்பிட்டால், `சொல்லடா வன்னி’ என்று சொல்லும் அந்தக் குரலும் கனிவும் நேசமும் நெருப்பில் வேகுதே..!

நான் வீட்டுக்கு வந்து அக்காவை அழைத்தேன். மருதன் அண்ணா சொன்னார்.

“இன்னும் அவா வரேல்ல.”

(நீளும்...)