Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 41

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

“எங்கட மணியனோ?” என்று மீண்டும் மீண்டும் கேட்டாள். நான் சாப்பிட்டுக்கொண்டே ‘ஓமெ’ன்று தலையசைத்தேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 41

“எங்கட மணியனோ?” என்று மீண்டும் மீண்டும் கேட்டாள். நான் சாப்பிட்டுக்கொண்டே ‘ஓமெ’ன்று தலையசைத்தேன்.

Published:Updated:
கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
கடவுள்... பிசாசு... நிலம்!

ஓட்டோவில் வந்தது வேறு யாருமில்லை மணியன். அவனைப் பார்த்ததும் “நீ எப்பிடியடா இஞ்ச வந்தனீ?” என்று கேட்டேன். சீர்திருத்தப்பள்ளியிலிருந்து விடுதலை செய்யப்பட்டதும், சில நாள்களிலேயே தான் யாழ்ப்பாணத்துக்கு வந்துவிட்டதாகக் கூறினான். யாழ்ப்பாணத்துக்கு வந்தவன், ஏன் எங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால், இந்தப் பொழுதில் கேட்பது சரியில்லை. அவன் இப்போது எங்களுடைய வீட்டுக்குத்தானே வருகிறான்... அவன் எப்படி இந்த வேலைக்கு வந்திருக்கிறான் என்று கேட்க ஆவலாயிருந்தது. வீடு போய்ச் சேர்ந்ததும் கண்டிப்பாகக் கேட்பேன். ஆனால் மணியன் தோற்றத்திலிருந்து உடல்மொழி வரை மாறியிருந்தான். அவனிடம் கேட்டேன்.

“நீ என்ன இயக்கத்தில சேர்ந்திட்டியே?”

“இனிமேல்தான் சேரப்போறன்.”

“எப்ப?”

“கொஞ்ச நாள் கழிச்சு.”

“நீ இயக்கத்தில சேர்ந்தால், பிறகு உன்ர அப்பாவை ஆர் பார்க்கிறது?”

“இயக்கம் பார்க்கும்.”

மணியன் இப்படி பதில் சொல்லுமளவுக்கு முன்னேறிவிட்டான் என்பது சந்தோஷமாகவிருந்தது. உரையாடலைத் தொடர்ந்தேன்.

“நீ இப்ப எங்க இருக்கிறாய்?’’

“நான் ஒரு பேஸ்ல நிக்கிறன்.”

“அதுதான் எங்க?”

“கோவிக்காத ஆதீரா, அதைச் சொல்ல முடியாது.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 41

ஓட்டோ இரவின் நிழலை உடைத்துச் செல்லும் வேகத்தோடு வீதியில் போகிறது. மருதன் எங்களிருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்தார். நாங்கள் வீடு வந்து சேர பன்னிரண்டு மணியாகிவிட்டது. அம்மாவும் அக்காவும் நித்திரையிலிருந்தனர். அம்மாவின் முகத்தில் கலக்கம் இல்லை. ஆனால், அக்கா பயந்துபோயிருந்தாள். ஓட்டோவில் வந்த மணியன் எங்களை இறக்கிவிட்டுவிட்டுப் போய்விட்டான். நான் அவனை வீட்டுக்கு அழைத்தேன். மருதன் அவனுக்கு வேலையிருப்பதாகக் கூறி போகச் சொன்னார்.

“நீங்கள்தான் மணியனுக்குப் பொறுப்பாளரா?”

“இல்லை. அவன் வேறொருத்தருக்குக் கீழ நிக்கிறான்.”

அம்மாவிடம் மணியன் வந்து போனதைச் சொன்னேன். அம்மாவுக்கு பதில் அக்கா ஆச்சர்யப்பட்டு “எங்கட மணியனோ?” என்று மீண்டும் மீண்டும் கேட்டாள். நான் சாப்பிட்டுக்கொண்டே ‘ஓமெ’ன்று தலையசைத்தேன். மருதன் அக்காவின் ஆச்சர்யத்தைப் பார்த்துச் சிரித்தார். ‘சாப்பிட்டு முடித்தால், நித்திரைகொள்ளுங்கள்’ என்று அம்மா சொன்னாள். இரவு மகிழ்ச்சியற்ற பிறவியின் சரிதத்தைப்போல எந்தப் பிடிப்புமற்று இருந்தது.

அடுத்த நாள் காலையில் வெளிவந்த ஒருசில நாளிதழ்களில், இரண்டு படையினர் சுட்டுக் கொலை என்ற செய்தி வெளியாகியிருந்தது. அரசாங்கத்தின் பிரதிநிதியொருவர், `இந்தக் கொலையைச் செய்தது புலிகளே’ என அறிக்கை வெளியிட்டிருந்தார். நான் நாளிதழைப் பார்த்துத் தகவலைத் தெரிந்துகொள்வதைப்போல அந்தச் செய்தியின் ஒவ்வொரு சொல்லையும் ஆறுதலாக வாசித்துக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்தின் பிரதேசமொன்றில் நிகழ்ந்திருக்கும் இந்தக் கொலை நடவடிக்கையின் விளைவாக, ராணுவம் எங்கு வேண்டுமானாலும் வன்முறையை நிகழ்த்தக்கூடுமென சனங்கள் விழிப்புடன் இருந்தனர். மருதனுக்காகக் கடையில் ஒரு நாளிதழை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு விரைந்தேன். என்னைப் பார்த்ததுமே “என்ன ஆதீரா சாட்சிக்காரன் நடந்து வாறது மாதிரி பயத்தோட வாறாய்” என்றார்.

“ஆனால் நீங்கள் சாட்சிக்காரனைப் பார்த்து பயப்பிடுகிற ஆள் இல்லையே...”

“நீ நீதிக்காய் போரிடும் தரப்பின் சாட்சி, அதுதான் எங்களோட சாட்சிக்காரன். உன்னைக் கண்டு நான் ஏன் பயப்பிடவேணும்?”

“அதுசரி, இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆக்களை தக்கவெச்சிடுவியள். இதுதான் இயக்கத்தோட குணம்.”

மருதன் ஆமோதித்து, தலையசைத்து நாளிதழை வாங்கிக்கொண்டார். வீதியின் மருங்கில் கிடந்த ராணுவச் சடலங்களின் புகைப்படத்தைப் பார்த்தார். `இவர்கள் ஏன் எங்களோடு மல்லுக்கு நின்றார்கள், இவர்களை நாம் ஏன் சந்தித்தோம்...’ இப்படி மருதனிடம் நிறைய கேள்விகள் எழுந்துகொண்டேயிருந்தன. மருதன் தலையை ஆட்டிக்கொண்டு நாளிதழை மடக்கிவைத்தார்.

“நேற்றைக்கு நடந்த சம்பவத்தை உங்கட அக்காவிட்ட மட்டும் சொல்லிப்போடாத தம்பி.”

“நீங்கள் சொல்லாமல் இருந்தால் சரி.”

“நான் ஏன் சொல்லப்போறேன். என்னட்ட அந்த மாதிரி எந்தப் பழக்கமும் இல்லை.”

ஏற்கெனவே கபிலனின் மரணத்தினால் பொலிவிழந்து காணப்பட்ட ஊர், மெல்லத் துயர் உதறி இயங்கத் தொடங்கியிருந்தது. அம்மாவும் அக்காவும் துர்கை அம்மன் கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். மருதன் அப்படியே வீட்டுக்குள் அமர்ந்திருந்தார். நான் ``சும்மா வெளியால் போய்விட்டு வருகிறேன்’’ எனச் சொல்லிவிட்டு வீதிக்கு வந்தேன். வீதியில் மாடுகள் போய்க்கொண்டிருந்தன. அவற்றின் பின்னே நாய்கள் குரைத்தபடி பாய்ந்தன. கற்களைக்கொண்டு நாய்களை விரட்டினேன். எங்கே போவதெனத் தெரியாமல் வீதியில் நின்றபடி யோசிக்கலானேன். அப்பா எனது நினைவுகளுக்குள் சுழன்று தலை நீட்டினார். அப்பாவின் நினைவு எப்போதாவது என்னில் மலர்கிறது. அப்பாவையும் ஒரு தோட்டாவே பறித்தது.

எனது சின்னஞ்சிறு பிராயத்தில் அப்பாவை ராணுவம் சுட்டுக் கொன்றது. முருகன் கோயில் வடக்குவீதியில் தூக்கியெறியப்பட்ட அப்பாவின் சடலம் வெயிலில் கிடந்து தோலுரிந்தது. காகங்கள் கரைந்தழுதன. சனங்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல், குப்புறக்கிடக்கும் சடலத்தைச் சுற்றி வந்த நாய்களைக் கற்கள்கொண்டு விரட்டினர். நேரங்கழித்து அப்பாவின் சடலத்தைச் தூக்கிச் சுமக்க முடியாமல் உழவூர்தியொன்றில் ஏற்றினார்கள். அம்மா கதறியடித்துக்கொண்டு ஊதிப்போயிருந்த அப்பாவைக் கட்டியணைத்தாள். அப்பாவின் கண்கள் வெளிறித் திறந்திருந்தன. குருதி காய்ந்த வாடை. சடலத்திலிருந்து கசியும் புலனுக்குத் தெரியாத மணம் வயிற்றைப் புரட்டியது. அப்பாவை உழவூர்தியிலிருந்து இறக்கி வாங்கில் வளர்த்திவிட்டார்கள்.

அவருடைய உடலை எங்களுடைய சொந்த வளவில் இட்டோம். குடியிருக்கிற இடத்தில சவத்தைப் புதைக்கக் கூடாதென சிலர் சொல்லியும் அம்மாவும் நாங்களும் மறுத்துவிட்டோம். அப்பாவை இட்ட இடத்தில் ஒவ்வொரு நாளும் உணவைப் படைத்தோம். நாய்களும் பறவைகளும் உணவைப் பரிமாறி உண்டன. அப்பாவைப் பிரிந்த எனது பிராயத்தின் துயருக்குச் சுகம் தரும் எந்தக் களிம்புமில்லை. அப்பாவின் உடல் கிடக்கும் மேட்டுப்பகுதிக்கு அடிக்கடி சென்று `அப்பா... அப்பா...’வென்று கூப்பிட்டுப் பார்ப்பேன். நிலத்துக்குள் கிடந்த அவரிடமிருந்து எந்த வார்த்தையும் வருவதாயில்லை. ஒருநாள் அதிகாலையில் நித்திரையிலிருந்து எழுந்து சென்று, அப்பாவின் காலடிக்கு அருகில் நின்று கூப்பிட்டேன். அங்கு வளர்ந்திருந்த புற்களை குந்தியிருந்து புடுங்கியபடி இடைவிடாது கூப்பிட்டுக்கொண்டேயிருந்தேன்.

வேலியில் நின்று கூவிய சேவலைக் கல்லால் எறிந்து விரட்டினேன். எத்தனை தடவை கூப்பிட்டும் சத்தமெழுப்பாதிருந்தார். நான் வெறிகொண்டு கத்தினேன்.

``அப்போய்... அப்போய்.... அப்போய்.... அப்போய்...

அப்போய்... அப்போய்... அப்போய்... அப்போய்...

அப்போய்... அப்போய்... அப்போய்... அப்போய்...

அப்போய்... அப்போய்... அப்போய்...

அப்போய்... அப்போய்....

அப்போய்...’’

கடவுள்... பிசாசு... நிலம்! - 41

அதிகாலையில் நான் அப்படி நடந்துகொண்டேன் என்பதை என்னால் நம்ப முடியாதிருந்தது. மயக்கம் தெளிந்து பார்த்தபோது சொந்தக்காரர்கள் கூடியிருந்தனர். ‘இப்படியெல்லாம் நடக்குமெண்டுதான் வளவுக்குள்ள புதைக்க வேண்டாமெனச் சொன்னாங்கள்’ என அம்மாவை ஏசிக்கொண்டிருந்தனர். மேசையில் வைக்கப்பட்டிருக்கும் அப்பாவின் புகைப்படத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிறச் செம்பரத்தம் பூ காற்றில் அசைந்தது. அம்மா என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வார்த்தைகளற்ற கண்ணீரைச் சொரிந்தாள். அப்பாவின் ஆவி அவர்களைப் பிடித்துவிடுமென எண்ணி எங்களுடைய வீட்டுக்கு வருவதற்குச் சிலர் பயந்தனர். குழந்தைகளை அறவே தவிர்த்தனர். நான் அப்பாவின் சாறத்தைக் கட்டிக்கொண்டு திரிந்தேன். ராணுவத்தின் ஊர்திகள் வீதியால் போகையில் கற்களால் எறிந்தாவது வீழ்த்த வேண்டுமென எண்ணினேன். அப்பாவைக் கொன்ற இவர்களின் ரத்தம் பார்க்க நான் இன்னும் எவ்வளவு வளர வேண்டுமென நாள்களை எண்ணினேன். ஒருநாள் இரவு, அப்பாவின் இடத்துக்குச் சென்றேன். அந்த மேடு, நிலத்தோடு இறங்கியிருந்தது. அப்பாவின் மீது கிடந்த பாரம் மறைந்துபோனதென நினைத்துக்கொண்டே “அப்போய்...” என அழைத்தேன். கர்ப்பிணியின் வயிற்றில் புரளும் சிசுவின் அசைவைப்போல அப்பா கிடத்தப்பட்டிருந்த அந்தப் பகுதியில் மட்டும் ஒரு புரள்வு தெரிந்தது. குந்தியிருந்தபடி “அப்போய்” என்று மீண்டும் கூப்பிட்டேன். பதிலுக்கு “சொல்லு ஆதீரன்” என்ற அப்பாவின் குரல் நிலத்திலிருந்து வானத்துக்குக் கேட்கும்படியாய் நீடித்து நின்றது. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நினைவு எதற்காக வருகிறது... அப்பாவின் நினைவுகள் எனக்கு அந்தரங்கமானவை. நான் வீதியிலிருந்து ஒரு திசை நோக்கி நடக்கலானேன்.

பஞ்சம்படை வந்தாலும்

பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களடி - கிளியே!

ஆறுமுகன் தஞ்சமடி

பஞ்சம்படை வந்தாலும்

பாரெல்லாம் வெந்தாலும்

அஞ்சுவமோ நாங்களடி - கிளியே!

ஆறுமுகன் தஞ்சமடி..
. என்ற யோகர் சுவாமியின் பாடலைப் பாடிக்கொண்டு மனம்போன போக்கில் நடந்தேன். மீண்டும் அப்பாவின் நினைவுகள் என்னைச் சுற்றுகின்றன. அப்பாவின் குரல் `அதீரா...’ என்றழைப்பதை யாழ்ப்பாணமே கேட்பதைப்போல உணர்கிறேன். ஏன் இப்படியான எண்ணங்கள் உள்ளே திரள்கின்றன. விஷமேறுவதைப்போல பயம் ஊர்கிறது. எந்த விரல்கொண்டு எப்படித் தட்டுவதெனத் தெரியாமல் விழிபிதுங்கினேன். மிக வேகமாக வீடு நோக்கி நடந்தேன். வீதியில் ஓடி வந்தேன். அப்பாவின் குரலும், அவரின் அழைப்பும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தன. நான் வீதியிலிருந்து வீட்டின் பாதைக்குள் நுழைகையில் ராணுவத்தினர் சிலர் நடந்துவருவது தெரிந்தது. நான் அவர்களைப் பொருட்படுத்தாமல் எதிரே நடந்துபோனேன். அவர்கள் எதுவும் கேட்கவில்லை. நான் அவர்களைக் கடந்து வீட்டுக்குள் போனதும், அம்மாவும் அக்காவும் நின்றுகொண்டு சொல்லினர். ``வெளிக்கிடு. நாங்கள் இனி இஞ்ச இருக்கிறது ஆபத்து!’’

(நீளும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism