Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 40

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

அடேயப்பா... தர்மகர்த்தா தன்னோட சொந்தக்காசில மாலை செய்து போடுகிறார் எண்டால், இவன்ர பீப்பியில வாற நாதம், சும்மா இல்ல கேட்டியளோ

இருட்டுப்படத் தொடங்கியிருந்தது. எல்லோரும் வீடுகள் நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். மருதனும் நானும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தோம். சில நிமிடங்களிலேயே ஒரு ஓட்டோ வந்து நின்றது. ஓட்டோக்காரரைப் பார்த்தேன். அன்று வந்தவரில்லை. புதியவர். நடு உச்சிப் பிரித்துத் தலைமுடியைச் சீவியிருந்தார். ஓட்டோவில் ஏறியமர்ந்ததும் ஜவ்வாது வாசம் நாசியில் ஏறியது. மருதன் அவரை அறிமுகப்படுத்திவைத்தார். `அச்சா’ அவருடைய பெயரெனத் தெரிந்துகொண்டேன். ஏற்கெனவே அவரை எங்கேயோ நன்றாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்கேயென மட்டும் நினைவு வரவில்லை. மருதனும் அவரும் நன்றாகக் கதைத்துக்கொண்டுவந்தனர். ஏற்கெனவே அவர்களிருவருக்கும் எங்கே போகிறோம் என்று தெரிந்திருந்தது. எனக்கு இந்தப் பயணத்தில் எங்கே போகிறோம் என்ற கேள்வியே பெரிய சுமையாக இருந்தது. அச்சா, ஓட்டோவை மிக வேகமாக இயக்கினார். அவர் என்னிலும் பார்க்கப் பெரியவர். ஆனால், அவரிடம் பொறுமை இல்லை. இதோ... இதோ... என்று பரபரத்துக்கொண்டிருந்தார். ஜவ்வாதும் திருநீறும் எனக்கு நாகசுரத்தை ஞாபகப்படுத்தியது. கோயில் திருவிழாவுக்கு மேளக் கச்சேரி செய்யவரும் வித்துவான்களிடமிருந்து வரும் வாசனை.

கடவுள்... பிசாசு... நிலம்! - 40

`ஜவ்வாது யார் பூசினாலும் வாசம் வரும்’ என்பார்கள்.

வரும்தான். ஆனால் தவில் வித்துவானோ, நாகசுர வித்துவானோ பூசுகிற ஜவ்வாதில அவையளின்ர வேர்வை இருக்கு, நாதம் இருக்கும். அது எப்பவுமே விசேஷ வாசம்” என்பேன்.

அச்சா என்கிற பெயரை இப்போதுதான் பொருள்பட பொருத்திப் பார்த்தேன். ஓட்டோ ஓடிக்கொண்டிருக்கும் துடியானவரைக் கூர்ந்து பார்த்தேன். ஞாபகம் தீயெனப் பற்றிக்கொண்டது. போன வருஷம் நடந்த வைரவர் கோயில் திருவிழாவில நாகசுரக் கச்சேரி செய்தவர், எவ்வளவு கெட்டிக்காரர்.

“அடேயப்பா... தர்மகர்த்தா தன்னோட சொந்தக்காசில மாலை செய்து போடுகிறார் எண்டால், இவன்ர பீப்பியில வாற நாதம், சும்மா இல்ல கேட்டியளோ. இது பாவக்காரர்களையும் மன்னித்து மனுஷனாக்கும்” அன்றைக்கு யாரோ கதைத்துக்கொண்டிருந்தது இப்போது என் காதில் ஒலிக்கிறது.

“அச்சா! உங்களை எனக்கு ஞாபகம் வந்திட்டுது.”

“என்னை எங்க பார்த்தனியள்?”

“நீங்கள் எங்கட கோயிலுக்கு வந்திருக்கிறியள்.”

“எது, துர்க்கை அம்மன் கோயிலா?”

“இல்லையில்லை, வைரவர் கோயில்.”

“ஒமோம் வந்திருக்கிறன். அண்டைக்குச் சரியான கச்சேரியெல்லே.”

ஓட்டோ பெரிய வீட்டின் முன்னே போய் நின்றது. வீட்டினுள்ளே மருதன் போய்விட்டு என்னையும் அச்சாவையும் கூப்பிட்டார். நாங்கள் உள்ளே போனதும் ஒருவர் எங்களை அமரவைத்துப் புன்னகைத்தார். நான் அச்சாவிடம் கேட்டேன்.

“நீங்கள் இயக்கமே?”

“உறுப்பினர் இல்லை. ஆனால் இவையளுக்கு வேலை செய்யிறன்.”

“உங்களுக்கு எப்பிடி நேரம் கிடைக்குது, கச்சேரிக்கும் போக வேணுமெல்லே?”

“ஓம், ஆனால் கோயிலா, இயக்கமா எண்டால், நான் இயக்கத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பன்.”

மருதன் உள்ளேயிருந்த அறையில் கதைத்துக் கொண்டிருந்தார். அச்சாவை உள்ளே அழைத்தார்கள். இரவாகியிருந்தது. வெளியே எழுந்து சென்றேன். குரோட்டன் செடிகள் அடர்ந்து வளர்ந்து நின்ற முற்றத்தில் இருள் மட்டும் திரண்டிருந்தது. என்னையேன் மருதன் இங்கே அழைத்து வந்திருக்கிறார் என்று யோசனை தோன்றிற்று. இந்த வீட்டில் ஒளிரும் மஞ்சள் நிற மின்குமிழ்கள் இரவை வேறொரு வண்ணத்தில் உலர்த்தின. நான் கோழிச்சூடன் மலர்களை அளைந்துகொண்டு நின்றேன். அச்சா வேக வேகமாக வெளியே வந்து என்னை அழைத்தார். நான் ‘ஓமென்று’ சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினேன்.

“ஏனடா வெளியால போய் நிக்கிறாய்?” மருதன் கேட்டார்.

“சும்மாதான்.”

“சரி. நாங்கள் வெளிக்கிட வேணும். அச்சா எங்களோட வர மாட்டான். நானும் நீயும்தான் ஓட்டோவில போகவேணும்” என்றார்.

அச்சா வீட்டுக்கு வெளியே நின்ற ஓட்டோவை உள்ளே கொண்டுவந்தார். அதற்குள் சில ஆயுதங்களை வைத்து மூடினார்கள். எனக்குத் தெரிய மூன்று துவக்குகளும், பத்துக்கும் மேற்பட்ட கையெறி குண்டுகளும் ஓட்டோவில் வைக்கப்பட்டன. இந்த ஓட்டோவிலா செல்லப்போகிறேன் என்கிற பயம் எனக்குள் மெல்ல ஏறி வந்தது. மருதன் ஓட்டோவில் ஏறி அமர்ந்தார். நான் பின்னால் ஏறி அமர்ந்துகொண்டேன். தன்னந்தனியனாக ஆயுதங்களுக்கு மேல் அமர்ந்திருக்கும் எனக்கு மூத்திரம் பெய்தால் சுகமாக இருக்குமெனத் தோன்றியது. மருதன் வீதியின் மருங்கில் நிறுத்தினார். மூத்திரத்துக்குப் போனேன். உடல் நடுங்கி மூத்திரம் கழன்றது. கும்பிடாத கடவுளில்லை. எதுவும் தீயது நேராமல் வீட்டுக்குப் போய்ச் சேர வேண்டுமென வேண்டினேன். மருதன் சிரித்துக்கொண்டு கேட்டார்.

“என்ன ஆதீரன் சரியாய் பயந்துபோய் இருக்கிறாயோ?”

“இல்லை, இவ்வளவத்தையும் ஒரே ஓட்டோவில ஏத்தினால், பயப்பிடாமல் என்ன செய்யிறது...”

“பின்ன இதைக் கொண்டு போறதுக்கு மட்டும், இலங்கை போக்குவரத்து சபையிட்ட ஒரு பஸ் கேப்பமா?”

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மருதனிடம் இருக்கும் துணிச்சல் எனக்கில்லை. நான் புரட்சிக்கு ஆயத்தமாகவில்லை என்று தோன்றியது. பிறர் வாழத் தன்னை ஆகுதியாக்கும் விடுதலை மாண்பு என்னிடம் சேரவில்லை என்று கலங்கினேன். ஒவ்வொரு போராளியும் சாவின் நிழலில் நடக்கிறார்கள். அவர்களை அச்சுறுத்தாத ஆயுதம் போலவே, சாவும் அவர்களோடே பயணிக்கிறது. போராளிகள் ஆயுதங்களை மட்டுமே சுமக்கிறார்கள். சாவையோ, சாவின் பயங்கரத்தையோ அவர்கள் எண்ணிக்கூடப் பார்ப்பதில்லை.

“இப்ப நாங்கள் எங்கட வீட்டத்தானே போறம்?”

“இல்ல தம்பி. இன்னொரு இடத்துக்குப் போய், உன்ர குண்டிக்கு அடியில கிடக்கிறதுகளைக் குடுத்திட்டு போகோணும்.”

“எங்க போகவேணும்?”

“போற வழிதான், கொக்குவில்.”

“இப்பவே நேரம் எட்டு மணியாயிற்று. நாங்கள் அங்கு போய்விட்டு வீட்டுக்குச் செல்ல இன்னும் பிந்திடும். நாளைக்கு குடுக்கேலாதா?”

“இண்டைக்கே குடுக்கவேணும். அதுதான் உத்தரவு” என்றார் மருதன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 40

ஓட்டோ விரைகிறது. காங்கேசந்துறை செல்லும் பிரதான வீதியில் வாகனங்கள் வேகமெடுத்துப் போய்க்கொண்டிருந்தன. மருதன் உள்வீதியால் போகலாமென மனதுக்குள் நினைத்திருக்க வேண்டும். பிரதான சாலையைப் பெரிய அளவில் பயன்படுத்தாமல் ஊருக்குள் இருக்கும் வீதியில் பயணித்தார். நாங்கள் எதிர்பார்க்காத ஒரு திசையிலிருந்து இரண்டு ராணுவத்தினர் ஓர் இளைஞனைத் துரத்திக்கொண்டு வந்தனர். அவனோ பதற்றமும் உயிர் பயமும் மேலோங்க மூச்சுவாங்க ஓடிவந்தான். அவனைப் பார்த்ததும் மருதன் சொன்னார்.

“ஆதீரா நீ ஒண்டுக்கும் பயப்பிடாமல் இரு.”

ராணுவத்தினர் ஓடிவரும் பாதையில் ஓட்டோவைச் செலுத்துகிறார் மருதன்.

“வேற பாதையில போகலாமெல்லே?”

“இதுதான்ரா இருக்கிற ஒரே பாதை. இப்ப நாங்கள் ஓட்டோவைத் திருப்பினால், எல்லாருக்கும் சந்தேகம் வரும். நீ ஒண்டுக்கும் யோசியாத. நான் பார்த்துக்கொள்ளுறன்.”

ஓட்டோவுக்கு எதிரே ஓடிவரும் ராணுவத்தினரில் ஒருவர் வெறுங்காலோடு ஓடிவந்தார். இன்னொருவர் முழுச் சீருடை அணிந்திருந்தார். எங்களுடைய ஓட்டோவை மறித்து, உள்ளே அவன் இருக்கிறானா என்று பார்த்தனர். நான் அவர்களை நேருக்கு நேராக எதிர்கொண்டேன். மருதனிடமும் என்னிடமும் யாராவது ஓடிப்போனதைப் பார்த்தீர்களா என்று கேட்டார்கள். இருவரும் ‘இல்லை’ என்றோம். அதற்கிடையில், மருதனைக் கீழே இறங்கச் சொன்னார்கள். மருதன் மறுத்துவிட்டார்.

“இது இன்னொருவருடைய ஓட்டோ, இரவல் கொடுக்க ஏலாது” என்றார்.

எங்களிருவரையும் அங்கேயே காத்து நிற்க வைத்துவிட்டு, ஓட்டோவில் சென்று தேடி அவனைப் பிடிப்பது ராணுவத்தினரின் திட்டமாக இருந்தது. மருதன் மறுத்தது அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. யாருமற்ற இருளில் நான்கு பேர் மட்டும் எஞ்சியிருந்தோம். யாருக்கு எது நேர்ந்தாலும் சாட்சியற்ற பொழுது. மருதன் ஓட்டோவைவிட்டு கீழே இறங்கும் முன்னரே நான் இறங்கிக்கொண்டேன். மருதன் இறங்குவதற்கிடையில் ராணுவத்தினன் மருதனை கன்னத்தில் அறைந்தான். இந்தப் பொழுதின்மீது படியப்போகும் நிணத்தின் இரைச்சல் எனக்குள் இறங்கிற்று. மருதன் ஓர் அப்பாவியைப்போல கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்கி நின்றார். ஓட்டோவை இயக்கும் சிப்பாய் முன்னே ஏறி அமர்ந்தான். பின்னே இன்னொருவர். மருதன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுப்பதற்கு முன், “ஆதீரா நீ முன்னால ஓடு. நான் வாறன்” என்று மட்டும் குரல் கொடுத்தார். எல்லாம் ஒரு கணம். இரண்டு வேட்டொலிகள் இருளின் சலனத்தைக் குழப்பின. வீதியின் மருங்கில் இழுத்துக் கிடத்திவிட்டு, மருதன் ஓட்டோவை இயக்கிக்கொண்டு முன்னே வந்தார். நான் வீதியின் முடக்கில் நின்றிருந்து, ஏறிக்கொண்டேன்.

“கவனம், பார்த்திரு... ரத்தமாய்க் கிடக்கு.”

“ரத்த வெடில் அடிக்குது. குமட்டுது.”

“இவங்களுக்கு நாங்கள் கதைச்சால் விளங்காது. அடிச்சால்தான் விளங்கும்.”

“நீங்கள் வேற ஏதாவது மூவ் எடுத்திருக்கலாம், நான் அப்பவே சொன்னான், வேற பாதையால போகலாமெண்டு...”

“பாதை இதுதான். ஆபத்து வருமெண்டு பாதையைவிட்டுப் போக முடியாது.”

“ஓம் விளங்குது” என்றேன்.

நாங்கள் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேரவே பத்து மணியாகியிருந்தது. ஒரு குடும்பம் வசித்துவந்த அந்த வீட்டில் யார் இயக்கம், யார் பொதுசனம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்குள் உரையாடல் நிகழ்வது அரிதிலும் அரிதாக இருந்தது. அங்கிருந்த ஓர் அக்கா, தன்னுடைய பெயரை மேனகா என்று சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்கள் ஓட்டோவை அவர்களிடம் கொடுத்துவிட்டு வேறோர் ஓட்டோவுக்காகக் காத்திருந்தோம். அப்போதுதான் மருதன் கேட்டார்.

“நீ பயந்திட்டியே?”

“இல்லை.”

“பயப்பிடவேணும், பயந்தால்தான் உன்னை நீ பாதுகாத்துக்கொள்ளுவாய்.”

“என்ன சொல்லுறியள்?”

“நான் பயந்ததாலதான் அவங்களச் சுட்டனான்.”

மருதன் சொன்னது குழப்பமாக இருந்தது. ஓட்டோ வந்தது. ஏறிக்கொண்டோம். இந்தத் தடவை வந்திருப்பது யாரெனப் பார்த்தேன்.

அவனை உங்களுக்கும் தெரியும்.

(நீளும்...)